Sunday, April 29, 2007

இன்னும் 30 ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் கடலுக்குள் மூழ்கிவிடும்!

"எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்களில் இல்லாமல் போக்கூடிய மண்ணுக்காக (சிங்கள)அரச படைகளும் விடுதலைப்புலிகளும் அடிபட்டுச் செத்து மடிகின்றனர்" என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே.["Government troops and the LTTE fighting over land in the north and the east that may soon not even be there."]

பேராசிரியர் மோகன் முனசிங்கே அவர்கள் ஐக்கிய நாடுகள்[ஐ.நா] சபையின் Intergovernmental Panel on Climate Change (IPCC) எனும் அமைப்பின் உப-தலைவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடல் நீரின் மட்டம் அரை மீற்றரால் உயருகின்றது, வறண்ட பகுதிகள்[dry zone] மேலும் வறண்ட பிரதேசங்களாகவும் குளிர்மையான பிரதேசங்கள்[wet areas] மேலும் குளிர்மையான பிரதேசங்களாகவும் மாறி வருகிறது. இதனால் குளிர் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்குகளும், வறண்ட பகுதிகளில் வறட்சிக் கொடுமைக்கும் வழிவகுக்கும். சூழலில்[atmosphere] அதி கூடிய வெப்பநிலையால் [Higher temperatures] தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் நாட்டின் விவசாயம் பாதிக்கப்படும். நெல் உற்பத்தி 20-30 வீதத்தால் வீழ்ச்சியடையும்.

நாட்டின்(இலங்கை)சுகாதார நிலமைகள் மிகவும் மோசமடையும். வறண்ட பிரதேசங்களில் இருந்து நுளம்புகள் குளிர்ப்பகுதிகளுக்குச் செல்லும் கட்டாயம் ஏற்படும். இதனால் இக் குளிர் பிரதேசங்களில் மலேரியா, டெங்கே[dengue] சிக்குன்னியா[chikungunya] போன்ற நோய்கள் பரவும்.

என்ன பயமாக இருக்கிறதா? இதோ இன்னும் சில :

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் [தமிழர்களின் தாயகம்] உள்ள பல கரையோரப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலில் மூழ்கிவிடும்.

பேராசிரியர் மோகன் முனசிங்கேயின் கருத்துக்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ், சிங்கள கடும்போக்காளர்களின்[hardliners] கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்[...comments that are certain to draw the attention of hardliners from both sides of the warring fence]


மேலே உள்ள தகவல்கள் கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸின்[The Sunday Times] இவ்வார இதழில் [Sunday, April 29, 2007] வெளிவந்தவை. பூமியின் உஷ்ணமே[global warming] இவ் அனர்த்தங்களுக்குக் காரணம் என்கிறார் பேராசிரியர் மோகன் முனசிங்கே. இவர் இவ் விடயத்தை மிகவும் மிகைப்படுத்துகிறாரா? அல்லது உண்மையாகவே சில தமிழ்ப் பகுதிகள் இன்னும் 30 வருடங்களுக்குள் கடலுக்குள் மூழ்கப்போகிறதா என்பது எனக்குத் தெரியாது. யாராவது இத் துறையில் உள்ள வல்லுனர்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால் பேராசிரியரின் கருத்துக்கள் இலங்கை அரசியல்வாதிகளிடையேயும் மக்களிடையேயும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்பதுதான் என் கவலை.
எனது அச்சம்?!!!! ஈழத்தில் நான் பிறந்த மண்[ஊர்] ஒரு கரையோரக் கிராமம். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" இருந்த என் கிராமமும் கடலில் மூழ்கிவிடுமோ என்பதும் என் அச்சங்களில் ஒன்று.

Saturday, April 28, 2007

மாமனிதர் சிவராம் [தாராக்கி] நினைவாக...

"இவர் தனது எழுத்துக்களால் தமிழரின் தேசியப் பிரச்சினையை உலக அரங்கிலே மிகவும் நேர்த்தியான முறையில் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்கள அரசு மேற்கொண்டுவருகின்ற அப்பட்டமான பொய்ப்பரப்புரைகளை சர்வதேச சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் மிகச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் அம்பலப்படுத்தினார். சிங்களப் பேரினவாத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக்கூறினார். ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபோதும், அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துநின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, எம்மக்களுக்கு ஓயாது அரசியல் விழிப்புணர்வூட்டி, தமிழ்த் தேசியத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தினார். அன்னார் ஆற்றிய பணி என்றுமே போற்றுதற்குரியது.

திரு. தர்மரட்ணம் சிவராம் அவர்களின் இனப்பற்றிற்கும்,விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் வரலாற்றில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு"

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும், தான் எதிர்நோக்கிய சிக்கல்களையும் மாமனிதர் சிவராம் அவர்களே சொல்லக் கேளுங்கள்[கீழே].


நீ விட்டுச் சென்ற பணி தொடரும்

உன் சாவு மக்கள் ஆட்சிக்கு ஒரு சாவு மணி
உன் சாவு எழுத்துச் சுதந்திரத்துக்கு ஒரு மரண அடி
உன் சாவு எண்ணச் சுதந்திரத்துக்கு ஒரு அறைகூவல்
உன் சாவு மனித குலத்துக்குத் தீராத வடு
உன் சாவு மனித நேயத்துக்கு ஏற்பட்ட கறை!

உன் நாட்டுப்பற்று கடலை விடப் பெரியது
உன் இனமானம் வானை விட உயர்ந்தது
உன் எழுத்துக்கள் தமிழ்த் தேசியத்திற்கு நீரூற்றியது
உன் கருத்துக்கள் தமிழீழ விடுதலைக்கு எருவானது!
உன் நுண்மாண் நுழைபுலம் போராட்டத்துக்கு அரணானது!

உன் எழுத்துக்கு மாற் றெழுத்து
உன் கருத்துக்கு எதிர்க்கருத்து
உன் வாதத்துக்கு எதிர் வாதம்
முன் வைக்க வக்கற்ற அறிவிலிகள்
உன்னைக் கோழைத்தனமாகக் கொன்று விட்டார்கள்!

ஊடகவுலகின் மன்னன் என உலா வந்தவனே
நடமாடும் பல்கலைக் கழகமென புகழப் பட்டவனே
உன் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை
உன் சாதனை இமயத்தை விட உயர்ந்தவை!

தன் வீடு தன்குடும்பம் என வாழாது
என் மண் என்மக்கள் என் இனம்
என நாளும் பொழுதும் வாழ்ந்தவன் நீ!
உன்னைப் போல் இன்னொரு எழுத்து ழவனை
என்றுதான் காண்போம் என்ன நோன்பு நோற்போம்!

இன் முகம்! கள்ளமில்லா வெள்ளை மனம்!
அன்பான பேச்சு! கனிவான பார்வை! தோற்றத்தில்
எளிமை! நடத்தையில் நேர்மை அறிவில் கூர்மை
பெற்ற தாய்மீதும் பிறந்த மண்மீதும் காதல்!

கொண்ட கோட்பாட்டில் உறுதி! போகும்பாதையில் தெளிவு!
அண்டம் குலைந்தாலும் நிலைகுலையாத கொள்கைக் கோமான்!
உன்னைப் போல் ஒரு அறிவாளியை தமிழுலகில்
என்றுதான் காண்போம்? எத்தனை காலம் காத்திருப்போம்?

உன் உடலைத்தான் எதிரிகளால் அழிக்க முடிந்தது
உன் உயிரைத்தான் பகைவர்களால் பறிக்க முடிந்தது!
உன் கருத்துக்களை யாருமே அழிக்க முடியாது!
உன் நினைவுகளை எவருமே ஒழிக்க முடியாது!
அவை காலம் காலமாக நீடித்து நிற்கும்!

என் அன்னைத் தாய்மொழி மேல் ஆணை!
என் எழுத்து கோல் மேல் ஆணை!
உன் ஆசைக் கனவுகளை நனவாக்குவேன்! நீ
சென்ற பாதையில் என் கால்கள் செல்லும்
நீ விட்டுச் சென்ற பணி தொடரும்!


இக் கவிதை திருமகள் என்பவரால் எழுதப்பட்டது. www.tamilnation.org எனும் இணையத்தளத்திலிருந்து இக் கவிதை எடுக்கப்பட்டது.

Tuesday, April 24, 2007

மூளைக்குச் சவால் : ஒரு புதிர்

கீழே உள்ள ரோமன் இலக்கச் சமன்பாடு பிழையானது. ஆனால் அச் சமன்பாட்டில் உள்ள ஒரே ஒரு குச்சியை/துண்டை[matchstick] மட்டும் இடம் மாற்றுவதன் மூலம் அச் சமன்பாட்டைச் சரியாக்கலாம். எந்த குச்சியை/துண்டை[matchstick] இடம் மாற்ற வேண்டும்?


matchstick க்கு என்ன தமிழ்? மேலே உள்ள என் தமிழ் விளங்காவிட்டால் கீழே அப் புதிரை ஆங்கிலத்திலும் தருகிறேன்.


The Roman numeral equation below is incorrect, but by moving just one of the matchsticks, it can become a correct equation. Which one needs to be moved?


சமன்பாடு - Equation :
IV = III - I

Monday, April 23, 2007

சிங்கள விமானப்படைத் தளம் மீது புலிகளின் வான்படை தாக்குதல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலியில் அமைந்திருக்கும் சிங்கள விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதாகவும் இத் தாக்குதலில் சிங்களப் படைகளுக்குப் பலத்த சேதம் விளைவித்துள்ளதாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளார் இளந்திரையன் கூறியுள்ளார்.

இது பற்றி தமிழ்நெற்றில் வந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


கீழுள்ள பந்தி EST 22:15 PM க்கு இணைக்கப்பட்டது.

சிறீலங்கா விமானப்படைப் பேச்சாளர் தளபதி அஜந்தா சில்வா[Capt. Ajantha Silva ] அவர்கள், விடுதலைப்புலிகள் எந்தவொரு விமானத் தாக்குதல்களையும் பலாலி விமானப்படைத்தளம் மீது நடத்தவில்லை என்றும் ஆட்டிலெறிகள் மூலமே அவர்கள் தாக்குதலை நடாத்தியதாகவும் சேத விபரங்கள் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அசோசியற் பிறஸ்[The Associated Press] செய்தித் தாபனத்திற்குச் சொல்லியுள்ளார்.

அச் செய்தியைப் படிக்க இங்கேகிளிக் செய்யவும்


இத் தாக்குதல் தொடர்புடைய சில செய்திகள்:

பலாலி இராணுவத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்
Sri Lanka's Tamil Tigers bomb air base in north
Tamil Tigers 'launch air strike' : BBC
பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்

Sunday, April 22, 2007

இவ் வார சிறந்த பதிவுகள்

"இவ் வார சிறந்த பதிவுகள்", இந்தத் தலைப்பு சும்மா பரபரப்புக்காக வைக்கப்பட்டது. ஒவ்வொருவரின் வாசிப்பு இரசனையும் வேறுபட்டது. எனக்குச் சிறந்த பதிவாகத் தென்படும் பதிவு இன்னொருவருக்கு குப்பைப் பதிவாகத் தெரியலாம். அத்தோடு தமிழ்மணத்தில் வரும் முழுப்பதிவுகளையும் நேரமின்மை காரணமா வாசிக்க முடிவதில்லை.எனவே வரும் முழுப்பதிவுகளையும் வாசிக்காமல், இவைதான் சிறந்த பதிவுகள் என்பது நீதிக்குப் புறம்பானது. ஆக, இந்த வாரம் நான் வாசித்த பதிவுகளில் பிடித்த பதிவுகள் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

நான் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளை இங்கே பட்டியலிடுகிறேன். இப் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வாசித்துவிட்டு அங்கே உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதி அப் பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

சும்மா எழுந்தமானமாகப் பதிவுகளை வரிசைப்படித்தியுள்ளேன். எந்த ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை.

மிக்க நன்றி.
  1. கவிதைகள்
    1. சகோதரிக்கு...
    2. புனிதமற்ற காசி!
    3. சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..!
    4. இன்ப வதை...
    5. காலங்கள் தந்த ஏமாற்றங்கள்
    6. நம்பாதீர்கள் மஹாஜனங்களே
    7. சிவன் வந்தான்
    8. கருவறை
    9. எழுதிவிட முடியாத ஒரு கவிதை
    10. தனிமையின் குரல்
    11. சீர்திருத்தங்கள்!
  2. அனுபவம்
    1. அவதானம்
    2. சல்லி அம்மனும் கடல் அம்மாவும்"
    3. வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2
    4. வாழ்வென்பது வண்ணங்கள்
    5. வாஷிங்டன் முருகனுக்கு அரோகரா
    6. அடுத்து என்ன?
  3. வரலாறு
    1. சோழர்களின் பொருளாதாரப் போர்கள்
    2. அன்னை பூபதி
    3. ஃபோர்ட்ரான் உருவாக்கிய ஜான் பேக்கஸ்
    4. சேகுவேரா --- வரலாற்றின் நாயகன் - 3
  4. ஆன்மீகம்
    1. செல்போனும் ஆன்மீகமும்
    2. வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் (பாடல் 47)
  5. ஒலி/ஒளி
    1. உ.இ.ப.மா.சங்கம் கலை விழா 2007
    2. ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
    3. நீங்கள் கேட்டவை - பாகம் 2
    4. பூபதித்தாய் அவள் போதித்தாள்
    5. உங்களால் "நாதஸ்"(அ) ஒத்து ஊத முடியுமா?
  6. சமூகம்
    1. தம்மின் மெலியாரை நோக்கி
    2. தாலி பாக்கியம் நிலைக்க வேண்டி, குழந்தைகள் கழுத்தில் தாலி மற்றும் நகைகளை அணிவித்த கொடுமை.
  7. கருத்து
    1. நிஜமான ஆன்மீகப் பதிவர்கள் பார்வைக்கு
    2. ஐப்பீ
    3. கானா பிரபாவுக்கு - HATS OFF!!!
    4. படலைக்கு படலை
    5. ஐப்பீ

Saturday, April 14, 2007

கனேடியப் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துக்க்கள்.


இன்று தமிழ்-சிங்கள புத்தாண்டு தினம். இந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்க்கனேடியர்களுக்கு கனடாவின் பிரதமர் மேதகு ஸ் ரீபன் காபர் [Hon. Stephen Harper]அவர்கள் தனது சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.வாழ்த்துச் செய்தியை பெரிதாக்கி வாசிக்க கீழுள்ள வாழ்த்துச் செய்தியில் கிளிக் செய்யுங்கள்.



படம், தகவல் : தமிழ்க்கனேடியன்

Friday, April 13, 2007

யாழ்ப்பாண அரச குடும்பத்தின்[Royal Family of Jaffna] இணையத்தளம்

யாழ்ப்பாணப் பேரரசு போர்த்துக்கீசரினால் அழிக்கப்பட்டதாக வரலாறு. யாழ்ப்பாணப் பேரரசின் கடைசி மன்னன் சங்கிலியன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் தான் நான் அறிந்த யாழ்ப்பாண வரலாறு.

கோவா அப்போது போர்த்துக்கீசரின் ஆட்சியின் கீழ் இருந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

யாழ்ப்பாண மன்னர்கள் தங்களின் பெயரோடு "ஆரியச்சக்கரவர்த்தி" எனும் சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். யாழ்ப்பாண அரசின், அதாவது இந்த "ஆரியச்சக்கரவர்தி" வம்சத்தின் வாரிசுகள் தாங்கள்தான் என ஒரு இணையத்தளத்தில் உரிமை கொண்டாடுகிறார்கள் சிலர். இதில் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது.

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்[The Official Website of The Royal Family of Jaffna ] என அதன் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Remigius Kanagarajah என்பவர்தானாம் இப்போது இளவரசர் எனவும் அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுளது.

இவர்கள் இப்போது நெதர்லாந்தில் [The Netherlands ] வசிக்கிறார்களாம்.

தான் ஏன் யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசு என சொல்கிறேன் என்பதை இப்படிச் சொல்கிறார் திரு. கனகராஜா:

"Although the Kingdom of Jaffna was destroyed by the Portuguese by 1621, it still exists through me, my family and other existing descendants of the Royal Family of Jaffna. The reason I am coming forward now to claim this succession is grounded in the need to prove to the younger generation and the world that there was once a strong Kingdom in Jaffna."
மேலே உள்ள பந்தியின் தமிழாக்கம்.
"1621ம் ஆண்டுக்குள் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட போதிலும், என் மூலமும் எனது குடும்பம், மற்றும் உறவினர்கள் மூலமும் யாழ்ப்பாண இராச்சியம் இன்றும் இருக்கிறது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலமான இராச்சியம் இருந்தது என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிரூபிக்கவே நான் யாரென்பதைச் சொல்ல முன்வந்தேன்"

தமது முன்னோர் இராமேஸ்வரத்தில் வாழ்ந்த கங்கா வம்சத்தினர் எனவும், பின்னர் அவர்கள் பிராமணர்களுடன் திருமணங்கள் செய்து கொண்டதால் "ஆரியர்" எனும் அடைமொழியைத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்றும் சொல்கிறார் கனகராஜா.

சரி, நீங்களும் அந்த இணையத்தளத்தைப் பார்க்க/படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Sunday, April 08, 2007

இலங்கை எங்கே போகிறது? -- ஒரு பேட்டி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவாவுக்கு வருகைதந்த சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வி.


கேள்வி: இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஊடகத்துறையை சார்ந்தவர் என்ற வகையில் இன்று அங்குள்ள நிலைமை என்ன?

பதில்: உண்மையை எழுதுகின்ற தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது. உண்மையை எழுதும், அரசாங்கத்தை, அரச படைகளை விமர்சிக்கும் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. பல தமிழ் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். சிலர் பத்திரிகை தொழிலிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அச்சுறுத்தப்படுகிறார்கள். ஊரடங்கு சட்டநேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் இராணுவத்தின் அனுமதி பெறவேண்டும். கைத்தொலைபேசி, இன்ரநெற் வசதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டிருக்கிறார். இதுவரை அவர் விடுதலை செய்யப்படவில்லை. இவ்வாறு மிக மோசமான அபாயகரமான சூழலில் ஊடகவியலாளர் உள்ளனர்.

கேள்வி: கொழும்பில் ஊடகவியலாளர் பரமேஷ்வரி மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த மூவரும் கடத்தப்பட்டார்கள். பின்னர் அவர்களை கடத்தியது சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவு என்பதை அரசாங்கம் ஒத்துக்கொண்டிருக்கிறது. கடத்தல் என்பது ஒரு கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு எதிராக சுதந்திர ஊடக அமைப்பு ஏதாவது சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

பதில்: பரமேஷ்வரி கடத்தப்படவில்லை, அவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவரை விடுவிப்பதற்காக சுதந்திர ஊடக இயக்கம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அவர் இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை விடுவிப்பதற்காக போராட்டங்களை நடத்தினோம். பல வழிகளில் அழுத்தங்களை கொடுத்தோம். அவர் இப்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

தொழிற்சங்கவாதிகள் மூவரை கடத்தி 24 மணிநேரத்தின் பின்தான் அவர்களைக் கைது செய்ததாக அரசாங்கம் அறிவித்தது. இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. சிறிலங்கா அரசாங்க படைகளும் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஏனைய தொழிற்சாங்க வாதிகள் மூவரின் கடத்தல் மற்றும் கைது தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கேள்வி: இந்த கடத்தல்களுக்கான காரணம் என்ன?

பதில்: பல காரணங்கள் இருக்கலாம். இரகசியமாக கைது செய்ய வேண்டும் என்பதற்காக, அவர்களை தொடர்ந்து விடுவிக்காமல் வைத்திருப்பதற்காக, வேறு தீய நோக்கங்களும் இருக்கலாம். இந்த கடத்தல்களில் அரசாங்கப் படைகள் மட்டுமல்ல சில குழுக்களும் ஈடுபட்டிருக்கின்றன.

இலங்கையில் நிலைமை என்பது படுமோசமாக போய் கொண்டிருக்கிறது. யார் யார் என்ன நோக்கத்திற்காக கடத்துகிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது. இவர்கள் பணம் பறிப்பதற்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் கடத்துவதாக சொல்கிறார்கள். சிலர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பலருக்கு என்ன நடந்தது என தெரியாமல் இருக்கிறது.

இந்த கடத்தல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இந்த கடமையை செய்யாமல் கடத்தல்காரர்களுக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் இதைப்பற்றி பேச அஞ்சுகிறார்கள். பத்திரிகைகள் இதை எழுத அஞ்சுகின்றன. தங்களுக்கும் ஆபத்து வந்துவிடும் என எல்லோரும் வாயடைத்துப்போய் இருக்கிறார்கள். இதனால் அராஜகம் அதிகரித்து விட்டது.

கேள்வி:இந்த போரைப்பற்றி சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பதில்: பெரும்பாலான சிங்கள மக்கள் இந்த போரில் அரசாங்கம் வெல்லும் என நினைக்கிறார்கள். முன்னர் இருந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கம் விடுதலைப்புலிகளை தோற்கடித்து யுத்தத்தில் வெற்றி அடையும் என நினைக்கிறார்கள். ஆனால் யுத்தத்தில் யாரும் வெல்லப்போவதில்லை என்ற உண்மையை சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் உணரத் தவறுகிறார்கள்.

கேள்வி:அரசாங்கம் போரில் வெல்லும் என சிங்கள மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்?

பதில்: ஒன்று அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் செய்கின்ற பிரசாரம்.இரண்டாவது கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி அங்கு விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை போன்ற காரணங்கள்தான் சிங்கள மக்கள் அப்படி நினைப்பதற்கு காரணம் என நினைக்கிறேன். முக்கியமாக பிரசாரம்தான் காரணம்.

வாகரை மற்றும் மட்டக்களப்பு செய்திகளை பார்த்தால் அங்கு எல்.ரி.ரி.ஈ.யின் கதையே முடிந்திருக்க வேண்டும். அரசாங்கம் வெளியிட்ட தகவல்களை, சிங்கள ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கணக்கு பார்த்தால் கிழக்கில் ஒரு எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் கூட இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றும். சிங்கள மக்களுக்கு உண்மையில் இந்த போர் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைப்பதில்லை.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் என்ன நினைக்கிறது?

பதில்: அரசாங்கம் இந்த போரில் தாங்கள் வெற்றி பெறுவோம் என நினைக்கிறது. அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு முதல் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை முற்றாக தோற்கடித்து அழித்து விடலாம் என நினைக்கிறது. எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை தோற்கடித்து விட்டால் தான் விரும்பிய ஒரு தீர்வு திட்டத்தை வைக்கலாம் என அரசாங்கம் நினைக்கிறது.

கேள்வி:அப்படியானால் அடுத்து என்ன நடக்கப்போகிறது?

பதில்: நிச்சயமாக அங்கு பெரியதொரு போர் ஒன்று நடக்கப்போகிறது. சமாதானப்பேச்சு வார்த்தை என்பதற்கான சாத்தியமே இல்லை. இரு தரப்புமே போருக்கு தயாராகி விட்டார்கள். கடந்த காலத்தில் நடந்ததை விட மிக உக்கிரமான போர் நடக்கலாம். பல அழிவுகள் ஏற்படலாம். அவை பெரும் அதிர்ச்சி தரும் அழிவுகளாக இருக்கலாம்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏதாவது ஒரு தரப்பு சில சமர்களில் வெல்லலாம். சில வேளைகளில் அரசாங்கம் சில சமர்களில் வெல்லலாம், ஆனால் இந்த போரின் மூலம் மக்களை வெல்லமுடியாது.

அரசாங்கம் உண்மையாகவே நாட்டில் பிரச்சினைத் தீர்க்க வேண்டும். தமிழ் மக்களுக்கும் அவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை வழங்கி சுமுகமான தீர்வை கொண்டுவரவேண்டும் என விரும்பினால் போரை உடனடியாக நிறுத்தி விட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வை காணவேண்டும். அதைவிடுத்து போரை நடத்திக்கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக கூறுவது ஏமாற்றுவேலை.

கேள்வி: அப்படியானால் இனி சமாதான பேச்சுவார்த்தை அமைதி முயற்சி என்பதெல்லாம் தோற்றுப்போன விடயம் என்கிறீர்களா?

பதில்: என்னைப்பொறுத்தவரை நாடு போகிற போக்கை பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது கஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். இப்போது இரு சமூகங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி அதிகரித்துக்கொண்டு போகிறது. நாங்கள் பேச்சுவார்த்தை அமைதி வழியில்தான் தீர்க்க வேண்டும் என்கிறோம். எங்களுக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அன்பாக பழகுகிறோம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இரு சமூகங்களிலும் இருக்கிற இளைய தலைமுறை என்ன சொல்கிறது, போரைத்தானே அவர்கள் விரும்புகிறார்கள். இனிவரும் காலத்தை கற்பனை பண்ணிபார்க்கவே முடியாமல் இருக்கிறது. அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்று சொல்கிறது. அந்த ஐக்கிய இலங்கை என்பதை இனி நினைத்துக்கூட பார்க்க முடியாது. இரு சமூகங்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து செல்கிறது.

கேள்வி:அப்படியானால் நாடு இரண்டாக பிரிந்து விடும் என்கிறீர்களா?

பதில்: பூகோள அரசியல் நிலைமைகளை பார்க்கும் போது தமிழ் அரசுக்கான சந்தர்ப்பம் குறைவாகவே தெரிகிறது. பூகோள அரசியல் நலன்கள் காரணமாக தமிழ் அரசு அமைவதற்கு தடையாக சில விஷயங்கள் இருக்கின்றன.

அதேநேரம் சிங்களவர்களும் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க கூடிய சமஷ்டி அதிகாரத்தை வழங்கும் வாய்ப்பும் இல்லை. சிங்களவர்கள் மாகாணசபை முறையை வழங்கினால் போதும் என நினைக்கிறார்கள். சிங்களவர்களைப்பொறுத்தவரை மாகாணசபைக்கு மேல் ஒரு துளிகூட சிந்திக்க தயாராக இல்லை.

தமிழர்களைப்பொறுத்தவரை பூரண அதிகாரங்களைக்கொண்ட சமஷ்டி ஆட்சிக்கு கீழ் வேறு எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.


இச் செவ்வி கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் வெளிவந்தது [சித்திரை 08,2007]. நன்றி தினக்குரல்.

Tuesday, April 03, 2007

சோசலிஸம் எனும் மோச[லிச]ம் --- கவிதை

சோசலிஸ மெனும் மோசலி சத்தினால்
சோற்றுக்குப் பஞ்சமடா! - இங்கு
பேசும் இஸமெல்லாம் பாட்டாளி வாயில்மண்
போடும் இஸங் களடா!

பிற்போக்குக் காரர்களால்
பின்தள்ளப் பட்டீர்கள்
முற்போக்குக் காரர் நாம்
முறியடிப்போம் இன்னல் என்றார்.

எப்போக்குக் காரர் வந்தும்
இன்னல் களையவில்லை
துன்பம் தொலையவில்லை
துயர்க்கதையோ முடியவில்லை

எத்தனையோ பேர்கள் வந்தார்கள்
எதையெதையோ சொன்னார்கள்
மெத்தையிலே உன்னை வைத்து
மேன்மையுறச் செய்வோமென்று
அத்தனையும் நம்பியுள்ளம்
ஆசையுடன் தொலையவில்லை...

மண்ணதிர விண்ணதிர வாய்ச்சிலம்ப மாடி
மாண்டொழிந்த பழமையினை இன்னுமிங்கு கூறி
கண்ணெதிரே கொடுமை கண்டும் கற்சிலையாய் மாறி
காரேறிப் பவனிவரும் கனவான்கள் கூட்டம்
உன்னுதிரம் உறிஞ்சியுடல் உப்புகின்றதை நீ
ஓர் நிமிடம் சிந்தித்தால் உன்வாழ்வு மலரும்
புண்ணதனில் வேல்பாய்ச்சப் பொறுத்திருப்ப தோடா?
பொங்கியெழு சிங்கமென எந்தன் மலைத்தோழா!

இக் கவிதை வரிகளின் சொந்தக்காரர் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான குறிஞ்சித் தென்னவன்.

"நுவரெலியா லபுக்கலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து, தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது இயற்பெயர் V.S.வேலு என்பதாகும். 'துயரம் தோய்ந்த குடும்பச் சூழலிற் பிறந்து, அச் சூழலியே இன்றுவரை வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன்' என அவரே கூறுவார். இவர் தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரையே கற்றவர். 1934ம் ஆண்டு பிறந்த இவர் 1946ம் ஆண்டில் வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாத நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தோட்டத் தொழிலாளியாகவே தமது வாழ்வை மேற்கொண்டு, இன்றுவரை முதுமையடைந்த நிலையிலும் தொழிலாளியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 'உழுதுண்டு வாழ வழியில்லை. தொழுதுண்டு பின்செல்லவும் மனமில்லை.தோட்டத் தொழிலாளியானேன்' என்கிறார்."
[பேராசிரியர் க. அருணாசலம். மலையகத் தமிழ் இலக்கியம். பேராதனைப் பல்கலைக்கழகம். பக்.140, 141,147]