Tuesday, October 09, 2007

கவிதை::: கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல எட்டப்பர்கள் இன்றும் இருக்கின்றனர்

தமிழனே!
இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான்
கண்ணீர் வடிப்பாயோ?
விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே
நரகிற் கிடந்துழலும் விதியை
எவனடா எழுதினான் உன் தலையில்?

விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம்
கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும்.
நீ படை வைத்து அரசாண்ட காலத்தில்
இன்று சந்திரனுக்குச் சென்று
சாதனை படைத்தானே,
அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.

செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன்
இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான்.
கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும்
மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய்.
நீ கப்பலேறிக் 'கடோரம்' வென்றபோது
ஜப்பான்காரன் "எக்ஸ்போ" நடத்தவில்லை.
தடிக்குச்சிகளால் தட்டிகட்டித்தான் வாழ்ந்தான்.

என்ன செய்வது?
எல்லோர் தலையிலும் பிரம்மன் கையால் எழுதினான்.
உன் தலையில் மட்டும்
அழிக்க முடியாதபடி ஆணியால் எழுதிவிட்டான்.
இடைக்கிடைதான் நீ எழுவது வழக்கம்.
அப்போது கூட அடித்து விழுத்தப்படுவாய்.
அதுவும் அன்னியராலல்ல...
உன்னவரால்.

நீ நிமிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு நேரத்திலும்
நெஞ்சுக்குப் பாய்கிறதே நெருப்புக்குண்டு.
குண்டெறிபவன் வேறு யாருமில்லை.
கூடப்பிறந்தவனென்பதைக் குறித்துக் கொள்.

கராம்பும், கறுவாவும் வாங்கத்தான்
பீரங்கியோடு புறப்பட்டு வந்தான் வெள்ளைக்காரன்.
வந்தவனுக்கு உந்தன் வரலாறு தெரிந்ததும்
வல்லமையைக் காட்டி வரி கேட்டான்.

பாஞ்சாலங் குறிச்சியில் மட்டும்
ஒருவன் பணிய மறுத்தான்.
வெள்ளைக்காரனால் அவனை விழுத்த முடியவில்லை.
பக்கத்திருந்த பாளையக்காரன்
அவனும் தமிழன்,
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்
காட்டிக்கொடுத்துக் கழுத்தை முறித்தான்.

வன்னியிலும் இதே வரலாறுதான்.
வெள்ளைக் கொக்குகளுக்கு எதிராக
கறுப்புக் காகமொன்று கச்சை கட்டியது.
துரத்தித் துரத்தி கொக்குகளைக் கொத்தியது காகம்.
வன்னியனை வளைத்துப் பிடிக்க முடியவில்லை.
காட்டிக்கொடுத்தது இன்னொரு காக்கை
அவனும் தமிழன்.
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்.

அத்துடன் முடிந்ததா அந்த வரலாறு?
இல்லையே... இன்றும் தொடர்கிறது.
எல்லோரின் தோள்களிலும்
இன்று சூரியன் சுடர்கிறது.
உன் தலையில் மட்டும் இன்னும் இருட்டுத்தான்.
என்ன விதியடா உனக்கு?


சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்துக் கவிஞர்களில் 'உணர்ச்சிக் கவிஞர்' காசி ஆனந்தன் அவர்களும் புதுவை இரத்தினதுரை அவர்களும் பாரதியும், பாரதிதாசனையும் போன்றவர்கள். மேலே உள்ள கவிதை கவிஞர் புதுவை இரத்தினதுரையின் படைப்பு. இக் கவிதை மிகவும் நீளமானது. அந்த நீளமான கவிதையில் இருந்து சிறு பகுதியை மட்டுமே மேலே இணைத்துள்ளேன்.

1 comments:

said...

hai brother realy super
(when i had chance to read this i see that there is no comment,i felt very sorry for our tamilans they had time to comment a cinema actor or actoress but not for this then how we grow)