சோசலிஸம் எனும் மோச[லிச]ம் --- கவிதை
சோசலிஸ மெனும் மோசலி சத்தினால்
சோற்றுக்குப் பஞ்சமடா! - இங்கு
பேசும் இஸமெல்லாம் பாட்டாளி வாயில்மண்
போடும் இஸங் களடா!
பிற்போக்குக் காரர்களால்
பின்தள்ளப் பட்டீர்கள்
முற்போக்குக் காரர் நாம்
முறியடிப்போம் இன்னல் என்றார்.
எப்போக்குக் காரர் வந்தும்
இன்னல் களையவில்லை
துன்பம் தொலையவில்லை
துயர்க்கதையோ முடியவில்லை
எத்தனையோ பேர்கள் வந்தார்கள்
எதையெதையோ சொன்னார்கள்
மெத்தையிலே உன்னை வைத்து
மேன்மையுறச் செய்வோமென்று
அத்தனையும் நம்பியுள்ளம்
ஆசையுடன் தொலையவில்லை...
மண்ணதிர விண்ணதிர வாய்ச்சிலம்ப மாடி
மாண்டொழிந்த பழமையினை இன்னுமிங்கு கூறி
கண்ணெதிரே கொடுமை கண்டும் கற்சிலையாய் மாறி
காரேறிப் பவனிவரும் கனவான்கள் கூட்டம்
உன்னுதிரம் உறிஞ்சியுடல் உப்புகின்றதை நீ
ஓர் நிமிடம் சிந்தித்தால் உன்வாழ்வு மலரும்
புண்ணதனில் வேல்பாய்ச்சப் பொறுத்திருப்ப தோடா?
பொங்கியெழு சிங்கமென எந்தன் மலைத்தோழா!
இக் கவிதை வரிகளின் சொந்தக்காரர் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான குறிஞ்சித் தென்னவன்.
"நுவரெலியா லபுக்கலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து, தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது இயற்பெயர் V.S.வேலு என்பதாகும். 'துயரம் தோய்ந்த குடும்பச் சூழலிற் பிறந்து, அச் சூழலியே இன்றுவரை வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன்' என அவரே கூறுவார். இவர் தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரையே கற்றவர். 1934ம் ஆண்டு பிறந்த இவர் 1946ம் ஆண்டில் வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாத நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தோட்டத் தொழிலாளியாகவே தமது வாழ்வை மேற்கொண்டு, இன்றுவரை முதுமையடைந்த நிலையிலும் தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 'உழுதுண்டு வாழ வழியில்லை. தொழுதுண்டு பின்செல்லவும் மனமில்லை.தோட்டத் தொழிலாளியானேன்' என்கிறார்."[பேராசிரியர் க. அருணாசலம். மலையகத் தமிழ் இலக்கியம். பேராதனைப் பல்கலைக்கழகம். பக்.140, 141,147]
10 comments:
nalla kavithai. mutrilum unmai.
Nandri
Thanks
// 'உழுதுண்டு வாழ வழியில்லை. தொழுதுண்டு பின்செல்லவும் மனமில்லை.தோட்டத் தொழிலாளியானேன்' என்கிறார்//
:( :(
//
சோசலிஸ மெனும் மோசலி சத்தினால்
சோற்றுக்குப் பஞ்சமடா!
//
தப்பான இடத்தில் வந்து சொல்கிறீர்களோ, இங்கே சோசியலிசம் தான் சர்வரோக நிவாரணியா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தினால் 100 க்கு நிச்சயம் 90 பேர் ஆம் என்பார்கள். அத்தகய இடமிது.
நல்ல கவிதை.
anonymous Hero
பெயரில்லாத கதாநாயகன்,
சொந்தப் பெயரில் எழுதக்கூடாதா?
/* nalla kavithai. mutrilum unmai. */
உண்மைதான். மலையகத் தமிழ்மக்களின் வாழ்வுநிலை இன்றும் மிகவும் மோசமாகவே உள்ளது. இலங்கையின் வளர்ச்சியில் மிகுந்த பங்காற்றிய இம் மக்களின் இன்னல்களையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் கருத்தில் கொள்வார் என நம்புகிறேன்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தமக்கு தனிஅதிகாரங்கள் கேட்பது போல் மலையகத்தில் தமிழர் செறிந்து வாழும் இடங்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.
வடக்கத்தையான், தோட்டக்காட்டான் என்று எம்மவரே அவர்களை வேற்றுமை காட்டித் திரிந்ததை என்னவென்று சொல்வது.
வினையூக்கி,
உண்மைதான். மிகவும் ஏழ்மையில் வாழ்ந்தவர். வறுமையால் தன் இள வயது மகளையே பறிகொடுத்தவர்.
வஜ்ரா,
/* தப்பான இடத்தில் வந்து சொல்கிறீர்களோ,*/
உண்மைதான். இங்கே எழுதுபவர்களில் பலர் விளம்பரத்துக்காகவும், பொழுது போக்குக்காகவும் A/C அறைகளில் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டு எழுதுபவர்கள்.
ஆனால் இக் கவிஞர் வறுமையையும், ஏழைகளை ஏமாற்றிப் பிழைக்கும் கீழ்தனமானவர்களையும் தன் வாழ்வில் எதிர் கொண்டவர்.
அதனால்தான் அவர் மிகவும் ஜதார்த்தமாகத் தனது கருத்துக்களைச் சொல்கிறார்.
இது பதிவுக்கு தொடர்பில்லாத கேள்வி ...
வெற்றி உங்களிடம் வெகு நாட்களாக கேட்கவேண்டும் என்று எண்ணியது இது. கனடாவில் விண்ணப்படிவத்தில் மதம் என்ற இடத்தில் நீங்கள் இந்து என்று எழுதுவீர்களா அல்லது சைவம் என்று எழுதுவீர்களா? கனடிய அரசு சைவ மதத்தை அங்கீகரித்துள்ளதா?
பல இடங்களில் நீங்கள் நான் இந்துவல்ல, சைவ மதத்தவன் என்று எழுதியதை பார்த்தால் எழுந்த கேள்வி இது.
வெற்றி!
சோசலிசம் நல்லதோ கூடாதோ தெரியாது. ஆனால் இந்த கடைசிப் பந்தி அருமை!! பாரதியின் வீராப்பு அப்படியே உள்ளது.
அருமையான தேர்வு. தங்கள் சுவைத் தேர்வுக்குத் தனிப் பாராட்டுக்கள்.
நன்றி
யோகன் அண்ணை,
/* சோசலிசம் நல்லதோ கூடாதோ தெரியாது.*/
முதலில் கவிதையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் கவிஞரின் கருத்துக்களே அன்றி என்னுடையதல்ல.
இரண்டாவது, இக் கவிதையில் எனக்குப் பிடித்த விடயம், கவிஞரின் கருத்தோடு நான் உடன்படும் விடயம் என்னெவென்றால், இந்த ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பற்றியது.
தம்மைச் சீர்திருத்தவாதிகள்/சோசலிசவாதிகள்/பொதுவுடமைவாதிகள் என்று பாசாங்கு செய்து கொண்டு பாட்டாளி மக்களையே சுரண்டும் கீழ்த்தனமானவர்களைத் தான் கவிஞர் சாடுகிறார். மலையகத் தமிழ்மக்களின் வாழ்வு இன்றும் மோசமாக இருப்பதற்கு இப்படியானவர்களால் மலையக மக்கள் ஏமாற்றப்பட்டதும் மிகவும் முக்கிய காரணம் என்பது என் எண்ணம்.
மற்றும்படி சோசலிசம் நல்லதோ கூடாதோ என்பதல்ல என் நோக்கம்.
/* அருமையான தேர்வு. தங்கள் சுவைத் தேர்வுக்குத் தனிப் பாராட்டுக்கள். */
மிக்க நன்றி. ஈழத்திற்குச் சென்றிருந்த போது வாங்கிய மலையகத் தமிழ் இலக்கியம் எனும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் இவை.
இப் புத்தகத்தில் மலையக நாட்டார் பாடல்கள் மற்றும் பல மலையகக் கவிஞர்களின் கவிதைகளைப் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க.அருணாசலம் அவர்கள் மிகவும் அழகாக ஆய்வு செய்து தொகுத்துள்ளார்.
குறும்பன்,
நல்ல கேள்வி. உங்களின் கேள்விக்கு என் பதில் கொஞ்சம் நீளமாக இருக்கும். எதற்கும் இன்று இரவு என் பதிலை எழுதுகிறேன்.
நல்ல கவிதை!
அத்துடன்
என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்லி
செல்லி,
புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இது தமிழ்ப் புத்தாண்டா என்பதில் எனக்குக் குழப்பம் உண்டு.
நிற்க.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் கனவுகள் யாவும் நனவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய இறைவனை வணங்கி நிற்கிறேன்.
Post a Comment