ஏன் தமிழ்நாடு இப்படி இருக்கிறது? --- தமிழகத்தவர்களிடம் ஒரு கேள்வி
இப் பதிவு தமிழக நில அமைப்பை பற்றிய எனது ஐயத்தைத் தெளிவுபடுத்துவதற்காக. எனவே தமிழக நில அமைப்பைத் தெரிந்தவர்கள் பதில் சொல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
நான் இதுவரை தமிழகத்தில் கால் பதிக்கவில்லை. எனவே தமிழக நில அமைப்புப் பற்றிய என் புரிதல் எல்லாம் இணையத்தளங்களில் பார்க்கும் புகைப்படங்கள், திரைப்படங்கள், மற்றும் ஊடகங்களில் படிப்பவை, பார்ப்பவை என்பவற்றுடன் சரி. நேரடி அனுபவம் இல்லை. ஆதலால்தான் இக் கேள்வி. சரி, கேள்விக்கு முதல், கீழே உள்ள சற்லைற்[satellite] மூலம் எடுக்கப்பட்ட தமிழக, இலங்கை வரைபடத்தைப்(?)[map - map க்கு என்ன தமிழ்]உற்று நோக்குங்கள்.
படத்தைப் பெரிதாக்கி நோக்க, படத்தின் மேல் அழுத்தவும்.
மேலே உள்ள படத்தை நல்ல வடிவாக உற்று நோக்கியாச்சா? இனிக் கேள்வி கேக்கலாமல்லோ? நல்லது. என் கேள்வி இதுதான். இப் படத்தில் தமிழகத்தின் அதிகமான நிலப்பரப்பு மரம், செடி ஒன்றும் இல்லாமல் [பச்சையாக இல்லாமல்] வறண்ட பாலைவனம் போல காட்சி தருகிறது. நிலம் மட்டும்தான் தெரிகிறது. உண்மையிலேயே தமிழகத்தின் அதிகமான நிலப்பரப்பு மரம் செடிகளற்ற [பச்சைப் பசேலென இல்லாமல்] வறண்ட பகுதியா? அல்லது நான் தான் வரைபடத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டேனா? தெரிந்தவர்கள் தயவு செய்து கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்.மிக்க நன்றி.
பதிவர் வவ்வால் அவர்களுக்கு,
உங்களின் பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள், "மாதக்கல் ,ஜாப்னா அருகே உள்ள இடமா" எனக் கேட்டிருந்தீர்கள். அதற்குப் பதில், ஓம்.
மாதகல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு கரையோர ஊர். அதுதான் நான் பிறந்து வளர்ந்த மண்ணும் கூட. மேலே உள்ள படத்தைப் பாருங்கள், மாதகல் எங்கே உள்ளது என்பதைச் சொல்கிறது.
முந்தி மாதகலில் இருந்து தமிழகத்தின் கோடிக்கரைக்கு நடந்து சென்று அங்கிருந்து சிதம்பரம் சென்று சிவனை வணங்குவார்கள் என்று எனது பாட்டனார் சொல்வார்கள். சின்னப் பெடியனாக இருந்த போது அதை நம்பினாலும், பின்னர் அதை நம்பவில்லை. ஆனால் இப்போது கோடித் திடல் பற்றி அறியும் போது பல தலைமுறைக்கு முன் இப்படி நடந்திருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
நீங்கள் "ஜாப்னா" [Jaffna] எனச் சொல்லியிருப்பது தமிழில் யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் இடம்.
மேலே உள்ள படத்தைப் நோக்கும் போது, ஈழம், தமிழகத்தில் இருந்து கடலால் பிரிக்க முன் தமிழகத்தின் எப்பகுதியுடன், ஈழத்தின் எப் பகுதிகள் இணைந்திருந்திருக்கும் என்று துல்லியமாகக் சொல்லக் கூடியதாக உள்ளது. வடிவாகப் படத்தைப் பாருங்கள். building blocks ஐ இணணப்பது போல மேலே படத்தில் உள்ள தமிழகத்தையும், ஈழத்தையும் சேர்த்து ஒட்டினால் மாதகல் கோடிக்கரையோடே சேரும். ம்ம்ம்...மிகவும் சுவாரசியமாக உள்ளது.
வவ்வால்,
நீங்கள் பின்னூட்டத்தில், "யானை இரவு என்ற பகுதி கொஞ்சம் உள்ளே இருக்கிறதா , பாண்ட் பெட்ரோ(பருத்தி துறை) அருகே, அதற்கு "elephant pass" என்று பெயர்" எனக் கேட்டிருந்தீர்கள். பல சொற்களில் விளக்கம் சொல்வதைவிட ஒரு படத்தைப் போட்டு விளக்குவது இலகு என்பதால், யாழ்ப்பாண மாவட்டத்தின் படத்தை இணைத்துள்ளேன். நீங்கள் சொல்லியிருந்த இடங்களையும், இன்னும் சில இடங்களையும் pink நிறத்தால் சுட்டிக்காட்டியுள்ளேன். படத்தை பெரிதாக்கி நோக்க படத்தில் கிளிக் செய்யவும்.
49 comments:
படத்தைப் பெரிதாக்கி நோக்க, படத்தின் மேல் அழுத்தவும்
அழுத்தினா ஒன்றும் ஆகவில்லையே!!
ஓ! சொடுக்கனுமா? :-))
சே! கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே!!
ஏன் தமிழகம் சொட்டையாக இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
எல்லோரையும் மொட்டை அடித்தால் எப்படி இருக்கும்?
வெற்றி, செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கு, உங்க கேள்வி
;)
நீங்கள் சொல்வது கொஞ்சம் தவறு.....அதிக மரங்கள் அற்ற விளைச்சல் நிளங்கள் (காடுகள் அழிக்கப்பட்டதால்) அவ்வாறு காட்சி தருகின்றன...
மேலும் சில பெருநிலப்பரப்புகள் தரிசு நிலங்களாகும் ( மழை வந்தால் மட்டும் பயிர் )
மேலும் சில நிலப்பரப்புகள் விளைச்சலுக்கு ஏற்றவை அல்லாதவையாக இருக்கும்...
எனக்கு தெரிந்தவரையில் திருச்சி செல்லும் வழியில் (சென்னையில் இருந்து) பெரம்பலூர் தாண்டி தொடர்ச்சியாக வறண்ட பூமியை காணலாம்...
தமிழகத்தின் நீள அகலங்களை எல்லா வகையிலும் கடந்த வரவணையான், பாலபாரதி போன்றவர்கள் விலாவாரியாக புட்டுப்புட்டு வைப்பார்கள்...
நான் எனக்கு தெரிந்ததை சொன்னேன்...
வெற்றி!
அப்படி எனில் மாதக்கல் , கோடியக்கரை இடையே தான் மணல் திட்டு உருவாக வாய்ப்புள்ளது என்பது சரி தான், ஆனால் இதற்கு முன்னர் இல்லை தற்போது உருவாகி வருகிறது எனத்தெரிவித்துள்ளார்கள், எனது பதிவில் பதில் சொல்லி இருந்தேன் பார்த்தீர்களா?
இன்னும் 2400 ஆண்டுகளில் ஒரு மணல் திட்டு உருவாகி, நடந்தே செல்ல முடியுமாம், அப்போது அதை எந்த கோஷ்டி ராமர் தம்பி லட்சுமணர் கட்டிய பாலம் என சண்டைக்கு வருமோ தெரியவில்லை.
இதை எதற்கு இப்போது கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள் என்றால் இந்த ராமர் பாலம் என்பதும் இப்படி உருவானது தான் என சொல்ல!
யானை இரவு என்ற பகுதி கொஞ்சம் உள்ளே இருக்கிறதா , பாண்ட் பெட்ரோ(பருத்தி துறை) அருகே, அதற்கு "elephant pass" என்று பெயர் , இரவில் யானைகள் கடலில் இறங்கி நடந்து தமிழகப்பகுதிகளுக்கு வருமாம்.அதனால் தான் யானை இரவு என்ற பெயர் எனப்படித்துள்ளேன். அந்த அளவுக்கு தான் அப்போது எல்லாம் ஆழம் இருந்து இருக்கிறது.
தமிழகம் ஏன் சொட்டையாக இருக்கிறது என்பதற்கு வருவோம்.
தமிழகத்தில் "virgin forest" என்ற வகை காடுகள் குறைவு, அதனால் சாட்டிலைட் படத்தில் எப்போதும் பொட்டல் போலத்தான் தெரியும்.
ஆனால் இந்த படத்தில் இருப்பது போல எல்லாம் அந்த அளவு மோசமாக தெரியாது.
இது நாசா வெளியிட்ட படம் போல இருக்கிறது ஆனால் ஏதோ மாற்றம் செய்து வெளியிட்ட படம் போல இருக்கிறது, ஏன் எனில் கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைகள் வரப்பு போல தெரியும் அது கூட இல்லாமல் சமவெளியாக காட்டுகிறது.
சாட்டிலைட் படத்தில் குறைந்த பட்சம் ஒரு ஹெக்டேர் அளவுக்கு அடர்த்தியாக மரங்கள் இருந்தால் தான் அதனை காடு எனக்காட்டும். இன்ப்ரா ரெட் படமாக தான் இருக்கும், அதனை கணினி உதவியுடன் தான் மேற்சொன்னவாறு பசுமையாக தெரியும் வண்ணம் மாற்றிக்காட்டுவார்கள்.
forest survey of india என்ற அமைப்பு தான் இந்தியாவில் உள்ளக்காடுகளினை கண்கானித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் மொத்த பரப்பில் 33 சதம் காடுகளை வைத்திருக்க வேண்டும் என்பது அவர்கள் பரிந்துரை.
அவர்கள் கூற்றுப்படி தமிழகத்தில் முழுமையான காடுகளில் இருக்கும் மரத்தை விட அதிகமாக மரங்கள் தனித்தனியாக இருக்கிறதாம் ஆனால் அவை காடுகள் பற்றி எடுக்கும் சாட்டிலைட் படத்தில் வருவதில்லை என சொல்லி இருக்கிறார்கள்.
ஆனாலும் அடர் காடுகள் தமிழகத்தில் குறைவே, காரணம் காடுகள் மலைகள் சார்ந்து தான் இருக்கிறது, தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலை துண்டு துண்டாகவே இருக்கும். கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைகள் சேரும் இடத்தில் கொஞ்சம் முழுக்காடுகள் உள்ளது.
இந்த சுட்டியில் பாருங்கள் தமிழகம் கொஞ்சம் பசுமையாகத்தெரியும்,
http://www.maplandia.com/india/
வடுவூர் குமார்,
/* அழுத்தினா ஒன்றும் ஆகவில்லையே!!
ஓ! சொடுக்கனுமா? :-)) */
ஹிஹி... இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் குமார், click என்ற சொல்லுக்கு சிலர் சொடுக்கவும், கிளிக் செய்யவும், அழுத்தவும் என தமிழில் புழங்குகிறர்கள். எனக்குச் சரியான தமிழ்ச் சொல் தெரியவில்லை. அதனால்தான் அழுத்தவும் எனச் சொல்லியிருந்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள். Click என்ற சொல்லைத் தமிழில் சொடுக்கு என்றா என்றா சொல்வது?
சர்வேசன்,
/* வெற்றி, செருப்பால் அடிச்ச மாதிரி இருக்கு, உங்க கேள்வி */
ஐயோ, தெய்வமே! என்ன சாமீ சொல்லுறீங்கள் ?
நான் கேட்ட கேள்வியில் ஏதாவது பிழையான சொற்பதங்களைப் புழங்கியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
உண்மையில் தமிழகத்தின் நிலப்பரப்பைப் பற்றி அறிய வேணும் எனும் ஆவலில் கேட்ட கேள்விதான் இது.
நானும் பதிவர் வவ்வால் அவர்களும் சேதுத் திடல் தொடர் போல கோடிக்கரைத் திடல் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையில் இருப்பதைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்தோம். அத் திடல்களைப் பற்றி மேலும் அறிவதற்காக சற்லைற்றில் இருந்து எடுத்த படங்களை தேடிப்பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது, இப்படம் கண்ணில்பட்டது[கூகிள் துணையுடன்].
அப்பிடி இப்படத்தைப் பார்த்த போது எழுந்த ஐயத்தைக் கேட்பதற்காகக் கேட்ட கேள்விதான் இது.
சிலவேளை தமிழகத்தில் சனத்தொகை கூடியதால் காடுகளை அழித்திருப்பார்களா அல்லது இயற்கையாகவே இந் நிலப்பரப்பு இப்படி அமைந்ததுதானா என அறியத் துடித்த ஆவலில் பிறந்த கேள்வி.
http://veimages.gsfc.nasa.gov/3365/SriLanka.A2002140.0510.250m.jpg
வான்மதி(ப்படங்கள்) பலவகை. ஒவ்வொன்றும் தனிவகை.
படமெடுக்கும் அலைவரிசையிலேயே விளையாட்டிருக்கும்.
//ஐயோ, தெய்வமே! என்ன சாமீ சொல்லுறீங்கள் ?
நான் கேட்ட கேள்வியில் ஏதாவது பிழையான சொற்பதங்களைப் புழங்கியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.//
டென்ஷனாகாதீங்க. ஏண்டா உங்க ஊர இப்படி காஞ்சு போன பூமியா வச்சிருக்கீங்க. பக்கத்து ஊர் கேரளா, இந்தப் பக்கம் ஸ்ரீலங்கா எல்லாம் செழிப்பா இருக்கேன்னு கேக்கர மாதிரி இருக்குன்னு சொன்னேன் :)
ஆளுக்கொரு மரம் வச்சு ஊர செழிப்பா மாத்த முடியும். செய்யதான் மாட்டறோம் ;)
வெற்றி
இதில் என்ன ஒற்றுமையென்றால் அனானி தந்த தொடுப்பை பார்த்தீர்களானால் அதிலுள்ள யாழ்ப்பாண நிலமும் அதை கொண்டே தமிழகவரைபடத்துடன் சேர்க்கும் இடத்திலுள்ள நில அமைப்பும் ஒன்றாகவே இருக்கிறது.
யாழ்பாணமும் காய்ந்துபோய்த்தான் இருக்கிறது.
சர்வேசன்,
/* டென்ஷனாகாதீங்க. ஏண்டா உங்க ஊர இப்படி காஞ்சு போன பூமியா வச்சிருக்கீங்க. பக்கத்து ஊர் கேரளா, இந்தப் பக்கம் ஸ்ரீலங்கா எல்லாம் செழிப்பா இருக்கேன்னு கேக்கர மாதிரி இருக்குன்னு சொன்னேன் :) */
எனக்கு உங்களைத் தெரியும். நீங்கள் ஜாலியான மனிதர். ஆனால் உங்களுக்குத் தமிழணத்தில் உள்ள சில அன்பர்களின் போக்குத் தெரியும்தானே.:-))
அவர்கள் தப்பாக விளங்கி தடி, பொல்லுகளுடன் வரக்கூடாது என்பதற்காகத்தான் கொஞ்சம் விரிவாகச் சொன்னேன்.
மற்றும்படி, எனக்கு உங்கள் சுபாவம் தெரிந்ததால் நான் "ரென்சன்" ஆகவில்லை.
உங்களின் விளக்கத்திற்கு நன்றி. :-))
வெற்றி தங்களது கேள்விக்கு சுருங்க பதில் சொல்ல வேண்டுமாயின் அது இதுவே.
தமிழகத்தின் மேற்கு திசை எல்லையாக இருக்கு மேற்கு தொடர்சி மலையே தமிழகத்தின் வறட்சிக்கு முக்கிய காரணம். இது இந்தியாவின் முக்கிய பருவ காற்றான வட-மேற்கு பருவகாற்றை தடுத்து தமிழகதின் உட்பகுதிகளுக்கு மழைகிடைக்காமல் செய்துவிடுகிறது. வட-மேற்கு பருவகாற்று june - july -ல் பொழியும் அதனால்தான் ஆடிமாதம் காவேரியில் புதுவெள்ளம் வரும். அதாவது புதுவெள்ளம் கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையால் வருவது.
மத்திய மற்றும் கிழக்கு தமிழகத்திற்கு அதிக அளவில் மழைதருவது தென் கிழக்கு பருவ காற்று இது October-november மாதங்களில் மழை பொழிவைத்தரும்.
மேலும் மேற்கு தொடர்சி மலை தொடராகவும் உயரமாகவும் இருக்கும். கிழக்கு தொடர்சி மலை என்பது தொடர்சிவிட்டே காணப்படும் மற்றும் உயரம் குறைவான காரணத்தால் சிறதளவே மழை வளத்தையே தமிழகத்தின் மத்திய பகுதிகளுக்கு கொடுக்கின்றது.
மேற் சொன்ன இயற்கை காரணங்களால் தமிழகத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதி வறண்டு காண்கிறது. ஆனால் தமிழகத்தின் மேற்கு பகுதி பசுமை நிறைந்தது.
மற்றும் ஒரு அறிவியல் காரணமும் உண்டு அதாவது காவேரி இடையே கட்டப்பட்ட அணை. விஞானம் வளர்தபிறகு கார்நாடக மாநிலத்தில் கட்டிய அணையால் தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது என்பது மற்றும் ஒரு உண்மை. காவேரியில் குறைந்த நீர் வரத்தால் அதன் கரையோர மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது வறட்சிக்காண மற்றும் ஒரு காரணம்.
இன்னும் பல அறிவியல் அரசியல் காரணங்களும் உண்டு அதை பற்றி ஒரு தனி பதிவாக இட முயல்கிறேன்.
வெற்றி, பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. வேலிக்கருவுதான் தமிழ்நாட்டின் தேசிய மரம் என்ற நிலை. வேலிக்கருவின் பலன்....மழையைத் துரத்தும். :( தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருசில பகுதிகளைத் தவிர...மற்ற இடங்கள் வறட்சி. திருநெல்வேலி நாகர்கோவில் மாவட்டங்கள் தாவலை. கோவை, தஞ்சை, தேனி போன்ற இடங்கள் செழிப்பைக் காட்டலாம். மற்றபடி..மொட்டையோ மொட்டை.
செந்தழல் ரவி,
உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
/* அதிக மரங்கள் அற்ற விளைச்சல் நிளங்கள் (காடுகள் அழிக்கப்பட்டதால்) அவ்வாறு காட்சி தருகின்றன...*/
நீங்கள் சொல்லும் இக் காரணத்தை நானும் நினைத்தேன். அதாவது முந்தி காடுகளாக அல்லது மரம் செடிகள் இருந்த நிலத்தை மனிதர்கள்தான் தமது தேவைக்காக
அழித்திருக்கக்கூடும் என. நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது.மிக்க நன்றி.
தமிழக அரசு மரம் நாட்டுவதை ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் இருக்கும் காடுகளை, மரங்களை அழிப்பதைத் தடுக்க வேண்டும்.
----------------------------------
வவ்வால்,
உங்களின் விளக்கத்திற்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி. நீங்கள் கேட்டுள்ள ஈழத்து இடங்களை மேலே படம் இணைத்து அதில் சுட்டிக் காட்டியுள்ளேன்.
----------------------------------
அனானி,
/*
வான்மதி(ப்படங்கள்) பலவகை. ஒவ்வொன்றும் தனிவகை.
படமெடுக்கும் அலைவரிசையிலேயே விளையாட்டிருக்கும். */
பல படங்களைப் பார்த்த பின் நீங்கள் சொல்வது சரியென்றுதான் படுகிறது. இதைத்தான் வவ்வாலும் சொல்லியிருந்தார்.
ஆனால் நீங்கள் தந்த சுட்டியில் உள்ள படத்திலும் தமிழகத்தில் மரங்கள் அடர்த்தி இல்லாமல் தானே இருக்கிறது.
இவன் என்பவர் பின்னூட்டத்தில்
//இது இந்தியாவின் முக்கிய பருவ காற்றான வட-மேற்கு பருவகாற்றை தடுத்து தமிழகதின் உட்பகுதிகளுக்கு மழைகிடைக்காமல் செய்துவிடுகிறது.//
//மத்திய மற்றும் கிழக்கு தமிழகத்திற்கு அதிக அளவில் மழைதருவது தென் கிழக்கு பருவ காற்று இது October-november மாதங்களில் மழை பொழிவைத்தரும்.//
நீங்கள் குறிப்பிட்டது போல அப்படி ஒரு பருவக்காற்றுகளே இல்லை,
தென் மேற்கு பருவக்காற்று, வட- கிழக்கு பருவக்காற்று தான் உண்டு.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகள் இருப்பதால் தான் தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது , அதனாலே அங்கு நல்ல வன வளம் உண்டு. படத்தில் பார்த்தால் கூட தமிழகத்தின் மேற்கு பகுதிகளே பசுமையாக இருக்கும்.
தமிழகம் சொட்டையாக இருக்க காரணம் மனிதர்களே, அதிகம் சம வெளிப்பகுதியாக இருப்பதால் எல்லாவற்றையும் வெட்டி விவசாய நிலங்கள் ஆக்கி விட்டார்கள்.
ராஜேந்திர சோழனுக்கு காடுவெட்டி என்ற பட்டப்பெயர் உண்டு காரணம் பல காடுகளை வெட்டி ஊர் அமைத்தானாம். இன்றும் ஜெயங்கொண்டம் அருகே ஒரு ஊருக்கே காடு வெட்டி என்று பெயர் உண்டு.
பல்லவர்களுக்கு பொதுவாக காடவர் என்றே பெயர் , காடுகளை அழித்தே அவர்கள் சாம்ராஜ்யம் அமைத்தார்களாம்.
தமிழகப்பகுதிகளில் வனம் இல்லாமல் இருப்பது நாம் வெகு காலத்திற்கு முன்னரே நாகரீகம் பெற்றதன் அடையாளமே! அப்பொழுதே காடு திருத்தி நாடு அமைக்க ஆரம்பித்து விட்டோம்.
இப்பொழுதும் மரங்கள் அதிகம் இருக்கும் கேரளா, இலங்கை எல்லாம் பார்த்தால் மலைப்பாங்கான பிரதேசம் தான். சம வெளி எனில் அழித்து விவசாயம் செய்து இருப்பார்கள்.
இந்தியாவின் மொத்த காடுகளில் 25 சதவீதம் இருப்பது வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் பகுதிகளில் அதுவும் மலைப்பிரதேசம் தான்.
இப்பொழுது மலைப்பிரதேசங்களிலும் தேயிலை தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது.
நல்ல பதிவு.
இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
http://www.desipundit.com/category/tamil/
வெற்றி தந்த படத்திலயும் யாழ்ப்பாணம் (ஆனையிறவு உட்பட) வறட்சியாகத்தான் இருக்கு.
வெற்றி,
இந்தியாவுக்கு நடந்து போனனாங்கள் எண்டகதை 'கதை' தான்.
உங்கட பூட்டனுக்கு அவரின்ர பூட்டன் சொல்லி, அவருக்கு அவரின்ர பூட்டன் சொல்லி எண்டு கடத்தப்பட்டுத்தான் வந்திருக்கும்.
'நாங்கள் சிலோனுக்கு ரயில் போய் வந்தனாங்கள்' எண்டு நா.கண்ணன் கானா பிரபாவுக்குச் சொன்னபோதும் எனக்குக் குழப்பம் வந்தது. இன்னும் இந்தவிசயத்தில தெளிவில்லை.
ஆனா நேவி கலைச்சுக் கலைச்சு அடிச்சாலும் வருசாவருசம் வேளாங்கண்ணித் திருநாளுக்கு எங்கட சனம் படகில போய் (உந்த விசா கிசா கோதாரி ஒண்டுமே இல்லாமல்) வாறது மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது.
//நீங்கள் குறிப்பிட்டது போல அப்படி ஒரு பருவக்காற்றுகளே இல்லை,
தென் மேற்கு பருவக்காற்று, வட- கிழக்கு பருவக்காற்று தான் உண்டு.//
ooopss...
வட மேற்கை, வட-கிழக்காவும் தென் கிழக்கை, தென் மேற்காகவும் மாற்றி கொண்டால் என் பின்னூட்டத்தில் எந்த தவறும் இல்லை.
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி வவ்வால்.
ஆனால் எனக்கு ஓரு சந்தேகம்! தமிழகத்தின் நீர் தேவை அதிக அளவில் பூர்தி செய்தது ஏரி, குளம் மற்றும் குட்டைகள்தான் அதனால்தான். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அதிக அளவிலான ஏரி, குளம் மற்றும் குட்டைகள் கட்டப்பட்டதாக புவியியல் பாடத்தில் படித்தது இன்னமும் ஞாபகம் உள்ளது.
தமிழகத்தில் ஆதிகாலம் தொட்டே மழை வளம் குறைவு. அதனால்தான் ஏரிகள் அதிக அளவில் கட்டி மழை நீரை சேமித்ததாக நான் படித்த வரலாறு கூறுகிறது.
வெற்றியண்ணா நீங்கள் சொல்வது உண்மையே. நான் இணைத்த படம் நீங்கள் தந்த படத்தின் உள்ளமைப்பினை மேலும் படச்செறிவு துலக்கிப் (resolution) பெருக்கித்தரும் படம்.
செய்மதிகளின் படங்கள் வெவ்வேறு வகை என்று சொன்னதன் காரணம் வேறு. செய்மதிகள் படம்பிடிக்க அனுப்பப்படும்போது, வெவ்வேறு நோக்கங்களுக்காக அனுப்புகின்றார்கள். இராணுவக்கண்காணிப்புச்செய்மதி, தரைப்புவியியல் சார்செய்மதி, கடல்சார்செய்மதி, வானிலைகாண் செய்மதி என்று வேறுவகை நோக்குகள்.
அவற்றின் சுற்றுவேகம், படமெடுக்கும் கருவிகளின் அலைவரிசை (வீச்சம்), அவை பூமியிலிருந்து நிலைகொண்டு சுற்றும் உயரம், படச்செறிவு என்பன இவற்றுக்கான நோக்கங்களுடன் அமைகின்றன. அதனால், வெறுமனே நாசாவின் செய்மதிப்படம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு படத்திலேயுள்ளவற்றினைப் பற்றிக் கருத்துச் சொல்வது கடினம். கையிலே இருக்கும் படத்திலே பச்சையாகத் தோன்றுவதெல்லாம் (மட்டுமே) வெறும்பசுமைதான் என்று சொல்வது முழுக்கவும் சரியல்ல.
//'நாங்கள் சிலோனுக்கு ரயில் போய் வந்தனாங்கள்' எண்டு நா.கண்ணன் கானா பிரபாவுக்குச் சொன்னபோதும் எனக்குக் குழப்பம் வந்தது. இன்னும் இந்தவிசயத்தில தெளிவில்லை.//
வசந்தன் கண்ணன் என்ன அர்த்ததில் சொன்னார் என தெரியவில்லை.
ஆனால் முன்னர் இரமேஸ்வரம்/ தனுஸ்கோடி வரை ரயில் பாதையும், இலங்கையில் தலைமன்னாரில் இருந்தும் புகையிரதப்பாதையும் இருந்தது. (அதை வவ்வால் தனது வலைப்பதிவில் இணைத்திருக்கும் படத்திலும் காணலாம்) இடையில் உள்ள குறுகிய கடல் பகுதியை கடக்க படகு/ பாதை (Ferry) பயன் படுத்தப்பட்டதாக சொல்லி கேள்விபட்டுள்ளேன்.
எனவே அவர் சொன்னது 100% சரியாக இல்லாவிட்டாலும் ஒரு பகுதியுண்மையே. முன்னர் தலைமன்னார் தனுஸ்கோடி பாதை முக்கியமானதாக இருந்தது.
தீவு,
/* இதில் என்ன ஒற்றுமையென்றால் அனானி தந்த தொடுப்பை பார்த்தீர்களானால் அதிலுள்ள யாழ்ப்பாண நிலமும் அதை கொண்டே தமிழகவரைபடத்துடன் சேர்க்கும் இடத்திலுள்ள நில அமைப்பும் ஒன்றாகவே இருக்கிறது. */
உண்மை தீவு. மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.
/* யாழ்பாணமும் காய்ந்துபோய்த்தான் இருக்கிறது. */
உங்களின் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன். யாழ்ப்பாணமும் வறண்ட பகுதி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
யாழ்ப்பாணம் முந்தி மரங்கள் நிறைந்த இடமாகத்தான் இருந்தது. ஆனால் அன்றைய[தமிழகம்] சேர, சோழ, பாண்டி, தொண்டைமண்டலம் போன்ற பகுதிகளில் இருந்து ஈழத்திற்கு வந்தவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணத்திலேயே குடியேறினர். அவர்கள் குடியேறிய போது, காடுகளை அழித்துத்தான் குடியேற்றங்களையும், காணிகளையும் உருவாக்கினர்.
ஆனால் ஆனையிறவைத் தாண்டிச் சென்றால் பல மர வளங்கள் நிறைந்த இடமாகவே ஈழத்தமிழ் மண் இருக்கிறது என நினைக்கிறேன். தவறாயின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களில் சிங்கள அரசுகள் காடுகளை அழித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினர். அதனால் விட்டால் சிங்களவர்கள் முழுக் காட்டையும் அழித்து தமது இடமாக்கி விடுவார்கள் எனும் அச்சத்தாலும் பல தமிழர்களும் காடுகளை அழித்து காணிகளாக்கினர்.
அதுமட்டுமல்ல, இப் பகுதிக்காடுகளை அழித்து காணிகளாக்கி மலையகத்தில் இருந்த தமிழ்மக்களையும் குடியேற்ற தமிழ் அரசியல்வாதிகள் முயற்சித்தனர். பல மலையகத் தமிழ்மக்களை அவ்வாறு குடியேற்றியுமிருந்தனர்.
ஆனாலும், இன்றும் ஆனையிறவுக்கு அப்பால் உள்ள ஈழத்தமிழ்மண் மரங்கள் செறிவாக உள்ள இடமாகவே இருக்கிறது என நினைக்கிறேன். இல்லையா தீவு?
http://www.maplandia.com/sri-lanka/northern/jaffna/
:) :) ஒவ்வொரு செய்மதி வரைபடமும் ஒவ்வொரு மாதிரி.
யாழ்ப்பாணம் மழை வீழ்ச்சி குறைந்த பகுதி தான்.
ஆனால் மேலே நான் கொடுத்த இணைப்பை பாருங்கள். நல்ல பச்சையாக தான் இருக்கிறது. :)
ஆனால் கொஞ்சம் பெரிதாக்கி பார்த்தால் சில இடங்களில் வீடுகள், பாடசாலை என்பவற்றை பார்க்க முடியும்.
மதகல் :) பகுதி படத்துள் இருப்பதாகவே கருதுகிறேன். உங்கள் தெருவையும் வீட்டையும் அடையாளம் காண முட்டிகிறதா பாருங்கள்.
சாவகச்சேரி நவீன சந்தை, டிறிபேக் கல்லூரி, சாவகச்சேரி இந்துகல்லூரி என்பவற்றையும், அவற்றை சூழ உள்ள வீடுகளையும் என்னால் தெளிவாக அடையாளம் காண முடிகிறது. அந்த பகுதி முழுவதும் பசும் சோலைகள் நடுவே ஓட்டு கூரைகளை கொண்ட வீடுகளை காணலாம்.
வெற்றி வெற்றி, கடைசியாக நீங்கள் போட்ட பின்னூட்டம் கொஞ்சம் மேலாலே தூக்கி நின்றபடியே ஆறு ஓட்டங்கள் எடுக்க அடிக்கப்பட்ட பந்தாகத் தோன்றுகிறது ;-)
பெயரிலி,
/* வெற்றி வெற்றி, கடைசியாக நீங்கள் போட்ட பின்னூட்டம் கொஞ்சம் மேலாலே தூக்கி நின்றபடியே ஆறு ஓட்டங்கள் எடுக்க அடிக்கப்பட்ட பந்தாகத் தோன்றுகிறது ;-) */
அண்ணை, எனக்கு நீங்கள் உப்பிடி இலைமறை காயாக எழுதினால் விளங்காது.:-)). என்ரை தமிழறிவு அப்பிடி இப்பிடித்தான்.:-)
உப்பிடித்தான் ஜெகத்தின் பதிவில் DJ யும் ஏதோ சொல்ல நான் அவரை விளக்கிச் சொல்லும்படி கேட்க வேண்டியதாகி விட்டது.
நான் கடைசிப் பின்னூட்டத்தில் சொன்ன கருத்துக்களுக்கு ஏதோ மறுப்புச் சொல்கிறீகள் என நினைக்கிறேன். :-)
தயவு செய்து நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் விரிவாகச் சொன்னால் என் கருத்தைச் சொல்லவும், நான் தவறாகச் சில விடயங்களைப் புரிந்து கொண்டிருந்தால் திருத்தவும் பேருதவியாக இருக்கும். நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் விளக்கமாகச் சொல்வீர்களென எதிர்பார்க்கிறேன். முன்கூட்டியே நன்றிகள்.
//மதகல் :) //
மாதகல்
தவறாக எழுதிவிட்டேன்
வெற்றி...
அருமையான பின்னூட்டங்கள் தருகிறீர்கள்...
உங்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து சுற்றி காட்டலாம் என்று நேற்று நினைத்தேன்...இன்றைக்கு பின்னூட்டமாக போடுகிறேன்...வாங்க தமிழகத்துக்கு...என்னுடைய காரை தருகிறேன்...ஊரெல்லாம் சுற்றி, வயல் காடு கரை கழனி எல்லாம் பாருங்க...எங்க நிலத்தில் இளநீர் வெட்டி அதன் இனிமையான சுவை நீரை பருகி பாருங்க...
வாங்கோ சார்...!!!!!!!!!
அன்பின் வெற்றி,
தமிழகம் பல நூற்றாண்டுகளாய் காடுகள் குறைந்த நிலம் தான். காரணம் பல அன்பர்கள் கூறியது போல் காடுகள் அழிக்கப்பட்டு உழவு நிலங்களாக மாற்றப் பட்டது தான். மேலும் காவிரியும் வைகையும் இல்லையேல் தமிழகம் இல்லை என்னும் அளவிற்கு இவ்விரு நதிகளையும் நம்பியே தமிழகம் இருந்துள்ளது.
துணைக்கோள் எடுக்கும் படங்கள் கருப்பு - வெள்ளைப் படங்களே. ஒரே இடத்தை பலமுறை படமெடுத்து இவற்றில் உள்ள கருப்பு நிற வேறுபாடுகளை நிறங்களின் அலைநீளத்துடன் கணினி மூலம் ஒப்பிட்டு செயற்கையாக நிறமேற்றுவர். இதனால் சில இடங்கள் பச்சையாகவும் நீலமாகவும் வேறு நிறங்களாகவும் நமக்குத் தெரிகிறது.
இத்துணைக்கோள் படங்களின் பிரிதிறனைப் (resolution) பொறுத்து எவ்வளவு உயரத்திலிருந்து பார்ப்பது போல் தோன்றும் என்று குறிப்பிடுவர். சில ஆயிரம் அடிகள் வரையே நிலத்தின் உண்மைத்தோற்றம் புலப்படும். சில மைல் உயரத்தில் இருந்து பார்க்கும் பொழுது பச்சையும் நீலமும் நிறைந்து காணப்படும். நீங்கள் இணைத்திருக்கும் படம் குறைந்தது 20 மைல் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.
கூகிள் உலகத்தில் பார்த்தாலே நன்றாகத் தெரியும். ஈழத்தில் தெளிவாகத் தெரியும் பகுதிகள் முழுவதும் பசுமை நிறைந்த பகுதியாகத் தான் தெரிகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து இடைக்காடு வரையும் வன்னிப்பகுதியும் ஈழத்தின் தென்கிழக்கு மற்றும் கிழக்கிலும் சில பகுதிகள் தெளிவாகத் தெரிகின்றன.
நாசா உலகம் முழுவதையும் படமெடுத்துக் கொண்டு தானிருக்கிறது. இன்னும் முழுமையடையாததால் தமிழகம் மற்றும் ஈழத்தின் சில பகுதிகளை மட்டும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இன்னும் ஈராண்டுகளில் முழுமையடையும் என்று தெரிகிறது.
மறுமொழி நீண்டதற்கு மன்னிக்கவும்.
சந்திரன்,
இராமேஸ்வரம் வரைக்கும் ரயில் போனால் காணும்தானே? அங்கால பாம்பன் பாலம் மேலாக ஏற்கனவே ரயில் ஒடிக்கொண்டுதான் இருக்கிறது.
அப்ப உண்மையிலயே மன்னாரிலியிருந்து தமிழ்நாட்டுக்கு ரயிலில போய்வந்தவைதானோ?
எத்தனையாம் ஆண்டிலயிருந்து அது நிறுத்தப்பட்டது?
உண்மையில உந்த விசயம் எனக்குப் புதுசுதான்.
முன்பிட்ட மறுமொழியில் சிறு பிழை. 200 மைல் உயரம் என்றிருக்க வேண்டும்.
இவன்,
உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. பல சங்கதிகளை உங்கள் விளக்கத்திலிருந்து அறிய முடிந்தது.
/* இன்னும் பல அறிவியல் அரசியல் காரணங்களும் உண்டு அதை பற்றி ஒரு தனி பதிவாக இட முயல்கிறேன். */
நேரம் கிடைக்கும் போது கட்டாயம் எழுதுங்கள். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
---------------------------------
இராகவன்,
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தமிழக அரசு மரம் நாட்டுவதை ஊக்கிவிக்க வேணும். எமது வருங்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட வேணும்.
/* வேலிக்கருவுதான் தமிழ்நாட்டின் தேசிய மரம் என்ற நிலை */
வேலிக்கருவு என ஒருவகை மரம் இருக்கிறதா? அல்லது வெறும் வேலையைத்தான் இப்படிச் சொல்கிறீர்களா?
---------------------------------
வவ்வால்,
உங்களின் பின்னூட்டம் மூலம் பல சுவாரசியமான வரலாறுற்றுத் தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. மிக்க நன்றி.
/* தமிழகப்பகுதிகளில் வனம் இல்லாமல் இருப்பது நாம் வெகு காலத்திற்கு முன்னரே நாகரீகம் பெற்றதன் அடையாளமே! அப்பொழுதே காடு திருத்தி நாடு அமைக்க ஆரம்பித்து விட்டோம்.*/
இக் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.
--------------------------------
துளசி அம்மா,
/* நல்ல பதிவு.
இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன். */
ஐயோ! என்ன இப்பிடி எல்லாம் சொல்லி என்னை வெட்கப்பட வைக்கிறீங்கள்?! :-)) ஏதோ இந்தப் படத்தைப் பார்த்ததும் மனதில் எழுந்த கேள்வி. பின்னூட்டங்கள் மூலம் பல சுவாரசியமான பதில்கள் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
-----------------------------------
வசந்தன்,
/* யாழ்ப்பாணம் (ஆனையிறவு உட்பட) வறட்சியாகத்தான் இருக்கு.*/
ஆனால் ஆனையிறவு தாண்டினால் மரவளங்கள் அடர்த்தியாக இருக்குதல்லோ, இல்லையா?
/*
இந்தியாவுக்கு நடந்து போனனாங்கள் எண்டகதை 'கதை' தான்.
உங்கட பூட்டனுக்கு அவரின்ர பூட்டன் சொல்லி, அவருக்கு அவரின்ர பூட்டன் சொல்லி எண்டு கடத்தப்பட்டுத்தான் வந்திருக்கும். */
வசந்தன், நெருப்பில்லாமல் புகையாது எண்டமாதிரி, சில தலைமுறைக்கு முன்னர் அப்படி நடந்திருக்கலாம், இல்லையா? ஆனால் எனது அப்பப்பா கடல்வழியாக சிதம்பரம்/வேதாரணியம் போன்ற இடங்களுக்குச் சென்று வருபவர். எங்கடை ஊரிலை சிதம்பரத்துக்கு எழுதின வயல் வருமானங்களுக்கு இவரும் பொறுப்பாக இருந்தவர்.
ஆனால் நீங்கள் சொன்னமாதிரி நான் வளர்ந்த பிறகு இவர் நடந்து போன கதைகளை நம்பேல்லைத்தான். ஆனால் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் கட்டுரையைப் படித்ததும், சிலவேளை அப்பிடி நடந்தும் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
/* 'நாங்கள் சிலோனுக்கு ரயில் போய் வந்தனாங்கள்' எண்டு நா.கண்ணன் கானா பிரபாவுக்குச் சொன்னபோதும் எனக்குக் குழப்பம் வந்தது. இன்னும் இந்தவிசயத்தில தெளிவில்லை. */
சந்திரனின் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது கண்ணன் சொன்னது உண்மையாக இருக்கும் போல கிடக்கு.
/* ஆனா நேவி கலைச்சுக் கலைச்சு அடிச்சாலும் வருசாவருசம் வேளாங்கண்ணித் திருநாளுக்கு எங்கட சனம் படகில போய் (உந்த விசா கிசா கோதாரி ஒண்டுமே இல்லாமல்) வாறது மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது.*/
அதுமட்டுமில்லை, எங்கடை ஊரிலை உள்ள ஆக்கள் 'கடத்தல்' தொழிலும் செய்யிறவைதானே, இல்லையா?
அதோட, முந்தி இயக்கத்துக்கு பயிற்சிக்குப் போற ஆக்கள் பின்னேரம் இருட்டினதும் எங்கடை கடக்கரையாலை தமிழ்நாட்டுக்குப் போறதையும் பார்த்திருக்கிறேன்.
--------------------------------
அனானி,
/* செய்மதிகள் படம்பிடிக்க அனுப்பப்படும்போது, வெவ்வேறு நோக்கங்களுக்காக அனுப்புகின்றார்கள். இராணுவக்கண்காணிப்புச்செய்மதி, தரைப்புவியியல் சார்செய்மதி, கடல்சார்செய்மதி, வானிலைகாண் செய்மதி என்று வேறுவகை நோக்குகள். */
அடடா, உண்மைதான். ஆனால் நீங்கள் சொல்லியிருந்த காரணங்களை நான் நினைத்தும் பார்க்கேல்லை. நீங்கள் சொல்லுறது ஏற்புடையதே.
/* வெறுமனே நாசாவின் செய்மதிப்படம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு படத்திலேயுள்ளவற்றினைப் பற்றிக் கருத்துச் சொல்வது கடினம். */
உண்மை. உண்மை. இப்ப பலரும் தந்த சுட்டிகளைப் பார்க்கும் போது நீங்கள் சொல்வது புரிகிறது.
தகவல்களுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றிகள்.
-----------------------------------
சந்திரன்,
/* ஆனால் முன்னர் இரமேஸ்வரம்/ தனுஸ்கோடி வரை ரயில் பாதையும், இலங்கையில் தலைமன்னாரில் இருந்தும் புகையிரதப்பாதையும் இருந்தது. */
உண்மையாகவா சந்திரன்?! இதுவரை நான் கேள்விப்படாத தகவல் இது, மிக்க நன்றி.
/* மதகல் :) பகுதி படத்துள் இருப்பதாகவே கருதுகிறேன். உங்கள் தெருவையும் வீட்டையும் அடையாளம் காண முட்டிகிறதா பாருங்கள்.*/
சுட்டிக்கு நன்றி சந்திரன். ஆம், இச் சுட்டியை ஏற்கனவே பாவித்து எங்கடை வீடு இருந்த பகுதிகளெல்லாம் பார்த்தேன். ஆனால் வீடுகள்தான் இல்லை. எமது பகுதியில் இருந்த வீடுகள் எல்லாம் சிங்கள இராணுவத்தினர் இடித்து விட்டனர். இப்போது எமது பகுதி உயர்பாதுகாப்பு வலயம். அங்கு மக்கள் இல்லை.
/* தவறாக எழுதிவிட்டேன் */
பரவாயில்லை. இதிலென்ன!
---------------------------------
செந்தழல் ரவி,12
/* வாங்கோ */
என்ன ஈழத் தமிழ் கதைக்கப் பழகிவிட்டீர்கள் போல இருக்கு. :-))
ரவி, உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. கடந்த சித்திரை [ஏப்பிரல்] மாதம் தமிழகம் செல்லத் திட்டமிட்டிருந்தேன். பின்னர் வேறு சில காரணங்களால் பயணம் கை கூடவில்லை. வரும் போது கட்டாயம் உங்களைத் தொடர்பு கொள்வேன். மிக்க நன்றி.
வெற்றி!
//வேலிக்கருவு என ஒருவகை மரம் இருக்கிறதா? அல்லது வெறும் வேலையைத்தான் இப்படிச் சொல்கிறீர்களா?//
வேலிக்கருவை,(வயலில் வேலியாக பயன் படுவதால்) கருவேலம் மரம் என்றெல்லாம் சொல்லும் மரம் இருக்கும் ஒன்று தான் அதன் தாவரவியல் பெயர், "prosopis juliflora" என்பதாகும்.அமெரிக்க கண்டத்தை சேர்ந்தது இந்த மரம். இந்த மரம் இந்தியாவிற்கு வந்ததே தவறான வழிகாட்டுதல் காரணமாக தான்.
இந்திராகாந்தி காலத்தில் இந்தியாவில் காடுகள் குறைவாக இருப்பதால் மரங்களை அதிகப்படுத்த ஒரு திட்டம் போட சொன்னார்கள், அதன் படி யாரோ ஒரு அதிகம் படிச்ச அதிகாரி இந்த மரத்தின் விதைகளை விமானம் மூலம் மேலிருந்து இந்தியா முழுவதும் தூவினால் போதும் தண்ணீர் ஊற்றாமலே நன்கு வளரும் என ஆலோசனை தந்தார்.அப்படியே செய்யப்பட்டது அதான் இந்தியா முழுக்க இன்று பெருகி பரவி இருக்கிறது.
வேலிக்கருவை மரவகையில் முற்கள் அற்றது அரிய வகை இனம். தற்போது முள் இள்ளாத வேலிக்கருவை மரத்தினை அதிக அளவில் உற்பத்தி செய்ய கோவையில் உள்ள இந்திய வன மரபியல் ஆராய்ச்சி துணை நிலையத்தில் ஆய்வு நடக்கிறது.(மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி வேறு)
//சந்திரன்,
இராமேஸ்வரம் வரைக்கும் ரயில் போனால் காணும்தானே? அங்கால பாம்பன் பாலம் மேலாக ஏற்கனவே ரயில் ஒடிக்கொண்டுதான் இருக்கிறது.
அப்ப உண்மையிலயே மன்னாரிலியிருந்து தமிழ்நாட்டுக்கு ரயிலில போய்வந்தவைதானோ?
எத்தனையாம் ஆண்டிலயிருந்து அது நிறுத்தப்பட்டது?
உண்மையில உந்த விசயம் எனக்குப் புதுசுதான்.//
//உண்மையாகவா சந்திரன்?! இதுவரை நான் கேள்விப்படாத தகவல் இது, மிக்க நன்றி.//
வசந்தன், வெற்றி அண்ணா
நான் எழுதின விசயத்தை சரியான விதத்திலை எழுதவில்லை போல் இருக்கு....
அதாவது தமிழ் நாட்டின் அந்தகரையில் இராமேஸ்வரம் வரையும் ரயில் பாதை, இடையில் Ferry (இதை தமிழில் பாதை எண்டு தானெ சொல்லுறது- முந்தி சங்குபிட்டி, கேரதீவுக்கு இடையில் வாகனக்களை கொண்டு செல்ல பயன்பட்டது) பிறகு இங்காலை தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு ரயில் பாதை
முழுக்க முழுக்க கடல் மேலான ரயில் பாதை இல்லை.
இதை தான் சொல்ல வந்தேன்.
ஒரு நேரத்தில் இந்த போக்குவரத்து பாதை பிரபலமாய் இருந்தது என்பதையும் கேள்விபட்டுள்ளேன்.
வெற்றி!
படத்தைப் பார்க்கும் போது ஞாயமாக எழும் கேள்வியே!!
நல்ல பதில் பின்னூட்டங்கள்.
நான் 2004 பங்குனி இலங்கை,தமிழகம் சென்ற போது ,விமானத்தில் இருந்து பார்த்த போது , இலங்கை அதிக பசுமையாக இருந்தது.
நான் தமிழகத்தில் நின்ற 3 கிழமைகளிலொரு நாள் கூட, மழையில்லை.திருச்செந்தூர் வரை சென்று வந்தேன். எங்குமே மழை பெய்த அடையாளமில்லை. ஆற்றுப் படுக்கைகள் எங்கும் சிறுவர்கள் கிரிக்கற் விளையாடுவதைக் கண்டேன்.
நான் வாசித்த தமிழகத்தைக் காணக்கிடைக்க வில்லை எனும் கவலை எனக்கிருந்தது.
இதே வேளை இலங்கையில் இதே மாதம், பின்பு சித்திரை -அடை மழை நாடு பூராகவும் இருந்தது.
இவற்றைக் கொண்டு மழை இல்லாததால் இப்படிப் போலும் என நான் முடிவுக்கு வந்தேன்.
ஆனால் அது மாத்திரமல்ல காரணம் என்பதை பின்னூட்டங்கள் தெளிவு படுத்தியது.
அனைவருக்கும் நன்றி
//அப்ப உண்மையிலயே மன்னாரிலியிருந்து தமிழ்நாட்டுக்கு ரயிலில போய்வந்தவைதானோ?
எத்தனையாம் ஆண்டிலயிருந்து அது நிறுத்தப்பட்டது?//
கண்ணன் என்ன பறைஞ்சார் எண்டு தெரியேல்லை.
ஆனால் ஒரு காலகட்டத்திலை அப்ப இந்தியாவிற்கு கப்பல் ஓடேக்கை இவங்கள் சீமான்கள்
ஒப்பந்தம் போட்டு கப்பல் ரிக்கற்றிலிருந்து றெயின் ரிக்கற்வரையும்
றெயில்வே ஸ்டெசனிலைதான் எடுக்கிறது.
எனக்கு ஸ்டேசனிலை ஒரு அமீபாவை
தெரியும் எண்டபடியால் பல நண்பர்களுக்கு இடையால்
எடுத்து கொடுத்துள்ளேன்.
ரெயில்வே ஸ்டேசன் ரிக்கற்தான் கண்ணன் பொருள் திரிவுபட கதைத்துள்ளார்போலும்..கதை கேட்டவர்யார்? கானா பிரபாவா?:)
FloraiPuyal,
உங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
/* மேலும் காவிரியும் வைகையும் இல்லையேல் தமிழகம் இல்லை என்னும் அளவிற்கு இவ்விரு நதிகளையும் நம்பியே தமிழகம் இருந்துள்ளது. */
வைகை, காவிரி தவிர வேறு ஆறுகள்/நதிகள் தமிழகத்தில் இல்லையா?
/* துணைக்கோள் எடுக்கும் படங்கள் கருப்பு - வெள்ளைப் படங்களே. ஒரே இடத்தை பலமுறை படமெடுத்து இவற்றில் உள்ள கருப்பு நிற வேறுபாடுகளை நிறங்களின் அலைநீளத்துடன் கணினி மூலம் ஒப்பிட்டு செயற்கையாக நிறமேற்றுவர். இதனால் சில இடங்கள் பச்சையாகவும் நீலமாகவும் வேறு நிறங்களாகவும் நமக்குத் தெரிகிறது. */
அப்படியா? எனக்கு இவை பற்றி ஒன்றும் தெரியாது. அப்ப மேலே உள்ள படமும் கறுப்பு வெள்ளையில் எடுத்து பின்னர் வர்ணம் தீட்டப்பட்டதா?
-----------------------------
வசந்தன்,
/*உண்மையில உந்த விசயம் எனக்குப் புதுசுதான். */
நானும் உங்களைப் போலத்தான் நினைத்தேன். ஆனால் பின்னர் சந்திரன் வந்து விளக்கம் அளித்தபின் குழப்பம் தீர்ந்தது.
--------------------------------
வவ்வால்,
/*வேலிக்கருவை,(வயலில் வேலியாக பயன் படுவதால்) கருவேலம் மரம் என்றெல்லாம் சொல்லும் மரம் இருக்கும் ஒன்று தான் அதன் தாவரவியல் பெயர், "prosopis juliflora" என்பதாகும்.அமெரிக்க கண்டத்தை சேர்ந்தது இந்த மரம். இந்த மரம் இந்தியாவிற்கு வந்ததே தவறான வழிகாட்டுதல் காரணமாக தான். */
பிரமிக்க வைக்கிறீங்கள்.:-)) எல்லாத் தகவல்களையும் விரல் நுணியில் வைத்திருக்கிறீங்கள் போல இருக்கு. கேட்டதும் உடனே அவிட்டு விடுகிறீர்கள்.
வவ்வால், உண்மையில் உங்களின் பல விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. தமிழக நில அமைப்பைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் பல சுவாரசியமான தகவல்களை உங்களின் பின்னூடங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அதற்காக உங்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பு நன்றி.
----------------------------------
சந்திரன்,
மீண்டும் வந்து விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி. நானும் வசந்தனைப் போல மன்னாரில் இருந்து இராமேஸ்வரம் வரை புகையிரதப் போக்குவரத்து இருந்ததாக்கும் என தவறாகப் புரிந்து கொண்டேன். தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.
----------------------------------
யோகன் அண்ணை,
கொடுத்து வைச்சவர் நீங்கள். :-)) தமிழகம் எல்லாம் சென்று வந்திருக்கிறீர்கள். உங்களின் நேரடி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
/* ஆனால் அது மாத்திரமல்ல காரணம் என்பதை பின்னூட்டங்கள் தெளிவு படுத்தியது.
அனைவருக்கும் நன்றி */
உண்மைதான் அண்ணை. வரும் ஒவ்வொரு பின்னூட்டமும் பல புதிய சங்கதிகளுடன் சுவாரசியமாகவும் இருக்கிறது. இப் பின்னூட்டங்கள் மூலம் பல புதிய சங்கதிகளைக் கற்றுக் கொள்ள முடிந்தது. அனைவருக்கும் உண்மையில் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
----------------------------------
தீவு,
/* எனக்கு ஸ்டேசனிலை ஒரு அமீபாவை
தெரியும் எண்டபடியால் பல நண்பர்களுக்கு இடையால்
எடுத்து கொடுத்துள்ளேன்.*/
உங்கடை பின்னூட்டத்தைப் பார்க்கும் போது நீங்கள் இலங்கை முழுக்க அடிபட்ட ஒரு பழைய 'காய்' போலைத் தெரியுது.:-))
நான் இவ்வளவுகாலமும் நீங்கள் சின்னப்பெடியனா இருப்பீங்கள் எண்டு நினைச்சேன். :-))
அப்ப உங்களிட்டை கன பழைய சங்கதிகள் இருக்கும். அவிட்டு விட வேண்டியதுதானே.:-))
/அப்ப மேலே உள்ள படமும் கறுப்பு வெள்ளையில் எடுத்து பின்னர் வர்ணம் தீட்டப்பட்டதா?/
வெற்றி, செய்மதிகளிலே எடுக்கப்பட்ட remote sensing "படங்"களிலிருந்து தரவை அலசுவதற்கு, வர்ணங்களை மாற்றி தரவை ஆய்வதற்கு அதற்கான மென்பொருட்கள்/நிரலிகள் பயன்படுகின்றன (என்பதாக எனக்குப் புரிந்தளவிலே படுகின்றது).
வெற்றி,
நன்றி!
//அப்ப மேலே உள்ள படமும் கறுப்பு வெள்ளையில் எடுத்து பின்னர் வர்ணம் தீட்டப்பட்டதா?//
ஏற்கனவே இன்ப்ரா ரெட் கதிர் மூலம் எடுக்கப்படும் புகைப்படம் அவை என சொல்லி இருக்கிறேன்.
இப்போது நீங்களே யோசித்துப்பாருங்கள் நீங்கள் வெளியிட்டப்படம் 700 மைல் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனப்படத்தின் ஓரத்தில் போட்டுள்ளார்கள்.
மேகம் எல்லாம் இருக்கும் அதனை தாண்டி எப்படி படம் எடுத்தார்கள். இன்ப்ரா ரெட், சமயத்தில் x கதிர்கள் எல்லாம் பயன்படுத்தி எடுக்கும் படம் அது. அது கருப்பு வெள்ளையாக எல்லாம் இருக்காது, நைட் விஷன் பைனாகுலர் வழி பார்க்கும் காட்சிப்போல இருக்கும். அதனை கம்பியுட்டர் மூலம் ஜெனெரேட் செய்து இயல்பான படம் போல கொடுப்பார்கள்."GIS" = geographic information system என்ற மென்பொருளில் அனுபவம் இருந்தால் போதும் இது எல்லாம் சொல்ல முடியும். அதனைக்கொண்டு தான் சாட்டிலைட் படத்தினை அலசுவார்கள். பின்னர் எல்லாருக்கும் புரியும் வண்ணம் கிராபிக்கலா தருவார்கள்.
வவ்வால்
GIS மென்பொருட்கள் (ARCGIS, MAPINFO) ஆகியவை satellite images இனை ஆய இரண்டாம் நிலையிலேதானே பயன்படும்? Remote Sensing software (ENV, ERDAS) ஆகியவை முதனிலையே தேவைப்படுமே?
பெயரிலி ,
நீங்கள் சொன்னதும் இருக்கலாம் அது குறித்து தெளிவாக தெரியவில்லை, ஆனால் நமக்கு கடைசியாக பார்வைக்கு வருவது "GIS" வழியாக கிடைக்கப்பெறுவது தான். "remote sensing" சாட்டிலைட் விட "carto sat" தான் இது போன்ற வன வளம் , மேப் ஆகியவற்றில் பயன்படுகிறது எனக்கேள்விப்பட்டுள்ளேன்.
முன்னர் எனக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் இந்த GIS இல் வேலை செய்பவர் அப்போதே அவரிடம் பேசித்தெரிந்து கொண்டது தான், அதை நினைவில் வைத்தே சொன்னேன். இப்போது இந்த GIS இல் சான்றிதழ் படிப்பெல்லாம் வந்து விட்டது, அப்போது அண்ணா பல்கலையில் மட்டும் B.E civil eng இல் "GIS" என்று படிக்கலாம்.
வவ்வால்
Carto செய்மதிகள் இந்தியாவின் (புவிவளங்களை ஆய்வதற்காக அனுப்பப்படும் carto[graphy]) செய்மதிகளின் பெயரென்று தோன்றுகின்றது. ஆனால், அவையும் சேய்மையுணர்தல் remote sensing தொழில்நுட்பத்திலேதான் இயங்குகின்றதாக இருக்கக்கூடும். நீங்கள் சுட்டியபடியேதான் படம் பிடித்த அனுப்பும் அலைநீளம், செய்மதி சுழலும் உயரம், பொருத்தப்படும் 'படம்'பிடிக்கும் கருவி என்பவை செய்மதியின் தேவைக்கேற்ப மாறும். [விமானங்கள் பயன்படும் வானியற்படப்பிடிப்புப்படம் aerial photography வேறுவிடயம்]
GIS கற்கைகள் பல்கலைக்கழகங்களிலே வந்துவிட்டனதான். பலதுறைகளிலே அத்தொழில்களுக்கு மேலதிகத்தேவையுமாகின்றன.
வவ்வால், பெயரிலி,
உங்கள் இருவரினதும் மேலதிக தகவல்களூக்கு மிக்க நன்றிகள்.
ஒரு கேள்விக்கு வந்த பல பதில்மூலம் பல விசயங்களை பலர் தெரிந்துகொண்டோம்..."பிரயோஜனமான பின்னூட்ட நாயகன்" பட்டத்தை வவ்வாலுக்கு தரலாம். மன்னர்கள்ல ஆரம்பிச்சு விமானத்துல இருந்து விதை தூவுன வரைக்கும்? எப்படி வவ்வால் இவ்வளவு விசயங்கள் விரல் நுனியில்?
ஹ்ம்ம்ம்...படிச்சுட்டு மரமா நிக்கிரதுக்கு பதிலா முடிஞ்ச வரைக்கும் மரம் நட பாப்போம்...
பூவேந்திரன்,
/* ஒரு கேள்விக்கு வந்த பல பதில்மூலம் பல விசயங்களை பலர் தெரிந்துகொண்டோம் */
உண்மை. மிகவும் சரியாகச் சொன்னீர்கள். பின்னூட்டமிட்ட அன்பர்கள் பலரும் பலவிதமான சுவாரசியமான தகவல்களைச் சொன்னார்கள். பல சங்கதிகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மீண்டும் அனைவருக்கும் ஒரு சிறப்பு நன்றி.
/* ..."பிரயோஜனமான பின்னூட்ட நாயகன்" பட்டத்தை வவ்வாலுக்கு தரலாம். மன்னர்கள்ல ஆரம்பிச்சு விமானத்துல இருந்து விதை தூவுன வரைக்கும்? எப்படி வவ்வால் இவ்வளவு விசயங்கள் விரல் நுனியில்? */
சரியாகச் சொன்னீர்கள். வவ்வால் பல அறிவுபூர்வமான பதில்களை சகலரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கிச் சொல்லியிருந்தார்.
நான் அவருக்கு ஏற்கனவே "நடமாடும் தகவற்களஞ்சியம்" எனும் பட்டத்தை அளித்துள்ளேன். :-))
வெற்றி,
//நான் அவருக்கு ஏற்கனவே "நடமாடும் தகவற்களஞ்சியம்" எனும் பட்டத்தை அளித்துள்ளேன். :-))//
கொடுத்திங்களா நான்ப்பார்க்கவே இல்லை, அதாவது வாங்கிக்கொள்ளவில்லை, இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை, வளர்ந்தால் சந்தோஷமே!
பூவேந்திரன் சமீபகாலமாகத்தானே என் பதிவுக்கு வந்திங்க அதுக்குள்ள, என் மேல் ஏன் இத்தனைக்கோபம்!
உங்க பதிவில் தான் வைன் கிளாஸ் புடிக்க எல்லாம் சொல்லி தந்திங்க! நான் இது நாள் வரைக்கும் டிஸ்போசபில் கப்பில தான் அடிக்குறேன், ஆனாலும் நோட் செய்து வைத்துள்ளேன், என்னிக்காவது பயன்படும்னு! சேம் பிளட் நாம, இத்தனை கொலை வெறி எதுக்குன்னேன்!(இப்போ கூட லோக்கல் கோல்கொண்டா வைன் தான் அடிக்குறேன்)
வவ்வாலுக்கு "நடமாடும் தகவற்களஞ்சியம்" எனும் பட்டத்தை நானும் வழி மொழிகிரேன்.
உங்கள் வாசிக்கும் சில தளங்கள் பகுதியில் எனது தள முகவரியினை பதிக்க முடியுமா ?
எனது வலைப்பதிவில் உங்களின் தள முகவரியினை நான் பதிவு செய்கிறேன் .
எல்லாம் நம்மட வலைப்பதிவ விளம்பர படுத்தான் என்ன சொல்றீங்க ?
in tamilnadu,most of the tamil youth(s) r going behing cinema ctresses!
Politicians has saturated the awareness of liberation
what else?
pathiplans@sify.com
in tamilnadu,most of the tamil youth(s) r going behing cinema ctresses!
Politicians has saturated the awareness of liberation
what else?
pathiplans@sify.com
in tamilnadu,most of the tamil youth(s) r going behing cinema ctresses!
Politicians has saturated the awareness of liberation
what else?
pathiplans@sify.com
Post a Comment