Sunday, April 08, 2007

இலங்கை எங்கே போகிறது? -- ஒரு பேட்டி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவாவுக்கு வருகைதந்த சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வி.


கேள்வி: இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஊடகத்துறையை சார்ந்தவர் என்ற வகையில் இன்று அங்குள்ள நிலைமை என்ன?

பதில்: உண்மையை எழுதுகின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது. உண்மையை எழுதும், அரசாங்கத்தை, அரச படைகளை விமர்சிக்கும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. பல தமிழ் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். சிலர் பத்திரிகை தொழிலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அச்சுறுத்தப்படுகிறார்கள். ஊரடங்கு சட்டநேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் இராணுவத்தின் அனுமதி பெறவேண்டும். கைத்தொலைபேசி, இன்ரநெற் வசதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டிருக்கிறார். இதுவரை அவர் விடுதலை செய்யப்படவில்லை. இவ்வாறு மிக மோசமான அபாயகரமான சூழலில் ஊடகவியலாளர் உள்ளனர்.

கேள்வி: கொழும்பில் ஊடகவியலாளர் பரமேஷ்வரி மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த மூவரும் கடத்தப்பட்டார்கள். பின்னர் அவர்களை கடத்தியது சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவு என்பதை அரசாங்கம் ஒத்துக்கொண்டிருக்கிறது. கடத்தல் என்பது ஒரு கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு எதிராக சுதந்திர ஊடக அமைப்பு ஏதாவது சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

பதில்: பரமேஷ்வரி கடத்தப்படவில்லை, அவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவரை விடுவிப்பதற்காக சுதந்திர ஊடக இயக்கம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அவர் இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை விடுவிப்பதற்காக போராட்டங்களை நடத்தினோம். பல வழிகளில் அழுத்தங்களை கொடுத்தோம். அவர் இப்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

தொழிற்சங்கவாதிகள் மூவரை கடத்தி 24 மணிநேரத்தின் பின்தான் அவர்களைக் கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்தது. இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. சிறிலங்கா அரசாங்க படைகளும் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஏனைய தொழிற்சாங்க வாதிகள் மூவரின் கடத்தல் மற்றும் கைது தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கேள்வி: இந்த கடத்தல்களுக்கான காரணம் என்ன?

பதில்: பல காரணங்கள் இருக்கலாம். இரகசியமாக கைது செய்ய வேண்டும் என்பதற்காக, அவர்களை தொடர்ந்து விடுவிக்காமல் வைத்திருப்பதற்காக, வேறு தீய நோக்கங்களும் இருக்கலாம். இந்த கடத்தல்களில் அரசாங்கப் படைகள் மட்டுமல்ல சில குழுக்களும் ஈடுபட்டிருக்கின்றன.

இலங்கையில் நிலைமை என்பது படுமோசமாக போய் கொண்டிருக்கிறது. யார் யார் என்ன நோக்கத்திற்காக கடத்துகிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது. இவர்கள் பணம் பறிப்பதற்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் கடத்துவதாக சொல்கிறார்கள். சிலர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பலருக்கு என்ன நடந்தது என தெரியாமல் இருக்கிறது.

இந்த கடத்தல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இந்த கடமையை செய்யாமல் கடத்தல்காரர்களுக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் இதைப்பற்றி பேச அஞ்சுகிறார்கள். பத்திரிகைகள் இதை எழுத அஞ்சுகின்றன. தங்களுக்கும் ஆபத்து வந்துவிடும் என எல்லோரும் வாயடைத்துப்போய் இருக்கிறார்கள். இதனால் அராஜகம் அதிகரித்து விட்டது.

கேள்வி:இந்த போரைப்பற்றி சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பதில்: பெரும்பாலான சிங்கள மக்கள் இந்த போரில் அரசாங்கம் வெல்லும் என நினைக்கிறார்கள். முன்னர் இருந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கம் விடுதலைப்புலிகளை தோற்கடித்து யுத்தத்தில் வெற்றி அடையும் என நினைக்கிறார்கள். ஆனால் யுத்தத்தில் யாரும் வெல்லப்போவதில்லை என்ற உண்மையை சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் உணரத் தவறுகிறார்கள்.

கேள்வி:அரசாங்கம் போரில் வெல்லும் என சிங்கள மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்?

பதில்: ஒன்று அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் செய்கின்ற பிரசாரம்.இரண்டாவது கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி அங்கு விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை போன்ற காரணங்கள்தான் சிங்கள மக்கள் அப்படி நினைப்பதற்கு காரணம் என நினைக்கிறேன். முக்கியமாக பிரசாரம்தான் காரணம்.

வாகரை மற்றும் மட்டக்களப்பு செய்திகளை பார்த்தால் அங்கு எல்.ரி.ரி.ஈ.யின் கதையே முடிந்திருக்க வேண்டும். அரசாங்கம் வெளியிட்ட தகவல்களை, சிங்கள ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கணக்கு பார்த்தால் கிழக்கில் ஒரு எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் கூட இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றும். சிங்கள மக்களுக்கு உண்மையில் இந்த போர் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைப்பதில்லை.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் என்ன நினைக்கிறது?

பதில்: அரசாங்கம் இந்த போரில் தாங்கள் வெற்றி பெறுவோம் என நினைக்கிறது. அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு முதல் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை முற்றாக தோற்கடித்து அழித்து விடலாம் என நினைக்கிறது. எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை தோற்கடித்து விட்டால் தான் விரும்பிய ஒரு தீர்வு திட்டத்தை வைக்கலாம் என அரசாங்கம் நினைக்கிறது.

கேள்வி:அப்படியானால் அடுத்து என்ன நடக்கப்போகிறது?

பதில்: நிச்சயமாக அங்கு பெரியதொரு போர் ஒன்று நடக்கப்போகிறது. சமாதானப்பேச்சு வார்த்தை என்பதற்கான சாத்தியமே இல்லை. இரு தரப்புமே போருக்கு தயாராகி விட்டார்கள். கடந்த காலத்தில் நடந்ததை விட மிக உக்கிரமான போர் நடக்கலாம். பல அழிவுகள் ஏற்படலாம். அவை பெரும் அதிர்ச்சி தரும் அழிவுகளாக இருக்கலாம்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏதாவது ஒரு தரப்பு சில சமர்களில் வெல்லலாம். சில வேளைகளில் அரசாங்கம் சில சமர்களில் வெல்லலாம், ஆனால் இந்த போரின் மூலம் மக்களை வெல்லமுடியாது.

அரசாங்கம் உண்மையாகவே நாட்டில் பிரச்சினைத் தீர்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கும் அவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை வழங்கி சுமுகமான தீர்வை கொண்டுவரவேண்டும் என விரும்பினால் போரை உடனடியாக நிறுத்தி விட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வை காணவேண்டும். அதைவிடுத்து போரை நடத்திக்கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக கூறுவது ஏமாற்றுவேலை.

கேள்வி: அப்படியானால் இனி சமாதான பேச்சுவார்த்தை அமைதி முயற்சி என்பதெல்லாம் தோற்றுப்போன விடயம் என்கிறீர்களா?

பதில்: என்னைப்பொறுத்தவரை நாடு போகிற போக்கை பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது கஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். இப்போது இரு சமூகங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி அதிகரித்துக்கொண்டு போகிறது. நாங்கள் பேச்சுவார்த்தை அமைதி வழியில்தான் தீர்க்க வேண்டும் என்கிறோம். எங்களுக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அன்பாக பழகுகிறோம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இரு சமூகங்களிலும் இருக்கிற இளைய தலைமுறை என்ன சொல்கிறது, போரைத்தானே அவர்கள் விரும்புகிறார்கள். இனிவரும் காலத்தை கற்பனை பண்ணிபார்க்கவே முடியாமல் இருக்கிறது. அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்று சொல்கிறது. அந்த ஐக்கிய இலங்கை என்பதை இனி நினைத்துக்கூட பார்க்க முடியாது. இரு சமூகங்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து செல்கிறது.

கேள்வி:அப்படியானால் நாடு இரண்டாக பிரிந்து விடும் என்கிறீர்களா?

பதில்: பூகோள அரசியல் நிலைமைகளை பார்க்கும் போது தமிழ் அரசுக்கான சந்தர்ப்பம் குறைவாகவே தெரிகிறது. பூகோள அரசியல் நலன்கள் காரணமாக தமிழ் அரசு அமைவதற்கு தடையாக சில விஷயங்கள் இருக்கின்றன.

அதேநேரம் சிங்களவர்களும் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க கூடிய சமஷ்டி அதிகாரத்தை வழங்கும் வாய்ப்பும் இல்லை. சிங்களவர்கள் மாகாணசபை முறையை வழங்கினால் போதும் என நினைக்கிறார்கள். சிங்களவர்களைப்பொறுத்தவரை மாகாணசபைக்கு மேல் ஒரு துளிகூட சிந்திக்க தயாராக இல்லை.

தமிழர்களைப்பொறுத்தவரை பூரண அதிகாரங்களைக்கொண்ட சமஷ்டி ஆட்சிக்கு கீழ் வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.


இச் செவ்வி கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் வெளிவந்தது [சித்திரை 08,2007]. நன்றி தினக்குரல்.

0 comments: