படித்ததில் பிடித்த கவிதை வரிகள்
அண்மையில் சில கவிதைகளை வாசிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்படி நான் வாசித்த கவிதைகளில் நேசித்த அல்லது மனதை நெகிழ வைத்த சில வரிகள் கீழே.
சாருமதியின் "சுனி ஒரு கலகக்காரி" என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள்.
சீதையைப் பாயச் சொன்னான்
தீயுக்குள் இராமன்
தனக்கும் அந்த
நியாயத்தைப் பிரயோகிக்காமல்
இந்திரனுக்கு ஏமாந்தவள்
அகலிகை மட்டும் தானா?
இல்லையே!
தபோமுனியும்
தவறிழைத்தான் தானே?
ஆனால்,
தண்டிக்கப் பட அகலிகை
தண்டிக்கக் கெளதமன்
இது என்ன நியாயம்?
மாதவியும்
மனிதப் பிறவி தானே!
கானல் வரி பாடி
அவளை
வேசை யென்று சொல்லி
விட்டு விலகிப் போன
கோவலன் மட்டு மென்ன
கற்புக்கு அரசனா?
ஈழத்துக் கவிஞர் குறிஞ்சித் தென்னவன். இவர் வறுமையில் பிறந்து வறுமையிலே வளர்ந்தவர். இவரின் இள வயதுடைய சொந்தமகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாள். அவளது வையித்திச் செலவுக்குக் கூட கவிஞரிடம் பணம் இருக்கவில்லை. தன் அருமை மகள் இறந்ததும் இயற்றிய , "கண்ணீர் அஞ்சலி" எனும் தலைப்பில் அமைந்த பாடல்கள் நெஞ்சை உருக்கும். அதிலிருந்து சில வரிகள்.
மல்லிகையின் மலர்தூவி வாழ்த்த நினைத்திருந்தேன்!
எள்ளுப் பொரி தூவி இறைக்கும் நாள் வந்ததையோ!
முல்லைப் பூச்சூடி முகமலர நாள் பார்த்தேன்
அல்லி விழிமூடி அழுத இதழ்மூடி
வெள்ளைத் துகில்மூடி மேனியிலே மலர்மூடி
சொல்லாது நீ போகும் துயரநாள் வந்ததையோ