Wednesday, October 10, 2007

சேதுக்கால்வாய் திட்டத்தால் ஈழத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை

சேதுக்கால்வாய் திட்டம் பற்றி இலங்கை, இந்தியா போன்ற இரு நாடுகளிலும் பலதரப்பட்ட மக்களும் குழம்பிப் போய் ஒரு தெளிவில்லாத நிலையிலேயே இருப்பது போலத் தெரிகிறது.அல்லது தாம் சார்ந்த நம்பிக்கைகள்,கொள்கைகள்,பொருளாதார நலன்களுக்காக ஆதரித்தும் எதிர்த்தும் வருகிறர்கள்.

இத் திட்டம் பற்றி நானும் மிகவும் குழம்பிப்போய் உள்ளேன். இத் திட்டம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமெனின் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. ஆனால் இத் திட்டத்தால் ஈழத்தில் உள்ள தமிழ் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படுமோ எனவும் ஐயமாக இருக்கிறது.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பல தீவுகள்[கிட்டத்தட்ட 70 தீவுகள் உண்டாம்] தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் உண்டு. இப்படியான சில தீவுகளில் [நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு etc] மக்கள் வசித்து வருகின்றனர். இத் தீவுகள் சேதுக்கால்வாய்த்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளூக்கு மிக அண்மையில் உள்ளன.அதனால் இத் தீவுகள் இத் திட்டத்தால் பாதிப்படையுமோ என அச்சமாக உள்ளது.

நான் இப்படிக் குழம்பிப்பேய் ஒரு தெளிவில்லாமல் இருப்பதால், இத் திட்டம் பற்றி வரும் பல கட்டுரைகளைத் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். அப்படிப் படிக்கும் போது மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களால் அவரின் தளத்தில் இவ் விடயம் தொடர்பாக எழுதப்பட்ட சில கட்டுரைகளளப் படிக்க நேர்ந்தது. அவரின் கட்டுரைகளின் படி இத் திட்டத்தால் ஈழத்திற்கு பெரிய பாதிப்பு இல்லை எனச் சொல்கிறார்.

திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் கட்டுரைகளை இங்கே இணைப்பதற்கு நான் அவரிடம் அனுமதி பெறவில்லை. அதனால் இணைக்கவில்லை.

அவர் இது தொடர்பாக எழுதிய கட்டுரைகளை இங்கே[அவரின் தளத்தில்] படிக்கலாம்.


சேதுக்கால்வாய்-ஈழத் தமிழர் தொடர்புடைய சுட்டிகள்:

1.சேதுக்கால்வாய் திட்டத்தால் ஈழத் தமிழர் பெறும் நன்மைகள் :
பேராசிரியர் பத்மநாதன், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.

2.சேதுக் கால்வாய் - சிங்களவரின் அச்சங்கள்:
மறவன்புலவு சச்சிதானந்தன்.

3.சேதுக் கால்வாயும் சுற்றுச் சூழலும்:
மறவன்புலவு சச்சிதானந்தன்.

4.சேதுகால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை:
மறவன்புலவு சச்சிதானந்தன்.

31 comments:

said...

சேது கால்வாய் தொடர்பான ஆதரவு-எதிர் கருத்துக்களையும் எனக்கு கிடைக்கும் தகவல்களையும் விக்கிபீடியா கட்டுரை ஒன்றில் தொகுத்து வருகிறேன். தில தொடுப்புக்களையும் அங்கே சேகரித்து வைத்துள்ளேன். இன்னும் பல விக்கிபீடியர்களும் அந்தக்கட்டுரையை தொகுத்து வருகிறார்கள்.
கட்டுரையை பார்க்கவும்.

அத்தோடு உங்களுக்கு கிடைக்கும் தகவல்களையும் தொடுப்புகளையும் அங்கே சேர்த்தால் மற்றவர்களுக்கு மிகவும் பயன்படும்.
(தலைப்புகளுக்கு அருகில் "தொகு" என்றிருக்கும் தொடுப்பை அழுத்தி கட்டுரைகளை உடனுக்குடன் தொகுக்கலாம்)

said...

மயூரன்,

/* சேது கால்வாய் தொடர்பான ஆதரவு-எதிர் கருத்துக்களையும் எனக்கு கிடைக்கும் தகவல்களையும் விக்கிபீடியா கட்டுரை ஒன்றில் தொகுத்து வருகிறேன். */

மிகவும் நல்ல முயற்சி. என்னைப் போல தெளிவு இல்லாமல் இருப்பவர்களுக்கு பல தரப்பு ஞாயங்களையும் ஒரே இடத்தில் அறியக் கூடிய வாய்ப்பு. உங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.


/* அத்தோடு உங்களுக்கு கிடைக்கும் தகவல்களையும் தொடுப்புகளையும் அங்கே சேர்த்தால் மற்றவர்களுக்கு மிகவும் பயன்படும். */

கட்டாயம் செய்கிறேன். இதுபற்றி நான் படிக்கும் கட்டுரைகளை நீங்கள் சொன்ன தளத்தில் இணைக்கிறேன்.

said...

சேதுக்கால்வாய் திட்டத்தால் ஈழத்தமிழர்களுக்குப் பல நன்மைகள் உண்டு என்கிறார் இலங்கையின் சிறந்த பல்கலைக் கழகமான பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் பத்மநாதன் அவர்கள்.

குறிப்பாக இத் திட்டத்தால் ஈழத்தின் தமிழ் பகுதிகளில் உள்ள சிறிய துறைமுகம்களான காங்கேசன்துறை, பருத்தித்துறை, மன்னாரில் உள்ள மாந்தை துறைமுகம்கள் பொருளாதார அனுகூலங்களைத் தமிழ் பகுதிகளுக்கு வழங்கும் என்கிறார் இவர்.

அத்துடன் தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான பழங்கால வர்த்தக உறவுகள் மீண்டும் இத் த்ட்டத்தின் மூலம் தளைக்கும் என்கிறார் பேராசிரியர் பத்மநாதன்.

அவரின் கருத்துக்களைப் படிக்க இங்கே சொடுக்கவும்

said...

மயூரன்,
இத் திட்டத்தால் ஈழத்தமிழர்களும், ஈழத் தமிழ்பகுதிகளும் அடையக் கூடிய நன்மைகள் பற்றியும் தமிழக-ஈழ பழங்கால வரலாறு பற்றியும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பத்மநாதன் மற்றும் துரைசாமி ஆகியோரின் கருத்துக்கள் அடங்கிய தளத்தை நீங்கள் தந்த தளத்தில் இணைத்துள்ளேன்.

said...

அண்ணாச்சி நல்லது கெட்டது எதுவாயிருப்பினும் சரிதான். ஆனால், பத்மநாதனே நேரை வந்து சொன்னாத்தான் நம்புவன். இந்துஸ்தான் டைம்ஸ் இடைத்தரகர் பிகே பாலச்சந்திரன் வியாக்கியானம் சொன்னால், "பிள்ளையான் (இவர் வேற பிள்ளையார்; அரைநிஜார் தண்டால் பஸ்கி இந்துகாவலர்கள் குழம்பக்கூடாது) கருணாவைக் (இது வேற கருணா-நிதிப்பிரச்சனை; கொதித்தெழுந்து கழகக்கண்மணிகள் கலங்/க்கக்கூடாது) கழட்டிப்போட்டார்" எண்டதையும் நான் நம்பமாட்டன். ஹூல்லின்ரை ஐபிகேஎப் கருத்தைச் சீமான் நியூஸா குடுத்தார் பார். அது ஹூலின்ரை நியூஸோ பிகேபியின்ரை வியூஸோண்டு அவை ரெண்டு பேருக்குந்தான் வெளிச்சம்.

said...

பெயரிலி,
வாங்கோ! வாங்கோ!

/* ஆனால், பத்மநாதனே நேரை வந்து சொன்னாத்தான் நம்புவன். */

அதுசரி :-)) நானும் பேராசிரியர் இதுபற்றி ஏதாவது முழுமையாக எழுதிய கட்டுரைகள் கிடைக்குமா என கூகிளாண்டவரைக் கேட்டுப்பார்த்தேன். இதுவரை ஒண்டும் எம்பிடேல்லை.

/* இந்துஸ்தான் டைம்ஸ் இடைத்தரகர் பிகே பாலச்சந்திரன் வியாக்கியானம் சொன்னால் */

பாலச்சந்திரன்ரை திருகுதாளங்கள் பற்றி எனக்கு மாற்றுக்கருத்தில்லை. :-))

/* பிள்ளையான் (இவர் வேற பிள்ளையார்; அரைநிஜார் தண்டால் பஸ்கி இந்துகாவலர்கள் குழம்பக்கூடாது) கருணாவைக் (இது வேற கருணா-நிதிப்பிரச்சனை; கொதித்தெழுந்து கழகக்கண்மணிகள் கலங்/க்கக்கூடாது) கழட்டிப்போட்டார்" எண்டதையும் நான் நம்பமாட்டன். ஹூல்லின்ரை ஐபிகேஎப் கருத்தைச் சீமான் நியூஸா குடுத்தார் பார். அது ஹூலின்ரை நியூஸோ பிகேபியின்ரை வியூஸோண்டு அவை ரெண்டு பேருக்குந்தான் வெளிச்சம்.*/

மேலே உள்ள அவ்வளவும் பெயரிலியின் 'ரேட்மார்க்' பாணியில் உள்ளது. அதனாலை எனக்கு ஒண்டும் விளங்கேலைச் சாமீ. :-))

said...

பெயரிலி,
நான் பேராசிரியர் பத்மநாதன் சொன்ன கருத்துக்களை தமிழாக்கம் செய்து போடாலம் எண்டு நினைச்சிருக்கிறேன்.

பேராசிரியர் சொல்லாததையெல்லாம் பாலச்சந்திரன் சொல்லியிருப்பர் எண்டு நினைக்கிறீங்களோ? :-))

said...

பதிவர் வவ்வால் அவர்கள் சேதுக்கால்வாய்த் திட்டம் பற்றிய தனது பதிவில் இத் திட்டத்தால் விடுதலைப் புலிகளுக்கு பாதகங்கள் உண்டு எனச் சொல்லியிருந்தார்.

ஆனால் தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல்வாதியும்,காமராசர்,அண்ணா போன்ற தலைவர்களுக்குப் பின் மக்கள் செல்வாக்குள்ள தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அவர்கள் இத் திட்டத்தால் விடுதலைப் புலிகள் நன்மை அடைவர் என்றும் அதனால் தான் திராவிடக் கட்சிகளான , தி.க, தி.மு.க, ம.தி.மு.க, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி போன்றன இத் திட்டத்தை ஆதரிக்கின்றன என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்:

"The Dravida Movement which includes DMK, MDMK, PMK, and DK parties, has turned it’s ire on Bhagwan Shri Ram, the King of Ayodhya, and want the Rama Sethu to be demolished because it is a symbol of 'North Indian' domination. Also, the demolition would facilitate the LTTE brigand boats to move quicker from Tuticorin to Chennai on the Palk Strait, and on international waters. At present, the Rama Sethu stands in the way. Hence their vociferous support for the Sethu Samundram Ship Canal Project [SSCP]. Hence the project in the present form must resolutely opposed.”

said...

வெற்றி,
தெரியவில்லை. நீங்கள் சொன்ன கொலம்பியா - இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியை போன வாரம் ஒரு நண்பர் சுட்டிக்காட்டியிருந்தார். அதன் பிறகு பத்மநாதனின் நேரடியான கட்டுரைகளைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.

ஆனால், பி கே பாலச்சந்திரன் அவரது தலைப்புகளிலே மிகவும் திரிபு படுத்திவிடும் ஆள்.

கூல் ஐபிகேப் - புலிகள் - இலங்கை என்று அவரது உரையிலே, "We began our work in 1987 when the Indian Army took control of Jaffna. Apart from the callousness of an army, we saw that many instances of civilian tragedy were deliberately engineered by the LTTE for propaganda" என்று சொன்னதை, தன் சுருக்கெழுத்திலே IPKF was victim of vile LTTE propaganda: Tamil rights activist என்று அறிவித்தவர்.

நேற்றுக்கூட, பிள்ளையான் கருணாவினை இடைநிறுத்தியிருக்கிறார் (The Thamil Makkal Viduthalai Pullikal (TMVP) central committee which met on Sunday night, decided to suspend its founder- leader Karuna) என்பதை விலத்தியிருக்கின்றார் (Split in LTTE dissident camp: Karuna sacked by second in command) என்று தலைப்பிலே போட்டிருக்கின்றார்.

இந்த ஆள், "பத்மநாதன் சேதுசமுத்திரத்திலே ஓட்டுற படகு" என்று சொல்லி ஏத்திவிடுவதிலே நானென்றால், இவருடைய கதையை நம்பி ஏறமாட்டேன்.

said...

வவ்வாலுக்கு அதைத்தான் அவரின் பின்னூட்டத்திலே '"வெட்டினால்/வெட்டாவிட்டால் புலிகளுக்குச் சாதகம்/பாதகம்" என்று ஒவ்வொருவரும் தம் தேவைக்கேற்பச் சொல்லித் தமிழகத்தைப் பயமுறுத்துவார்கள்' என்று சொன்னேன். ஆனால், என் தெளிவின்மையோ என்னவோ தெரியவில்லை. நான் சொன்னதை வவ்வாலோ, வவ்வால் சொன்னதை நானோ தலைகீழாகப் புரிந்துகொண்டோமெனத் தோன்றுகிறது :-) [வவ்வாலின் தலைகீழ் எனக்கு நேரான பார்வையோ? ;-)]

said...

வெற்றி,

நான் அதில் சொன்னது , இலங்கை அரசு புலிகளுக்கு சாதகம் என்கிறது என்று, அதே சமயம் புலிகளுக்கு பாதகமென வேறு சிலர் சொல்கிறார்கள் என இரண்டு தரப்பும் மாற்றி சொல்வதாகத்தான் சொல்லி இருக்கிறேன்.

//ஈழத்தின் தமிழ் பகுதிகளில் உள்ள சிறிய துறைமுகம்களான காங்கேசன்துறை, பருத்தித்துறை, மன்னாரில் உள்ள மாந்தை துறைமுகம்கள் பொருளாதார அனுகூலங்களைத் தமிழ் பகுதிகளுக்கு வழங்கும் என்கிறார் இவர்.//

இதனையும் நானும் சுட்டி இருக்கிறேன், அப்படி அப்பகுதி வளர்வதை இலங்கை அரசும் விரும்ப்பவில்லை எனவும் தெரிவித்திருந்தேன்.வட இலங்கைப்பகுதியில் இலங்கை அரசுக்கு அத்தனைப்பிடிப்பு இல்லாத நிலையில் விரும்பவில்லை என்பதாக நான் சொல்லி இருப்பேன்.

ஆக மொத்தம் இரு தரப்பும் அக்கால்வாயை விரும்பவில்லை!

பெயரிலி ஏனோ அதில் ஒரு பாகம் மட்டும் பார்த்திருக்கிறார். அதை விட பெயரிலி சொன்னார்ப்போல மாற்றி மாற்றி சாதகம் ,பாதகம் சொல்கிறார்கள் என்பதாக தான் நானும் சொல்லி இருந்தேன். ஒரு வேளை நான் சொன்னது தெளிவாக இல்லையோ அல்லது ஒரு வேளைப்பதிவு நீளமாக இருந்ததால் கவன சிதறல் ஆகிவிட்டது என நினைக்கிறேன்.

இந்துவில் வந்த செய்தியை நம்புவதென்றால் இதை பாருங்கள்,

கொழும்பு துறை முகத்தில் கையாளப்படும் சரக்கு பெட்டகங்களில் 70 சதவீதம் இந்தியாவிற்கானது, கால்வாய் வெட்டினால் அந்த பெட்டகங்கள் அங்கே செல்லாது எனவே பெருத்த வருமான இழப்பு என்றுள்ளது.

வேறு காரணங்களை விடுங்கள்,எனவே பொருளாதார இழப்பு வருகையில் இதனை இலங்கை அரசு எப்படி வரவேற்கும்.

said...

//ஆனால் தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல்வாதியும்,காமராசர்,அண்ணா போன்ற தலைவர்களுக்குப் பின் மக்கள் செல்வாக்குள்ள தலைவருமான சுப்பிரமணிய சுவாமி அவர்கள் //

என்ன வெற்றி கிண்டல் செய்கிறீர்களா? சுப்ரமணியம் சுவாமியை மக்கள் செல்வாக்குள்ள தலைவர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பாவம் காமராசரும் அண்ணாவும் - சுப்ரமணியம் சுவாமியோடெல்லாம் ஒப்பிடப் பட என்ன பாவம் செய்தார்களோ?!

said...

/* என்ன வெற்றி கிண்டல் செய்கிறீர்களா? சுப்ரமணியம் சுவாமியை மக்கள் செல்வாக்குள்ள தலைவர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பாவம் காமராசரும் அண்ணாவும் - சுப்ரமணியம் சுவாமியோடெல்லாம் ஒப்பிடப் பட என்ன பாவம் செய்தார்களோ?! */

குமரன்,
உண்மையில் நகைச்சுவைக்காத் தான் சொன்னேன். சிரிப்பான் போட மறந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

பெருந்தலைவர் காமராசர் போலவோ பேரறிஞர் அண்ணாவைப் போலவோ மக்கள் ஆதரவு இல்லாதவர் என்பதை , உயர்வுநகிழ்சியணியில்(?) [உயர்த்திச் சொல்வது போல நக்கல் அடிப்பதை இலக்கணத்தில் அப்படித்தானே சொல்வார்கள் இல்லையா?] சொன்னேன். :-))

said...

வவ்வால்,
உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

/* வேறு காரணங்களை விடுங்கள்,எனவே பொருளாதார இழப்பு வருகையில் இதனை இலங்கை அரசு எப்படி வரவேற்கும்.*/

இலங்கை அரசு பொருளாதார இழப்பு வருமென்பதால்தான் முழு மூச்சாக இத் திட்டத்தை பல காரணங்களைச் சாட்டுச் சொல்லி எதிர்க்கிறது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.

அடுத்தது, இன்னுமொரு காரணம் இருக்கக் கூடும். இது என் ஊகம். அந்த நாளில் இருந்து, அதாவது இலங்கை சுதந்திரமடைய முன்னரில் இருந்து சிங்கள மக்கள் தமிழ்மக்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதற்கு இன்னொரு காரணம், ஈழத்தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கொடுத்தால் அல்லது தனிநாடு அடைந்தால் பின்னர் தமிழகத்துடன் இணைந்து இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்து விடுவார்கள் எனும் மாயை. இந்த மாயயை சிங்கள மக்கள் மனதில் ஏற்படுத்திய பெருமை அன்றைய சில சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளும், புத்த பிக்குகளூம் தான்.

அதனால் இத் திட்டம் வருவதன் மூலம், தமிழக-ஈழத் தமிழர் பகுதிகள் வளம் பெறுவதுடன், அவர்களின் வர்த்தகத் தொடர்புகளும் அதிகரிக்கும். அதனால் தமக்குப் பாதகமாக அமையலாம் எனவும் எண்ணக் கூடும்.

said...

என்னமோ போங்க வெற்றி ஒருத்தர்
மாத்தி ஒருவர் பதிவுதான் போட்டு
கொள்ளுறார்கள் இதில நல்லது
கெட்டது எது என்று பெரிதாக
யாரும் விவாதிப்பதை காணக்கிடைக்கவில்லை.
நமது சுய தேவைகளுக்கும் சுய
நலங்களுக்கும் இயற்கையை சுரண்ட
போய்த்தான் இன்று பனிப்பாறைகள்
உடைந்து உருகுகிறது பருவகாலங்களும் மாறிவருகிறது.


நீங்கள் குறிப்பிடும் இந்த 70 தீவுகளுக்கிடையில்தான் நன்நீர் ஆறு
ஓடுகிறது தீவுபகுதிகலிருந்து மீன்
பிடிக்க செல்பவர்கள் குடி நீர் இந்த
ஆற்று படுகையில்தன் நீர் அள்வார்கள்
என்னடா கடல் நீருக்குள் நன்நீரா.
ஒரு முறை நானும் ஆச்சரியப்பட்டேன்.

said...

என்னமோ போங்க வெற்றி ஒருத்தர்
மாத்தி ஒருவர் பதிவுதான் போட்டு
கொள்ளுறார்கள் இதில நல்லது
கெட்டது எது என்று பெரிதாக
யாரும் விவாதிப்பதை காணக்கிடைக்கவில்லை.
நமது சுய தேவைகளுக்கும் சுய
நலங்களுக்கும் இயற்கையை சுரண்ட
போய்த்தான் இன்று பனிப்பாறைகள்
உடைந்து உருகுகிறது பருவகாலங்களும் மாறிவருகிறது.


நீங்கள் குறிப்பிடும் இந்த 70 தீவுகளுக்கிடையில்தான் நன்நீர் ஆறு
ஓடுகிறது தீவுபகுதிகலிருந்து மீன்
பிடிக்க செல்பவர்கள் குடி நீர் இந்த
ஆற்று படுகையில்தன் நீர் அள்வார்கள்
என்னடா கடல் நீருக்குள் நன்நீரா.
ஒரு முறை நானும் ஆச்சரியப்பட்டேன்.

said...

சேது கால்வாயில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதற்கு ஆதரவு கிடைக்கும் காரணங்களைப்பாருங்கள்,

"ராமவானரங்கள் எதிர்க்கிறது ஆகையால் நாம் ஆதரிப்போம்!"

"இலங்கை அரசு எதிர்க்கிறது, ஆதலால் நாம் தமிழர் இதனை ஆதரிப்போம்!"

"இலங்கை எதிர்க்கிறது, ஆதலால் இந்தியர் நாம் ஆதரிப்போம்!"

மொத்தத்தில் எவரும் தமது சுயநலங்களைக் கடந்து திட்டத்தை சீர்தூக்கிப்பார்க்க ஆயத்தமாயில்லை.

தமிழ்சசி தனது பதிவில் மிக அருமையான கருத்தொன்றைச் சொன்னார்.

இயற்கைவளங்கள் அப்படியே விட்டுவைக்கப்படும்பட்சத்தில் அது சாமானியர்களின் உழைக்கும் வர்க்கத்தின், அடித்தட்டுமக்களின் சொத்தாக இருக்கும். இப்படியான பாரியதிட்டங்கள் இயற்கை வளங்களைச் சுரண்டும்போது அது பணக்கார முதலைகளுமட்டும் தான் நன்மை தரும்.

உண்மை.

"இந்திய" நலன், "இலங்கை" நலன், "தமிழீழ" நலன் என்பதைத்தாண்டி மக்கள் நலன் என்ற அடிப்படையில் இருந்து சிந்திப்பதே நேர்மையான பார்வையாக இருக்கும் .

மக்கள் நலனைத்தாண்டிய தமிழீழ நலன் என்று ஒன்று இருக்குமானால் அது பிரபாகரன் நலனாக மட்டும்தான் இருக்கமுடியும். ;-)

said...

தமிழ்சசியின் பதிவில் இட்ட பின்னூட்டம். பொருத்தம்கருதி:

http://blog.tamilsasi.com/2007/09/economic-benefits-of-sethu-samudram.html


மு.மயூரன் said...

தமிழ்சசி,

உங்கள் பதிவில் சேது சமுத்திர திட்டத்தின் அரசியல் குறித்தான தகவல்களை எதிர்பார்த்தேன்.

இத்திட்டத்தினை தமிழக அரசியல், இந்திய கட்சியரசியல் சட்டகங்களுக்குள் வைத்துப் பார்க்க முடியாது.

இத்திட்டம் "இந்தியாவின்" திட்டம்.

பா.ஜா.கா கூட இத்திட்டத்தினை தாம் ஆட்சியில் இருந்திருந்தால் நிறைவேற்றியிருக்கத்தான் வேண்டும் என்று நான் வலுவாக நம்புகிறேன்.

இது இந்திய-அமெரிக்க நலம் சார்ந்த திட்டம். இதை இவ்விரு வல்லரசுகளும் நிறைவேற்றியே தீரும்.

"ராம சேது" விவகாரம் ப.ஜ.க கையிலெடுத்துள்ள கட்சியரசியல் கோஷம். அவர்களுக்கே தெரியும் இத்திட்டத்தை யாராலும் நிறுத்திவிட முடியாதென்பதும், தாம் கூட ஆட்சியில் இருந்திருந்தால் இதனை செய்து முடித்துத்தான் ஆகியிருக்க வேண்டுமென்பதும்.

"ராம சேது" கோஷம் விளைவித்துள்ள எதிர்மறை விளைவு என்ன என்றால், மாற்றுக்கருத்தாளர்களும், திராவிட ஆதரவாளர்களும் சேது சமுத்திரத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிப்போனமை தான்.

இது திட்டமிட்ட சதியோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நீண்டகால நோக்கில் சேது கால்வாயால் எந்தவிதமான பொருளாதார பாய்ச்சல்களும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்றே தோன்றுகிறது.

கப்பல்களின் வேகமும் அளவும் அதிகரித்து வருகிறது. பெரிய கப்பல்கள் திட்டம் முடிந்த பின்னரும் கூட இலங்கையைச்சுற்றி, கொழும்புக்கு வந்தோ வராமலோதான் செல்லப்போகின்றன.

இழக்கப்படவிருக்கும் மீன்வளத்தோடு ஒப்பிடும்போது எந்த வகையில் "பேண்தகு" பொருளாதார அபிவிருத்தியை இத்திட்டம் தருமோ தெரியவில்லை/

இத்திட்டத்தை செயற்படுத்தும் அவசரம், கொடுக்கப்படும் முக்கியத்துவம் எல்லாவற்றையும் தொகுத்துப்பார்க்கும்போது இது ஏகாதிபத்திய-அரசியல்-பொருளாதார நலன் கருதிய திட்டமாகவே படுகிறது.

இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பொருளாதார அரசியல் மையமாக அமையப்போவது தமிழ்நாடு-தமிழீழம் அடங்கும் பிரதேசமே.

ஒரு வேளை ஒசாமா பின்லேடன் இறப்பதற்கு அமெரிக்கா அனுமதித்தால் அடுத்த கட்டம் இந்தப்பிரதேசத்தை மையங்கொண்ட காய்நகர்த்தல்களே.

இந்த வேளையில் இந்தப்பிரதேசத்தில் நிகழும் சிறு துரும்பின் அசைவைக்கூட எம்மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

பனாமாவில் நடந்தது கால்வாய் ஒன்றுக்கான அரசியல் சூழ்ச்சி. இங்கே நடக்கப்போவது அரசியல் சூழ்ச்சி ஒன்றுக்கான கால்வாய் வெட்டல்.

மக்கள் போராட்டங்கள் தொடர்பாக மிக ஆழமாக ஆய்வு செய்து எழுதும் உங்களிடம் இந்த அடிப்படையில் சேது சமுத்திரம் தொடர்பான ஆய்வொன்றினை எதிர்பார்க்கிறேன்.

சில கேள்விகள்.

1. இந்த நூற்றாண்டில் இந்து சமுத்திரத்தின் கடல்வழி ஏன் எப்போதைக்குமில்லாத முக்கியத்துவத்தைப் பெறப்போகிறது?

2. இந்தியாவை வல்லரசாக்கும், பலமுள்ளதாக்கும் திட்டமக இது அமையுமென்றால் அமெரிக்கா ஏன் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறது?

3. இத்திட்டம் பற்றிய சீனா, பாக்கிஸ்தானின் நிலைப்பாடென்ன?

4. இந்தியாவின் இந்த நூற்றாண்டுக்கான இராணுவ, தொழிநுட்ப மையம் எந்த மாநிலம்?

5. புலிகள் தோற்கடிக்கப்பட்டு/ வலுக்குறைக்கப்பட்டு மன்னாரும் யாழ்ப்பாணமும் பலவீனமான இலங்கை அரசால் அமெரிக்கத் தளங்களுக்கு தாரை வார்க்கப்பட்டால் நிலமை என்னாகும்?

6. தமிழ்நாட்டை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் தமது கழுகுப்பார்வையின் கட்டுப்பாட்டுகுள் வைத்திருக்கவும் வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருக்கிறதா?

7. மூன்றாமுலக நாடுகளின் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கெல்லாம் அமெரிக்க ஆசீர்வாதம் இவளவு பலமாக வழங்கப்படக் காரணம் என்ன?

8. இந்த நூற்றாண்டில் பெறோலை விட நன்னீருக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் என்கிறார்களே, உண்மையா?

said...

சேதுக்கால்வாய் பற்றிய மறவன்புலவு சச்சிதானந்தனின் ஒவ்வொரு கட்டுரைக்கும் தனியாக தொடர்புடைய சுட்டிகள் எனும் தலைப்பின் கீழ் இணைப்புக் கொடுத்துள்ளேன்.

said...

கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவைச் சேர்ந்த ஒருவருடன் (முகவர் அல்ல :) பேசிக்கொண்டிருந்த போது சேது திட்டம் மூலமாக வடபகுதி துறைமுகங்களிற்கு வாய்ப்பு ஏற்படும் என நம்பமுடியாதெனவும் அதற்கு இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்காதெனவும் கூறியிருந்தார். வடபகுதிக்கான மீன்வளத்திற்கேற்படும் பாதிப்புக் குறித்தும் சுட்டியிருந்தார்.

said...

பெயரிலி,
விளக்கங்களுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

IPKF was victim of vile LTTE propaganda: Tamil rights activist என்ற இந்தத் செய்தித் தலைப்பைப் பார்த்துவிட்டு கூல் இப்படிச் சொல்பவர் என்று விட்டு அச் செய்தியை முழுக்கப் படிக்கவில்லை. அப்ப எங்கடை பாலச்சந்திரன் அண்ணையோ கூல் இப்படிச் சொல்லுறார் எண்டு சொன்னவர்.

ஆனால் பெயரிலி, இது வந்து பூ எண்டும் சொல்லலாம், இல்லாட்டில் தம்பி சொல்லுற மாதிரியும் சொல்லலாம் எண்ட மாதிரித்தான்.:-)) அதாவது கூலின்ரை நோக்கமும் பாலச்சந்திரன்ரை நோக்கமும் ஒண்டுதான் என்பது என் கருத்து.

/* (Split in LTTE dissident camp: Karuna sacked by second in command) */

இச் செய்தியைப் பார்த்தனான். அவர்கள் செய்தி சேகரிக்க முன்னரே இப்படித் தான் எழுத வேணும் எண்டு முடிவெடுத்துப் போட்டு செய்தி சேகரிக்கிறவர்கள்தானே :-))

/* வவ்வாலுக்கு அதைத்தான் அவரின் பின்னூட்டத்திலே ...*/

சிங்கள ஊடகங்களும் சரி, பல இந்திய ஊடகங்களும் சரி, ஏதோ தாங்கள் புலிகளின் மத்திய குழுக் கூட்டத்தில் பங்கு பற்றி, பிரபாகரனுக்குப் பக்கத்திலை இருந்து செய்தி சேகரிச்சு எழுதற மாதிரி எழுதுறது இண்டைக்கு நேற்றோ நடக்குது:-)) புலிகள் இதனால்தான் இப்படிச் செய்தார்கள்,அது இது எண்டெல்லாம் எழுதிறது வாடிக்கை. :-))

சும்மா யாராவது தும்மினாலும், ஆகா புலிகளின் சதி அதனால் தான் இவர் தும்மினார் என முடிச்சுப் போடுவது பழைய பல்லவி தானே. அதனால்தான் நான் அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை.

said...

அனானி,

/* என்னமோ போங்க வெற்றி ஒருத்தர்
மாத்தி ஒருவர் பதிவுதான் போட்டு
கொள்ளுறார்கள் இதில நல்லது
கெட்டது எது என்று பெரிதாக
யாரும் விவாதிப்பதை காணக்கிடைக்கவில்லை. */

நீங்கள் சொல்வது உண்மை. நானும் அதனால்தான் குழம்பிப் போய் இருக்கிறேன். நான் வாசித்த கட்டுரைகளும் தாம் சார்ந்த பக்க சார்பாக எழுதியிருக்கிறார்களே தவிர நடுநிலையாக, உண்மையான சாதக/பாதகங்களை எழுதியதாகத் தெரியவில்லை.

இதை இப்ப அரசியலாக்கியும் விட்டார்கள். நாங்கள் திருவாளர் பொதுசனங்கள் என்ன நடக்குது எண்டு தெரியாமல் முழிக்கிறோம்.

இடதுசாரிகள் - வலதுசாரிகள்
ஆத்திகவாதிகள் - நாத்தீகவாதிகள்
ஆரியர் - திராவிடர்
மதவெறியர் -- முற்போக்காளர்
தமிழர் - சிங்களவர்
தமிழகம் -- வட இந்தியா

etc
ஒரு திட்டத்தின் சாதக/பாதகங்களை நடுநிலைமையாக அறிவுபூர்வமாக ஆராயாமல், அவரவர் தாம் சார்ந்த பக்கசார்பாக கும்மாளம் போடுகிறர்கள்.

/* நமது சுய தேவைகளுக்கும் சுய
நலங்களுக்கும் இயற்கையை சுரண்ட
போய்த்தான் இன்று பனிப்பாறைகள்
உடைந்து உருகுகிறது பருவகாலங்களும் மாறிவருகிறது.*/

உண்மைதான். ஆனாலும் பெருகும் சனத்தொகைக்கு ஏற்றவாறு அபிவிருத்திகளும் செய்யத்தானே வேணும்? அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

/*நீங்கள் குறிப்பிடும் இந்த 70 தீவுகளுக்கிடையில்தான் நன்நீர் ஆறு
ஓடுகிறது தீவுபகுதிகலிருந்து மீன்
பிடிக்க செல்பவர்கள் குடி நீர் இந்த
ஆற்று படுகையில்தன் நீர் அள்வார்கள்*/

உண்மையாகவா? கடலுக்குள் என்னென்று நன்னீர் ஓடும்? இது எப்படிச் சாத்தியம் என்பது பற்றித் தயவு செய்து கொஞ்சம் விளக்குவீர்களா? அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

பதிவர் வவ்வால் அவர்களே!
இதுபற்றி கொஞ்சம் விளக்குவீர்களா?

எமது ஊரில் கடற்கரைக்கு அண்மையில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள கிணற்று நீர் உப்புத் தன்மை கொண்டது. ஆனால் சில வருடங்களுக்கு முன் முல்லைத்தீவு சென்ற போது, கடற்கரையோடு இருக்கும் கிணற்று நீர் நன்னீர் என்று சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை.

said...

சொந்த கருத்து சொல்லும் அளவுக்கு இந்த விஷயத்தில் தகவல் புலைமை பெற்றவனில்லை நான். வரும் தகவல்களை ஆர்வமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் உங்களின் இந்த இடுகையும், பின்னூட்டங்களும் நிறைய கற்றுத்தருகின்றன. நன்றி..!

said...

/நாங்கள் திருவாளர் பொதுசனங்கள்/

எல்லாரும் திருவாளர் பொதுசனம் என்றால், அரசியல்வாதிகள் ஆரப்பா? அவர்களைத் தேர்கிறவர்கள் ஆரப்பா? போர் ஏனப்பா? போராடுவது ஏதப்பா?

said...

வெற்றி

சேது கால்வாய் திட்டத்தில் ஐம்பது சதுர கி.மீயை நோண்டி போடுவதால் அங்கே இருக்கும் கடல்வாழ் உயிரினம் எல்லாம் அழிந்து மூன்றாம் உலகப்போருக்கே வழிவகுக்கும் என்று உருப்படாத நாராயணன் என்பவர் எழுதியிருக்கிறார்...

அதை தேடி,
எடுத்து,

படிக்காதீங்க...

said...

மயூரன்,
கருத்துக்களுக்கு நன்றி.

/* இதற்கு ஆதரவு கிடைக்கும் காரணங்களைப்பாருங்கள், */

சரி, ஆதரவு தருபவர்கள் சொல்வதாக நீங்கள் நினைக்கும் காரணங்களைச் சொல்லியுள்ளீர்கள்.

அதை எதிர்ப்பவர்கள் பற்றி ஒன்றும் நீங்கள் சொல்லவில்லையே?!:-))

உலக யதார்த்தம் புரியாமல்,கற்பனையில் கதையளக்கும் வாய்ச்சொல் வீரர்களான போலிப் பொதுவுடைமைவாதிகள் மக்கள் பொருளாதார நலன் அடையவிடாமல் முட்டுக்கட்டை போடுவதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!:-))

மதவாதிகளுக்கும் போலிப் பொதுவுடமை வாதிகளுக்கும் எந்த கொள்கையோ கோதாரியோ கிடையாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

மதவெறியார்கள் ஏதோ தாம்தான் தாம் சார்ந்த மதத்தின் காவலர்கள் போலச் செயற்படுவது போலத்தான் யதார்த்தம் புரியாமல், கிணற்றுத் தவளைகள் போல கூச்சல் போடும் பொதுவுடைமை வாதிகளும், ஏதோ தாம்தான் மக்கள் நலன்காவலர்கள் என்ற கற்பனையில் கதையளப்பது.

இங்கே பொதுவுடைமை பேசும் அன்பர்கள் சீனாவில் நடந்துவரும் மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கிறர்கள் என அறிய ஆவலாக உள்ளேன். சீனா போகிற போக்கைப் பார்த்தால் அங்கே இன்னுமொரு மாவோ தேவை போல இருக்கு.

அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது போலத்தான் கிணற்றுத் தவளைகள் போல செயற்படும் பொதுவுடமை பேசுவோரின் கருத்துக்களும்.

/* இயற்கைவளங்கள் அப்படியே விட்டுவைக்கப்படும்பட்சத்தில் அது சாமானியர்களின் உழைக்கும் வர்க்கத்தின், அடித்தட்டுமக்களின் சொத்தாக இருக்கும். இப்படியான பாரியதிட்டங்கள் இயற்கை வளங்களைச் சுரண்டும்போது அது பணக்கார முதலைகளுமட்டும் தான் நன்மை தரும். */

யதார்த்தமற்ற கற்பனைவாதம். ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல இதனால் அப்பாவி வறிய மக்கள் அடைய இருக்கும் நன்மைகளூம் உண்டு.

/* மக்கள் நலனைத்தாண்டிய தமிழீழ நலன் என்று ஒன்று இருக்குமானால் அது பிரபாகரன் நலனாக மட்டும்தான் இருக்கமுடியும். ;-) */

அப்படி இத் திட்டத்தால் பிரபாகரனுக்குத் தனிப்பட்ட நன்மையெனின் அது 99.9 வீதமான ஈழத் தமிழர்களுக்கும் நன்மையுள்ளதாகவே இருக்கும்.:-))
----------------------------------
கொழுவி,
கருத்துக்கு மிக்க நன்றி.

/* கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவைச் சேர்ந்த ஒருவருடன் (முகவர் அல்ல :) பேசிக்கொண்டிருந்த போது */

கொழுவி, அந்தப் பிரமுகர் சொன்ன கருத்துக்களை நீங்கள் ஏன் ஒரு தனிப்பதிவாகப் போடக் கூடாது?
நீங்கள் இதுபற்றி எழுதினால் இத் திட்டம் பற்றி இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.
தயவு செய்து நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.


---------------------------------
ஆழியூரான்,

/* சொந்த கருத்து சொல்லும் அளவுக்கு இந்த விஷயத்தில் தகவல் புலைமை பெற்றவனில்லை நான். வரும் தகவல்களை ஆர்வமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். */

நானும் உங்களைப் போலத்தான். இதுபற்றி எனக்கும் ஆழ்ந்த அறிவு இல்லை. அதனால்தான் என் பதிவிலேயே நான் குழம்பிப் போய் உள்ளேன் எனச் சொல்லியிருந்தேன்.

----------------------------------
தெருவளர் தனியாள்,

/* எல்லாரும் திருவாளர் பொதுசனம் என்றால், */

நான் எல்லோரையும் திருவாளர் பொதுசனம் என்று சொல்லவில்லையே. அதிகாரத்தில் இல்லாமலும், மதவாத, மற்றும் உருப்படாத பொதுவுடமை வாதமும் பேசும் அமைப்புக்களைச் சாராத மக்கள் கூட்டத்தைத்தான் நான் திருவாளர்கள். பொதுசனம் என விளித்தேன்.

----------------------------------
ரவி,
தாம் சார்ந்த பக்கத்து நியாயத்தை சரியென நிறுவப் பலரும் பல காரணங்களையும் சொல்கிறர்கள்... இதுபற்றி நடுநிலையாக, அறிவு பூர்வமாக ஒருவரும் எழுதிய கட்டுரைகளை நான் இதுவரை படிக்கவில்லையென்றே சொல்லலாம்.:-))

said...

சேது கால்வாய் தோண்டினால்
செல்வம் கொழிக்கும் வியாபாரம்
பெருகும் தொழில் பெருகும்
என்கிறார்கள்
இங்கிலாந்துக்கும் paris இடையில்
பெரும் முதலீட்டுடன் போடப்பட்ட
இரயில் கதைதெரியும் தானே

வெறும் 300 மீட்டர் 400 மீட்டர்
தான் வெட்ட போகிறோம் என்கிறார்கள்
மீனவர்கள் ஆள்கடலில் மீன் பிடிக்கிறார்கள் அதனால்தான் இலங்கை
இரணுவம் தமிழக மீனவாஃகளை
கைதுசெய்கிறது (ஏதோ தமிழக மீனவர்கள் எல்லோரும் அங்குதான்
போய் தொழில் செய்வது போல)
இதுக்கு செய்யும் செலவை
தமிழக விவசாயத் துறைக்கு பயன்
படுத்தலாம் (கருணநியின் கப்பல்களும்
பாலுவின் கப்பல்களும் ஓடவிடவேணும் என்றால் யார் என்ன
செய்யமுடியும்)

said...

அனானி,
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

/* இங்கிலாந்துக்கும் paris இடையில்
பெரும் முதலீட்டுடன் போடப்பட்ட
இரயில் கதைதெரியும் தானே */

இதுபற்றி நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது தயவு செய்து கொஞ்சம் விளக்கிச் சொல்வீர்களா?

said...

வெற்றி,

நடுநிலையாக எதுவும் வரவில்லை சேது சமுத்திரம் பற்றி என சொல்லி இருக்கிறீர்கள். காரணம் அரசே இன்னும் பல தேவையான தகவல்களை வெளியிடவில்லை. இருக்கும் தகவல்களை கொண்டு என்னளவில் நடு நிலையாக ஒரு பதிவாகக்கொடுத்தேன் அதில் முக்கியமாக இந்த சேது திட்டத்தில் என்ன சாதக, பாதக அம்சங்கள் இருக்கிறதோ அதை எல்லாம் கொடுத்து விட்டு படிப்பவர்களே தீர்மானிக்கும் வண்ணம் அப்பதிவுக்கு வடிவம் கொடுத்துள்ளேன். அதில் எனது சொந்த கருத்து என்பது வெகு குறைவாக இருக்கும் படி தான் உள்ளது.

இணையத்தில் இருக்கிற தகவல்களை தான் நான் எடுத்தாண்டு இருக்கிறேன், அதன் நம்பகத்தன்மை என்பது எப்படி தெரியும் , ஆனால் எல்லா பக்கத்தின் கூற்றுக்களையும் பதிவிட்டு ஒரு வடிவம் தற முயன்றது மட்டுமே என் வேலை.

சேது திட்டம் பற்றிய ஒரு பார்வையாக தான் இருக்கும், உண்மைகள் என்ன என்பது திட்டம் போட்ட மகானுபவனுக்கே வெளிச்சம்!

இலங்கையில் உள்ள தீவுகளில் கடலில் நன்னீர் ஆறு ஓடுவதாக சொல்லி இருந்தீர்கள்.

இதில் ஒன்று புரியவில்லை , தீவுகளில் நிலத்தில் இருக்கிறதா, நடுக்கடலில் அப்படி நன்னீர் ஓடுகிறதா?

"aquifer" என்ற அமைப்பின் படி கடல் ஓரங்களில் கூட நல்ல தண்ணீர் எடுக்க முடியும் , சமயங்களில் மிக மேலோட்டமான பகுதியில் அவை சிறு சுனையாக தானாகவே ஓடவும் செய்யும், அதனை "shallow depth open aquifer" என்பார்கள். மெரினா கடற்கரையில் ஒரு இரண்டு அடிக்கு பள்ளம் தோண்டி நல்ல தண்ணீர் எடுப்பார்கள்.

அதற்கு காரணம் மணலில் நீரின் நுண்புழையேற்றம்(capillary action), நிலத்தடி நீர் மட்டம்(water table) மிகவும் மேல் ஆக இருப்பது, மணல் பரப்பின் அடியில் நுண் துளைக்கொண்ட பாறைகள் இருப்பது.எனவே மேற்பரப்பில் நல்லத்தண்ணீர் ஊற்றெடுக்கும்.

அது போன்ற இடங்களில் ஆழமான போர் போடாமல் தரைமட்டத்தில் மேலோட்டமாக இணையாக நான்கைந்து போர்கள் போட்டு அவற்றை குழாய் மூலம் இணைத்து ஒரு பம்ப் மூலம் நீர் எடுக்கலாம்.

மேலும் "estuary" என்ற நீர் அமைப்பும் கடல் ஓரத்தில் இருக்கும் ஆனால் அதற்கு எதாவது நதி கடலில் கலக்க வேண்டுமே. அங்கு சில சமயத்தில் நீரின் மேல் மட்டம் நல்ல நீராகவும், கீழ்மட்டத்தில் உப்பு நீராகவும் இருக்கும்.

மேலும் "lagoon" என்ற அமைப்பும் கடல் ஓரமாக கடலுடன் தொடர்புள்ள நீர் அமைப்பு தான் இதிலும் நன்னீர், உப்பு நீர் என இருக்கும். ஆனால் இதில் எல்லாம் நல்ல நீர் மழை மூலம் சென்று சேர வேண்டும்.

எனக்கு தெரிந்த காரணங்கள் இவை வேறு ஏதேனும் காரணம் இருந்தால் யாராவது சொல்கிறார்களாப்பார்ப்போம்.

said...

வவ்வால்,
நன்றி.

/* இருக்கும் தகவல்களை கொண்டு என்னளவில் நடு நிலையாக ஒரு பதிவாகக்கொடுத்தேன் அதில் முக்கியமாக இந்த சேது திட்டத்தில் என்ன சாதக, பாதக அம்சங்கள் இருக்கிறதோ அதை எல்லாம் கொடுத்து விட்டு படிப்பவர்களே தீர்மானிக்கும் வண்ணம் அப்பதிவுக்கு வடிவம் கொடுத்துள்ளேன். */

உண்மை. உங்களின் பதிவு எப் பக்கமும் சாராது இருந்தது.

நான் சொல்ல வந்தது இது குறித்த வல்லுனர்கள்/ஆய்வாளர்கள்/பொருளாதார நிபுணர்கள் போன்றோரின் நடுநிலையான கட்டுரைகளை இதுவரை படிக்கக் கிடைக்கவில்லை என்று. வலைப்பதிவர்களின் பதிவை அல்ல.

தெளிவாகக் கூறாதது என் தவறுதான். மன்னித்துக் கொள்ளுங்கள்.

/* இலங்கையில் உள்ள தீவுகளில் கடலில் நன்னீர் ஆறு ஓடுவதாக சொல்லி இருந்தீர்கள்.*/

இக் கருத்தை அனானியாக வந்த அன்பர் ஒருவர் பின்னூட்டம் மூலம் சொல்லியிருந்தார். அதாவது யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் இருக்கும் கிட்டத்தட்ட 70 தீவுகளுக்கு மத்தியில் கடலில் நன்னீர் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.

அத் தகவல் எனக்குப் புதிது மட்டுமல்ல, மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அதனால்தான் அவரிடமும் , உங்களிடமும் விளக்கம் கேட்டேன்.

/* இதில் ஒன்று புரியவில்லை , தீவுகளில் நிலத்தில் இருக்கிறதா, நடுக்கடலில் அப்படி நன்னீர் ஓடுகிறதா?*/

அந்த அனானி நண்பரின் பின்னூட்டத்தில் இருந்து கடலில் தான் நன்னீர் ஓடுவதாக அவர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

/* மெரினா கடற்கரையில் ஒரு இரண்டு அடிக்கு பள்ளம் தோண்டி நல்ல தண்ணீர் எடுப்பார்கள். */

உண்மையாகவா?! சுவாரசியமாக இருக்கிறது.

உங்களின் விளக்கங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்/தகவற் களஞ்சியம் போல நல்ல அருமையான விளக்கங்கள் தந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு எனது அன்பான நன்றிகள். உங்களின் பின்னூட்டங்க்கள் மூலம் பல அரிய தகவல் எனக்கு மட்டுமல்ல , பல வாசகர்களுக்கும் கிடைக்கிறது.

said...

//மக்கள் நலனைத்தாண்டிய தமிழீழ நலன் என்று ஒன்று இருக்குமானால் அது பிரபாகரன் நலனாக மட்டும்தான் இருக்கமுடியும். ;-)//

பிரபாகரன் இது குறித்த ஒரு கருத்தை எங்கும் வெளிப்படுத்தினாரா? இது ஒரு மோட்டுத்தனமான கருத்து வெளிப்பாடாகும்.

இது மயூரனின் அதிக பிரசங்கித்தனமான கருத்துக்களின் உதிர்வாகவே படுகின்றது.