சில ஈழத்துச் சொற்கள்
இது ஒரு சோதனைப் பதிவு. வழமை போல் இன்று காலை Blogger account க்குள் நுழைய முயன்ற போது பலன் கிடைக்கவில்லை.புதிய Blogger க்கு மாற்றினால் தான் உள்ளே விடுவேன் என Blogger அடம்பிடித்தது. அதனால் இப்போதைக்கு மாறுவதில்லை என்றிருந்த என் பிடிவாதத்தில் இருந்து வெற்றிகரமாகப் பின்வாங்கி புதிய Blogger க்கு மாத்தியாச்சு.
சரி, மாற்றின பின் என் பழைய தளத்தில் இருந்த பல பாகங்களைக்[Hit Counter, etc] காணவில்லை. ஒரு விடயத்தைத் தவிர எல்லாம் சரி செய்தாச்சு. புது Blogger க்கு மாற்றிய பின் புதுப் பதிவு போட்டால் ஏதாவது சிக்கல்கள் வருகிறதா எனச் சோதித்துப் பார்க்கத்தான் இப் பதிவு.
உடனே எழுதுவது என்றால் என்னத்தை எழுதுவது? ஈழத்தில் எனது ஊரில் நான் வளர்ந்த சுற்றாடலில் புழங்கும் சில சொற்களைப் பதிவிட்டால் என்னவெனத் தோன்றியது. அதனால்தான் இப்பதிவு.
- உரிசை = உருசி(ருசி) = taste
- நெடுகல் = அடிக்கடி = always
- பரிசுகேடு = அவமானம்
- கருக்கல் = அதிகாலை
- குறுக்கால போவான்/(ள்) = ???
எ.கா:-
வன்னிப் பலாப்பழம் நல்ல உரிசை.
இச் சொல் பல இடங்களில் பல பொருளில் புழங்கப்படும்.
எ.கா :-
1.என்னெண்டு நெடுகலும் அவரிட்டை உதவி கேக்கிறது
2.வீதி நெடுகலும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது
எ.கா :-
ச்சீ, பரிசுகேடு, அவனாலை வெளியிலை தலை காட்ட முடியமல் இருக்குது
எ.கா:-
கருக்கலோடை எழும்பி திருக்குறளை பாடமாக்கு
இச் சொல்லுக்கு ஒத்த சொற்கள் எனக்குத் தெரியாது. இச் சொல்லின் சரியான பொருளும் எனக்குத் தெரியாது. ஆனால் இச் சொல் புழங்கும் சந்தர்ப்பம் தெரியும். ஒருவர் பெரியோர்களின் சொல்வழி கேளாமலோ அல்லது சமூக விரோதச் செயல்கள் செய்தாலோ அவனையோ அல்லது அவளையோ பார்த்து குறுக்கால போவானே அல்லது குறுக்கால போவாளே என்று திட்டுவர்கள். அடியேனும் பல முறை இப் பெயரால் திட்டு வாங்கியிருக்கிறேன்.:))
24 comments:
வெற்றி,
நல்ல சொற்கள். எனக்குத் தெரிந்த வரையில் இந்த சொற்களைப் பற்றி சொல்கிறேன்.
1.உரிசை - ஈழத்தில் வடமொழிச் சொற்கள் பல தமிழ்ப்படுத்தப்பட்டு பாவனையில் இருக்கிறது என்று எண்ணுகிறேன். சுவை என்னும் பொருளில் வரும் இந்த ருசி எனப்படும் வடசொல் தமிழில் உருசி என்றாகி உரிசை ஆகிவிட்டதோ? நன்று.
2. நெடுகல் - நீங்கள் சொன்ன எடுத்துக்காட்டுகளில் உள்ள பொருட்களில் தமிழகத்திலும் இந்த சொல் புழக்கத்தில் உண்டு. ஆனால் அடிக்கடி என்பதை விட வேறு பொருள் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்னென்று எப்பொழுதும் அவரிடம் உதவி கேட்கிறது?
வீதி முழுவதும் தொடர்ச்சியாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.
3. பரிசுகேடு - இந்தச் சொல்லைத் தமிழகத்தில் கேட்டதில்லை. ஆனால் நீங்கள் சொன்ன பொருளைப் பார்த்தவுடன் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் இதே பொருளில் வரும் பரிசு என்ற சொல் மட்டும் நினைவிற்கு வந்தது. முதல் பாடலில் 'ஈதே எம் தோழி பரிசு?' என்று வரும். 'இதுவோ என் தோழி உன் பெருமை?' என்ற பொருளில். பரிசுகேடு என்பது பெருமைக்கு வந்த கேடு, அவமானம் என்ற பொருளில் புழங்குவது மிக அருமை. பாவிக்க நல்லதொரு சொல்.
4. கருக்கல் - இதே பொருளில் தமிழகத்தில் பல இடங்களில் பாவிக்கப்படுகிறது.
5. குறுக்கால போவானே - இதற்கு மற்றவர்கள் வந்து பதில் சொல்லட்டும். எப்படி இது திட்டுகின்ற சொற்றொடராக இருக்கிறது என்பது எனக்கு அரைகுறையாய் தெரிந்தது போல் இருக்கிறது. ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.
என்னையும் வலுக்கட்டாயமாக புதிய பிளாக்கருக்கு மாற்றிவிட்டது.
குமரன்,
/* உரிசை - ஈழத்தில் வடமொழிச் சொற்கள் பல தமிழ்ப்படுத்தப்பட்டு பாவனையில் இருக்கிறது என்று எண்ணுகிறேன். சுவை என்னும் பொருளில் வரும் இந்த ருசி எனப்படும் வடசொல் தமிழில் உருசி என்றாகி உரிசை ஆகிவிட்டதோ? நன்று*/
நான் உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன். பல வடமொழிச் சொற்கள் தமிழாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். எதை வைத்து இதைச் சொல்கிறேன் என்றால், 19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழத்தில் வெளிவந்த பல புத்தகங்கள் வடமொழிச் சொற்களை அதிகளவில் புழங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதனால், நீங்கள் சொல்லியுள்ள கருத்து ஏற்புடையதே.
நீங்கள் சொன்ன காலகட்டத்தில் தமிழகத்திலும் அதே நிலையே. வடசொற்கள் இன்றித் தமிழால் தனித்து இயங்க முடியாது என்றும் வடமொழியும் தமிழும் கலந்து வருவது மணியும் பவளமும் கலந்து அழகு செய்வதைப் போல் இருக்கின்றது என்றும் அப்படி எழுதுவதை மணிபிரவாள (மணிப்பவள) நடை என்றும் கூறுபவர்கள் அன்று இருந்தார்கள். இன்றும் வடசொற்கள் இன்றித் தமிழால் தனித்து இயங்க முடியாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
நான் சொல்ல வந்தது இன்று தமிழகத்தில் ஆங்கிலம் பெரும்பாலும் கலந்த தமிழ் பேசப்படும் போது ஈழத்தில் வடசொற்கள் மிகுதியாகக் கலந்த தமிழ் பேசப்படுகின்றதோ என்று தோன்றியதையே. நான் பார்த்த சில ஈழத்தவர் பதிவுகளில் இருக்கும் தமிழ்ச்சொற்களில் வடசொற்கள் மிகுதியாக இருந்தன.
/* இன்று தமிழகத்தில் ஆங்கிலம் பெரும்பாலும் கலந்த தமிழ் பேசப்படும் போது ஈழத்தில் வடசொற்கள் மிகுதியாகக் கலந்த தமிழ் பேசப்படுகின்றதோ என்று தோன்றியதையே. நான் பார்த்த சில ஈழத்தவர் பதிவுகளில் இருக்கும் தமிழ்ச்சொற்களில் வடசொற்கள் மிகுதியாக இருந்தன. */
உங்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.
வெற்றி!
பரிசோதனைப் பதிவானாலும்; எங்கள் பழைய சந்ததியினரை;நினைக்க வைத்த பதிவு.
இந்தச் சொற்களை என் பேத்தியார்,வாயில் அடிக்கடி கேட்டுள்ளேன்.அம்மா இதில் ஒருசில சொற்களைப் பேசக் கேட்டுள்ளேன்.
இதில் "கருக்கல்" என்பது; அதிகாலைப் பொழுதுக்கு மாத்திரம் பாவிப்பதா?? மாலை சூரியமறைவையொட்டிய "பொழுது படுதல்" எனும் காலப் பரிமாணத்துக்கும் பாவிப்பதா??எனும் சந்தேகம் ஒன்று உண்டு.
ஏனேனில் "கருக்கலுக்க பச்சைப் பிள்ளையை வைச்சிருக்காத உள்ளுக்க கொண்டுபோ" என மாலை இருட்டும் நேரம் என் பேத்தியார் -என் சகோதரியிடம் கூறியதாக ஞாபகம்.(காலைக் கருக்கல் நேரத்தில் பிள்ளையுடன் வெளியே நிற்கச் சந்தர்ப்பம் இல்லை.
"திட்டு" என்றதும் ஞாபகம் வந்தவை!"நாசமறுவான்/ள்; நோயறுவான்/ள் எனத் திட்டுவது ;கேடுள்ளீர்களா??இதுக்குள் பெரிய தத்துவம் இருக்கிறது.
யோகன் பாரிஸ்
நெடுகல் என்பதற்கு 'தொடர்ச்சி' என்பதுதான் கூடுதற்பொருத்தமாக இருக்கும்.
வீதி நெடுகிலும் / நெடுகலும்: வீதியில் தொடர்ச்சியாக
நெடுகலும் அரியண்டப்படுத்திக் கொண்டிருக்கிறான்: தொடர்ந்தும் தொந்தரவு செய்தல்.
இங்கு அடிக்கடி என்ற பொருள் சரிவரப் பொருத்தமின்றியே இருக்கிறது.
'பரிசு கேடு' அதன் தொடர்ச்சியாக பரிசு கெட்ட... என்று தொடரும்.
பரிசுகெட்ட கதை, பரிசுகெட்டவன் போன்றன அவமானத்துக்குரிய என்ற கருத்தில் வருகிறது.
'கிலிசை கெட்ட' என்று தமிழகத்தார் பயன்படுத்தும் சொல்லுக்கும் இதற்கும் பொருட்தொடர்புண்டா?
பரிசு கெட்ட மோள் (மகள்) என்ற சொற்றொடரை பரிசிற்றமோல் என்ற குளிசைப் பெயருடன் குழப்பும் ஒரு பம்பல், நகைச்சுவை நாடகமொன்றில் வரும். (டிங்கிரி குழுவினரின் நாடகமா?)
புளொக்கர் எல்லாரையும் பொறிவைச்சு மாட்டுது. எனக்கு எப்ப ஆப்போ தெரியேல.
கானா பிரபாவும் புலம்பிப் பதிவு போட்டிருக்கிறார்.
உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்ட பிறகு சோதிச்சுப் பார்த்தனான்.
எனக்கு பழைய கண்ணினூடே பதிவு போடக்கூடியதாக இருக்கிறது.
ரெண்டு மூண்டுதரம் விடுபதிகை செய்து பின் புகுபதிகை செய்தும் பார்த்தேன். ஒரு சிக்கலுமில்லை.
குமரன்,
/* நெடுகல் - நீங்கள் சொன்ன எடுத்துக்காட்டுகளில் உள்ள பொருட்களில் தமிழகத்திலும் இந்த சொல் புழக்கத்தில் உண்டு. ஆனால் அடிக்கடி என்பதை விட வேறு பொருள் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்னென்று எப்பொழுதும் அவரிடம் உதவி கேட்கிறது?
வீதி முழுவதும் தொடர்ச்சியாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. */
குமரன் நீங்கள் சொல்வது மிகவும் சரி. வசந்தனும் தனது பின்னூட்டத்தில் நெடுகல் என்றால் தொடர்ச்சி என்பது தான் சரியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையில் அதுதான் சரி. நான் தான் பிழையான சொல்லை[அடிக்கடி] பாவித்துவிட்டேன். தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள்.
வெற்றி!
குறுக்கால போவான் என்பதை நேர்முறையிலிருந்து பிசகுபவன் எனக் கொள்ளலாமெனக் கருதுகின்றேன். மற்றவர்கள் என்ன சொல்கின்றார்களெனப் பார்ப்போம்.
//காலையில் மலரும் தாமரைப்பூ! -அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ!...அவள்
என்றும் மணக்கும் முல்லைப்பூ!.....//
வெற்றி!
கருக்கல் - மாலைப் பொழுதிலும் உண்டு. கவியரசரும் அந்திக் கருக்கல் எனச் சொல்லுகிறார்.
யோகன் பாரிஸ்
வெற்றி
சில சமயம் இங்குள்ள ஈழ நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த மாதிரி சொற்கள் வந்து விழும் போது "திருவிழாவில் காணாமற்போன குழந்தை போல் முழித்திருக்கேன்".இது எப்போதாவது உபயோகப்படும்.
/*3. பரிசுகேடு - இந்தச் சொல்லைத் தமிழகத்தில் கேட்டதில்லை. ஆனால் நீங்கள் சொன்ன பொருளைப் பார்த்தவுடன் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் இதே பொருளில் வரும் பரிசு என்ற சொல் மட்டும் நினைவிற்கு வந்தது. முதல் பாடலில் 'ஈதே எம் தோழி பரிசு?' என்று வரும். 'இதுவோ என் தோழி உன் பெருமை?' என்ற பொருளில். பரிசுகேடு என்பது பெருமைக்கு வந்த கேடு, அவமானம் என்ற பொருளில் புழங்குவது மிக அருமை. பாவிக்க நல்லதொரு சொல். */
குமரன், பரிசுகேடு என்ற சொல்லைப் எத்தனையோ முறை புழங்கியும் அச் சொல் பற்றி ஒன்றும் அறியேன். ஆனால் நீங்கள் இப்போது மாணிக்கவாசக சுவாமிகள் பரிசு என்ற சொல் புழங்கிய விதத்துடன் விளக்கத்தைச் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பரிசுகேடு = பெருமைக்கேடு
ம்ம்ம்... நல்லதொரு பழந்தமிழ்ச் சொல், இல்லையா?
யோகன் அண்ணை,
மிக்க நன்றி.
/* மாலை சூரியமறைவையொட்டிய "பொழுது படுதல்" எனும் காலப் பரிமாணத்துக்கும் பாவிப்பதா??எனும் சந்தேகம் ஒன்று உண்டு.*/
யோகன் அண்ணை, இப்ப நீங்கள் சொன்ன பிறகுதான் யோசிச்சனான். எனக்கும் இச் சொல்லை பின்னேரத்திற்கும் பாவிச்ச மாதிரி ஒரு அரைகுறை நினைவு இருக்கு. யாரையாவது விசாரிச்சுப் பார்ப்போம்.
/* நெடுகல் என்பதற்கு 'தொடர்ச்சி' என்பதுதான் கூடுதற்பொருத்தமாக இருக்கும்.
வீதி நெடுகிலும் / நெடுகலும்: வீதியில் தொடர்ச்சியாக
நெடுகலும் அரியண்டப்படுத்திக் கொண்டிருக்கிறான்: தொடர்ந்தும் தொந்தரவு செய்தல்.
இங்கு அடிக்கடி என்ற பொருள் சரிவரப் பொருத்தமின்றியே இருக்கிறது.*/
வசந்தன், நீங்கள் சொல்வது மிகவும் சரி. நெடுகல் என்ற சொல்லுக்கு அடிக்கடி என்ற சொல் பொருந்தாது. நான்தான் என் அரைகுறைத் தமிழறிவால் பிழையான சொற்பதத்தைப் புழங்கி விட்டேன். சரியான நேரத்தில் வந்து சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. அருமை நண்பர் குமரனும் நீங்கள் சொன்னது போல் தான் சொல்லியிருந்தார்.
/* 'கிலிசை கெட்ட' என்று தமிழகத்தார் பயன்படுத்தும் சொல்லுக்கும் இதற்கும் பொருட்தொடர்புண்டா?*/
கிலிசை கெட்டது என்ற சொல் ஈழத்திலும் புழக்கத்தில் உண்டுதானே வசந்தன், இல்லையா? நான் அறிய பலர் புழங்கியிருக்கிறார்களே. அத்துடன் எமது ஊரவரான மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலையிலும் இச் சொல்லைப் புழங்கியுள்ளாரே!
/* ரெண்டு மூண்டுதரம் விடுபதிகை செய்து பின் புகுபதிகை செய்தும் பார்த்தேன். ஒரு சிக்கலுமில்லை. */
என்ன வசந்தன், எனக்கு விளங்காத சொற்களையெல்லாம் சொல்கிறீர்கள். விடுபதிகை, புகுபதிகை என்றால் என்ன?
/* புளொக்கர் எல்லாரையும் பொறிவைச்சு மாட்டுது. எனக்கு எப்ப ஆப்போ தெரியேல. */
எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்.:))
அப்பிடி இருக்கு நிலமை.
மலைநாடான்,
/* குறுக்கால போவான் என்பதை நேர்முறையிலிருந்து பிசகுபவன் எனக் கொள்ளலாமெனக் கருதுகின்றேன். */
நீங்கள் சொல்வது மிகவும் சரியான விளக்கம். நேர்வழியில்[நீதி, தர்மம், அறவழி] செல்லாமல் அதர்மத்தின் வழியில் செல்பவர்களைத்தான் குறுக்காலை போவான்/ள் என்று சொல்வது வழக்கம்.
நன்றி.
'குறுக்கால போவது' என்பதற்கு மலைநாடான் சொன்ன விளக்கம் தான் என் மனத்திலும் தோன்றிய புரிதல்.
'கிலிசை கெட்ட' என்றால் என்ன பொருள்? எனக்குப் புரியவில்லை.
குமரன்,
/* 'கிலிசை கெட்ட' என்றால் என்ன பொருள்? எனக்குப் புரியவில்லை. */
என் தமிழறிவுக்கு எட்டிய வகையில், கிலிசை கேடு என்றால் மானக்கேடு.
கிலிசை கெட்டதுகள் என்றால் மானங் கெட்டதுகள் என்று பொருள் என நான் நினைக்கிறேன். வசந்தன், மலைநாடான், மற்றும் யோகன் அண்ணை போன்றோர் தெளிவு படுத்துவார்கள் என நம்புகிறேன்.
இச் சொல்லை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் என் ஊரைச் சேர்ந்த மயில்வாகனப் புலவர் அவர்கள், தான் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலிலும் புழங்கியிள்ளார்.
ஈழத்தில் போர்த்துக்கீசரின் ஆட்சி காலத்தில் தான் எம்மவர்கள் முதல் முதலாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறத் தொடங்கினார்கள். போர்த்துக்கீசரின் காலகட்டத்தில் எம்மினத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். அப்படி மாறியவர்களைக் கிலிசை கெட்டதுகள் என்று மயில்வாகனப் புலவர் விளித்திருக்கிறார்.
/* 'கிலிசை கெட்ட' என்று தமிழகத்தார் பயன்படுத்தும் சொல்லுக்கும் இதற்கும் பொருட்தொடர்புண்டா? */
குமரன், இச் சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லையா? இச் சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இருப்பதாக வசந்தன் கூறுகிறாரே!. அதுசரி இச் சொல் தமிழா? பழைய இலக்கியிப் பாடல்களில் இச் சொல் புழங்கப்படவில்லையா?
வடுவூர் குமார்,
உண்மைதான். இங்கே தமிழ்மணத்தில் கூட பல தமிழகத்தவர்கள் புழங்கும் சில சொற்கள் எனக்குப் புரியாது. இராகவன், குமரன், பொன்ஸ் போன்றோரின் உதவியினால் பல தமிழகச் சொற்கள் கற்றுக் கொண்டேன். தமிழ்மணத்திற்கு வந்ததால் நான் அடைந்த நன்மைகளில் ஒன்று இது. பல வட்டாரங்களில் புழங்கும் பல தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
யோகன் அண்ணை,
/*வெற்றி!
கருக்கல் - மாலைப் பொழுதிலும் உண்டு. கவியரசரும் அந்திக் கருக்கல் எனச் சொல்லுகிறார்.*/
"இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு" என்று வைரமுத்து கூட ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். ஆக, இந்த இரவும் பகலும் உரசிச் செல்கின்ற பொழுதையும் கருக்கல் என ஈழத்தில் பழங்குவதாகச் சொல்கிறீகள், இல்லையா யோகனண்ணை?
எனக்கும் இச் சொல்லை மாலைக்கும் இரவுக்கும் இடையில் வரும் பொழுதை விளிப்பதற்கு பழங்கியதாக ஞாபகம். மறந்து போச்சு. சரியாகத் தெரியாது. மிக்க நன்றி அண்ணை.
வெற்றி,
'கிலிசை கெட்ட' எண்டது எங்களுக்குரியதுதான். நான்தான் மாறிச்சொல்லிப்போட்டன். 'கேடு கெட்ட' எண்டதுதான் அவை பாவிக்கிறது.
கருக்கலைக் கவனிக்காமல் விட்டிட்டன். எனக்கு அது பொழுதுபடுற நேரத்தைச் சொல்லிறமாதிரித்தான் கிடக்கு.
எங்கட பக்கம் பேச்சுவழக்கில உந்தச் சொல் பாவிக்கிறமாதிரி ஞாபகமில்லை.
வெற்றி,
'கிலிசை கெட்ட' எண்டது எங்களுக்குரியதுதான். நான்தான் மாறிச்சொல்லிப்போட்டன். 'கேடு கெட்ட' எண்டதுதான் அவை பாவிக்கிறது.
கருக்கலைக் கவனிக்காமல் விட்டிட்டன். எனக்கு அது பொழுதுபடுற நேரத்தைச் சொல்லிறமாதிரித்தான் கிடக்கு.
எங்கட பக்கம் பேச்சுவழக்கில உந்தச் சொல் பாவிக்கிறமாதிரி ஞாபகமில்லை.
வசந்தன்,
/* கருக்கலைக் கவனிக்காமல் விட்டிட்டன். எனக்கு அது பொழுதுபடுற நேரத்தைச் சொல்லிறமாதிரித்தான் கிடக்கு.
எங்கட பக்கம் பேச்சுவழக்கில உந்தச் சொல் பாவிக்கிறமாதிரி ஞாபகமில்லை. */
கருக்கல் என்ற சொல் எங்கள் ஊரில் புழக்கத்தில் உண்டுதானே வசந்தன், இல்லையா? எங்கட வீட்டிலையே புழங்கியிருக்கினம். கருக்கல் காலை, மற்றும் மாலை இரு காலப் பொழுதிலும் புழங்கப்படும் எண்டு நினைக்கிறேன்.
வெற்றி,
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி
Post a Comment