Tuesday, August 28, 2007

இழந்த சொர்க்கம் : ஒரு புகைப்படக் கலைஞன் பார்வையில்

பல ஆயிரம் வார்த்தைகளால் கூட வர்ணிக்க முடியாத விடயங்களை ஒரு படம் மூலம் சொல்லி விடலாம் என்பார்கள். அது போல இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரின் வலியை இப் படத்தில் இருந்து நீங்கள் உணரலாம்.

Alex Wolf எனும் புகைப்படக் கலைஞர் இலங்கையில் தான் எடுத்த புகைப்படங்களை youtube ல் The Fallen Paradise எனும் தலைப்பில் ஏற்றியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Load ஆக கொஞ்ச நேரம் எடுக்கலாம். பொறுமை காக்க.

Friday, August 17, 2007

மதுரக் குரலோன் E.M. ஹனிபா அவர்களின் குரலில் பாவேந்தர் பாடல்கள் [வீடியோ]

"குழலினிது யாழினிது" என்பர் மதுரக் குரலோன் E.M. ஹனிபா அவர்களின் குரலைக் கேளாதோர். என்னே இனிமை! சொல்லை உச்சரிக்கும் விதம். வரிகளுக்குத் தகுந்தாற் போல குரலில் ஏற்ற இறக்கம். அம்மாடி, அவரின் குரல்வளத்தை வர்ணிக்க எனக்குத் தமிழறிவு இல்லை. தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து வளரும் பாடகர்கள், பாடகிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.

மதுரக் குரலோன் ஹனிபா அவர்கள் பாடிய பாவேந்தரின் இரு பாடல்களை youtube ல் பார்த்தேன். மெய்மறந்தேன். பல தடவைகள் கேட்டு/பார்த்து இரசித்தேன்.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பது போல நான் இரசித்த அப் பாடல்களின் youtube ஒளித்துண்டுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இப் பாடல்களை youtube ல் ஏற்றிய அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


தமிழுக்கும் அமுதென்று பேர்

சங்கே முழங்கு

Wednesday, August 15, 2007

விகிப்பீடியாவிலும் [Wikipedia] கைவைத்த CIA , வத்திக்கான்[Vatican]

உலகத்தில் பல சூழ்ச்சிகள் செய்யும் CIA ம் வத்திக்கானும் [Vatican] விகிப்பீடியாவிலும் [Wikipedia] தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அச் செய்தியைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

Tuesday, August 14, 2007

பெனாசீர் பூட்டோவின் நேர்காணல் வீடியோ

பாகிஸ்தான்[1947],இந்தியா[1947], இலங்கை[1948] போன்ற நாடுகள் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் சுதந்திரம் அடைந்தன. முறையே ஜின்னா, நேரு, D.S. செனநாயக்கா போன்ற தலைவர்கள் தமது நாடுகளில் ஆட்சி அமைத்தனர்.

ஆனால் இந்த மூன்று தலைவர்களிலும் அண்ணல் நேரு அவர்களே தொலைநோக்குப் பார்வையுடன் தனது நாட்டை வழிநடாத்தினார். இன்று இலங்கையும் பாகிஸ்தானும் உருப்படாத நாடுகள் [failed state] எனும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு அந்த நாடுகளின் முதல் தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகளே முக்கிய காரணம்.

இதில் சுவாரசியமான விடயம் என்னவெனின், இந்த மூன்று தலைவர்களும் கிட்டத்தட்ட ஒரே[same] சிக்கல்களையே எதிர்கொண்டனர். இன்னும் சொல்லப்போனால் அண்ணல் நேரு அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள் மற்றைய தலைவர்களை விட அதிகம். ஆனாலும், அண்ணல் நேரு அவர்கள் இச் சிக்கல்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் கையாண்டதால் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் தலைதூக்கிய பல சிக்கல்கள் இந்தியாவில் எழவில்லை.

அண்ணல் நேரு அவர்கள் இலங்கையில் பிறந்திருந்தால்.... நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் இருந்தது போல சிங்கப்பூரை விட முன்னணி நாடாக இருந்திருக்கும்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ அவர்கள் தற்போதைய பாகிஸ்தான் நிலைமைகள், இன்ன பிற விடயங்களைக் கனேடிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார். இப் பேட்டி 18 நிமிடங்கள் நீளமானது.அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தமது நாடுகளின் அறுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய, பாகிஸ்தானிய நண்பர்களுக்கு என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Monday, August 13, 2007

மாலன் ஐயாவிற்கான எனது 2வது பின்னூட்டம்

மாலன் ஐயாவின் பதிவான "சொன்னது என்ன" என்ற பதிவில் அவர் சொன்ன கருத்துக்களுக்கான என் மாற்றுக் கருத்துக்கள். அவர் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விடயத்திற்கும் சரியான ஆதாரங்களுடன் என் மாற்றுக் கருத்தை முன் வைப்பேன்.

வழமை போல மாலன் ஐயா சொன்ன கருத்துக்கள் சிவத்த எழுத்தில். நான் சொன்ன கருத்துக்கள் நீல எழுத்தில்.


மாலன் ஐயா,

பதிலுக்கு மிக்க நன்றி. நான் ஆத்திரப்படவில்லை. நான் எழுதியது ஆத்திர தொனியில் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஐயா, நான் நீங்கள் சொல்லியுள்ள விடயங்கள் குறித்து பதிவு தயாரித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அப் பதிவை இவ் வார இறுதியில் பிரசுரிக்கிறேன்.

/* ஆனால் அரசுப் பணிகளில் யாழ்பாணத் தமிழருக்குள்ள உரிமையைப் பறிக்க ஏதுவாக SWRD பண்டாரநாயக சிங்களம் மட்டும் என்ற மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது, 1956ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு எதிரே அறப்போர் நடத்தியதைப் போல, மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது ஏதும் போராட்டங்கள் நடத்தவில்லை */

நீங்கள் சொல்வது தவறு. அறப்போராட்டங்களை லங்கா சமஜமாஜக் கட்சி, தமிழரசுக் கட்சி, இந்திய காங்கிரஸ் ஆகியன சேர்த்து நடாத்தின. அந்த அறப் போராட்டத்தின் நூறவது நாள் போராட்டம் பெரிய கூட்டத்துடன் நடந்தது. அதில் செல்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

"When parliament was dissolved and new elections were scheduled in 1952, based on the 1950 register, from which the preponderant majority of Indians were excluded, the Ceylon Indian Congress and the Federal Party launched a campaign to obtain voting rights for those Indian who had opted, under the law, to become citizens of Sri Lanka...A meeting at the Town Hall on August, 1952 to mark the 100th day campaign, united the opposition parties....Representative of the Communist Party[Pieter Keuneman], Federal Party [S.J.V. Chelvanayagam] and plantation labour leaders, S.Thondaman and A.Aziz also spoke on this occasion."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.159]

/* செல்வா அவர்கள் வைத்த தமிழ் அரசில், வடக்குக் கிழக்குப் பகுதிகளே இடம் பெற்றிருந்தன. மலையகம் இடம் பெறவில்லை என்ற கருத்தை பேராசிரியர் சிவசேகரம் இவ்வாறு சுட்டுகிறார், */

ஐயா, இலங்கை வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் மலையகம் சிங்களப் பகுதியில் உள்ள இடம். வடக்குக் கிழக்குத் தான் தமிழர்களின் பூர்வீக தாயகம். மலையகம் கண்டி இராச்சியத்தின் பகுதியில் இருந்த பகுதி. ஆகவே சிங்கள மக்களின் மண்ணை எமக்குத் தா என்று கேட்க முடியாது.

மலையகத் தமிழ்த் தலைவர்களும், இலங்கைத் தமிழ்த் தலைவர்களும் என்ன கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள் என்றால், தமிழர்களின் பூர்வீக மண்ணில் மாநில சுயாட்சி, மலையகத் தமிழர்களுக்கு மற்றைய பிரசைகள் போல், வாக்குரிமை, குடியுரிமை, சமவுரிமை. இந்த கருத்தொற்றுமையில் தான் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்க்காங்கிரஸ், செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி, தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தனர்.

/* அவர் ராஜினாமா செய்தாரா? இல்லை தமிழ்நேஷன் பதிவில் உள்ளதைப் போல 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டாரா? */

"C.Sunderalingam...refrained from speaking in the debate ...but Sunderalingam who had serious reservations about the question resigned from the government... "
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.158]

தற்போது பணிமனையில் இருக்கிறேன். நான் மேலே சொன்னது போல உங்கள் அனைத்துக் கருத்துக்களுக்கும் இந்த வார இறுதியில் பதில் எழுதுகிறேன்.

ஐயா, மீண்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, உங்கள் மீது எனக்கு ஆத்திரம் இல்லை. நான் உங்கள் மீது ஆத்திரப்படுவதாக நீங்கள் கருதுமளவுக்கு நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஐயா, நீங்கள் என்னைவிட வயதில் முதிர்ந்தவர். அந்த வகையில் உங்கள் மீது எனக்கு மரியாதையும் மதிப்பும் உண்டு. உங்கள் கருத்துக்களுக்குத் தான் மாற்றுக் கருத்தைச் சொல்கிறேனே தவிர உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் இல்லை.

நான் அப்படித் தவறி, வரம்புமீறீ ஏதாவது சொன்னால் தயவு செய்து தயங்காது சுட்டிக் காட்டுங்கள்.

இக் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் தவறான புரிதல்களை களையலாம் என நம்புகிறேன்.

/* யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு மலையகத் தமிழர்களிடமிருந்த தமிழ்நேய்த்திற்கு இந்த தரவுகள் போதுமா? */

மேலே சொன்னது போல், இவ் வார இறுதியில் பதிலளிக்கிறேன்.

மிக்க நன்றி.
மாலன் ஐயாவிற்கான 2வது பின்னூட்டத்தில் நான் சொல்ல மறந்தது.

மாலன் ஐயா அவர்கள் மேலே "ஆனால் அரசுப் பணிகளில் யாழ்பாணத் தமிழருக்குள்ள உரிமையைப் பறிக்க ஏதுவாக SWRD பண்டாரநாயக சிங்களம் மட்டும் ..." எனச் சொல்லியிருக்கும் கருத்தே மிகவும் தவறானது. தனிச் சிங்களச் சட்டத்தால் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள் எனும் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறார்.

இச் சட்டத்தால் இலங்கையின் சனத்தைகையில் 30% மக்கள் பாதிக்கப்பட்டனர். அதாவது இலங்கையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்து[இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள்] மக்களும் இச் ச்ட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.

அடுத்தது மாலன் ஐயா தவறாகப் புரிந்து கொண்ட விடயம் என்னவெனின் இத் தனிச் சிங்களச் சட்டம் ஏதோ வேலைவாய்ப்புத் தேடிய தமிழ்மக்களைத்தான் மட்டும்தான் பாதித்தது என்பது.

இச் சட்டத்தால் தமிழ்மக்கள் ஏதாவது அலுவலகத்துக்குப் போனால்கூட சிங்களத்தில்தான் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமது சொந்த மண்ணிலேயே தமக்குப் புரியாத மொழியில் பேச வேண்டிய கட்டாயத்தை அனைத்துத் தமிழ்மக்கள் மீதும் திணித்தது. அதனால் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுமே இச் சட்டத்தை எதிர்த்தனர்.

ஆக, மாலன் ஐயா அவர்களின் மேலுள்ள கருத்தைப் பார்க்கையில் அவருக்கு இலங்கையின் அரசியல் வரலாறு பற்றிச் சரியான புரிதலோ[understanding] அல்லது போதிய அறிவோ[knowledge] இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

சிலவேளைகளில், அவருக்கு வரலாறு தெரிந்திருந்தும், வரலாற்றைத் திரித்து, இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டது குறிப்பிட்ட பகுதி தமிழ்மக்களே எனவும், இப் பிரச்சனைக்கு எதிராகப் போராடிய தமிழர்கள், மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்குப் போராடவில்லை எனும் மாயையை ஏற்படுத்த முனைகிறாரா எனவும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த தனிச் சிங்களச் சட்டத்தால் கொழும்பில் அலுவலகத்திற்குச் சென்ற தமிழ் நீதிபதி ஒருவரின் நிலை என்னவென்பதை கீழே படியுங்கள்.

'I went to the office of the Government Agent in Colombo in July 1973. In order to find my way to the officer whom I wanted to meet, I saw a board in Sinhala only. I enquired in English from the clerk who was seated behind the counter as to what it said. His reply in Sinhala was “don’t you know how to read Sinhala?” I replied in English that I cannot understand what he said. He said in Sinhala: “Go and learn Sinhala and come back.” A bystander then told me what the board conveyed.’
Mr. V. Manicavasagar, former Supreme Court Judge, quoted in document by Ceylon Institute of National and Tamil Affairs for the International Commission of Jurists, 1974.

மாலன் ஐயாவுக்கு நான் எழுதிய பின்னூட்டம்

மாலன் ஐயா அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி இல்லாத பொய்களை எழுதி வருவது பலரும் அறிந்திருப்பீர்கள். அவர் "சொன்னது என்ன" என்ற பதிவில் ஒரு பின்னூட்டத்தில் எழுதிய பொய்யுக்கு நான் மறுத்து எழுதிய பின்னூட்டம் இது.

மாலன் ஐயா அவர்கள் எழுதிய கருத்துக்கள் சிவத்த எழுத்தில். நான் எழுதிய கருத்துக்கள் நீலத்தில்.


மாலன் ஐயா,

/* இவர்களுக்கு வாக்குரிமைகள் அளிக்கப்படவில்லை. அப்போது இந்தத் தமிழர்களுக்காக யாழ்ப்பாணத் தமிழார்கள் போராடினார்களா? */

வரலாற்றைத் தெரியாவிட்டால், தயவு செய்து தெரிய முயலுங்கள். இல்லாத பொய்யை அவிட்டு விடாதீர்கள். வழமை போல வரலாற்றைத் திரிக்காதீர்கள்.

தந்தை செல்வநாயகம் எதிர்த்துப் பேசியது மட்டுமல்ல நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தார். அது தெரியுமா உங்களுக்கு?

தந்தை செல்வா இச் சட்டத்தின் போது பேசிய நாடாளுமன்ற உரையைப் படித்திருக்கிறீர்களா? "இன்று எமது சகோதரர்களான மலையகத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப் படுகிறது. நாளை இது எமக்கும் நடக்கும்" என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது இலங்கை நாடாளுமன்றக் குறிப்பிலேயே உள்ளது.

மலையக மக்களின் உரிமை பறிக்கப்படும் மசோதவை எதிர்ப்பதற்காக 'அடங்காத் தமிழன்' என அழைக்கப்படும் C.சுந்தரலிங்கம் அவர்கள் தனது அமைச்சர் பதவியையே துறந்தார் என்பது தெரியுமா?

1958ல் பண்டாரநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலேயே தந்தை செல்வா அவர்கள் இலங்கையில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும்[மலையகத் தமிழர்கள்] இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அது தெரியுமா உங்களுக்கு?

எப்படித்தான் தெரியாத விடயங்களை எல்லாம் உறுதி செய்யாமல் உங்களால் எழுத முடிகிறதோ? இதுதான் உங்களின் 35 வருட பத்திரிகைத் துறை அனுபவமா?

Sunday, August 12, 2007

"சிறீலங்கா அரசு ஓர் இனவாத அரசு" - பாரதிய ஜனதாக் கட்சி [BJP]


இந்தியா சிறீலங்காவுக்கு ஒரு போதும் படைத்துறைத் தளபாடங்கைள வழங்கக்கூடாது என தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கைக்கும் போது அவர் இதனைத் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசு ஓர் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கிற அரசாக செயற்படுகின்றது. சிறீலங்கா அரசு சிங்களவரையும் தமிழர்களையும் சமனாக மதிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்க வழங்கப்பட்ட பொருட்களைக் கூட சிறீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நடுநிலைமையோடு செயற்பாட்டு இனப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு ராடர்களை வழங்கியுள்ளது. இந்தியா வழங்கும் படைத்துறை உதவிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கே பயன்படுகின்றன. ஆகவே இந்தியா இலங்கைக்கு படைத்துறை உதவிகளை வழங்கக்கூடாது எனவும் இல.கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்


ஆதாரம்: பதிவு

படம் : த ஹிந்து

Friday, August 10, 2007

பாகிஸ்தானிடமிருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டும்

அண்மைக்காலமாக பாகிஸ்தானில் அதிபர் முஷ்ரப் அரசுக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் இடையில் நடந்துவரும் சம்பவங்கள் பல அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றிருப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் 60 ஆண்டுகால வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் உருவாகியதிலிருந்து நீண்ட காலமாக நீதிமன்றங்கள் அரசின் எடுபிடியாகவே செயற்பட்டு வந்தன. அரசில் இருப்பவர்கள் குறிப்பாக இராணுவ ஆட்சியாளர்கள் தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும், தம் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புக்களை அடக்குவதற்கும் நீதிமன்றங்களையே கருவியாகப் பயன்படுத்தினர்.

ஆனால் அவ் வழக்கம் 2005ல் இருந்து மாறத் தொடங்கியது. 2005ல் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற இவ்ரிகார் மொகமட் செளத்திரி அவர்கள் அரசின் எடுபிடியாக இல்லாமல் சுயாதீனமாக செயற்படத் துவங்கினார். அவர் 2005ல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற போது, "நீதித்துறைக்கும் மக்களுக்குமிடையிலான நம்பிக்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது...பாகிஸ்தான் தனது தார்மீக இலட்சியத்தைத் தொலைத்துவிட்டது..." என்று தெரிவித்திருந்தார்.

"There is a serious crisis of confidence between the people and the judiciary...Pakistan had lost its 'moral moorings'...people craved high offices and exalted positions just to demonstrate their superiority over others"
[BBC , Pakistanis 'dismayed' with courts, Thursday, 30 June, 2005]

முஷ்ரப் அரசு முன்னெடுத்த பல மக்கள் விரோத சட்டங்கள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினார் செளத்திரி. குறிப்பாக கைது செய்யப்பட்ட பின் காணாமல் போன அல்லது உறவினர்களுக்குத் தெரியாமல் வதை முகாம்களில் தடுத்து வைத்தவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு பிறப்பித்த ஆணை போன்றன அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

நீதிபதி செளத்திரி அவர்கள் முஷ்ரப் அரசின் விருப்பத்திற்கு மாறான தீர்ப்புக்களை வழங்கி வருவது முஷ்ரப்பை ஆத்திரமடைய வைத்தது. குறிப்பாக இந்த வருட இறுதியில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் முஷ்ரப், தனக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்லக் கூடிய ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டார். அதன் முதற்கட்டமாக நீதியரசர் செளத்திரி மீது பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, நீதிபதிப் பொறுப்பிலிருந்து அவரை இடைநீக்கம் செய்தார். செளத்திரியின் இடைநீக்கத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இறுதியில், செளத்திரியை இடைநீக்கம் செய்தது தவறானது என்றும் அவரை மீண்டும் தலைமை நீதிபதியாக அனுமதிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத் தீர்ப்பு பாகிஸ்தானின் சட்ட/நீதித்துறை[ judiciary ] வரலாற்றிலேயே ஒர் திருப்புமுனை எனவும் , பாகிஸ்தானின் நீதித் துறையில் எதிர்காலத்திலும் இத் தீர்ப்பின் விளைவுகள் இருக்கும் என பாகிஸ்தான் சட்ட மேதைகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

"Legal experts are of the opinion that the judgement marks a watershed in Pakistan's legal history and will have far reaching implications for the rule of law in the country. "
[ BBC, Musharraf faces legal nightmare, Friday, 20 July 2007]

முஷ்ரப் தனது சொந்த நலனுக்காக, மக்கள் விரோதச் சட்டங்களை அமுல்படுத்தியும், மக்களின் உரிமைகளைப் பறித்து, தனக்கு எதிரானவர்களை தனது அதிகாரத்தைப் பாவித்துப் பழி வாங்கி நாட்டைச் சீரழிக்க முற்பட்டதை பாகிஸ்தான் உய்ர் நீதிமன்றம் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

ஆனால் இதே போன்ற சம்பவங்கள் இலங்கையில் நடந்த போது, குறிப்பாக சிங்கள அரசுகள் புத்த சிங்களவர்களின் நலன்களை முன்னிறுத்தி அங்கு வாழும் சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு எதிராகச் சட்டவிரோதமாகச் செற்பட்டு அவர்களின் உரிமைகளைப் பறித்த போது இலங்கை நீதிமன்றங்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சனை பற்றி கருத்துத் தெரிவிப்போர் பலர் இலங்கையின் இன்றைய மோசமான நிலைமைக்கு புத்த பிக்குகளும் சிங்கள அரசியல்வாதிகளுமே காரணம் என்கின்றனர். அவர்கள் இலஙகையின் நீதித்துறை[ judiciary ] விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில்லை.

இலங்கையின் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் ஆலோசகராக இருந்த அர்யுனா கன்னங்கரா அவர்கள் புத்த பிக்குகளாலும், அரசியல்வாதிகளாலும்தான் இன்று நாடு இந்த மோசநிலையில் உள்ளது என்று லண்டன் கார்டியன் பத்திரிகையில் எழுதியிருந்தார்.

" ... General Sooriyabandara is right in blaming the politicians for this pointless war. But the Buddhist clergy must also share the blame. Their rabble-rousing nationalism has egged on countless politicians and the Sinhalese Buddhist majority to undertake the most foolhardy and destructive policies against the Tamil minority. "
[Arjuna Kannangara, Tamil State Inveitable, Guardian, May 18, 2000]

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இலங்கையின் இன்றைய மோச நிலைக்கு இலங்கையின் நீதித் துறையே முக்கிய பொறுப்பு. ஏனெனில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இலங்கைச் சிங்கள அரசுகள் அறிமுகப்படுத்தி அமுல்படுத்திய சகல சட்டங்களும் இலங்கையின் அரசியல் யாப்பிற்கு முரணானவை. இந்த ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் அச் சட்டங்களை அமுல்படுத்தாமல் தடுத்திருக்கலாம். சிங்கள அரசுகளின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய அதிகாரம் நீதிமன்றங்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால் இலங்கையின் நீதிமன்றங்களும் சிங்களவர்களால் ,சிங்களவர்களின் நலன்களைப் பேணுவது எனும் குறிக்கோளோடே இயங்கின.

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து , 1972 வரை சோல்புரி அரசியல் யாப்பே அமுலில் இருந்தது. சோல்புரி அரசியல் யாப்பின் 29வது பிரிவின் படி, இலங்கை அரசு, சிறுபான்மை மக்களின் நலன்களையோ அல்லது உரிமைகளையோ பாதிக்கும் சட்டங்களை அமுல்படுத்தக் கூடாது.

ஆனால் "இலங்கையின் தந்தை"[Father of the Nation] என சிங்களவர்களால் அழைக்கப்படும் D.S.செனநாயக்க அவர்கள் அரசியல் யாப்பிற்கு முரணாக மில்லியன் தமிழர்களின்[தமிழகத் தமிழர்கள்] குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த போது இலங்கையின் நீதித்துறை அதைத் தடுத்து நிறுத்தவில்லை.

அதன் பின், சிங்களவர்களல் "சமூகப் புரட்சி நாயகன்"[Champion of Social Revolution] எனப் புகழப்படும் பண்டாரநாயக்கா அவர்கள் அரசியல் யாப்பின் விதிகளுக்குப் புறம்பாக தனிச் சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்திய போதும் இலங்கையின் நீதித் துறை அதைக் கண்டு கொள்ளவில்லை.

பின்னர் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் அரசியல் யாப்பிற்கு விரோதமாக கிறிஸ்தவ பாடசாலைகளை அரசுடமையாக்கிய போதும் நீதித்துறை மெளனமே சாதித்தது.

தனக்கு இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி இச் சட்டங்களை அன்றே இந்த நீதிமன்றங்கள் தடுத்திருந்தால் இலங்கையில் சிலவேளைகளில் இன்று இரத்த ஆறு ஓடாமல் இருந்திருக்கும்.

1960 களில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் சம உரிமை வேண்டிப் போரிட்ட போது [Civil Rights Movement] , அமெரிக்க அரசியல்வாதிகள் செயற்பட முன்னரே நீதிமன்றங்கள் கறுப்பின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாகச் செயற்படத் துவங்கின. அதுவே அரசியல்வாதிகளையும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்ற வழி கோலியது.

"குறிப்பாக சிறுபான்மை மக்கள் தமக்கு எதிரான சட்டங்களை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த [எண்ணிக்கை] பலம் இல்லாத போது நீதித்துறை அச் சட்டங்களைத் தடுத்து நிறுத்துவது மிக மிக அவசியம், இப்படியான நேரத்தில் நீதிமன்றங்களைத் தான் அவர்கள் நம்பியுள்ளார்கள்" என்கிறர் 'கலாநிதி' ஜெகன் பெரரா அவர்கள்.

"The role of the judiciary becomes extremely important where the normal political processes are likely to lead to injustice to minority and marginalised groups who do not have the power to resist majoritarian imperatives...In such instances people, or communities, who suffer from an injustice have nowhere to go to obtain redress. Therefore, in the interests of good governance, it is incumbent on the judiciary to take an activistic stance and be especially vigilant of those laws passed by parliament which impact upon minority and marginalised groups for whom the normal checks and balances of democracy do not function very effectively. "
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

பாகிஸ்தான் நீதித்துறை முஷ்ரப்பின் சுயநல, மக்கள் விரோத , நாட்டைச் சீரழிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியது போல இலங்கையின் நீதித்துறையும் செயற்படுமா என்றால், அண்மைய சம்பவங்கள் இல்லையென்றே சொல்ல வைக்கிறது.

அண்மையில் திருகோணமலை போன்ற தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளை ஆக்கிரமித்த சிங்கள இராணுவத்தினர் தமிழ் மக்களைப் பலவந்தமாக வெளியேற்றி அப்பகுதிகளை "உயர் பாதுகாப்பு வலயம்", "சிறப்பு வர்த்தக மையம்" என அப்பகுதிகளை அறிவித்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது குடியிருப்புக்களை சிங்கள அரசு இப்படிச் சூறையாடுவதை தடுக்க இலங்கை நீதித் துறையை நாடிய போது, அவ் வழக்கை விசாரனைக்கே எடுத்துக் கொள்ள முடியாது என இலங்கை நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசும் , நீதித்துறையும் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க வன்முறையை நாடும் அவலநிலைக்குத் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு
"

எனத் தமிழ் வேதம் சொல்கிறது. ஆனால் மாறும் உலக நடப்புக்களை அறிந்து தாமும் அதற்கேற்ப நடந்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றாது செக்கு மாடுகள் போல பல தசாப்தங்களாக இனவாதம் , புத்தமதவாதம் எனும் பழைய பல்லவியையே சிங்கள அரசியல்வாதிகள் , புத்த மத குருமார், மற்றும் இலங்கை நீதித்துறையினர் பாடி வருகின்றனர்.

நீதித்துறை நடுநிலமையாக , சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேணும். 'கலாநிதி' ஜெகன் பெரரா அவர்கள் இப்படிச் சொல்கிறார்:

"ஆனால் உண்மை என்னவெனின், மக்களின் நலன்கள், குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் போது, இலங்கையில் நடப்பது போன்று,சிறுபான்மையினர் அரசினால் வஞ்சிக்கப்படும் போது நீதித்துறை நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இலங்கையின் இன்றைய அவலநிலைக்கு இலங்கையின் நீதித்துறையும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது நீதித்துறை முறையாகச் செயற்படவில்லை. மக்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கிடைக்காவிட்டால் வன்முறையை நாடுகின்றனர்"

"But the fact that the judiciary must act, and act vigorously especially when minority rights and human rights are at stake, is clear from the history of the law making in this country. The judiciary has to ensure that there is fairness in law making and in the implementation of the laws, so that people belonging to marginalised groups or to ethnic communities do not feel that they are especially targetted for punitive, discriminatory or unfavourable measures. The judiciary has to take its share of responsibility for the parlous state of the country today owing to what they failed to do in the past. It is when people feel that they have no redress regarding the injustices they are subjected to that they take to violence."
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

இலங்கையின் வரலாற்றில் தமிழரின் ஆட்சியில்தான் நீதி தழைத்தோங்கி , மனித உரிமைகள் மதிக்கப்பட்ட பொற்காலம் எனும் சுவாரசியமான தகவலையும் சுட்டிக்காட்டுகிறார் 'கலாநிதி' ஜெகன் பெரரா.

"சமீபத்தில் நடந்த கலந்துரையாடலொன்றின் போது இலங்கை எந்த ஆட்சிக்காலத்தில் நீதி நிலைத்து, மனித உரிமைகள் மதிக்கப்பட்ட பொற்காலம் எனும் கேள்வி கேட்கப்பட்டது. இலங்கையின் பழைய வரலாற்றைப் பற்றிப் பெருமைப்படுபவர்களால் இப்படியான நல்ல பல ஆட்சிக் காலங்களை எடுத்துரைக்க முடியும். ஆனாலும் சோகமான உண்மையென்னவென்றால், எந்த மன்னனின் தோல்வியை பெரிய வெற்றி என்றும் நாட்டின் ஒற்றுமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லப்படுகிறதோ அந்தத் தமிழ் மன்னனான [தோற்ற மன்னன்] எல்லாளனுடைய காலமே மிகச் சிறந்த பொற்காலம். சிங்கள புனைநூலான மகாவம்சம் கூட எல்லாளன் நீதி தவறாது ஆட்சி புரிந்தார் என்கிறது. பசு மாட்டுக்குக் கூட அவரின் ஆட்சியில் நீதி கிடைத்தது எனச் சொல்லப்படுகிறது"

"At a recent discussion on governance in Sri Lanka the question was asked, when was the golden of human rights in the country? Those who take pride in Sri Lanka's ancient history might be able to point out that there were indeed many such periods in the country's past. Ironically, the period of the Tamil King Elara, whose defeat is seen as a great triumph of national unification may have been one of those golden periods. The King reigned "justly" records the Mahavamsa, and even a cow whose calf was run over by a speeding chariot could gain justice against the King's own son"
[Dr. Jehan Perera, Concerns about Judicial Activism, 1996]

இலங்கையில் மீண்டும் எல்லாளன் ஆட்சிக் காலம் போல் வருமா? இலங்கை நீதித்துறை எல்லாள மன்னனைப் போல செயற்படுமா? இலங்கையின் நீதிபதிகள் பாகிஸ்தான் நீதியரசர் செளத்திரியின் முன்மாதிரியைப் பின்பற்றுவார்களா?

Sunday, August 05, 2007

கானா பிரபா, குமரன் ஆகியோரைத் தொடர்ந்து BBC யிலும் விபுலானந்த அடிகள் பற்றி...

நண்பர் கானா பிரபா அவர்கள் விபுலானந்த அடிகளார் பற்றி சில வாரங்களுக்கு முன் ஒரு அருமையான கட்டுரை ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அக் கட்டுரையில் இருந்த விபுலானந்த அடிகளாரின் பாடல்களைப் படித்து மெய்மறந்த அருமை நண்பர் குமரன் அவர்கள், 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்பது போல் அப் பாடல்களுக்கு எளிய தமிழில் அழகாக விளக்கம் எழுதியிருந்தார்.

குறிப்பாக வெள்ளை நிற மல்லிகையோ எனும் பாடல் என் மனதில் ஒரு பத்தியுணர்வை ஏற்படுத்தியிருந்தது.

BBC தமிழோசையில் விபுலானந்த சுவாமிகள் பற்றி ஒரு ஒலி நிகழ்ச்சிசைக் கேட்டேன். அதில் இப் பாடலைக் கேட்டேன். உண்மையில் மெய் சிலிர்த்தது. அப் பாடலைப் பல முறை கேட்டேன்.

அந்த நிகழ்ச்சியை நீங்களும் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

Friday, August 03, 2007

அரோகரா!... முருக பத்தர்களுக்கு வந்த சோதனை! [புகைப்படங்கள்]

கதிர்காமக் கந்தனின் வருடாந்த திருவிழாவுக்கு இலங்கையின் தமிழ் பகுதிகளான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா [வடக்கு கிழக்கு மாகாணங்கள்] போன்ற பகுதிகளில் இருந்து முருக பத்தர்கள் கால் நடையாக பாத யாத்திரையாகச் சென்று அங்கே ஓடுகின்ற புண்ணிய ஆறான மாணிக்க கங்கையில் நீராடி முருகனை வணங்குவது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

இந்த வருடமும் தமிழ்ப் பகுதிகளில் இருந்து முருக பத்தர்கள் கதிர்காமம் சென்றனர். அங்கே இத் தமிழ்ப் பத்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடும் போது சிங்கள பொலிஸ் அதிகாரியால் தாக்கப்படும் காட்சியையே கீழே உள்ள படங்களில் காண்கிறீர்கள்.

பத்தர்களைக் கொடுமை செய்த அசுரர்களை அழிக்க வந்த வேலவனே, உன் பத்தர்கள் சிங்கள இனவெறியர்களால் தாக்கப்படும் போது பார்த்துக் கொண்டிருப்பது என்ன நியாயம்?





இப் படங்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரர் [Daily Mirror, Friday, August 03, 2007 ] ல் இருந்து எடுத்தவை.