Sunday, September 24, 2006

படமும் கதையும் - 1

இது ஈழத்தில் எனது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகன் ஆலயம். கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது நான் எடுத்த படம். ஈழத்தில் உள்ள தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஈழத்திலேயே கடம்பமரத்துடன் கூடிய கந்தன் ஆலயம் இதுதான் எனச் சொல்கிறார்கள். இக் கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஈழத்திற்கு வரும் போதெல்லாம் இந்த ஆலயத்திற்கு வந்து இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம். ஈழத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் முருகனை ஒவ்வொரு பெயரால் அழைப்பார்கள். நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் என்பர். செல்வச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் முருகனை அன்னதானக் கந்தன் என்பார்கள். எமது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகனை காவடிக் கந்தன் என்பார்கள். திருவிழாக் காலங்களில் தமது நேர்த்திக்கடனை காவடிகள் எடுத்துச் செலுத்துவார்கள். ஈழத்தில் உள்ள ஆலயங்களில் அதிகளவு காவடி இக் கோவிலில் தான் எடுக்கப்படும். அதனால் காவடிக் கந்தன் என்றழைப்பர்.

22 comments:

said...

வெற்றி,
நல்ல படமும் விளக்கமும். ஈழத்திலை எந்த ஊரிலை இந்தக் கோயில் உள்ளது?

said...

வெற்றி, இந்த முருகன் எந்த ஊரில் குடிகொண்டுள்ளான்.? (அல்லது நீங்கள் எவிடம்?::))

said...

வெற்றி!
இது;மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கோபுரமா? மிகச் சிறு வயதில் நல்ல பெரிய கோபுரத்துடன் பார்த்த கோவிலதே!! பின்பு இப்போ ஈழத்தில் நிறையக் கோவில்கள் பல ஊர்களில் கோபுரத்துடன் மிளிர்கிறது. அல்லது இது புங்குடுதீவா???காரைநகரா??? பழமையான கோவிலென்பதால் மாவிட்டபுரமென தான் நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்

said...

வெற்றி

கோவிலின் படத்துடன் நல்லதொரு பதிவை கொடுத்துள்ளீர்கள். அருமை..

பதிவுக்கு நன்றி.

said...

அருண், கனக்ஸ், யோகன் அண்ணா, சிவபாலன்!
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

said...

கந்தன் காலடியை வணங்கினால் கடவுளர் யாவரையும் வணங்குதல் போலே.

படத்திற்கும் செய்திக்கும் நன்றி வெற்றி.

said...

குமரன்,
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அருண், கனக்ஸ், யோகன் அண்ணை,

யோகன் அண்ணா, இது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் இல்லை. மாவிட்டபுரத்தில் கடம்பமரம் இல்லையே! மாவிட்டபுரம் என் ஊருக்கு மிகவும் அருகில்தான் உள்ளது.
இது எனது ஊரான மாதகலில் எழுந்தருளியிருக்கும் முருகன் ஆலயம். மாதகல் நுணசை முருகன் ஆலயம்.

said...

வெற்றி!
இக்கோபுரம் கட்டி எத்தனை வருடமிருக்கும்!மாதகலில் கடம்பமரமுறை குமரன்,அழைப்பிருந்தால் பார்க்கலாம்.
யோகன் பாரிஸ்

said...

யோகன் அண்ணை,

//வெற்றி!
இக்கோபுரம் கட்டி எத்தனை வருடமிருக்கும்!//

இக் கோபுரம் மிகவும் அண்மையில்தான் கட்டப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் எமது ஊர் மக்கள் முயற்சி. 5 அல்லது 6 வருடங்கள்தான் ஆகியிருக்குமென நினைக்கிறேன். சரியாகத் தெரியாது.

//மாதகலில் கடம்பமரமுறை குமரன்,அழைப்பிருந்தால் பார்க்கலாம்.//

எமது தாயகத்தில் அமைதி திரும்பி தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலை வரும் போது ஈழத்தின் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. உங்கள் எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல நுணசைக் கடம்பன் அருள்புரிவானாக.

said...

Thanks for the photo and info:-)

said...

LFC,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

பி.கு:- உங்களின் தளம் பார்த்தேன். நானும் உதைபந்தாட்டா விசிறிதான்.

said...

வெற்றி

நல்ல பதிவு; தகவல்களும் கூட!
வாரியார் திருவடிகள் பட்ட தலமா? ஆகா!

//கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது//
கடம்ப மரம் பற்றிப் பதிவு யாராவது போடுவார்களா என்று ஆவல்;

கந்தா கடம்பா கதிர் வேலவனே...
கார்த்திகை மைந்தா கடம்பா, கடம்பனே!

said...

வெற்றி!

கோவில்பற்றிய உங்கள் குறிப்புக்கள் அனைத்தும் சரியானவை. ஈழத்தில் கடம்பமரம் நிற்கும் ஒரே ஆலயம், அதிலும் முருகன் ஆலயம் என்பது மேலதிக சிறப்பு.

இதன் கோபுரம் அண்மைக்காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னர் கேரளப்பாணியிலான ஒரு பெரிய மண்டபம் இருந்தது. புதிதாகக் கோபுரம் கட்டும்போது அந்த மண்டபத்தை அகற்றி விடுகின்றார்கள். :(

said...

வெற்றி, கால்கரிக்கு அருகில் உள்ள ஆல்பெர்ட்டவின் தலைநகர் எட்மண்டனில் ஈழத்தவரின் மஹாகணபதி கோவில் உள்ளது. அங்கு சென்று வந்தால் ஊருக்கு போய் வந்த நினைப்பு வரும். வாழ்க ஈழத்தவரின் கோவில்கள்

said...

//மாவிட்டபுரம் என் ஊருக்கு மிகவும் அருகில்தான் உள்ளது.
இது எனது ஊரான மாதகலில் எழுந்தருளியிருக்கும் முருகன் ஆலயம். மாதகல் நுணசை முருகன் ஆலயம்.
//

அண்ணை,
மாதகலுக்கு மிக அருகில்தான் மாவிட்டபுரம் இருக்கோ? இல்லாட்டி 'வன்னிப்புத்தி' வேலை செய்யுதோ? கரைறோட்டைப் பிடிச்சுப்போனால் நாலைஞ்சு ஊர்தாண்டி வந்திடும். ஆனா யாழ்ப்பாணத்துக்க அதெல்லாம் 'மிக அருகில்' எண்ட கண்ணில வராது.
உங்கடை ஊர்க்காரர் கூப்பிடுதூரத்திலயிருக்கிற பண்டத்தரிப்புக்கு வாறதுக்கே சாப்பாடு கட்டிக்கொண்டு வெளிக்கிடுற ஆக்கள்.

__________________________
நானும் கூட்டாளியளும் விடலை வயசில நுணசைக்கு அடிக்கடி வருவம் தேர்பார்க்க. நுணசைத் தேரில இருக்கிற சித்திரங்களைப் பாத்திருக்கிறியளோ?
____________________
என்னுடைய பார்வையிலும் யாழ்ப்பாணத்தில் அதிகளவு காவடி தூக்கப்படும் கோயில்திருவிழா நுணசைதான் எண்டு நினைக்கிறன். அதிலயும் பறவைக்காவடி சொல்லத் தேவையில்லை. மருதடி, நல்லூர் போன்ற பிரபலமான திருவிழாக்களில்கூட நுணசையின் பத்திலொரு பங்கு காவடி வருமா தெரியாது. அதுவும் பறவைக்காவடியை எங்காவது அருந்தலாகத்தான் காணலாம்.

said...

கண்ணபிரான் ரவிசங்கர்,
நன்றி.

/*கடம்ப மரம் பற்றிப் பதிவு யாராவது போடுவார்களா என்று ஆவல்; */

உண்மைதான் ரவி. எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது. எதற்கும் இராம.கி ஐயா அவர்களிடம் கேட்டுப் பார்ப்போம்.

-----------------------------------
மலைநாடான்,

/* இதன் கோபுரம் அண்மைக்காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்னர் கேரளப்பாணியிலான ஒரு பெரிய மண்டபம் இருந்தது */

அட, எங்கடை ஊரெல்லாம் வந்திருக்கிறீர்கள், huh? முந்தி முன்னால் பெரிய மண்டபம் இருந்தது. அம் மண்டபத்தில் தான் தவில் நாதஸ்வரக் கச்சேரிகள், பிரசங்கம், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடந்து வந்தது. முந்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பின்னேரங்களிலும் அம் மண்டபத்தில் தான் முருக பஜனை நடக்கும். அப்ப நான் சின்னப் பெடியன். கற்கண்டு வாங்குவதற்காக பஜனைக் குழுவோடு சேர்ந்து படிப்பேன். ம்ம்ம்ம்... அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே...


-------------------------------
Calgary சிவா,
தகவலுக்கு நன்றிகள். இதுவரை Calgary வரவில்லை. வந்தால், கணபதி தரிசனம் கிடைக்குதா பார்ப்போம்.

-----------------------------
வசந்தன்,

/* அண்ணை,
மாதகலுக்கு மிக அருகில்தான் மாவிட்டபுரம் இருக்கோ? */

இதென்ன கோதாரிச் சீவியமடா! :)
சும்மா ஒரு சொல்லுக்கும் சொல்ல விட மாட்டியள் போல, huh?
வசந்தன், உண்மேலை, மாவிட்டபுரம் மாதகலில் இருந்து கன தூரம் இல்லைத்தானே, இல்லையா? எனக்கு வடிவாய்த் தெரியாது.

/*'வன்னிப்புத்தி' வேலை செய்யுதோ? */
வசந்தன், அதென்னையா வன்னிப்புத்தி?

/* உங்கடை ஊர்க்காரர் கூப்பிடுதூரத்திலயிருக்கிற பண்டத்தரிப்புக்கு வாறதுக்கே சாப்பாடு */

ஹிஹிஹிஹி...

said...

கந்தக் கடம்பனை நமது சொந்தக் கடவுளை ஈழத்துக் கோயிலில் காணும் மகிழ்ச்சியே மகிழ்ச்சி. ஊர் கூடி இழுத்த தேர் இன்று மிளிர்வுற்று இருக்கிறது.

கடம்ப மரம் முருகனோடு மிகவும் தொடர்புடையது. தார் கடம்பத்தான் எம் கடவுள் என்கிறது இலகியம். இன்னும் பல இலக்கியங்களில் கடம்பக் குறிப்புகள் உண்டு. இப்பொழுது தமிழக முருகன் கோயில்களில் கடம்ப மரம் இல்லையென்றே தோன்றுகிறது. அந்தக் கடம்பு கடலைக் கடந்து இலங்கையில் யாழில் செழித்திருப்பது மிகச் சிறப்பு. தமிழர் பெருமை கொள்ள வேண்டியது பொறுப்பு.

இந்தக் கோயிலில் காவடிக் கந்தன் என்று வழங்குவதாகச் சொன்னீர்கள். என்னென்ன காவடிகள் இங்கு எடுக்கப்படும்?

said...

அன்பின் இராகவன்,

/* இப்பொழுது தமிழக முருகன் கோயில்களில் கடம்ப மரம் இல்லையென்றே தோன்றுகிறது.*/

தமிழகத்தில் ஒரு முருகன் ஆலயத்திலும் கடம்பமரம் இல்லையா?
ஆகா, எனது ஊரில் உள்ள முருகன் மட்டும் தானா கடம்பமர நிழலில் எழுந்தருளியுள்ளான். நினைக்கவே பெருமிதமாக இருக்கிறது.

இராகவன் இதனால் தானோ என்னவோ வாரியார் சுவாமிகள் ஈழம் வரும் போதெல்லாம் இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம். இன்னுமொரு சுவாரசியமான செய்தி, இங்கே கடம்பமரத்தோடு முருகன் எழுந்தருளியுள்ளதனால்தான் போலும் எம் ஊரில் பல பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு கடம்பரத்தினம், கடம்பகுமார், கடம்பன் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்கின்றனர்.

/* தார் கடம்பத்தான் எம் கடவுள் என்கிறது இலகியம். இன்னும் பல இலக்கியங்களில் கடம்பக் குறிப்புகள் உண்டு. */

இராகவன், கடம்பமரம் பற்றி தமிழ் இலக்கியம் மற்றும் சைவத் திருமுறைகளில் சொல்லியுள்ளது பற்றி தயவு செய்து ஒரு பதிவு போடுங்களேன். கடம்பமரம் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளது.

/* இந்தக் கோயிலில் காவடிக் கந்தன் என்று வழங்குவதாகச் சொன்னீர்கள். என்னென்ன காவடிகள் இங்கு எடுக்கப்படும்? */

பலவிதமான் காவடிகளும் வரும். குறிப்பாகத் தேர்த்திருவிழாவிலன்று.
நான் சொல்லும் காவடிகளின் பெயர் தமிழகத்தில் புழக்கத்தில் உண்டா தெரியவில்லை. எதற்கும் சொல்கிறேன். புரியாவிட்டால் கேளுங்கள். படங்கள் கிடைத்தால் படங்களுடன் பின்னர் விளக்குகிறேன்.

பறவைக்காவடி[தூக்குக் காவடி]
செடில் காவடி,
காவடி
மிதி காவடி
தேர்க் காவடி
அலகுக் காவடி

இன்னும் பல...

said...

நல்ல பதிவு. நன்றி வெற்றி!

said...

வெற்றி 'வன்னிப்புத்தி' எண்டதில ஒரு உட்குத்தும் இல்லை.
வன்னியர்களுக்கும் யாழ்ப்பாணத்தாருக்கும் இடையில தூரங்களைக் குறிக்கிறதில பெரிய வித்தியாசமிருக்கு. அஞ்சுமைல் தூரத்தை சாதாரணமாக 'கூப்பிடு தூரம்' என்று சொல்வார்கள் வன்னியில். வன்னிவந்த புதிதில் யாழ்ப்பாணத்தார் இந்த தூரமளக்கும் முறையில் வன்னியர்களோடு பட்டபாடு பெரிய முசுப்பாத்தி.
"கூப்பிடு தூரம்" என்பதை வைத்து வன்னியன் பூராயத்தின் தொடக்க காலத்தில் ஒரு பதிவு போட்டார்.

முத்தையன்கட்டிலயிருந்து புதுக்குடியிருப்பு எங்கயெண்டா 'உதில பக்கத்திலதான்' எண்டுதான் பதில்வரும். அதுசரியும்கூட. ஏனெண்டா முத்தையன்கட்டுக்கு அடுத்த பட்டினம் புதுக்குடியிருப்புதான். ஆனா யாழ்ப்பாணத்தில அது நகர்ப்புறத்தியிருந்து கொடிகாமம் வாற தூரம்.

பெரிய தூரங்களையும் சின்னனாச் சொல்லிறதைத்தான் வன்னிப்புத்தி எண்டன். நீங்களும் அங்க இருந்தனியள் தானே?
___________________________
உங்கட ஊரில கடம்பம் எண்டதைக் கொண்டு பெயர்வைப்பது அதிகளவில் கண்டுள்ளேன். அதுவும் நுணசைக் கோயிற் சுற்றாடலில் உள்ளவர்கள்.

said...

மாவிட்டபுரம் கொஞ்சம் தூரம்தான்.
"மிக அருகில்" எண்டு சொல்லிறதுக்கு சுழிபுரம், சில்லாலை, பண்டத்தரிப்பு, மாரீசன்கூடல், இளவாலை, சேந்தாங்குளத்துடன் நிறுத்திவிடலாமென்று நினைக்கிறேன்.
;-)
__________________________
காவடியில புதுப்புது முறையில எல்லாம் எடுப்பினம்.
காலுக்கு ஆணிச்சப்பாத்து போட்டு, தூக்குக் காவடியில நெஞ்சிலயும் வயித்திலயும் முள்குத்தி தொட்டில் தொங்கவிட்டு அதுக்குள்ள குழந்தையப் போட்டு எண்டு திணிசுதிணிசா எடுப்பினம்.

said...

இ.கொ,
நன்றி.

வசந்தன்,

/*உங்கட ஊரில கடம்பம் எண்டதைக் கொண்டு பெயர்வைப்பது அதிகளவில் கண்டுள்ளேன். அதுவும் நுணசைக் கோயிற் சுற்றாடலில் உள்ளவர்கள். */

உண்மை. இதைத்தான் இராகவனுக்கு நான் சொல்லிய பதிலில் மேலே சொல்லியிருந்தேன். எனக்குத் தெரியக்கூடியதாக 4 கடம்பரத்தினம், 2 கடம்பராணி, 3 கடம்பன் என் சுற்று வட்டாரத்திலேயே இருக்கினம் எண்டால் பாருங்கோவேன்.

/* காவடியில புதுப்புது முறையில எல்லாம் எடுப்பினம்.
காலுக்கு ஆணிச்சப்பாத்து போட்டு, தூக்குக் காவடியில நெஞ்சிலயும் வயித்திலயும் முள்குத்தி தொட்டில் தொங்கவிட்டு அதுக்குள்ள குழந்தையப் போட்டு எண்டு திணிசுதிணிசா எடுப்பினம். */

வசந்தன், தேர்த்திருவிழா பார்த்திருபீங்கள் தானே? எவ்வளவு காவடி, எத்தனை விதமான காவடிகள்...

நான் நினைக்கிறேன் எங்கடை ஊரிலை நுணசைக் கோயில் திருவிழாவும், கெவித் திருவிழாவும்[லூர்து மாதா] திருவிழாவும் ஊர் முழுக்க களை கட்டிவிடும் இல்லையோ?

2005ம் ஆண்டு கெவித் திருவிழாவிற்குச் சென்று அன்னையைத் தரிசிக்கும் பேறு கிடைக்கப்பெற்றென். படங்கள் எடுத்தேன். நேரம் கிடைக்கும் போது பதிவேற்றுகிறேன்.