வரும் புதன்கிழமை, ஐப்பசி[ஒக்ரோபர்] 10,2007 அன்று கனடாவின் முக்கிய மாநிலமான ஒன்ராரியோ[Ontario] மாநிலம் சட்டசபைத் தேர்தலுக்குச் செல்கிறது. ஒன்ராரியோ மாநிலத்தின் தலைநகரம் ரொரன்ரோ[Toronto]. ஆசியாவிற்கு வெளியே தமிழர்கள் அதிகமாக வாழும் நகரம் ரொரன்ரோ எனச் சொல்லப்படுகிறது. சில சட்டசபைத் தொகுதிகளின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் அளவுக்கு தமிழர்கள் அத் தொகுதிகளில் செறிந்து வாழ்கிறார்கள்.
ஒன்ராரியோ மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் தொகை 12. ஆனால் இவற்றுள் 3 கட்சிகள்தான் முக்கியமான கட்சிகளாகத் திகழ்கின்றன. இந்த 3 கட்சிகளும் தான் இம் மாநிலத்தை மாறி மாறி ஆண்டு வருகின்றன. மற்றைய கட்சிகளுக்குச் சட்டசபையில் கூட உறுப்பினர்கள் இல்லை.
அந்த மூன்று கட்சிகளாவன:
1. லிபரல் கட்சி - LIBERAL PARTY
2. கொன்சவேற்றிவ் கட்சி -- PROGRESSIVE CONSERVATIVE PARTY [PC PARTY]
3. புதிய சனநாயகக் கட்சி - NEW DEMOCRATIC PARTY [NDP]
தற்போது ஆட்சியில் உள்ள கட்சி லிபரல் கட்சி.
ஒன்ராரியோ மாநில தற்போதைய மொத்த சட்டசபை ஆசனங்கள் 103.
இம் முறை 4 தொகுதிகள் அதிகமாக உருவாக்கியுள்ளதால் அடுத்த சட்டசபையின் மொத்தத் தொகுதிகள் 107 ஆக உயரும்.
தற்போதைய சட்டசபையில் [103 ஆசனங்கள்] கட்சிகளின் பலம்:
லிபரல் கட்சி --- 67
கொன்சவேற்றிவ் கட்சி --- 25
புதிய சனநாயகக் கட்சி --- 10
வெற்றிடம் [vacant] -- 1
சரி, தலைப்புக்கும் இப்பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா?
மேலே குறிப்பிட்ட முக்கிய மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளின் சார்பாக இலங்கையில் பிறந்த 5 கனேடியப் பிரஜைகள் இத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒருவர் சிங்களப் பெண்மணி. மற்றைய நால்வரும் தமிழ் கனேடியர்கள்.
போட்டியிடும் இவ் ஐவரில் சிங்களப் பெண்மணி அவர்களே வெல்லக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இது என் தனிப்பட்ட ஊகம். காரணம் அவர் போட்டியிடும் தொகுதி ரொரன்ரோ புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. அத் தொகுதியில் அவர் சார்ந்த கொன்சவேற்றிவ் கட்சிக்கு குறிப்பிட்ட ஆதரவு உண்டு.
இரண்டு தமிழ் வேட்பாளர்கள் [சதீஸ், பாலா] ரொரன்ரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.ஆனால் இப் பகுதியில் இவர்கள் சார்ந்த கட்சியான புதிய சனநாயகக் கட்சிக்கு ஆதரவு வெகு குறைவு. எனவே இவர்களின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
மற்றைய இரண்டு தமிழ் வேட்பாளர்கள் [நீதன், சாமி] போட்டியிடும் தொகுதிகள் ரொரன்ரோ மாநகரில் உள்ளவை. இத் தொகுதிகளில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்ந்தாலும், தமிழ்மக்களின் வாக்குகளுடன் மட்டும் அவர்கள் வென்றுவிட முடியாது. அத் தொகுதிகளில் வாழும் மற்றைய சமூகத்தினரின் வாக்குகளும் அவசியம். ஆனால் ரொரன்ரோ மாநகரில் உள்ள தொகுதிகளில் கடந்த சில தேர்தல்களில் தற்போது ஆட்சியில் உள்ள லிபரல் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றி வருகிறது.
போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களில் ஒருவரும் லிபரல் கட்சிக்காக போட்டியிடவில்லை. இதனால் இத் தமிழ் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாக நான் நினைக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து. தேர்தல் முடிவுகள் புதன் இரவு வெளியாகிவிடும். அதாவது வாக்களிப்பு முடிந்த சில மணித்தியாலங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். அப்போது தெரியும் இத் தமிழ்க்கனேடியர்கள் தேறுவார்களா[வெற்றி பெறுவார்களா] இல்லையா என்று.
இத் தேர்தலில் போட்டியிடும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியப் பிரஜைகளான 5 வேட்பாளர்கள் பற்றிய சில குறிப்புகள் கீழே.
பெயர் :
கயானி வீரசிங்கே [Gayani Weerasinghe]
தொகுதி :
Vaughan
கட்சி :
கொன்சவேற்றிவ் கட்சி [PROGRESSIVE CONSERVATIVE PARTY]
பெயர் :
சாமி அப்பாத்துரை [Samy Appadurai]
தொகுதி :
Scarbrough Centre
கட்சி :
கொன்சவேற்றிவ் கட்சி [PROGRESSIVE CONSERVATIVE PARTY]
பெயர் :
பாலா தவராஜசூரியர் [Bala Thavarajasoorier]
தொகுதி :
Ajax-Pickering
கட்சி :
புதிய சனநாயகக் கட்சி [NEW DEMOCRATIC PARTY]
பெயர் :
சதீஸ் பாலசுந்தரம் [Satish Balasunderam]
தொகுதி :
Mississauga East - Cooksville
கட்சி :
புதிய சனநாயகக் கட்சி [NEW DEMOCRATIC PARTY]
பெயர் :
நீதன் சண் [Neethan Shan]
தொகுதி :
Scarborough-Guildwood
கட்சி :
புதிய சனநாயகக் கட்சி [NEW DEMOCRATIC PARTY]