Wednesday, January 31, 2007

அவள் ---- [கவிதை]


'மான்' என அவளைச் சொன்னால்
   மருளுதல் அவளுக் கில்லை
'மீன்விழி உடையா' ளென்றால்
   மீனிலே கருமை இல்லை
'தேன்மொழிக் குவமை' சொன்னால்
   தெவிட்டுதல் தேனுக் குண்டு
'கூன்பிறை நெற்றி' என்றால்
   குறைமுகம் இருண்டு போகும்


'மயிலெனும் சாய' லென்றால்
   தோகைபெண் மயிலுக் கில்லை
'குயிலெனும் குரலாள்' என்றால்
   ஏழிசை குயிலுக் கில்லை
'வெயிலொளி மேனி' என்றால்
   வெயிலிலே வெப்பம் உண்டு
'அயிலெனும் பார்வை' என்றால்
   அழிவின்றி ஆக்க மில்லை


'சந்திர வதனம்' என்றால்
   சந்திரன் மறுநாள் தேய்வான்
'அந்தரப் பெண்போல்' என்றால்
   அவளை நாம் பார்த்த தில்லை
'செந்திரு மகள்போல்' என்றால்
   திருவினைக் கண்டார் யாரே?
'சுந்தர வடிவெ'ன் றாலும்
   சொல்லிலே வலிமை இல்லை


'கூந்தலை மேகம்' என்றால்
   மேகத்தில் கருமை கொஞ்சம்
'காந்தளைக் கைபோ' லென்றால்
   கேட்டதே கண்டதில்லை
'மோந்ததும் வாடிப் போகும்
   முல்லை தான் பல்லுக் கீடோ?'
'ஏந்திழை' என்றிட்டாலும்
   இயற்கையின் எழிலைப் போக்கும்


'விரல்களைப் பவளம்' என்றால்
   வீணையை மீட்ட லாமோ?
'குரல்வளை சங்கம்' என்றால்
   சங்கொலி குமுறிக் கூவும்
'கரமதைக் கமலம்' என்றால்
   மாலையில் கமலம் கூம்பும்
'ஒருமரம் மூங்கில் தோளுக்
   குவமை' யென் றுரைக்க லாமோ?


'குமிழ்என மூக்கைச்' சொன்னால்
   கூர்மையும் நேர்மை யில்லை
'அமிழ்தவள் பாடல்' என்றால்
   தேவரே அமுதம் உண்டார்
'தமிழ்' எனும் இனிமை என்றால்
   தனித்தமிழ் இப்போ தில்லை
'கமழ்மணம் தேகம்' என்றால்
   கன்னியின் தாயே காண்பாள்


பற்பல உவமை சொல்லிப்
   பண்டிதர் களுக்கும் கூடக்
கற்பனை புரிந் திடாத
   கட்டுரை பின்னிக் காட்டும்
சொற்பல அடுக்க வேண்டாம்;
   சுருக்கமாய்ச் சொல்லப் போனால்
அற்புத அழகு முற்றும்
   இயற்கையில் அமைந்த நங்கை.


கண்டவர் மறக்க மாட்டார்
   கேட்டவர் காணப் போவார்
அண்டையிற் பழகி னோர்கள்
   அவளைவிட் டகல மாட்டார்
பெண்டுகள் வந்து வந்து
   பேசுதற் காசை கொள்வார்
சண்டையும் சலிப்பும் எல்லாம்
   சாந்தமாம் அவளைச் சார்ந்தால்


தன்னிலும் அறிந்தார் முன்னே
   தான் தனி மடமை தாங்கும்
நன்னயம் இல்லாச் சொல்லைக்
   கேட்கவும் நாணம் கொள்வாள்
அண்னியர்க் கேனும் தீமை
   ஆற்றிட அச்சம் கொள்வாள்
மன்னவர் தவறி னாலும்
   மத்திடாப் பயிர்ப்பு மண்டும்

தொடரும்....

பி.கு :- இக் கவிதையை நான் எழுதவில்லை. படித்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் இங்கே உங்களோடு பகிர்கிறேன். என்னே தமிழ்!!!!. மிகவும் எளிமையான தமிழில் அழகாக வார்த்தைகளளக் கோர்த்து பின்னப்பட்ட கவிதை இது. இக் கவிதை ஒரு பிரபல கவிஞரால் எழுதப்பட்டது. தெரிந்தால் சொல்லுங்கள். இல்லையேல், கவிதையின் மறுபகுதியையும் வெளியிட்ட பின்னர் சொல்கிறேன்.

27 comments:

said...

நல்ல கவிதை
நற்றமிழ்!

நன்றி...
நாளைக்கு!

:))

said...

நன்நடை சொல்கிறது 'கவியரசர் கண்ணதாசன்' என்று - சரிதானே நண்பரே?

said...

வெற்றி

நல்ல கவிதை!!

பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி!!

said...

வெற்றி!
தலைப்போ "அவள்"...அவருக்குப் பிடிக்கும்..;கவி நடையும் அவர் நடை போல் தான் உள்ளது.
சுப்பையா அண்ணர் கூறுவதை நான் வழி மொழிகிறேன்.
யோகன் பாரிஸ்

said...

அழகிய நடையிலிருக்கிறதே கவிதை! அடுத்த பகுதியை எதிர்பார்த்து...

said...

வெற்றி
இந்தக் கவிதயை கவியரசு கண்ணதாசன் எழுதினார்.
அருமையான கவிதை!
நன்றி

said...

அழகு தமிழில் அழகு கவிதை

said...

அழகானத் தமிழில் அழகானக் கவிதை!

அடுத்தது எப்போ?

said...

SK ஐயா,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

/* நல்ல கவிதை
நற்றமிழ்! */
உண்மைதான் ஐயா. படித்த போதே பிடித்து விட்டது. யார் எழுதிய கவிதை என்று நீங்கள் சொல்ல[யூகிக்க]வில்லையே!

/*நன்றி...
நாளைக்கு! */

மறுபகுதி கவிதைக்கு நன்றி சொல்கிறீர்கள் போலும். ஐயோ, இனி வரும் வார இறுதி வரை கொஞ்சம் busy.மறுபகுதிக் கவிதை அடுத்த வாரம் தான்.:)))

said...

சுப்பையா ஐயா,
வணக்கம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

/* நன்நடை சொல்கிறது 'கவியரசர் கண்ணதாசன்' என்று - சரிதானே நண்பரே? */

நன்நடை தான். மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதை எழுதியவர் கவியரசர் இல்லையே ஐயா!

said...

வெற்றி...

நாமக்கல் கவிஞர்...சரியா..:-))

said...

சிவபாலன்,
மிக்க நன்றி.
நீங்கள் யார் எழுதியதென்று சொல்லவில்லையே சிவபாலன்!

said...

வெற்றி.....என்னிடமும் மற்ற வலைப்பூ அன்பர்களிடம் தமிழ் படிப்பதாக நீங்கள் சொன்னது நினைவில் உந்த நீங்கள் எழுதிய கவிதை என்று மனமும் உந்த வந்த என்னைப் பாராட்ட வைத்தது கவிதை நடை. கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு எதிர் விளக்கம் சொல்லலாம் என்று நினைக்கையில் சொல்லி விட்டீர் இது உமது கவிதையில்லை என்று. ம்ம்ம்...நீங்கள் கவிதை எழுதுங்கள். காத்திருக்கிறேன். :-)

said...

யோகன் அண்ணை,
கருத்துக்கு மிக்க நன்றி.

/*தலைப்போ "அவள்"...அவருக்குப் பிடிக்கும்..; */

யாருக்குத் தான் பிடிக்காது இந்தத் தலைப்பு! வள்ளுவன், கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கவியரசர் முதல் வைரமுத்து வரை "அவள்" பற்றிப் பாடாததா?

/*கவி நடையும் அவர் நடை போல் தான் உள்ளது.சுப்பையா அண்ணர் கூறுவதை நான் வழி மொழிகிறேன். */

நல்ல தமிழ். அழகான நடை. உண்மை. ஆனால் இது கவியரசரின் படைப்பில்லையே!

said...

வெற்றி, இது 'வாலி ' நடை போலத் தெரிகிறது.
விகடனில் வந்த வாலியின்
நளதமயந்தி
கதையா?

said...

சேதுக்கரசி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
/*
அழகிய நடையிலிருக்கிறதே கவிதை!*/

உண்மை.
/*அடுத்த பகுதியை எதிர்பார்த்து...*/
என்ன நானா மண்டையை உடைச்சு எழுதப்போறேன்? :))ஏற்கனவே இந்த மகான்கள் எழுதிவைத்த கவிதையைப் பதியிறது தானே நம் தொழில்! வரும் வாரம் இதன் தொடரைப் பதிகிறேன்.
-------------------------------
செல்லி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
/* இந்தக் கவிதயை கவியரசு கண்ணதாசன் எழுதினார்.*/

இல்லையே செல்லி! இக் கவிதை கவியரசரின் படைப்பல்லவே!
----------------------------
தேவ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
/*அழகு தமிழில் அழகு கவிதை */
உண்மை. எழுதிய அந்த மகா கவிஞனுக்கே உங்கள் புகழாரங்கள் சொந்தம்.
---------------------------------
அருட்பெருங்கோ
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

/* அடுத்தது எப்போ? */

என்ன நானா எழுதப் போறேன்?! :)புத்தகத்தில் இருப்பதைப் பதிவேற்றுவது தானே நான் செய்ய வேண்டியது! ஆக வரும் வாரம் மிகுதியைப் பதிகிறேன்.

said...

//என்ன நானா மண்டையை உடைச்சு எழுதப்போறேன்? :))//

தெரியும் தெரியும்.. "அடுத்த பகுதி சுட்டு இடப்படுவதை எதிர்பார்த்து" அப்படின்னு எழுதியிருக்கணும் நான் :-)

said...

நல்ல கவிதை, படிக்கும் போது இன்னொரு பாடல் ஞாபகத்துக்கு வந்தது. "மானல்லவோ கண்கள் தந்தது, மயில் அல்லவோ நடையைத் தந்தது......

said...

மங்கை,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

/* நாமக்கல் கவிஞர்...சரியா..:-))*/

ஆஹா, சரியான விடை!! நாமக்கல் இராமலிங்கக் கவிஞரே தான்.
எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? அப் புத்தகத்தைப் படித்தீர்களா?
------------------------------

வல்லிசிம்ஹன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

/* வெற்றி, இது 'வாலி ' நடை போலத் தெரிகிறது.விகடனில் வந்த வாலியின் நளதமயந்தி கதையா? */

இல்லையேம்மா!, இது மங்கை குறிப்பிட்டது போல் நாமக்கல் இராமலிக்கக் கவி அவர்கள் எழுதியது. அவளும் அவனும் எனும் கவிதை வடிவில் எழுதப்பட்ட புத்தகம்.

said...

இராகவன்,

/*கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு எதிர் விளக்கம் சொல்லலாம் என்று நினைக்கையில்*/

ஐயய்யோ, இராகவன் சொல்லியிருக்கலாமே! இந்த அழகிய கவிதைக்கு உங்களின் தெவிட்டாத தமிழில் வரும் கருத்தையும் படித்து இரசித்திருப்போமே! நாம் கொடுத்து வைச்சது அவ்வளவு தான். (:

/* ...நீங்கள் கவிதை எழுதுங்கள். காத்திருக்கிறேன். :-) */

ஐயோ, இராகவன், இப்பிடி எல்லாம் என் மீது பெரும் எதிர்பார்ப்பு வைச்சா
ஏமாற்றம் தான் மிஞ்சும்...:))) கவிதையா? நானா? :)))

said...

apostrophe நீங்க போட்டதா, இல்ல originalல இருக்கா?

ஒரு flow மிஸ்ஸிங் அது இருக்கரதால.

மற்றபடி, கடைசி மூணு பாராவும் ரொம்ப பிடிச்சது :)

வாரத்துக்கு ஒண்ணு எடுத்து இந்த மாதிரி போடுங்க. (copyright பிரச்சனை வராம பாத்துக்கங்க :) )

said...

பாவேந்தர் பாரதிதாசனார் எழுதியது தானே வெற்றி இந்தக் கவிதை? ஆங்காங்கே அவருக்கே உரித்தான கருத்துகள் இருப்பதாக உணர்கிறேன்.

எல்லோரும் சொன்னது போல் எளிமையும் இனிமையும் கொண்ட நடை. அமுதமே என்றால் அதனைத் தேவர் மட்டுமே உண்டார் என்கிறார். இல்லை நாமும் உண்டோம் இந்தக் கவிதையைப் படித்து.

said...

சேதுக்கரசி,
/* தெரியும் தெரியும்.. "அடுத்த பகுதி சுட்டு இடப்படுவதை எதிர்பார்த்து" அப்படின்னு எழுதியிருக்கணும் நான் :-) */

சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னது. குறைநினைக்காதீர்கள்.:))

அதுசரி, நீங்கள் ஏன் ஒரு பதிவும் எழுதுவதில்லை. உங்களின் பல பின்னூட்டங்கள் படித்திருக்கிறேன். நிறையச் சங்கதிகள் இருக்கு உங்களிடம். நீங்களும் எழுதலாமே! என்ன நேரமின்மையா அல்லது சோம்பலா? கட்டாயம் எழுதுங்கள்.

------------------------------

கானா பிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
/* . "மானல்லவோ கண்கள் தந்தது, மயில் அல்லவோ நடையைத் தந்தது...... */

இது என்ன புதிய பாடலா அல்லது பழைய பாடலா? ம்ம்ம், நான் இதுவரை இப் பாடலைக் கேட்டதாக ஞாபகம் இல்லை.

said...

//என்ன நேரமின்மையா அல்லது சோம்பலா? கட்டாயம் எழுதுங்கள்.//

ஆகா.. நீங்களும் கேட்டுட்டீங்களா? :) நிச்சயம் சோம்பல் இல்லை... நேரம் போதாதோ என்பது ஒரு எண்ணம். ஆர்வமில்லை என்பது இன்னொன்று. பார்க்கலாம்...

said...

வணக்கம்.

சர்வேசன் புகைப்பட போட்டி, புகைப்படம் அனுப்ப கடைசி நாள் Feb 11 2007 11:59 pm IST.
போடோவை surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பிய புகைப்படத்தை போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை நீங்கள் வேறு எங்கும் வெளியிடக்கூடாது.

வாக்கெடுப்பு Feb 12 அன்று ஆரம்பிக்கப்படும்.

நன்றிங்கோ!

போட்டி விவரங்கள் இங்கே: போட்டி

said...

குமரன்,
/* பாவேந்தர் பாரதிதாசனார் எழுதியது தானே வெற்றி இந்தக் கவிதை? */

இல்லையே குமரன். மங்கை சரியான விடையைச் சொல்லிவிட்டார்கள். இது நாமக்கல் இராமலிங்கக் கவிஞரின் படைப்பு.

/* அமுதமே என்றால் அதனைத் தேவர் மட்டுமே உண்டார் என்கிறார். இல்லை நாமும் உண்டோம் இந்தக் கவிதையைப் படித்து. */

உண்மை குமரன். மிகவும் அருமையாகச் சொன்னீர்கள்.

said...

SurveySan,
வணக்கம்.
/* apostrophe நீங்க போட்டதா, இல்ல originalல இருக்கா? ஒரு flow மிஸ்ஸிங் அது இருக்கரதால.*/

நான் ஒரு மாற்றமும் செய்யவில்லை. புத்தகத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இங்கே பதிவேற்றியிருக்கிறேன்.


/* மற்றபடி, கடைசி மூணு பாராவும் ரொம்ப பிடிச்சது :) */

எனக்கும் பிடிச்ச வரிகள் அவை.

/* வாரத்துக்கு ஒண்ணு எடுத்து இந்த மாதிரி போடுங்க. (copyright பிரச்சனை வராம பாத்துக்கங்க :) )*/

இக் கவிஞரின் படைப்புக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளதாம். அதனால் copyright சிக்கல் இல்லையென் நினைக்கிறேன். மற்றும்படி நீங்கள் சொல்வது போல் copyright விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேணும். இங்கே இது கிரிமினல் குற்றம்.