Saturday, April 28, 2007

மாமனிதர் சிவராம் [தாராக்கி] நினைவாக...

"இவர் தனது எழுத்துக்களால் தமிழரின் தேசியப் பிரச்சினையை உலக அரங்கிலே மிகவும் நேர்த்தியான முறையில் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்கள அரசு மேற்கொண்டுவருகின்ற அப்பட்டமான பொய்ப்பரப்புரைகளை சர்வதேச சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் மிகச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் அம்பலப்படுத்தினார். சிங்களப் பேரினவாத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறினார். ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபோதும், அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துநின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, எம்மக்களுக்கு ஓயாது அரசியல் விழிப்புணர்வூட்டி, தமிழ்த் தேசியத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தினார். அன்னார் ஆற்றிய பணி என்றுமே போற்றுதற்குரியது.

திரு. தர்மரட்ணம் சிவராம் அவர்களின் இனப்பற்றிற்கும்,விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் வரலாற்றில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு"

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும், தான் எதிர்நோக்கிய சிக்கல்களையும் மாமனிதர் சிவராம் அவர்களே சொல்லக் கேளுங்கள்[கீழே].


நீ விட்டுச் சென்ற பணி தொடரும்

உன் சாவு மக்கள் ஆட்சிக்கு ஒரு சாவு மணி
உன் சாவு எழுத்துச் சுதந்திரத்துக்கு ஒரு மரண அடி
உன் சாவு எண்ணச் சுதந்திரத்துக்கு ஒரு அறைகூவல்
உன் சாவு மனித குலத்துக்குத் தீராத வடு
உன் சாவு மனித நேயத்துக்கு ஏற்பட்ட கறை!

உன் நாட்டுப்பற்று கடலை விடப் பெரியது
உன் இனமானம் வானை விட உயர்ந்தது
உன் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத்திற்கு நீரூற்றியது
உன் கருத்துக்கள் தமிழீழ விடுதலைக்கு எருவானது!
உன் நுண்மாண் நுழைபுலம் போராட்டத்துக்கு அரணானது!

உன் எழுத்துக்கு மாற் றெழுத்து
உன் கருத்துக்கு எதிர்க்கருத்து
உன் வாதத்துக்கு எதிர் வாதம்
முன் வைக்க வக்கற்ற அறிவிலிகள்
உன்னைக் கோழைத்தனமாகக் கொன்று விட்டார்கள்!

ஊடகவுலகின் மன்னன் என உலா வந்தவனே
நடமாடும் பல்கலைக் கழகமென புகழப் பட்டவனே
உன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை
உன் சாதனை இமயத்தை விட உயர்ந்தவை!

தன் வீடு தன்குடும்பம் என வாழாது
என் மண் என்மக்கள் என் இனம்
என நாளும் பொழுதும் வாழ்ந்தவன் நீ!
உன்னைப் போல் இன்னொரு எழுத்து ழவனை
என்றுதான் காண்போம் என்ன நோன்பு நோற்போம்!

இன் முகம்! கள்ளமில்லா வெள்ளை மனம்!
அன்பான பேச்சு! கனிவான பார்வை! தோற்றத்தில்
எளிமை! நடத்தையில் நேர்மை அறிவில் கூர்மை
பெற்ற தாய்மீதும் பிறந்த மண்மீதும் காதல்!

கொண்ட கோட்பாட்டில் உறுதி! போகும்பாதையில் தெளிவு!
அண்டம் குலைந்தாலும் நிலைகுலையாத கொள்கைக் கோமான்!
உன்னைப் போல் ஒரு அறிவாளியை தமிழுலகில்
என்றுதான் காண்போம்? எத்தனை காலம் காத்திருப்போம்?

உன் உடலைத்தான் எதிரிகளால் அழிக்க முடிந்தது
உன் உயிரைத்தான் பகைவர்களால் பறிக்க முடிந்தது!
உன் கருத்துக்களை யாருமே அழிக்க முடியாது!
உன் நினைவுகளை எவருமே ஒழிக்க முடியாது!
அவை காலம் காலமாக நீடித்து நிற்கும்!

என் அன்னைத் தாய்மொழி மேல் ஆணை!
என் எழுத்து கோல் மேல் ஆணை!
உன் ஆசைக் கனவுகளை நனவாக்குவேன்! நீ
சென்ற பாதையில் என் கால்கள் செல்லும்
நீ விட்டுச் சென்ற பணி தொடரும்!


இக் கவிதை திருமகள் என்பவரால் எழுதப்பட்டது. www.tamilnation.org எனும் இணையத்தளத்திலிருந்து இக் கவிதை எடுக்கப்பட்டது.

2 comments:

said...

அன்புடன் வெற்றிக்கு,

காலத்தின் தேவையறிந்து அன்னாரின் ஞாபகார்த்த நாளில் அவர்களைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்தமைக்காக நன்றியை பகிர்ந்து கொள்கின்றேன், நடுநிலைக் கருத்துக்களை உரத்துச் சொன்ன திறனாய்வாளன் கொடுங்கோலாளரின் கோடரிக்காம்புகளால் கொல்லப்பட்ட சேதி மனதில் இன்னும் நிழலாடுகிறது.

www.ekalamm.net.ms

said...

களத்துமேடு,
மிக்க நன்றி.