Thursday, July 26, 2007

பிரபாகரன் - ராஜபக்ச சந்திப்பு [கேலிப்]படங்கள்



படத்தில் சிங்களத்தில் எழுதியிருப்பது :- "அதி சிறந்த பெளத்தவாதியின் மிகப்பெரிய துரோகம்"

இடமிருந்து வலம்: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, அருகில் [நீல மேலாடையுடன்] மங்கள சமரவீர. இவர் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு அரும்பாடுபட்டவர். பின்னர் ராஜபக்சவுடன் பிரச்சனைப் பட்டு புதிய கட்சி துவங்கி ராஜபக்சவை எதிர்த்து ரணிலுடன் கூட்டு வைத்துள்ளார்.


அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள அரசியல்கட்சிகள் இனப்பிரச்சனையை வைத்துத்தான் பிழைப்பு நடாத்துகின்றனர். தாம் தான் உண்மையான சிங்கள இனக் காவலன் என்றும் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என ஒருவருக்கு எதிராக ஒருவர் குற்றம் சாட்டுவர்.

மேலே உள்ள கேலிப்படங்கள், இன்று கொழும்பில் நடந்த ரணில்-மங்கள சமரவீர கட்சிகளின் ராஜபக்ச அரசுக்கு எதிரான கண்டனப் பேரணியில் எடுத்த படங்கள். ராஜபக்ச புலிகளுக்கும் தமிழர்களுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார் என்பதும் இன்றைய பேரணியின் ஒரு சாரம்.தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் "பயங்கரவாத்தை" சரியாக 9 மாதங்களுக்குள் அடக்கிவிடுவோம் என்கின்றனர் ரணிலும் மங்கள சமரவீரவும்.

படங்கள் Tamilnet.com ல் இருந்து எடுத்தவை.

Wednesday, July 25, 2007

1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. இலங்கைத் தமிழர் => கறுப்பு யூலை '83

"ஹிட்லர் யூத மக்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் யூத இனத்தவர் இல்லை
ஹிட்லர் கத்தோலிக்கர்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் கத்தோலிக்கர் இல்லை
ஹிட்லர் தொழிற்சங்கவாதிகளைத் தாக்கிய போது நான் அதை எதிர்த்துக் குரலெழுப்பவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி இல்லை
ஹிட்லர் என்னையும் என் மதத்தையும்[Protestant] தாக்கியபோது யாரும் எனக்காகக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் எனக்காகக் குரல் கொடுக்க அங்கு யாரும் உயிருடன் இல்லை."

--- Martin Niemöller

ஜெர்மனியின் மனிதவுரிமைவாதியும் கிறிஸ்தவ பாதிரியுமான Martin Niemöller சொன்னவை [மேலே] யாருக்குப் பொருந்துதோ இல்லையோ இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்தும். இலங்கைத் தமிழர்களின் அனுபவமும் கிட்டத்தட்ட இதுதான்.

இலங்கையில் 1950 கள் வரை சிங்களப் பேரினவாதிகள், புத்த அடிப்படைவாதிகள் மற்றும் சிங்கள தொழிற்சங்கவாதிகள் இலங்கைத் தமிழர்கள் மீது வன்முறைத்தாக்குதல்களிலோ அல்லது அவர்களின் உரிமைகளுக்கு எதிராகவோ செயற்படவில்லை. 1880 களில் இருந்து 1950 வரை சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைத்தாக்குதல்கள் , பிரச்சாரங்கள் இலங்கையின் மற்றைய சிறுபான்மைக் குழுக்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்[ வட இந்தியர்கள், பாகிஸ்தானியர்], மலையாளிகள், இந்தியத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிரானதாகவே இருந்தது. இச் சிறுபான்மையினருக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் செயற்பட்டபோது இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் அதற்கெதிராக ஒற்றுமையுடன் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்காமல் சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக சில இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டார்கள் என்பது மிகவும் சோகமான வரலாறு.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கை மண்ணின் பூர்விக இரு இனங்கள். எனவே சிங்களவர்கள் ஒருபோதும் தமக்கெதிராகச் செயற்படமாட்டார்கள், செயற்படவும் முடியாது என்பதும் தாம் சிறுபான்மை இனம் இல்லை என்பதும் இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது.

"...the Tamils looked on themselves as one of the two 'founding races' of the island and not as a minority"
[Dr.Alfred Jeyaratnam Wilson, SRI LANKAN TAMIL NATIONALISM : Its Origins and Developments in the 19th and 20th Centuries, p.48]

'நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுத்துதாம்' என்பது போல் இந்த எண்ணமும் மற்றைய சிறுபான்மைக் குழுக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டபோது குரெலெழுப்பாமல் இருந்ததற்கு ஒரு காரணம். தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சந்தர்பங்கள் கிடைத்த போதும் அச் சந்தர்பங்களை நழுவவிட்டதற்கும் இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.

இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் எதிரான தாக்குதல்களை ஆராய்ந்து பார்த்தால் அதன் அடிப்படைப் பிரச்சனை இனமோ, மதமோ, மொழியோ அல்ல. அப் பிரச்சனைகளின் முக்கிய ஆணிவேர் பொருளாதாரம்[சிங்களவர்கள் மத்தியிலிருந்த வேலையில்லாத் திண்டாட்டம்]. ஆனால் சிங்கள பேரினவாதிகள் இப் பொருளதாரப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றைய சிறுபான்மைக் குழுக்களால்தான் சிங்களவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியும், வேலையில்லாமலும் இருப்பதற்குக் காரணம் என சிங்கள மக்களை மூளைச் சலவை செய்தனர். எந்த ஒரு சிறுபான்மை இனத்தைத் தாக்க முன்னும் அவர்களுக்கு எதிராக இப்படிப் பிரச்சாரம் செய்து சிங்கள மக்களை ஒன்று திரட்டிய பின்னர் அச் சிறுபான்மை இனத்தவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது. இதுதான் இலங்கையின் எல்லாச் சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட உத்தி.

ஒவ்வொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சிங்களப் பேரினவாதிகள் ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும், குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிராக எப்படிச் செயற்பட்டார்கள் என்பதைச் சுருக்கமாக எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

1. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதம்.

1983 ம் ஆண்டு நவீன இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இன அழிப்பு கொழும்பின் வீதிகளில் நடந்தேறியது. இக் கலவரம் நடந்த காலத்திலிருந்து சரியாக[exactly] 100 ஆண்டுகளுக்கு முன் 1883ல் கொழும்பு வீதிகளில் சிங்களப் பேரினவாதிகளும் கிறிஸ்தவர்களும் மோதிக் கொண்டார்கள். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான முதற்கட்டத் தாக்குதல்கள் புத்த பிக்கு மிகெத்துவத்த குணானந்தா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 1870 ம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும் , பேசியும் பிரச்சாரங்களை முன்னெடுத்தார் குணானந்தா. 1883 ம் ஆண்டு சித்திரை மாதம் உயிர்த்த ஞாயிறு வாரத்தில் [Easter Week] கொழும்பில் உள்ள கொட்டாஞ்சேனையில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த போது, அத் தேவாலத்திற்கு மிகவும் அருகில் பிக்கு மிகெத்துவத்த குணானந்தா புத்த பூசையை நடாத்தினார். இது தமது பிரார்த்தனையைக் குழப்புவதற்காக வேணும் என்றே பிக்கு மிகெத்துவத்த குணானந்தா செய்கிறர் என கிறிஸ்தவர்கள் சினம் கொண்டனர். இரு தரப்புக்குமிடையில் கலவரம் மூண்டது. ஒருவர் கொல்லப்பட்டார். 12 பொலிஸ்காரர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான இரண்டாம் கட்டத் தாக்குதல்கள், பிரச்சாரங்கள் புத்த மறுமலர்ச்சித் தலைவர்களான அங்கரிக தர்மபால,வாலிசிங்க ஹரிச்சந்திரா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும், ஊர் ஊராக நாடகங்கள் நடாத்தியும், கூட்டங்கள் வைத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1902ல் தர்மபால இப்படி எழுதியிருந்தார்:

"...அழகான, ஒளிமயமான இத் தீவு மோசமான நாசகார வெள்ளையர்கள்... போன்றோரால் சிதைக்கப்படுவதற்கு முன் ஆரிய சிங்கள இனத்தால் சொர்க்காபுரியாக கட்டியெழுப்பப்பட்டிருந்தது...இன்று நாட்டில் நடக்கும் கொள்ளைகள், விபச்சாரம், மிருகக் கொலைகள், பொய்சொல்லுதல், மதுபோதை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு கிறிஸ்தவர்களே காரணம்...தேயிலைத் தோட்டம் உருவாக்குவதற்காக காட்டு வளங்களை அழிக்கிறார்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்க்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்..."

"...This bright, beautiful island was made into a Paradise by the Aryan Sinhalese before its destruction was brought about by the barbaric vandals...Christianity and polytheism are responsible for the vulgar practices of killing animials, stealing, prostitution, licentiousness, lying and drunkenness...The bureaucratic administrators...have cut down primeval forests to plant tea; have introduced opium, ganja, whisky, arrack and other alcoholic poisons; have opened saloons and drinking taverns in every village; have killed all industries and made the people indolent."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.121]

1883ம் ஆண்டிற்குப் பின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 1903ம் ஆண்டில் இலங்கையின் பல சிங்களப் பகுதிகளிலும் அரங்கேறியது. சிங்களப் பகுதிகளில், குறிப்பாக புத்த ஆலயங்கள் உள்ள கிராமங்கள், நகரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்படுவதற்கு எதிராக இவ் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான இத் தாக்குதல்களைத் தூண்டிவிட்டார் என புத்த மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வாலிசிங்கா ஹரிச்சந்திரா கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் 1950, 1960 களிலும் இன்றும் ஆங்காங்கே சிங்களப் பேரினவாதிகளல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது மற்றைய சிறுபான்மைக் குழுக்களுடனான மோதல்களினால் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்தும், மற்றவர்களால் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், இன்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி சிங்கள புத்தர்களின் மனங்களில் உண்டு என்கிறார் குமரி ஜெயவர்த்தனே.

"While in recent years the people have been distracted by attacks on other minorities, it is nevertheless true that the anti-Christian prejudices, though dormant, still remain strong in the consciousness of Sinhala Buddhists."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.122]

சரி, கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களினால் கணிசமான வெற்றியைப் பெற்ற பின் சிங்களப் பேரினவாதிகளின் கவனம் இலங்கையின் அடுத்த சிறுபான்மைக் குழுக்களான முஸ்லிம்கள், மற்றும் வட இந்திய , பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள்[immigrant] மீது திரும்பியது. முஸ்லிம்கள் மற்றும் வட இந்திய, பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீது என்ன காரணத்திற்காகச் சிங்கள பேரினவாதிகள் கவனம் திரும்பியது எனபதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Thursday, July 19, 2007

புகைப்படப்பிடிப்புப் போட்டிக்காக...

"பாடறியேன். படிப்பறியேன். பள்ளிக்கூடம்தான் அறியேன்." என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு திரைப்பாடலில் சொல்லியிருந்தது போல், புகைப்படக் கருவிகள் [Camera] பற்றியோ அல்லது எப்படிப் புகைப்படம் எடுப்பது என்பது பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாதவன் நான். இருப்பினும் என் மனதில் எழும் எண்ணங்களை, பிடித்த காட்சிகளைப் படம்பிடிக்கிறேன் என்று சும்மா கண்டபாட்டுக்கு கமராவில் கிளிக் செய்வது என் பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி எடுத்த படங்களில் இரண்டு படங்கள்தான் நீங்கள் கீழே பார்ப்பவை.

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
"மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ!
...
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று
வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி"
--- கவியரசர் கண்ணதாசன்
இடம் : BON ECHO PROVINCIAL PARK, ONTARIO, CANADA.
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா.
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா! ஆனந்தம்! "
--- கவியரசர் கண்ணதாசன்
இடம் : BON ECHO PROVINCIAL PARK, ONTARIO, CANADA.
இந்தப் பாலத்திலிருந்துதான் முதலாவதாக இருக்கும் படத்தை எடுத்தேன்.

Thursday, May 10, 2007

விலகல் அறிவிப்பு!!!!

பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் அவர்கள் எதிர்வரும் யூன் மாதம் 27ம் திகதி தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

"There is only one government since 1945 that can say all of the following: more jobs, fewer unemployed, better health and education results, lower crime, and economic growth in every quarter. Only one government, this one."

--- British Prime Minister Tony Blair

"1945ம் ஆண்டிற்குப் பின் ஒரே ஒரு அரசாங்கம் மட்டுமே பின்வரும் அனைத்தையும் சொல்லலாம்: அதிகளவிலான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கியமை, மிகக் குறைந்த வேலையில்லாதோர் தொகை, கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்த தரமான முன்னேற்றம், குறைந்த குற்றச் செயல்கள், அனைத்துத் துறையிலும் பொருளாதார வளர்ச்சி. அந்த ஒரேயொரு அரசு, இந்த அரசு மட்டுமே."

--- பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர்

"I think a lot of people will look back on the last 10 years of dashed hopes and big disappointments, of so much promised so little delivered."

----- David Cameron, Conservative leader

சில புகைப்படச் செய்திகள்

அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் [Richard Boucher] அவர்களும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக் [Robert O' Blake] அவர்களும் யாழ்ப்பாண நூல்நிலயத்தின் பல்கணியில்[balcony] நிற்பதை மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள். படத்தின் பின் புறத்தில் தெரிவது தந்தை செல்வாவின் நினைவுச் சிகரம்.


இந்த வருட முற்பகுதியில் காணமற்போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க அமைச்சரிடம் மனுக் கொடுக்கிறார் திருமதி. விசாலாட்சி அம்மை ரங்கநாதன்
யாழ்ப்பாண ஆயர் வணபிதா தோமஸ் செளந்தரநாயகம் அவர்களுடன் யாழ் நிலமைகள் பற்றிக் கேட்டறிந்தார் ரிச்சார்ட் பெளச்சர் அவர்கள். யாழ் நூல்நிலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் அவர்கள் யாழ்ப்பாண அரச அதிபர்[Jaffna Government Agent] திரு. கணேஸ் அவர்களை அரச அதிபர் பணிமனையில் சந்தித்து யாழ் நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
யாழ்ப்பாண அரச அதிபர் கணேசுடன் அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட்பெளச்சர்.
இந்த வருட முற்பகுதியில் காணமற்போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க அமைச்சரிடம் மனுக் கொடுக்கிறார் திருமதி. விசாலாட்சி அம்மை ரங்கநாதன்.
அமெரிக்க பிரதி அமைச்சர் ரிச்சார்ட் பெளச்சர் கொழும்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவைச் சந்தித்த போது எடுத்த படம்.
கொழுப்பு நகரம் புலிகளின் வான்படைத் தாக்குதலினால் இருள்மயமான போது கொழும்பில் வசிக்கும் மக்கள் வீதியில் வந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
கொழும்பில் புலிகளின் வான் தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருட்டில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர்.
அன்பர்களே, இது வானவெடி வேடிக்கைகள் இல்லை. கொழும்பில் புலிகளின் வான்படைகள் தாக்கிய பின்னர் சிங்களப் படைகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் வான் நோக்கிச் சுடுவதையே படத்தில் காண்கிறீர்கள்.
அண்மையில் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இலங்கை இனப்பிரச்சனை விவாதிக்கப்பட்டது. அதில் புலிகளின் பிரதிநிதிகளை பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திற்கு அழைப்பது எனவும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த பிரிட்டன் உதவும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இனியும் இலங்கை பிரிட்டனின் குடியாதிக்க நாடு இல்லையெனவும் பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது எனவும் வற்புறுத்தி சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பி கொழும்பில் உள்ள பிரிட்டிஸ் தூதுவராலயம் முன் நடாத்திய கண்டனப் பேரணியையே படத்தில் காண்கிறீர்கள்.
பிரிட்டனுக்கு எதிரான கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட ஜே.வி.பியின் மகளிர் அணி.
புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் சில ஈழத்தமிழர்களை பிரான்சு அரசு அண்மையில் கைது செய்து இருந்தது. தமிழர்களைக் கைது செய்ததற்கு பிரான்சுக்கு நன்றி தெரிவித்து கொழும்பில் புத்த பிக்குகள் நடாத்திய ஊர்வலம்.
சிங்கள அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தமிழ் நகரமான வவுனியாவில் கொலை செய்யப்பட்டு வீதியில் போடப்பட்டிருந்த தமிழரின் சடலத்தை இலங்கைப் பொலிஸார் பார்வையிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் நிருபரைச் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. அவரின் இறுதிச் சடங்கில் அவரது தாயார் கண்ணீர் வடிக்கும் காட்சி.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது புலிகளின் வான்படையின் தாக்குதலால் சேதமடைந்த கட்டிடத்தையும் அங்கே சிங்களப் படைகள் காவல் காப்பதையும் படத்தில் காண்கிறீர்கள்.
இப் படங்கள் எடுத்த தளங்கள் :- Tamilnet, AFP

Friday, May 04, 2007

அண்ணன் வைகோ அவர்களின் உரை வீடியோவில்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோரின் வழிவந்த, மதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்களின் உரை.


பாகம்-1

Thursday, May 03, 2007

தமிழர்களின் வான்படை: The Economist சஞ்சிகை

தமிழ்ப்படையின் வான் தாக்குதல்களால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக The Economist சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்ப்படையின் வான் தாக்குதல்களைச் சமாளிக்க சிங்கள அரசு பாதுகாப்புக்கான செலவை இன்னும் அதிகரிக்க வேண்டியுள்ளது எனவும், இதனால் deficit [பற்றாக்குறை] 8.4% ஆக உயரும் எனவும் இக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Economist சஞ்சிகையில் வந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Wednesday, May 02, 2007

அனைத்துத் தமிழர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

இந்த விவரணப்படம்[Documentary] BBC யில் ஒளிபரப்பானது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் இந்த விவரணப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும் எனும் நோக்கிலேயே இங்கே பதிவாகப் போடுகிறேன்.

இந்த விவரணப்படம் இலங்கை பற்றிய வரலாறு. குறிப்பாக தமிழ்-சிங்கள உறவு எப்படிச் சீரழிந்தது என்பதைச் சொல்கிறது இந்த விவரணப்படம்.

நீங்கள் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவானவரோ, எதிரானவரோ அல்லது ஈழப்போராட்டம் பற்றி அக்கறை இல்லாதவரோ யாராக இருப்பினும் இவ் விவரணப்படத்தைக் கட்டாயம் பாருங்கள். ஈழப் போராட்டம் பற்றிய சில வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ள இந்த விவரணப்படம் உதவும் என நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

இவ் விவரணப்படம் இனப்பிரச்சனை பற்றி முழு விபரங்களைத் தராவிடினும் சில அடிப்படைத் தகவல்களைத் தருகிறது.

உங்களின் அறிவுப் பசிக்கு ஒரு தீனி இந்த விவரணப்படம்.

மிக்க நன்றி.


பாகம்-1
பாகம்-2
பாகம்-3
பாகம்-4

இன்னும் தொடரும்...

Sunday, April 29, 2007

இன்னும் 30 ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் கடலுக்குள் மூழ்கிவிடும்!

"எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்களில் இல்லாமல் போக்கூடிய மண்ணுக்காக (சிங்கள)அரச படைகளும் விடுதலைப்புலிகளும் அடிபட்டுச் செத்து மடிகின்றனர்" என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே.["Government troops and the LTTE fighting over land in the north and the east that may soon not even be there."]

பேராசிரியர் மோகன் முனசிங்கே அவர்கள் ஐக்கிய நாடுகள்[ஐ.நா] சபையின் Intergovernmental Panel on Climate Change (IPCC) எனும் அமைப்பின் உப-தலைவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடல் நீரின் மட்டம் அரை மீற்றரால் உயருகின்றது, வறண்ட பகுதிகள்[dry zone] மேலும் வறண்ட பிரதேசங்களாகவும் குளிர்மையான பிரதேசங்கள்[wet areas] மேலும் குளிர்மையான பிரதேசங்களாகவும் மாறி வருகிறது. இதனால் குளிர் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்குகளும், வறண்ட பகுதிகளில் வறட்சிக் கொடுமைக்கும் வழிவகுக்கும். சூழலில்[atmosphere] அதி கூடிய வெப்பநிலையால் [Higher temperatures] தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் நாட்டின் விவசாயம் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி 20-30 வீதத்தால் வீழ்ச்சியடையும்.

நாட்டின்(இலங்கை)சுகாதார நிலமைகள் மிகவும் மோசமடையும். வறண்ட பிரதேசங்களில் இருந்து நுளம்புகள் குளிர்ப்பகுதிகளுக்குச் செல்லும் கட்டாயம் ஏற்படும். இதனால் இக் குளிர் பிரதேசங்களில் மலேரியா, டெங்கே[dengue] சிக்குன்னியா[chikungunya] போன்ற நோய்கள் பரவும்.

என்ன பயமாக இருக்கிறதா? இதோ இன்னும் சில :

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் [தமிழர்களின் தாயகம்] உள்ள பல கரையோரப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலில் மூழ்கிவிடும்.

பேராசிரியர் மோகன் முனசிங்கேயின் கருத்துக்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ், சிங்கள கடும்போக்காளர்களின்[hardliners] கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்[...comments that are certain to draw the attention of hardliners from both sides of the warring fence]


மேலே உள்ள தகவல்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸின்[The Sunday Times] இவ்வார இதழில் [Sunday, April 29, 2007] வெளிவந்தவை. பூமியின் உஷ்ணமே[global warming] இவ் அனர்த்தங்களுக்குக் காரணம் என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே. இவர் இவ் விடயத்தை மிகவும் மிகைப்படுத்துகிறாரா? அல்லது உண்மையாகவே சில தமிழ்ப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலுக்குள் மூழ்கப்போகிறதா என்பது எனக்குத் தெரியாது. யாராவது இத் துறையில் உள்ள வல்லுனர்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால் பேராசிரியரின் கருத்துக்கள் இலங்கை அரசியல்வாதிகளிடையேயும் மக்களிடையேயும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்பதுதான் என் கவலை.
எனது அச்சம்?!!!! ஈழத்தில் நான் பிறந்த மண்[ஊர்] ஒரு கரையோரக் கிராமம். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" இருந்த என் கிராமமும் கடலில் மூழ்கிவிடுமோ என்பதும் என் அச்சங்களில் ஒன்று.

Saturday, April 28, 2007

மாமனிதர் சிவராம் [தாராக்கி] நினைவாக...

"இவர் தனது எழுத்துக்களால் தமிழரின் தேசியப் பிரச்சினையை உலக அரங்கிலே மிகவும் நேர்த்தியான முறையில் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்கள அரசு மேற்கொண்டுவருகின்ற அப்பட்டமான பொய்ப்பரப்புரைகளை சர்வதேச சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் மிகச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் அம்பலப்படுத்தினார். சிங்களப் பேரினவாத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறினார். ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபோதும், அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துநின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, எம்மக்களுக்கு ஓயாது அரசியல் விழிப்புணர்வூட்டி, தமிழ்த் தேசியத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தினார். அன்னார் ஆற்றிய பணி என்றுமே போற்றுதற்குரியது.

திரு. தர்மரட்ணம் சிவராம் அவர்களின் இனப்பற்றிற்கும்,விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் வரலாற்றில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு"

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும், தான் எதிர்நோக்கிய சிக்கல்களையும் மாமனிதர் சிவராம் அவர்களே சொல்லக் கேளுங்கள்[கீழே].


நீ விட்டுச் சென்ற பணி தொடரும்

உன் சாவு மக்கள் ஆட்சிக்கு ஒரு சாவு மணி
உன் சாவு எழுத்துச் சுதந்திரத்துக்கு ஒரு மரண அடி
உன் சாவு எண்ணச் சுதந்திரத்துக்கு ஒரு அறைகூவல்
உன் சாவு மனித குலத்துக்குத் தீராத வடு
உன் சாவு மனித நேயத்துக்கு ஏற்பட்ட கறை!

உன் நாட்டுப்பற்று கடலை விடப் பெரியது
உன் இனமானம் வானை விட உயர்ந்தது
உன் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத்திற்கு நீரூற்றியது
உன் கருத்துக்கள் தமிழீழ விடுதலைக்கு எருவானது!
உன் நுண்மாண் நுழைபுலம் போராட்டத்துக்கு அரணானது!

உன் எழுத்துக்கு மாற் றெழுத்து
உன் கருத்துக்கு எதிர்க்கருத்து
உன் வாதத்துக்கு எதிர் வாதம்
முன் வைக்க வக்கற்ற அறிவிலிகள்
உன்னைக் கோழைத்தனமாகக் கொன்று விட்டார்கள்!

ஊடகவுலகின் மன்னன் என உலா வந்தவனே
நடமாடும் பல்கலைக் கழகமென புகழப் பட்டவனே
உன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை
உன் சாதனை இமயத்தை விட உயர்ந்தவை!

தன் வீடு தன்குடும்பம் என வாழாது
என் மண் என்மக்கள் என் இனம்
என நாளும் பொழுதும் வாழ்ந்தவன் நீ!
உன்னைப் போல் இன்னொரு எழுத்து ழவனை
என்றுதான் காண்போம் என்ன நோன்பு நோற்போம்!

இன் முகம்! கள்ளமில்லா வெள்ளை மனம்!
அன்பான பேச்சு! கனிவான பார்வை! தோற்றத்தில்
எளிமை! நடத்தையில் நேர்மை அறிவில் கூர்மை
பெற்ற தாய்மீதும் பிறந்த மண்மீதும் காதல்!

கொண்ட கோட்பாட்டில் உறுதி! போகும்பாதையில் தெளிவு!
அண்டம் குலைந்தாலும் நிலைகுலையாத கொள்கைக் கோமான்!
உன்னைப் போல் ஒரு அறிவாளியை தமிழுலகில்
என்றுதான் காண்போம்? எத்தனை காலம் காத்திருப்போம்?

உன் உடலைத்தான் எதிரிகளால் அழிக்க முடிந்தது
உன் உயிரைத்தான் பகைவர்களால் பறிக்க முடிந்தது!
உன் கருத்துக்களை யாருமே அழிக்க முடியாது!
உன் நினைவுகளை எவருமே ஒழிக்க முடியாது!
அவை காலம் காலமாக நீடித்து நிற்கும்!

என் அன்னைத் தாய்மொழி மேல் ஆணை!
என் எழுத்து கோல் மேல் ஆணை!
உன் ஆசைக் கனவுகளை நனவாக்குவேன்! நீ
சென்ற பாதையில் என் கால்கள் செல்லும்
நீ விட்டுச் சென்ற பணி தொடரும்!


இக் கவிதை திருமகள் என்பவரால் எழுதப்பட்டது. www.tamilnation.org எனும் இணையத்தளத்திலிருந்து இக் கவிதை எடுக்கப்பட்டது.

Tuesday, April 24, 2007

மூளைக்குச் சவால் : ஒரு புதிர்

கீழே உள்ள ரோமன் இலக்கச் சமன்பாடு பிழையானது. ஆனால் அச் சமன்பாட்டில் உள்ள ஒரே ஒரு குச்சியை/துண்டை[matchstick] மட்டும் இடம் மாற்றுவதன் மூலம் அச் சமன்பாட்டைச் சரியாக்கலாம். எந்த குச்சியை/துண்டை[matchstick] இடம் மாற்ற வேண்டும்?


matchstick க்கு என்ன தமிழ்? மேலே உள்ள என் தமிழ் விளங்காவிட்டால் கீழே அப் புதிரை ஆங்கிலத்திலும் தருகிறேன்.


The Roman numeral equation below is incorrect, but by moving just one of the matchsticks, it can become a correct equation. Which one needs to be moved?


சமன்பாடு - Equation :
IV = III - I

Monday, April 23, 2007

சிங்கள விமானப்படைத் தளம் மீது புலிகளின் வான்படை தாக்குதல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலியில் அமைந்திருக்கும் சிங்கள விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதாகவும் இத் தாக்குதலில் சிங்களப் படைகளுக்குப் பலத்த சேதம் விளைவித்துள்ளதாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளார் இளந்திரையன் கூறியுள்ளார்.

இது பற்றி தமிழ்நெற்றில் வந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


கீழுள்ள பந்தி EST 22:15 PM க்கு இணைக்கப்பட்டது.

சிறீலங்கா விமானப்படைப் பேச்சாளர் தளபதி அஜந்தா சில்வா[Capt. Ajantha Silva ] அவர்கள், விடுதலைப்புலிகள் எந்தவொரு விமானத் தாக்குதல்களையும் பலாலி விமானப்படைத்தளம் மீது நடத்தவில்லை என்றும் ஆட்டிலெறிகள் மூலமே அவர்கள் தாக்குதலை நடாத்தியதாகவும் சேத விபரங்கள் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அசோசியற் பிறஸ்[The Associated Press] செய்தித் தாபனத்திற்குச் சொல்லியுள்ளார்.

அச் செய்தியைப் படிக்க இங்கேகிளிக் செய்யவும்


இத் தாக்குதல் தொடர்புடைய சில செய்திகள்:

பலாலி இராணுவத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்
Sri Lanka's Tamil Tigers bomb air base in north
Tamil Tigers 'launch air strike' : BBC
பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்

Sunday, April 22, 2007

இவ் வார சிறந்த பதிவுகள்

"இவ் வார சிறந்த பதிவுகள்", இந்தத் தலைப்பு சும்மா பரபரப்புக்காக வைக்கப்பட்டது. ஒவ்வொருவரின் வாசிப்பு இரசனையும் வேறுபட்டது. எனக்குச் சிறந்த பதிவாகத் தென்படும் பதிவு இன்னொருவருக்கு குப்பைப் பதிவாகத் தெரியலாம். அத்தோடு தமிழ்மணத்தில் வரும் முழுப்பதிவுகளையும் நேரமின்மை காரணமா வாசிக்க முடிவதில்லை.எனவே வரும் முழுப்பதிவுகளையும் வாசிக்காமல், இவைதான் சிறந்த பதிவுகள் என்பது நீதிக்குப் புறம்பானது. ஆக, இந்த வாரம் நான் வாசித்த பதிவுகளில் பிடித்த பதிவுகள் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

நான் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளை இங்கே பட்டியலிடுகிறேன். இப் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வாசித்துவிட்டு அங்கே உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதி அப் பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

சும்மா எழுந்தமானமாகப் பதிவுகளை வரிசைப்படித்தியுள்ளேன். எந்த ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை.

மிக்க நன்றி.
  1. கவிதைகள்
    1. சகோதரிக்கு...
    2. புனிதமற்ற காசி!
    3. சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..!
    4. இன்ப வதை...
    5. காலங்கள் தந்த ஏமாற்றங்கள்
    6. நம்பாதீர்கள் மஹாஜனங்களே
    7. சிவன் வந்தான்
    8. கருவறை
    9. எழுதிவிட முடியாத ஒரு கவிதை
    10. தனிமையின் குரல்
    11. சீர்திருத்தங்கள்!
  2. அனுபவம்
    1. அவதானம்
    2. சல்லி அம்மனும் கடல் அம்மாவும்"
    3. வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2
    4. வாழ்வென்பது வண்ணங்கள்
    5. வாஷிங்டன் முருகனுக்கு அரோகரா
    6. அடுத்து என்ன?
  3. வரலாறு
    1. சோழர்களின் பொருளாதாரப் போர்கள்
    2. அன்னை பூபதி
    3. ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ்
    4. சேகுவேரா --- வரலாற்றின் நாயகன் - 3
  4. ஆன்மீகம்
    1. செல்போனும் ஆன்மீகமும்
    2. வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் (பாடல் 47)
  5. ஒலி/ஒளி
    1. உ.இ.ப.மா.சங்கம் கலை விழா 2007
    2. ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
    3. நீங்கள் கேட்டவை - பாகம் 2
    4. பூபதித்தாய் அவள் போதித்தாள்
    5. உங்களால் "நாதஸ்"(அ) ஒத்து ஊத முடியுமா?
  6. சமூகம்
    1. தம்மின் மெலியாரை நோக்கி
    2. தாலி பாக்கியம் நிலைக்க வேண்டி, குழந்தைகள் கழுத்தில் தாலி மற்றும் நகைகளை அணிவித்த கொடுமை.
  7. கருத்து
    1. நிஜமான ஆன்மீகப் பதிவர்கள் பார்வைக்கு
    2. ஐப்பீ
    3. கானா பிரபாவுக்கு - HATS OFF!!!
    4. படலைக்கு படலை
    5. ஐப்பீ

Saturday, April 14, 2007

கனேடியப் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துக்க்கள்.


இன்று தமிழ்-சிங்கள புத்தாண்டு தினம். இந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்க்கனேடியர்களுக்கு கனடாவின் பிரதமர் மேதகு ஸ் ரீபன் காபர் [Hon. Stephen Harper]அவர்கள் தனது சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.வாழ்த்துச் செய்தியை பெரிதாக்கி வாசிக்க கீழுள்ள வாழ்த்துச் செய்தியில் கிளிக் செய்யுங்கள்.



படம், தகவல் : தமிழ்க்கனேடியன்

Friday, April 13, 2007

யாழ்ப்பாண அரச குடும்பத்தின்[Royal Family of Jaffna] இணையத்தளம்

யாழ்ப்பாணப் பேரரசு போர்த்துக்கீசரினால் அழிக்கப்பட்டதாக வரலாறு. யாழ்ப்பாணப் பேரரசின் கடைசி மன்னன் சங்கிலியன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் தான் நான் அறிந்த யாழ்ப்பாண வரலாறு.

கோவா அப்போது போர்த்துக்கீசரின் ஆட்சியின் கீழ் இருந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

யாழ்ப்பாண மன்னர்கள் தங்களின் பெயரோடு "ஆரியச்சக்கரவர்த்தி" எனும் சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். யாழ்ப்பாண அரசின், அதாவது இந்த "ஆரியச்சக்கரவர்தி" வம்சத்தின் வாரிசுகள் தாங்கள்தான் என ஒரு இணையத்தளத்தில் உரிமை கொண்டாடுகிறார்கள் சிலர். இதில் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது.

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்[The Official Website of The Royal Family of Jaffna ] என அதன் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Remigius Kanagarajah என்பவர்தானாம் இப்போது இளவரசர் எனவும் அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுளது.

இவர்கள் இப்போது நெதர்லாந்தில் [The Netherlands ] வசிக்கிறார்களாம்.

தான் ஏன் யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசு என சொல்கிறேன் என்பதை இப்படிச் சொல்கிறார் திரு. கனகராஜா:

"Although the Kingdom of Jaffna was destroyed by the Portuguese by 1621, it still exists through me, my family and other existing descendants of the Royal Family of Jaffna. The reason I am coming forward now to claim this succession is grounded in the need to prove to the younger generation and the world that there was once a strong Kingdom in Jaffna."
மேலே உள்ள பந்தியின் தமிழாக்கம்.
"1621ம் ஆண்டுக்குள் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட போதிலும், என் மூலமும் எனது குடும்பம், மற்றும் உறவினர்கள் மூலமும் யாழ்ப்பாண இராச்சியம் இன்றும் இருக்கிறது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலமான இராச்சியம் இருந்தது என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிரூபிக்கவே நான் யாரென்பதைச் சொல்ல முன்வந்தேன்"

தமது முன்னோர் இராமேஸ்வரத்தில் வாழ்ந்த கங்கா வம்சத்தினர் எனவும், பின்னர் அவர்கள் பிராமணர்களுடன் திருமணங்கள் செய்து கொண்டதால் "ஆரியர்" எனும் அடைமொழியைத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்றும் சொல்கிறார் கனகராஜா.

சரி, நீங்களும் அந்த இணையத்தளத்தைப் பார்க்க/படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sunday, April 08, 2007

இலங்கை எங்கே போகிறது? -- ஒரு பேட்டி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவாவுக்கு வருகைதந்த சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வி.


கேள்வி: இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஊடகத்துறையை சார்ந்தவர் என்ற வகையில் இன்று அங்குள்ள நிலைமை என்ன?

பதில்: உண்மையை எழுதுகின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது. உண்மையை எழுதும், அரசாங்கத்தை, அரச படைகளை விமர்சிக்கும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. பல தமிழ் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். சிலர் பத்திரிகை தொழிலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அச்சுறுத்தப்படுகிறார்கள். ஊரடங்கு சட்டநேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் இராணுவத்தின் அனுமதி பெறவேண்டும். கைத்தொலைபேசி, இன்ரநெற் வசதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டிருக்கிறார். இதுவரை அவர் விடுதலை செய்யப்படவில்லை. இவ்வாறு மிக மோசமான அபாயகரமான சூழலில் ஊடகவியலாளர் உள்ளனர்.

கேள்வி: கொழும்பில் ஊடகவியலாளர் பரமேஷ்வரி மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த மூவரும் கடத்தப்பட்டார்கள். பின்னர் அவர்களை கடத்தியது சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவு என்பதை அரசாங்கம் ஒத்துக்கொண்டிருக்கிறது. கடத்தல் என்பது ஒரு கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு எதிராக சுதந்திர ஊடக அமைப்பு ஏதாவது சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

பதில்: பரமேஷ்வரி கடத்தப்படவில்லை, அவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவரை விடுவிப்பதற்காக சுதந்திர ஊடக இயக்கம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அவர் இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை விடுவிப்பதற்காக போராட்டங்களை நடத்தினோம். பல வழிகளில் அழுத்தங்களை கொடுத்தோம். அவர் இப்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

தொழிற்சங்கவாதிகள் மூவரை கடத்தி 24 மணிநேரத்தின் பின்தான் அவர்களைக் கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்தது. இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. சிறிலங்கா அரசாங்க படைகளும் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஏனைய தொழிற்சாங்க வாதிகள் மூவரின் கடத்தல் மற்றும் கைது தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கேள்வி: இந்த கடத்தல்களுக்கான காரணம் என்ன?

பதில்: பல காரணங்கள் இருக்கலாம். இரகசியமாக கைது செய்ய வேண்டும் என்பதற்காக, அவர்களை தொடர்ந்து விடுவிக்காமல் வைத்திருப்பதற்காக, வேறு தீய நோக்கங்களும் இருக்கலாம். இந்த கடத்தல்களில் அரசாங்கப் படைகள் மட்டுமல்ல சில குழுக்களும் ஈடுபட்டிருக்கின்றன.

இலங்கையில் நிலைமை என்பது படுமோசமாக போய் கொண்டிருக்கிறது. யார் யார் என்ன நோக்கத்திற்காக கடத்துகிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது. இவர்கள் பணம் பறிப்பதற்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் கடத்துவதாக சொல்கிறார்கள். சிலர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பலருக்கு என்ன நடந்தது என தெரியாமல் இருக்கிறது.

இந்த கடத்தல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இந்த கடமையை செய்யாமல் கடத்தல்காரர்களுக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் இதைப்பற்றி பேச அஞ்சுகிறார்கள். பத்திரிகைகள் இதை எழுத அஞ்சுகின்றன. தங்களுக்கும் ஆபத்து வந்துவிடும் என எல்லோரும் வாயடைத்துப்போய் இருக்கிறார்கள். இதனால் அராஜகம் அதிகரித்து விட்டது.

கேள்வி:இந்த போரைப்பற்றி சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பதில்: பெரும்பாலான சிங்கள மக்கள் இந்த போரில் அரசாங்கம் வெல்லும் என நினைக்கிறார்கள். முன்னர் இருந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கம் விடுதலைப்புலிகளை தோற்கடித்து யுத்தத்தில் வெற்றி அடையும் என நினைக்கிறார்கள். ஆனால் யுத்தத்தில் யாரும் வெல்லப்போவதில்லை என்ற உண்மையை சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் உணரத் தவறுகிறார்கள்.

கேள்வி:அரசாங்கம் போரில் வெல்லும் என சிங்கள மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்?

பதில்: ஒன்று அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் செய்கின்ற பிரசாரம்.இரண்டாவது கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி அங்கு விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை போன்ற காரணங்கள்தான் சிங்கள மக்கள் அப்படி நினைப்பதற்கு காரணம் என நினைக்கிறேன். முக்கியமாக பிரசாரம்தான் காரணம்.

வாகரை மற்றும் மட்டக்களப்பு செய்திகளை பார்த்தால் அங்கு எல்.ரி.ரி.ஈ.யின் கதையே முடிந்திருக்க வேண்டும். அரசாங்கம் வெளியிட்ட தகவல்களை, சிங்கள ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கணக்கு பார்த்தால் கிழக்கில் ஒரு எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் கூட இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றும். சிங்கள மக்களுக்கு உண்மையில் இந்த போர் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைப்பதில்லை.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் என்ன நினைக்கிறது?

பதில்: அரசாங்கம் இந்த போரில் தாங்கள் வெற்றி பெறுவோம் என நினைக்கிறது. அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு முதல் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை முற்றாக தோற்கடித்து அழித்து விடலாம் என நினைக்கிறது. எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை தோற்கடித்து விட்டால் தான் விரும்பிய ஒரு தீர்வு திட்டத்தை வைக்கலாம் என அரசாங்கம் நினைக்கிறது.

கேள்வி:அப்படியானால் அடுத்து என்ன நடக்கப்போகிறது?

பதில்: நிச்சயமாக அங்கு பெரியதொரு போர் ஒன்று நடக்கப்போகிறது. சமாதானப்பேச்சு வார்த்தை என்பதற்கான சாத்தியமே இல்லை. இரு தரப்புமே போருக்கு தயாராகி விட்டார்கள். கடந்த காலத்தில் நடந்ததை விட மிக உக்கிரமான போர் நடக்கலாம். பல அழிவுகள் ஏற்படலாம். அவை பெரும் அதிர்ச்சி தரும் அழிவுகளாக இருக்கலாம்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏதாவது ஒரு தரப்பு சில சமர்களில் வெல்லலாம். சில வேளைகளில் அரசாங்கம் சில சமர்களில் வெல்லலாம், ஆனால் இந்த போரின் மூலம் மக்களை வெல்லமுடியாது.

அரசாங்கம் உண்மையாகவே நாட்டில் பிரச்சினைத் தீர்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கும் அவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை வழங்கி சுமுகமான தீர்வை கொண்டுவரவேண்டும் என விரும்பினால் போரை உடனடியாக நிறுத்தி விட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வை காணவேண்டும். அதைவிடுத்து போரை நடத்திக்கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக கூறுவது ஏமாற்றுவேலை.

கேள்வி: அப்படியானால் இனி சமாதான பேச்சுவார்த்தை அமைதி முயற்சி என்பதெல்லாம் தோற்றுப்போன விடயம் என்கிறீர்களா?

பதில்: என்னைப்பொறுத்தவரை நாடு போகிற போக்கை பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது கஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். இப்போது இரு சமூகங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி அதிகரித்துக்கொண்டு போகிறது. நாங்கள் பேச்சுவார்த்தை அமைதி வழியில்தான் தீர்க்க வேண்டும் என்கிறோம். எங்களுக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அன்பாக பழகுகிறோம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இரு சமூகங்களிலும் இருக்கிற இளைய தலைமுறை என்ன சொல்கிறது, போரைத்தானே அவர்கள் விரும்புகிறார்கள். இனிவரும் காலத்தை கற்பனை பண்ணிபார்க்கவே முடியாமல் இருக்கிறது. அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்று சொல்கிறது. அந்த ஐக்கிய இலங்கை என்பதை இனி நினைத்துக்கூட பார்க்க முடியாது. இரு சமூகங்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து செல்கிறது.

கேள்வி:அப்படியானால் நாடு இரண்டாக பிரிந்து விடும் என்கிறீர்களா?

பதில்: பூகோள அரசியல் நிலைமைகளை பார்க்கும் போது தமிழ் அரசுக்கான சந்தர்ப்பம் குறைவாகவே தெரிகிறது. பூகோள அரசியல் நலன்கள் காரணமாக தமிழ் அரசு அமைவதற்கு தடையாக சில விஷயங்கள் இருக்கின்றன.

அதேநேரம் சிங்களவர்களும் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க கூடிய சமஷ்டி அதிகாரத்தை வழங்கும் வாய்ப்பும் இல்லை. சிங்களவர்கள் மாகாணசபை முறையை வழங்கினால் போதும் என நினைக்கிறார்கள். சிங்களவர்களைப்பொறுத்தவரை மாகாணசபைக்கு மேல் ஒரு துளிகூட சிந்திக்க தயாராக இல்லை.

தமிழர்களைப்பொறுத்தவரை பூரண அதிகாரங்களைக்கொண்ட சமஷ்டி ஆட்சிக்கு கீழ் வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.


இச் செவ்வி கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் வெளிவந்தது [சித்திரை 08,2007]. நன்றி தினக்குரல்.

Tuesday, April 03, 2007

சோசலிஸம் எனும் மோச[லிச]ம் --- கவிதை

சோசலிஸ மெனும் மோசலி சத்தினால்
சோற்றுக்குப் பஞ்சமடா! - இங்கு
பேசும் இஸமெல்லாம் பாட்டாளி வாயில்மண்
போடும் இஸங் களடா!

பிற்போக்குக் காரர்களால்
பின்தள்ளப் பட்டீர்கள்
முற்போக்குக் காரர் நாம்
முறியடிப்போம் இன்னல் என்றார்.

எப்போக்குக் காரர் வந்தும்
இன்னல் களையவில்லை
துன்பம் தொலையவில்லை
துயர்க்கதையோ முடியவில்லை

எத்தனையோ பேர்கள் வந்தார்கள்
எதையெதையோ சொன்னார்கள்
மெத்தையிலே உன்னை வைத்து
மேன்மையுறச் செய்வோமென்று
அத்தனையும் நம்பியுள்ளம்
ஆசையுடன் தொலையவில்லை...

மண்ணதிர விண்ணதிர வாய்ச்சிலம்ப மாடி
மாண்டொழிந்த பழமையினை இன்னுமிங்கு கூறி
கண்ணெதிரே கொடுமை கண்டும் கற்சிலையாய் மாறி
காரேறிப் பவனிவரும் கனவான்கள் கூட்டம்
உன்னுதிரம் உறிஞ்சியுடல் உப்புகின்றதை நீ
ஓர் நிமிடம் சிந்தித்தால் உன்வாழ்வு மலரும்
புண்ணதனில் வேல்பாய்ச்சப் பொறுத்திருப்ப தோடா?
பொங்கியெழு சிங்கமென எந்தன் மலைத்தோழா!

இக் கவிதை வரிகளின் சொந்தக்காரர் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான குறிஞ்சித் தென்னவன்.

"நுவரெலியா லபுக்கலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து, தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது இயற்பெயர் V.S.வேலு என்பதாகும். 'துயரம் தோய்ந்த குடும்பச் சூழலிற் பிறந்து, அச் சூழலியே இன்றுவரை வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன்' என அவரே கூறுவார். இவர் தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரையே கற்றவர். 1934ம் ஆண்டு பிறந்த இவர் 1946ம் ஆண்டில் வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாத நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தோட்டத் தொழிலாளியாகவே தமது வாழ்வை மேற்கொண்டு, இன்றுவரை முதுமையடைந்த நிலையிலும் தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 'உழுதுண்டு வாழ வழியில்லை. தொழுதுண்டு பின்செல்லவும் மனமில்லை.தோட்டத் தொழிலாளியானேன்' என்கிறார்."
[பேராசிரியர் க. அருணாசலம். மலையகத் தமிழ் இலக்கியம். பேராதனைப் பல்கலைக்கழகம். பக்.140, 141,147]

Sunday, February 04, 2007

இலங்கையின் 59 வது சுதந்திர தினம் : ஒரு மீள் பார்வை

இன்று, மாசி[Feb ] 4, இலங்கையின் 59 வது சுதந்திர தினம். சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாகக் கொண்டாட முடியாத நிலையில் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் சும்மா ஒரு சம்பிரதாயச் சடங்குகள் போல் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையை பல சமூகங்களைக் கொண்ட நாடாக கட்டியெழுப்ப அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள்.

தமிழ்மக்கள் இலங்கையின் சுதந்திர தினம் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. அவர்களுக்கு இத் தினத்தில் ஈடுபாடும் இல்லை. இலங்கையைக் கட்டியெழுப்பியவர்களில் முக்கியமான பங்கு வகித்தவர்கள் தமிழர்களாக இருந்த போதும், சுதந்திரம் அடைந்த பின் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தமிழ்மக்களை இரண்டாம்தரக் குடிகளாகவே நாடாத்தி வந்தனால் தமிழ்மக்கள் சுதந்திர தினத்தைப் புறக்கணித்தே வருகின்றனர்.இலங்கைக்கு சுதந்திரம் வேண்டும் எனும் எண்ணத்தில் முதன் முதலில் இலங்கை தேசிய காங்கிரஸை [Ceylon National Congress] உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டவர் சேர். பொன். அருனாசலம்[Sir. Pon. Arunachalam].

BBC செய்தியாளர் Christoper Thomas தமிழ்மக்களின் சுதந்திர தினப் புறக்கணிப்பை இப்படிச் சொல்கிறார்:

"Sinhalese equate Sinhala nationalism with Sri Lankan nationalism. The one calamitous decision that led to the ethnic war was the Sinhala-only legislation of 1956, which lifted recognition of Tamil as an official language. After that blow, the uncertain desire for a separate Tamil homeland became a passionate one... Tamils, 18 per cent of the population, mostly feel uninvolved in this week's events. The art of the nation-building, like art of displaying sensitivity towards an aggrieved and alienated people, has yet to be perfected."

சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த இலங்கையின் வரலாற்றை அறிந்தவர்கள் இன்றைய இலங்கையைப் பார்த்து மனவேதனையுடன் பரிதாபப்படும் நிலையிலேயே உள்ளது.

இந்துசமுத்திரத்தின் முத்து[Pearl of the Indian Ocean], ஆசியாவின் புலி[Asian tiger] எனவெல்லாம் புகழப்பட்ட இலங்கை எப்படித் தடம் புரண்டது?

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது, ஆசியாவிலேயே பிலிப்பைன்சுக்கு அடுத்தபடியாக மக்களின் வாழ்க்கைத்தரத்தில் சிறந்த [highest living standard ] நாடாக இலங்கை விளங்கியது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் [இரண்டாவது உலக மகாயுத்தத்தால்] ஜப்பான் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது. அக் காலப் பகுதியில் ஆசியாவின் பொருளாதாரப் புலி என அழைக்கபட்ட நாடு இலங்கை. அன்று ஒரு இலங்கை ரூபா ஆக மூன்று ஸ்ரேலிங் பவுன்ஸ்[Sterling Pound] மட்டுமே.

இரண்டாவது உலக மகாயுத்தக் காலகட்டத்தில் பிரிட்டன் இலங்கையிடம் கடன் [Foreign Aid]வாங்கியது என்றால் நம்புவீர்களா? ஆம், பிரிட்டனுக்கே இலங்கை கடனுதவி [Foreign Aid] அளிக்கக் கூடிய அளவில் அதன் பொருளதார வளர்ச்சி இருந்த்து. சிறந்த கல்வியமைப்பு [Education system ]மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரம்[[highest living standard ] போன்றவற்றைப் பல நாடுகள் புகழ்ந்து பாராட்டின.

ஆசியாவிலேயே அதிகம் எழுதப் படிக்கத் தெரிந்த மக்களைக்[99.7%] கொண்ட நாடுகளில் இலங்கை முதலாவதாகத் திகழ்ந்தது. உலகின் பல பாகங்களிலிருந்தும் இலங்கையில் படிப்பதற்காக மாணவர்கள் வருவது சகஜமாக இருந்தது. பல நாடுகளால் இலங்கையின் கல்வித தரம் மிகவும் போற்றப்பட்டது. இலங்கையில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்ற பல ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளுக்கும் [வையித்தியர், பொறியியலாளர், ஆசிரியர்கள்] சென்று தொழில் வாய்ப்புக்களை 1915 களில் இருந்தே பெற்றனர். சிங்கப்பூரை உருவாக்கிய சிற்பிகள் அல்லது சிங்கப்பூரின் தந்தைகள் என்று அழைக்கப்படுமளவுக்குப் புகழ் பெற்றவர்களில் ஒருவர் சின்னத்தம்பி இராஜரத்தினம். இவர் சிங்கப்பூரின் துணைப்பிரதமராக இருந்தவர். சிங்கப்பூர் உருவாகியதில் இருந்து பல அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்தவர். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரே.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் Lee Kwan Yew அவர்கள் சிங்கப்பூரை இலங்கை போல் கட்டியெழுப்ப வேண்டும் எனும் கனவுடன் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினார் என அவர் சொன்னதாகச் சொல்வார்கள். இலங்கை பற்றிய தனது அனுபவத்தை அவரது சுயசரிதப் புத்தகத்தில் இப்படிச் சொல்கிறார் Lee Kwan Yew:

"My first visit to Sri Lanka was in April 1956 on my way to London...I walked around the city of Colombo, impressed by the public buildings…Ceylon had more resources and better infrastructure than Singapore...Ceylon was Britain's model Commonwealth country. It had been carefully prepared for independence. After the war, it was a good middle-size country with fewer than 10 million people. It had a relatively good standard of education, with 2 universities of high quality, a civil service largely of locals, and experience in representative government starting with city council elections in the 1930s. When Ceylon gained independence in 1948, it was the classic model of gradual evolution to independence."

உலக வங்கியின் தென் ஆசியப் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் Mieko Nishimizu அவர்கள் ரோக்கியாவில் நடந்த இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் இலங்கை பற்றிய தன் எண்ணங்களை இப்படிச் சொல்கிறார்:

"When I came to the World Bank, I was shocked to find Sri Lanka listed among the low-income developing countries in the World Bank Atlas. I grew up, in Japan, thinking of Sri Lanka as a developed nation, with a reverence one naturally holds for the cultural and historical heritage of an advanced civilization.

My own mental picture of Sri Lanka was suffused with impressive bits of information. Let me share with you some of those mental brushstrokes.

  1. A nation that boasts one of the oldest, if not the oldest, written history in the world.
  2. One of the first countries in the world to introduce universal adult franchise – in 1931, two years after Britain and nearly 20 years before India.
  3. A tradition of democratic governance right down to the village level, with elected village and town councils accountable to the people, as early as in the 1930s.
  4. A nation who produced the world's first lady Prime Minister, in 1960s.
  5. A people with among the best socioeconomic indicators in all of Asia – be it life expectancy, infant and maternal mortality, literacy, near universal primary school enrolment, etc.
  6. Jaffna College, dating back to 1819, and the American missionaries who founded it, where Malaysian, Singaporean, South Indian and even Japanese students were enrolled as early as the 1930s and 1940s.
  7. The Observer out of Colombo founded in 1934, a national newspaper still in circulation today, and the Morning Star out of Jaffna in 1841.
  8. The Ceylon Chamber of Commerce, the world's oldest such chamber dating back 164 years, and thriving today
  9. And, Lee Kuan Yew's pronouncement that he wanted Singapore to be like Sri Lanka, when he visited the island in the 1950s.

These are just a few brushstrokes of a nation called Sri Lanka, of a people of deep political awareness."

இப்படி கல்வியறிவு கொண்ட மக்கள், சிறந்த பொருளாதாரம் எனத் திகழ்ந்த நாடு, எப்படி இன்று உருப்படாத நாடுகள் வரிசையில் முன்னனியில் நிற்கிறது? ஏன் இந்தச் சொர்க்காபுரி இன்று நரகமாக மாறியது? பிரிட்டன் போன்ற குடியாதிக்க நாடுகளுக்கே கடன் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்த நாடு, ஏன் இன்று உலக நாடுகள் போடும் பிச்சையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது?

இதற்கான விடைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, January 31, 2007

அவள் ---- [கவிதை]


'மான்' என அவளைச் சொன்னால்
   மருளுதல் அவளுக் கில்லை
'மீன்விழி உடையா' ளென்றால்
   மீனிலே கருமை இல்லை
'தேன்மொழிக் குவமை' சொன்னால்
   தெவிட்டுதல் தேனுக் குண்டு
'கூன்பிறை நெற்றி' என்றால்
   குறைமுகம் இருண்டு போகும்


'மயிலெனும் சாய' லென்றால்
   தோகைபெண் மயிலுக் கில்லை
'குயிலெனும் குரலாள்' என்றால்
   ஏழிசை குயிலுக் கில்லை
'வெயிலொளி மேனி' என்றால்
   வெயிலிலே வெப்பம் உண்டு
'அயிலெனும் பார்வை' என்றால்
   அழிவின்றி ஆக்க மில்லை


'சந்திர வதனம்' என்றால்
   சந்திரன் மறுநாள் தேய்வான்
'அந்தரப் பெண்போல்' என்றால்
   அவளை நாம் பார்த்த தில்லை
'செந்திரு மகள்போல்' என்றால்
   திருவினைக் கண்டார் யாரே?
'சுந்தர வடிவெ'ன் றாலும்
   சொல்லிலே வலிமை இல்லை


'கூந்தலை மேகம்' என்றால்
   மேகத்தில் கருமை கொஞ்சம்
'காந்தளைக் கைபோ' லென்றால்
   கேட்டதே கண்டதில்லை
'மோந்ததும் வாடிப் போகும்
   முல்லை தான் பல்லுக் கீடோ?'
'ஏந்திழை' என்றிட்டாலும்
   இயற்கையின் எழிலைப் போக்கும்


'விரல்களைப் பவளம்' என்றால்
   வீணையை மீட்ட லாமோ?
'குரல்வளை சங்கம்' என்றால்
   சங்கொலி குமுறிக் கூவும்
'கரமதைக் கமலம்' என்றால்
   மாலையில் கமலம் கூம்பும்
'ஒருமரம் மூங்கில் தோளுக்
   குவமை' யென் றுரைக்க லாமோ?


'குமிழ்என மூக்கைச்' சொன்னால்
   கூர்மையும் நேர்மை யில்லை
'அமிழ்தவள் பாடல்' என்றால்
   தேவரே அமுதம் உண்டார்
'தமிழ்' எனும் இனிமை என்றால்
   தனித்தமிழ் இப்போ தில்லை
'கமழ்மணம் தேகம்' என்றால்
   கன்னியின் தாயே காண்பாள்


பற்பல உவமை சொல்லிப்
   பண்டிதர் களுக்கும் கூடக்
கற்பனை புரிந் திடாத
   கட்டுரை பின்னிக் காட்டும்
சொற்பல அடுக்க வேண்டாம்;
   சுருக்கமாய்ச் சொல்லப் போனால்
அற்புத அழகு முற்றும்
   இயற்கையில் அமைந்த நங்கை.


கண்டவர் மறக்க மாட்டார்
   கேட்டவர் காணப் போவார்
அண்டையிற் பழகி னோர்கள்
   அவளைவிட் டகல மாட்டார்
பெண்டுகள் வந்து வந்து
   பேசுதற் காசை கொள்வார்
சண்டையும் சலிப்பும் எல்லாம்
   சாந்தமாம் அவளைச் சார்ந்தால்


தன்னிலும் அறிந்தார் முன்னே
   தான் தனி மடமை தாங்கும்
நன்னயம் இல்லாச் சொல்லைக்
   கேட்கவும் நாணம் கொள்வாள்
அண்னியர்க் கேனும் தீமை
   ஆற்றிட அச்சம் கொள்வாள்
மன்னவர் தவறி னாலும்
   மத்திடாப் பயிர்ப்பு மண்டும்

தொடரும்....

பி.கு :- இக் கவிதையை நான் எழுதவில்லை. படித்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் இங்கே உங்களோடு பகிர்கிறேன். என்னே தமிழ்!!!!. மிகவும் எளிமையான தமிழில் அழகாக வார்த்தைகளளக் கோர்த்து பின்னப்பட்ட கவிதை இது. இக் கவிதை ஒரு பிரபல கவிஞரால் எழுதப்பட்டது. தெரிந்தால் சொல்லுங்கள். இல்லையேல், கவிதையின் மறுபகுதியையும் வெளியிட்ட பின்னர் சொல்கிறேன்.

Saturday, January 27, 2007

சில ஈழத்துச் சொற்கள்

இது ஒரு சோதனைப் பதிவு. வழமை போல் இன்று காலை Blogger account க்குள் நுழைய முயன்ற போது பலன் கிடைக்கவில்லை.புதிய Blogger க்கு மாற்றினால் தான் உள்ளே விடுவேன் என Blogger அடம்பிடித்தது. அதனால் இப்போதைக்கு மாறுவதில்லை என்றிருந்த என் பிடிவாதத்தில் இருந்து வெற்றிகரமாகப் பின்வாங்கி புதிய Blogger க்கு மாத்தியாச்சு.

சரி, மாற்றின பின் என் பழைய தளத்தில் இருந்த பல பாகங்களைக்[Hit Counter, etc] காணவில்லை. ஒரு விடயத்தைத் தவிர எல்லாம் சரி செய்தாச்சு. புது Blogger க்கு மாற்றிய பின் புதுப் பதிவு போட்டால் ஏதாவது சிக்கல்கள் வருகிறதா எனச் சோதித்துப் பார்க்கத்தான் இப் பதிவு.

உடனே எழுதுவது என்றால் என்னத்தை எழுதுவது? ஈழத்தில் எனது ஊரில் நான் வளர்ந்த சுற்றாடலில் புழங்கும் சில சொற்களைப் பதிவிட்டால் என்னவெனத் தோன்றியது. அதனால்தான் இப்பதிவு.

  1. உரிசை = உருசி(ருசி) = taste

  2. எ.கா:-
    வன்னிப் பலாப்பழம் நல்ல உரிசை.
  3. நெடுகல் = அடிக்கடி = always

  4. இச் சொல் பல இடங்களில் பல பொருளில் புழங்கப்படும்.
    எ.கா :-
    1.என்னெண்டு நெடுகலும் அவரிட்டை உதவி கேக்கிறது
    2.வீதி நெடுகலும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது
  5. பரிசுகேடு = அவமானம்

  6. எ.கா :-
    ச்சீ, பரிசுகேடு, அவனாலை வெளியிலை தலை காட்ட முடியமல் இருக்குது
  7. கருக்கல் = அதிகாலை

  8. எ.கா:-
    கருக்கலோடை எழும்பி திருக்குறளை பாடமாக்கு
  9. குறுக்கால போவான்/(ள்) = ???

  10. இச் சொல்லுக்கு ஒத்த சொற்கள் எனக்குத் தெரியாது. இச் சொல்லின் சரியான பொருளும் எனக்குத் தெரியாது. ஆனால் இச் சொல் புழங்கும் சந்தர்ப்பம் தெரியும். ஒருவர் பெரியோர்களின் சொல்வழி கேளாமலோ அல்லது சமூக விரோதச் செயல்கள் செய்தாலோ அவனையோ அல்லது அவளையோ பார்த்து குறுக்கால போவானே அல்லது குறுக்கால போவாளே என்று திட்டுவர்கள். அடியேனும் பல முறை இப் பெயரால் திட்டு வாங்கியிருக்கிறேன்.:))