Friday, September 29, 2006

துப்பாக்கி எப்போது பூப்பூப்பது -- [கவிதை]

அன்பனே
உன்
தோழியைவிட
துப்பாக்கியை நேசிக்கும்
தோழனே

என்னோடு
மெழுகுவத்திகளும்
அழுதுகொண்டிருக்கும்
இந்த
மெல்லிய இரவில்
கடிதத்தில் விழும் என்
கண்ணீர்ச் சொட்டு

கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?

நாங்கள்
நட்சத்திரங்களைப் பார்த்து
நாளாயிற்று
எங்கள் வானத்தைப்
புகைமண்டலம்
போர்த்திருக்கிறது

மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்

அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை.

காதலா
நீயும் நானும்
ரகசியமாய் நடந்து போகும்
ராத்திரிச் சாலை
இப்போது -
வெடிகுண்டுகளின்
விதைப் பண்ணையாகிவிட்டது

மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.

இனியவனே
என்
வாலிபத்தை
வாசித்தவனே

உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது
?

இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?

ஆனால்
என் தலையணையருகே
சில
உலகக் காவியங்களும்
உன் நினைவுகளும் தவிர
ஒன்றுமில்லை.

இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை

ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.

பிற்குறிப்பு:
[1]இக் கவிதையைப் புனைந்தவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். "ஒரு ஈழப் போராளிக்குக் காதலியின் கடிதம்" எனும் பொருளில் எழுதப்பட்டது.
[2]மேலே இணைக்கப்பட்ட படம் போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு சிங்கள அரசின் எதுவித உதவியுமில்லாமல் அகதிமுகாம்களில் வாழும் தமிழ்பிஞ்சுகள். இப் படம் இணையத்தில் இருந்து சுடப்பட்ட படம். நான் எடுத்த படமல்ல.

10 comments:

said...

வெற்றி,

//கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?
//



கவிதை இங்கே கொடுத்தமைக்கு நன்றி.

said...

முதன்முதலாய்க் கவிதையின் பரிச்சயம் ஏற்பட்டபோது என் வாலிப நாட்களில் நான் வாசித்தது வைரமுத்துவின் கவிதைகள்தான். அப்போது மிகப் பிடித்தும் இருந்தன அவை. இந்தக் கவிதை படித்தபோது எனக்கு ஈழத்தின் துயரம் அவ்வளவாகப் புரியாதிருந்த நாட்கள். என்றாலும் ஏனோ பிடித்திருந்தது. இப்போது வைரமுத்துவின் மொழிவடிவம் தாண்டியும் கவிதைகள் இருப்பதை உணர்ந்துவிட்டாலும், இந்தக் கவிதை பிடித்தே இருக்கிறது நான் ஈழத்தை இன்னும் கொஞ்சம் புரிந்திருப்பதால். நன்றி வெற்றி .

said...

//உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது?

இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?
//
என்ற வரிகள் தவிர கவிதை மொத்தமும் அருமை..
தானே விரும்பி தன் தாய்நாட்டுக்காக போராடும் வீரனுக்குக் காதலியின் நினைவுகள் வராமல் போய்விடுமா? இந்த வரிகள் ஏனோ பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது.. என் புரிதலில் தவறிருக்கலாம்..

said...

அன்பின் சிவபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

said...

செல்வநாயகி, பொன்ஸ்,
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.


மற்றவர்,
//
சக பதிவர்கள் எழுதிய பின்னூட்டத்தை பிரசுரிக்க அவ்வளவு கஸ்ரமா இருக்கா?? //

என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே! சற்று விளக்குவீர்களா?

said...

கவிதையை இங்கே தந்ததற்கு நன்றி

said...

நாகரீகம் கருதி வெற்றி அவர்கள் வைரமுத்துவுக்கு இயற்றியவர் என்ற முறையில் போட்டதைத் திரித்து கவிஞரை [மறைமுகமாக பதிவரையும்] சாடப் புகுவது நியாமில்லை எனத் தோன்றுகிறது.

எனக்கு வைரமுத்துவின் நிலைப்பாடு குறித்து தனிப்பட்ட மாற்றுக் கருத்துகள் உண்டு.

அதற்காக கவிதையின் கருப்பொருளை மறத்தல் சரியல்ல என நினைக்கிறேன்.

ஒரு காதலி பாடுவதாகவே இதனைக் கொள்ளுதல் வேண்டும்.

வைரமுத்துவின் என்றல்ல என நினைக்கிறேன்.

பதிவின் நோக்கம் திசை திரும்பி விடக் கூடாதே எனும் அச்சத்தில்!

தவறெனில் மன்னிக்கவும்.

said...

//ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை
//

வெற்றி அவர்களே..!
மேற்கண்ட வரிகள் உணர்வின் உச்சம் - கவிஞர் நன்றாக எழுதியிருக்கிறார்.

said...

அதனை முழுதுமாக ஒத்துக் கொள்கிறென்.
அதன் தாக்கம் எனக்குத் தெரியாது தான்
ஆனால் நோக்கம் புரியும்.
ஆக்கமாய் ஏதேனும் செய்திட எண்ணுகையில்
எனக்குத் தெரிந்ததைத் தானே நான் செய்ய முடியும்?

'மற்றவர்',
உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன்.
இது பற்றி முன்னம் ஒரு கவிதை முத்து தமிழினியின் பதிவில் இட்டிருந்தேன்.
விரைவில் அதை இங்கே பதிகிறேன்.
நன்றி.

said...

சந்திரவதனா அக்கா, SK ஐயா, கோ.கண்ணன்,

உங்கள் அனைவரினது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

மற்றவர்,
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. ஆனால் உங்களின் கருத்துக்களோடு எனக்குச் சிறிதளவும் உடன்பாடில்லை. ஒவ்வொருவரின் புரிதல்களும், சிந்தனைகளும் மாறுபட்டவை.
different men often see the same subject in different lights என்பது போல் கவிஞரின் கவிதையை வேறு கோணத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். நானோ இன்னுமொரு கோணத்தில் பார்க்கிறேன். அவ்வளவே. இதற்குமேல் இதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.