கவியரசரின் தீர்க்கதரிசனமான கவிதை
அமைதியான வழிகளில் எவ்வளவோ போராடிப் பார்த்தும் ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறமுடியாது தவிப்பது கண்டு கவிஞர் மனம் குமைந்தார். தந்தை செல்வாவின் தலைமையில் ஈழத் தமிழர்கள் நடத்தி வந்த அறப்போராட்டங்கள் அனைத்திற்கும் ஆதரவு அளித்துப் பேசினார், எழுதினார்.ஆயுதப் போராட்டம் பற்றி ஈழத் தமிழர்கள் நடுவில் சிந்தனையே இல்லாத வேளையில் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தூக்குவது தவிர வேறு வழியில்லை என்று கவிஞர் கருதினார். எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் அவர் இந்தப் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. தென்றல் இதழில் இது குறித்து பின்வருமாறு எழுதினார்:
குன்றத்தில் உச்சி யேறிக்
கொடும்புலி பாம்பு கொன்று
அன்றந்த இலங்கை நாட்டை
ஆக்கினான் உனது பாட்டன்
இன்றந்த நாட்டில் நீயும்
என் தமிழ்த் தோழர் தாமும்
நன்றிகொள் நாடாள்வோ ராலே
நலிவுற நேர்ந்த தென்றால்
என்னயான் சொல்வேன்? வாழும்
இருபது இலட்சம் பேரும்
என்னவர்! எனது மூச்சு!
இழைபிரித் தெடுத்த பாகம்!
அன்னமே வருந்த வேண்டாம்
அழிவது தமிழே என்று
சொன்னவர் அழியுமாறு
துவக்குக போரை! வெல்வோம்!
குருதியே ஓடி னாலும்
கடல்நிலம் சிதைந்த போதும்
பரிதியில் மாலை வண்ணம்
படைத்தது மண்ணென் றாலும்
வருதுயர் தமிழர்க் கென்றே
'வாழிய' பாடல் பாடி
உறுதியில் இறங்கு! வெற்றி
உனக்கிது! இயற்கை வேதம்!
மொழியின்றி விழிகளில்லை
மூச்சில்லை பேச்சு மில்லை!
கழிசடை உடைமை யாளர்
கருவிலே கயமை தோய்ந்தோர்
இழிமொழி வீசினாலும்
எடுபிடி வேலை செய்து
அழிவுனக் கீந்த போதும்
அஞ்சிடேல் பண்பு குன்றேல்!
நாமெல்லாம் தமிழ் மக்கள்
நமக்குநாம் பாதுகாப்பு!
நாமெல்லாம் அழிவ தால்ஓர்
நாட்டினர் வாழ்வாரென்றால்
நாமெல்லாம் வாழ்வதற்கந்
நாட்டினர் அழிதல் நீதி!
நாமெல்லாம் அழிந்து எந்த
நாடிங்கு வாழும்! பார்ப்போம்!
தமிழர்கள் கெடுவ தொன்றே
தரணியில் முறையா? தூய
அமிழ்தொழித் தரக்கர் கூட்டம்
ஆள்வது சரியா? இல்லை!
தமிழுக்கும் தமிழருக்கும்
தடைபோடும் வெறியர் தம்மை
இமைவேறு கண்கள் வேறாய்
இருநூறு துண்டங் காண்போம்!
தமிழீழத்தில் பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்குவதற்கு நெடுநாட்களுக்கு முன்னேயே ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஆயுதம் தாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்த கவிஞர் அதைத் தெளிவாக எழுதியது அவரது மன ஓட்டத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
'வீரமைந்தர் வேலொடும் தோன்றுக வேங்கையென்று பெயர்பெற வாழுக'எனப் பாடினார் கவிஞர். அவர் பாடியபடியே வேங்கைகள் தோன்றினார்கள். அவர்களின் போராட்டம் பற்றியும் கவியரசர் கனவு கண்டார்.
ஏ ஓய் தமிழா! ஏ ஓய் தமிழா!
எழில், கலை, காதல் ஒதுக்கி மூடிவை!
நாடெனும் வானொடு முட்டுக போரை!
அழிவதில் இப்பணிக கழிவதே பெருமை!
வீடணக் குழாத்தை வேரோடு சாய்ப்பாய்!
குருதியில் குளிப்பாய்! கொற்றவர் ஆண்ட
திருவினை நாட்டை மீட்பதில் அழிவாய்!
அவர் கனவு அப்படியே பலித்தது.குருதியில் குளித்தவண்ணம் புலிகள் தங்கள் திருநாட்டைமீட்கப் போராடி வருகிறார்கள். எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் தலைமையில் தமிழீழ இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள். இருபது ஆண்டுகளில் அந்தப் போராட்டம் வளர்ந்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 20 ஆண்டுக் காலத்தில் இந்தப் போராட்டம் எத்தகைய மகத்தான வெற்றிகளை ஈட்டியிருக்கிறது என்பதைக் கவிஞர் இன்று இருந்து பார்த்திருந்தால் எவ்வளவு மனம் பூரித்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகிறது. தம்பி பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்திவரும் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஒரு வீரகாவியமே இயற்றியிருப்பார் என்பதில் ஐயமில்லை.
[பழ.நெடுமாறன், "கவியரசர் என் காவலர்", தமிழ் முழக்கம் பதிப்பகம், சென்னை, 2001, பக். 65-68]
20 comments:
இந்தக் கவிதையில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் வாடையடிக்கிறது. தமிழ், தமிழினம், தமிழ் மண் என வரும்போது தமிழீழமாக இருந்தாலென்ன, தமிழ்நாடாக இருந்தாலென்ன உணர்வுகள் ஒன்று தான் என்பதைத் தனது கவிதை மூலம் காட்டிவிட்டார் கவியரசர் கண்ணதாசன். நல்ல பதிவு, நன்றிகள்.
நல்ல பதிவு வெற்றி,
திருவாளர் வெற்றி அவர்களே!
இந்தப் பாடல் எல்லாம் எனக்குப் புதிய செய்தி.இன்று உங்கள் பதிவு மூலம்தான் படிக்கநேர்ந்தது!
நன்றி!
ஆரூரன்,
வணக்கம்.
/* தமிழ் மண் என வரும்போது தமிழீழமாக இருந்தாலென்ன, தமிழ்நாடாக இருந்தாலென்ன உணர்வுகள் ஒன்று தான் என்பதைத் தனது கவிதை மூலம் காட்டிவிட்டார் கவியரசர் கண்ணதாசன் */
உண்மை. சரியாகச் சொன்னீர்கள் ஆரூரன்.கருத்துக்கு மிக்க நன்றி.
கானா பிரபா,
நன்றி.
சுப்பையா ஐயா,
வணக்கம்.
/* இந்தப் பாடல் எல்லாம் எனக்குப் புதிய செய்தி.இன்று உங்கள் பதிவு மூலம்தான் படிக்கநேர்ந்தது! */
கவியரசரின் தமிழ் உணர்வு நீங்கள் அறிந்தது தானே. நானும் இத் தகவல்களை ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் கவியரசர் என் காவலர் எனும் நூலை வாசித்த போது தான் அறிந்து கொண்டேன். வாய்ப்புக் கிடைத்தால் இப் புத்தகத்தை வாசியுங்கள். கவியரசர் பற்றிய பல சுவையான செய்திகளை இப் புத்தகத்தில் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தொகுத்திருக்கிறார்கள்.
வெற்றி,
கவியரசரை பற்றி பல புத்தங்கள் படித்து இருந்தாலும் நீங்க கூறிய பகுதி எனக்கு மிகவும் புதுசு.
நன்றி. மிகவும் ஒரு தகவல் மற்றும் பாடல்.
நாகை சிவா,
நன்றி.
/* கவியரசரை பற்றி பல புத்தங்கள் படித்து இருந்தாலும் நீங்க கூறிய பகுதி எனக்கு மிகவும் புதுசு.*/
நானும் இத் தகவல்களை ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் கவியரசர் என் காவலர் எனும் நூலை வாசித்த போது தான் அறிந்து கொண்டேன். வாய்ப்புக் கிடைத்தால் இப் புத்தகத்தை வாசியுங்கள். கவியரசர் பற்றிய பல சுவையான செய்திகளை இப் புத்தகத்தில் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தொகுத்திருக்கிறார்கள்.
வெற்றி!
சங்கப்புலவர்கள் முதல் எங்கள் காலப் பாரதிவரை ஈழத்தைப் பாடியும் கவியரசர் பாடவில்லையே!!எனத் தான் இதுவரை நினைத்திருந்தேன். கவிஞருக்கு இலங்கையரசு விசாக் கெடுபிடியும் வைத்தது.
ஆனால் உங்கள் பதிவைப் பார்த்ததும் மிக மகிழ்ந்தேன்.கவியரசர் நம்மையும் சிறப்புப் படுத்தியுள்ளார்.
உண்மையில் எனக்குப் புதிய இனிய செய்தி!
பகிர்ந்ததற்கு நன்றி
யோகன் பாரிஸ்
யோகன் அண்ணா,
நன்றி.
யோகன் அண்ணை,
/*சங்கப்புலவர்கள் முதல் எங்கள் காலப் பாரதிவரை ஈழத்தைப் பாடியும் கவியரசர் பாடவில்லையே!!எனத் தான் இதுவரை நினைத்திருந்தேன். கவிஞருக்கு இலங்கையரசு விசாக் கெடுபிடியும் வைத்தது.
ஆனால் உங்கள் பதிவைப் பார்த்ததும் மிக மகிழ்ந்தேன்.கவியரசர் நம்மையும் சிறப்புப் படுத்தியுள்ளார்.
உண்மையில் எனக்குப் புதிய இனிய செய்தி! */
உங்களுக்கு சொல்ல நினைத்து மறந்து போனேன். கவியரசர் ஈழத்தமிழர்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளார்கள். குறிப்பாக அவர் தென்றல் எனும் இதழை நடாத்தி வந்த போது ஆசிரியர் தலையங்கமாகவும், கவிதைகள், கட்டுரைகளாகவும் பல ஆக்கங்களைப் படைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் ஆதரவு ஊர்வலங்கள், போராட்டங்கள், மற்றும் கூட்டங்கள் பலவற்றிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஈழத்தவர்கள் மீது ஒருவிதமான பாசமும் மரியாதையும் வைத்திருந்தார்.
அண்மையில் கூட அவரது மகன் காந்தி கண்ணதாசன் ஒரு பேட்டியில் ஒரு சுவரசியமான சங்கதியைச் சொல்லியிருந்தார். ஈழத்தமிழர்களுக்குத் தான் தனது தமிழின்[படைப்புக்களின்] அருமை தெரியும் என்பாராம்.
"வரும் பொருள் உரைத்தல்" எனும் இலக்கணத்தினையும் நிரூபித்து கவியரசரின் தீர்க்க தரிசனம் பற்றிய தங்களது இந்தச் செய்தி, [மூலம்: திரு. பழ. நெடுமாறன்] அவரது புகழுக்கு இன்னும் ஒரு மகுடம் சூட்டியிருக்கிறது, திரு. வெற்றி!
"காலத்தை வென்ற கவிஞர்கள்" வரிசையில் அவரும் இணைகிறார், மெய்யாகவே!
தகவலுக்கு நன்றி!
பதிவுக்கு நன்றி வெற்றி...!!!
புதுப் புது விசயங்கள் எல்லாம் தாறியள்.நன்றி வெற்றி.
நல்ல கவிதையையும் அதனுடன் சேர்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும் அறியத் தந்தமைக்கு நன்றி வெற்றி.
SK ஐயா,
/* "வரும் பொருள் உரைத்தல்" எனும் இலக்கணத்தினையும் நிரூபித்து கவியரசரின் தீர்க்க தரிசனம் பற்றிய தங்களது இந்தச் செய்தி, [மூலம்: திரு. பழ. நெடுமாறன்] அவரது புகழுக்கு இன்னும் ஒரு மகுடம் சூட்டியிருக்கிறது, திரு. வெற்றி!
"காலத்தை வென்ற கவிஞர்கள்" வரிசையில் அவரும் இணைகிறார், மெய்யாகவே! */
நீங்கள் கவியரசரின் பரம இரசிகன். தமிழ் அறிவு நிரம்பப் பெற்றவர். பல தமிழ் நூல்களைக் கற்றுணர்ந்தவர். எனவே நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மறுதலிக்கப்பட முடியாத உண்மைகள்.
மிக்க நன்றி.
வெற்றி
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
நல்ல பதிவு!
வெற்றி,
கவிதையை இட்டமைக்கு நன்றி.
1996 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்க்கவி அம்மாவும் அண்மையில் மறைந்த கவிஞர் நாவண்ணனும் புலிகளின் குரல் வானொலியில் தொகுத்தளித்த நிகழ்ச்சியில் கவியரசரின் இக்கவிதையை வெளிப்படுத்தினபோது முதன்முதலில் இக்கவிதையை அறிந்தேன். பின்னொருநாள் நாவண்ணன் அவர்களிடம் இக்கவிதையை கேட்டு வாங்கியிருந்தேன்.
____________________________
பண்டிதர் பரந்தாமன் அவர்களோடு கதைத்த சில பொழுதுகளில் அறிந்ததிலிருந்து, கண்ணதாசனுக்கும் யாழ்ப்பாணத்தாருக்கும் கடிதவழியில் நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கின்றன. அவரின் தென்றல் பத்திரிகையிலோ என்னவோ அவர் நேரிசை வெண்பாவுக்கு ஈற்றடி கொடுத்து வாசகரை வெண்பா எழுதச்சொல்லி ஊக்குவித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தாரும் வெண்பா அனுப்பினார்கள். அதில் பல பிரசுரமாயின. கவிஞரிடமிருந்தே பாராட்டுக்கடிதங்கள் வந்தன. கவியரசர் தெரிந்தே செய்த சில இலக்கணத் திருகுதாளங்கள் தொடர்பில் கடித வாதங்களே நடந்திருக்கின்றன.
வைசா,
செந்தழல் ரவி,
செல்லி,
குமரன்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சிவபாலன்,
நன்றி.
வசந்தன்,
வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் மிக்க நன்றி.
Post a Comment