Friday, January 26, 2007

புலம்பெயர் கவிதை -- 1

கிட்டடியில்[அண்மையில்] நான் ஈழத்திற்குச் சென்றிருந்த போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரைச் சந்தித்து பல விடயங்கள் பற்றிக் கதைக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அங்கே நான் சந்தித்த பேராசிரியர்களில் ஒருவரான கலாநிதி. கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் அவர்கள், தான் எழுதிய கவிதை விமர்சனப் புத்தகம் ஒன்றை எனக்கு அன்பளிப்புச் செய்து, அப் புத்தகத்தைப் படித்து என்னுடைய கருத்துக்களைத் தனக்குத் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டிருந்தார்கள்.

நானா? புத்தக விமர்சனமா? அதுவும் பேராசிரியர் ஒருவர் எழுதிய நூலுக்கா? பெரியவர்கள் சொன்னதற்கு மறுப்புத் தெரிவிக்கும் பழக்கம் இல்லாததால் [இல்லை என்ற சொல்லை எனது நண்பர்களிடமே சொல்லத் தெரியாமல் சிக்கல்களில் மாட்டுப்படுவது வேறு விடயம்] ஓம் என்று தலையாட்டிவிட்டு வந்துவிட்டேன்.

அன்பர்களே, அவரின் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை இங்கே பதிகிறேன்.
மிக்க நன்றி.


பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் பற்றிச் சிறுகுறிப்பு:
இவர் ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நெடுங்தீவு எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை மேற்கொண்டவர்.தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.


நூல் பற்றிய சில குறிப்புகள்:

தலைப்பு     : புலம்பெயர் கவிதை
            உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை
Title         : Expatriate Poetry
                Form, Content and Expression
ஆசிரியர்     :கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்
Author        : Dr. Krishnapillai Visakaruban
பதிப்பு      : முதற்பதிப்பு, பங்குனி 2004
Edition       : First Edition, March 2004
வெளியீடு    : யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி
            கோப்பாய், யாழ்ப்பாணம், இலங்கை.
Published by  : Jaffna National College of Education
                Kopay, Jaffna, Ceylon


சரி, இனி கலாநிதி விசாகரூபன் அவர்களின் நூலில் இருந்து.

...புலம் பெயர்ந்தோர்களது இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் கணிசமான இடத்தை நிறைத்து நிற்பனவாக "கவிதைகள்" காணப்படுகின்றன. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றால் புலம் பெயர்ந்தோர் கவிதைகளையே குறித்து நிற்கும் அளவுக்கு கவிதைகளின் மேலாதிக்கத்தினைப் பார்க்க முடிகிறது. இக்கவிதைகள் புதிய வடிவத்தை, புதிய மரபைத் தோற்றுவித்தமை காரணமாக விசேட கவனம் பெறுபவை. புதிய மனிதர், புதிய மொழி, புதிய நிறம், புதிய அனுபவங்கள், சமயம், உடை, பழக்கவழக்கங்கள் முதலானவை உள்ளிட்ட புதிய பண்பாட்டுடனான ஊடாட்டத்தினால் தமிழ்க்கவிதை புதிய குறியீடுகளையும், புதிய படிமங்களையும், புதியபாடு பொருள்களையும் பெற்று மேல் நோக்கிய அசைவியக்கத்தினைப் பெற்று வருவதனைப் பார்க்கமுடிகிறது. தமிழ்க் கவிதைப் பாடுபொருளின் அகற்சித்தன்மை குறிப்பிட்டுப் பேசக்கூடிய ஒன்றாக அமைந்து வருகிறது. இக் கவிதைகள் மேற்கிளப்பியுள்ள உரிப் பொருள் தமிழ்மரபு அதுவரை கண்டிராத எல்லைகளைத் தொட்டு நிற்கிறது. மரபுவழி இலக்கியங்களுக்கூடாக ஐவகை நிலம் பற்றியே கண்டும் கேட்டும் வந்த தமிழருக்கு ஆறாம் திணையாகப் பனிபடர்ந்த பாலையும் "அப்பாலையில் வாழமுயற்சிக்கும்" புலம் பெயர்ந்தோர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் இக் கவிதைகள் காட்டி நிற்கின்றன... [பக் . 1-2]

...தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து முற்றிலும் புதியதான ஒரு சூழலில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆவணப்படுத்துவதிலும் அவற்றைக் கலாபூர்வமாகப் பிறருடன் பகிர்ந்து கொள்வதிலும் இவர்கள் காட்டிய ஆர்வம் அல்லது முனைப்பு கனதியான பல்வேறு கவிதைகளை வெளிக்கொணர்ந்தது. இக் கவிதைகள் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் பிறிதொரு தளத்தில், தடத்தில் கொண்டு செல்வனவாக அமைந்திருந்தன எனக் குறிப்பிடலாம்... [பக். 9]

...புலம்பெயர் கவிதைகளின் உள்ளடக்கத்தினை நோக்குகின்றபோது அவை பலதரப்பட்டனவாக அமைகின்ற தன்மையினை நோக்க முடிகிறது. இப் பாடுபொருட் பட்டியலானது காலத்திற்குக் காலம் அகற்சி பெற்றுச் செல்வதனையும் அவதானிக்க முடிகிறது.எனினும் இக் கவிதைகள் முனைப்புறுத்தி நிற்கும் பாடுபொருட்களை தாயகம், புகலிட வாழ்வுக் கெடுபிடிகள், பெண்நிலைவாதம், மேலைப்புலத்தின் முன்னேற்றம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை, பண்பாட்டுப் புரிதலின்மை, வேலையில்லாப் பிரச்சினை, சாதி, கலப்புத்திருமணம், கோஷ்டி மோதல்கள், சர்வதேச விவகாரங்கள் எனப் பொதுவாகப் பிரித்து நோக்கமுடிகிறது... [பக். 13]

பிரயாண நிலை அவலம்

புலம் பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பறந்து செல்வது மிகவும் எளிதான சுலபமான ஒரு காரியமாக இருக்கவில்லை. பிரயாண நிலையில் மாதங்களை, வருடங்களைத் தொலைத்தவர்கள் கணிசமானோர். பிரயாணக் காலத்தில் பிறருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டித்தே காணப்பட்டிருந்தன. புலம் பெயர்ந்து செல்கையில் முறையான "பாஸ்போர்ட்"(Passport), "விசா" (Visa) என்பன இல்லாததனால் அஞ்சிப் பயந்து மிகவும் கடினமான வழிகளில் கூட பிரயாணம் செய்ய நேரிடுகிறது.

உடல் விறைக்கும் கடல்வழியேயும், மூச்சுமுட்டும் "பெற்றோல் பவுசர்" களிலும் பாரஊர்திகளிலும், பல்வேறு வகைக் கொள்கலன்களிலும் இன்னும் பல்வேறு அவலவழிகளிலும் இப்பிரயாணம் தொடரும்.இப்பிரயாண முயற்சியில் தம் வாழ்வை முடித்துக் கொண்டு முகமழிந்து போனவர்கள் பலர்(1).

"வரும் வழியில்" என்ற தலைப்பிலான கி.பி. அரவிந்தனின் கவிதை வரிகள் வழி அனுப்பி வைத்த நண்பனின் துயர முடிவு குறித்துப் பின்வருமாறு சித்தரிக்கின்றன.

உள்ளங் கைக்குள் உலகம்
எல்லாமும் கணப்பொழுதில்
எத்தகைய பொய் இது.
"எப்போதும் சந்திக்கலாம்
என்றிருந்த நண்பர்கள்
நினைவுச் சுழற்சிக்குள்
கனவுப் பொருளாகிப் போயினர்
சந்திக்காமலேயே!

எனக்கும் அவர்க்குமான
இடைப்பட்ட பயணமோ
உயிர் துறக்கும் தூரம்
யார் அறிவார் இதனை?
கிரேக்கக் கடலில் மூழ்கியும்
ஹங்கேரி நெடுஞ்சாலையில்
பாரவண்டியின் மூச்சுமுட்டியும்
பாதி வழியில் கழிந்தது
அவர்களின் மீதி
....
கிரேக்கக் கடல் மடியில்
குளிரில் நீ விறைக்கையில்
என்னை நீ நினைத்தாயோ
உன்பெயரை நான்
பத்திரிகையில் கண்ணுற்றேன்
கொப்பளித்துப் பொருமியது
வெடிக்காமல் போயிற்று நெஞ்சு"

மேற்படி கவிதை வரிகள் பிரயாண நிலை அவலச் சித்தரிப்பின் 'பதச்சோறாக' அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். [பக்.14-16]


1. செக்கோஸ்லாவாக்கியாவில் 21.10.1998 அன்று மின்சார இரயில் பாதையைக் கடக்க முயன்று எதிரே வந்த இரயிலினால் மோதுண்டு சுமார் 30 பேர்வரை இறந்து போனார்கள். இத்தாலியின் மால்டா தீவில் 24.12.1996 அன்று அளவுக்கதிகமான புலப்பெயர்வாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 290 தமிழர்கள் இறந்து போனார்கள். இவ் விபத்துக்கள் வகைமாதிரியான எடுத்துக்காட்டுகளாகும்.

1 comments:

said...

இது ஒரு சோதனைப் பின்னூட்டம். இன்று Blogger புதிய Blogger க்கு
மாற்றினால்தான் Blogger க்குள் நுழைய விடுவேன் என்று அடம் பிடித்ததால் மாற்ற வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டேன்.

சரி, மாற்றிய பின் எல்லாம் ஒழுங்காக வேலை செய்யுதா எனப் பார்க்கத்தான் இப் பின்னூட்டம்.