Monday, September 04, 2006

யாழ்ப்பாண ஊர்கள் வரலாறு -- திருநெல்வேலி - பகுதி-2

சென்ற பதிவில் [யாழ்ப்பாண ஊர்கள் சில - பகுதி-1] யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலி எனும் சொல்லில் முடியும் இடங்களை வரிசைப்படுத்தியிருந்தேன். அவையாவன:

  1. திருநெல்வேலி
  2. அச்சுவேலி
  3. கட்டைவேலி
  4. சங்குவேலி
  5. நீர்வேலி

இப் பதிவில் திருநெல்வேலி எனும் பெயர் அவ்விடத்துக்கு வந்த காரணத்தை நோக்குவோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நல்லூர் உதவி அரச அதிபர் பிரிவில் திருநெல்வேலி அமைந்துள்ளது. இதன் எல்லைப் பகுதிகளாக கொக்குவில், கோண்டாவில், நல்லூர் எனும் இடங்கள் அமைந்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி = திரு + நெல் + வேலி எனக் கூறுகிறார்.

திருநெல்வேலி பற்றிய மரபுக் கதையைப் பார்க்க முன் , இந்த வேலி எனும் சொல் இடப்பெயர்களின் ஈற்றுப் பெயராக எப்படி வந்திருக்கக்கூடும் என்பதை கலாநிதி இ. பாலசுந்தரம் இப்படி விளக்குகிறார்:

"வேலி என்பது = முள், கழி முதலியவற்றாலான அரண், மதில், காவல், நிலம், வயல், ஒரு நில அளவு (6.74 ஏக்கர்), பசுக் கொட்டில், காற்று எனப்பொருள்படும். வேலி பழந்தமிழ்ச் சொல் என்பதும், நிலங்களுக்கு எல்லையாக வேலி அமைக்கும் மரபு பண்டைநாள் முதலாக இருந்துள்ளது என்பதும் ("வேரல வேலி வேர்க்கோட்பலவு" - குறுந்தொகை : 8) தமிழர் பண்பாட்டில் அறியப்படும் செய்திகளாகும். முன்னர் எல்லையைச் சுட்டிய வேலி என்ற சொல், சோழர் காலத்தில் நில அளவைப் பொருளாக வளர்ச்சி பெற்றுள்ளது. வேலி என்பது சோழர் காலத்து நில அளவுப் பெயர்களில் ஒன்று என்பதைப் பின்வரும் கல்வெட்டுச் சான்றுபடுத்துகின்றது.

"உடையார் சிறீ ராஜராஜீச்சுரம்
உடையார்க்கு நிவந்தக் காரராக
நிவந்தமாய் பங்குசெய்தபடி பங்குவழி
ஒன்றினால் நிலன்வேலியினால்."
[நாகசாமி(பதிப்பு) தஞ்சைப்பெருவுடையார் கோயில் கல்வெட்டு:1:52-55)

ஊராட்சி முறையில் ஊர்களுக்கு எல்லை வகுக்கும் போது இயற்கை, செயற்கை நிலைகளில் "வேலி" எனப் பெயர் வைக்கப்பட்டது. அத்துடன் "நிவந்தம்" அல்லது "இறையிலி" நிலம் அரசனால் வழங்கப்பட்ட போது, 'வேலி' என்ற அடிப்படையிலும் நிலம் அளந்து கொடுக்கப்பட்டமையும் நோக்கற்பாலது." (கலாநிதி இ.பாலசுந்தரம், பக்.318)

நான் ஏற்கனவே எனது சென்ற பதிவில் கூறியிருந்தது போல், அக்காலத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஈழ மண்டலத்தின் பல பகுதிகளிலும் குடியேறினர், அல்லது குடியேற்றப்பட்டனர். யாழ்ப்பாடி எல்லாள மன்னனிடமிருந்து யாழ்ப்பணத்தைப் பரிசாகப் பெற்று அங்கு 70 ஆண்டுகள் அரசாட்சி செய்து இறந்த பின்னர் சோழ மண்டல அரசனின் மைந்தன் திருவாரூரில் இருந்து வந்து யாழ்ப்பாண அரசனாகப் பொறுப்பேற்று பல துறையைச் சார்ந்தவர்களையும் தமிழகத்திலிருந்து வரவழைத்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடியமர்த்தினான் என 1915ம் ஆண்டில் வெளிவந்த யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலில் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்கள்

"...வேங்கடகிரியைத் தனக்குச் சன்மஸ்தானமாகவுடைய பாண்டிமழவனை(மழவராயனை)யும் அவன் தம்பியையும் அவன் மைத்துனன் செம்பழகவனையும் திருநெல்வேலியிலிருத்தினான்." (யாழ்ப்பாணச் சரித்திரம், 1915, ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, பக்.18)

"தமிழகத்திலுள்ள திருநெல்வேலி என்ற இடத்திலிருந்து வந்த மக்கள் இங்கு குடியேறியபோது இப்பெயரை இட்டு வழங்கினர் என்பது மரபு. திருநெல்வேலியின் கிழக்கே குளமும் வயலும் காணப்படுகின்றன. தமிழகத்துத் திருநெல்வேலிச் சூழல் போன்றே இங்கும் புவி அமைப்பும் வளம் செறிந்த காணிகளும் காணப்படுதலால் ஒப்புமை நோக்கியும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் ... இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இவ்விரு கோயில்களும் முறையே "வயல்வெளிச் சிவன் கோயில்" , "வயல்வெளி அம்மன் கோயில்" என்று அழைக்கப்படுதல் திருநெல்வேலியிற் பண்டைநாளில் இங்கு வயல்வெளிகள் செறிந்து காணப்பட்டமையை விளக்குகின்றது". (கலாநிதி இ. பாலசுந்தரம், பக்.322).

ஈழமண்டலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் சைவ சமயத்தைத் தழுபுவர்களாக வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு, பின்னர் ஒல்லாந்தர் ஆட்சிக்கு வந்ததும், ஒல்லாந்தர்கள் தாம் உண்பதற்காக மாட்டிறைச்சிச்சாலை ஒன்றை நிறுவ முற்பட்ட போது தமிழ் மந்திரிகளும் , ஈழ மண்டல குடிகளும் அத் திட்டத்தை எதிர்த்தனர். பசு வதை, மற்றும் மாடுகளைக் கொல்வதை சைவ சமயத்தவர்களான ஈழ மண்டல மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வருடங்களின் பின் ஈழ மண்டலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் வருடத்திற்கு ஒரு மாடு அல்லது பசு ஒல்லாந்தர் உண்பதற்குக் கொடுக்க வேண்டுமென ஒல்லாந்தர் ஆணைபிறப்பித்தனர். அவ்வாணையின் படி ஈழத்தின் திருநெல்வேலியில் வசித்து வந்த ஞானப்பிரகாசதேசிகர் முதன்முறைக்குரியவரானார். யாழ்பாடியின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரிய மகாராசனால் திருநெல்வேலியில் குடியிருத்தப்பட்டவர்களின் வழித்தோன்றல் இந்த ஞானப்பிரகாசர். தீவிர சைவ பக்தனான இவர் ஒல்லாந்தருக்கு மாட்டையோ பசுவயோ கொடுப்பது கொடுஞ்செயல் எனக் கருதினார். ஒல்லாந்தர்களுக்கு இறைச்சிக்கு மாடு கொடுத்து இவ்வூரில் வாழ்வதை விட இவ்வூரை விட்டகல்வதே சாலச் சிறந்தது என எண்ணி சிதம்பரத்திற்குச் சென்று குடியேறினார். சிதம்பரம் சென்ற ஞானப்பிரகாசர், "சமஸ்கிருதத்திற் சித்தாந்த சிகாமணி, பிராமண தீபிகையாதியாம், பற்பல கிரந்த நூல்கள் செய்தனரன்றிச் சமஸ்கிருதத்திலுள்ள பெளஷ்கராகமம் சிவஞானசித்தி முதலியவற்றிற்கு உரையுஞ் செய்தனர்'' (யாழ்ப்பாண வைபவ கெளமுதி, 1918, க.வேலுப்பிள்ளை, பக். 152)

"சிதம்பரத்திலேயுள்ள ஞானப்பிரகாசமெனும் தீர்த்தக்குளத்தை வெட்டினாரும் இம்மகானே. யாழ்ப்பாணத்தவராற் சிதம்பரத்தின்கண்ணே கட்டுவிக்கப்பெற்ற மடங்களெல்லாம், இத்திருக்குளத்தின் வடகரை கீழ்க்கரைகளிலேயுள்ளன. தெப்போற்சவ முதலிய சில உற்சவங்களுக்கு சிதம்பராலயத்துச் சுவாமிகள் எழுந்தருளுவது இத் திருக்குளத்துக்கே. இக் குளத்துப் படிக்கட்டுகள் கிலமடைந்துவிட்டமையால் அவற்றைப் புதுப்பிக்க இப்போது யாழ்ப்பாணிகளே பண உதவி செய்து வருகின்றனர்.[இந்துசாதனம்]" (யாழ்ப்பாண வைபவ கெளமுதி, 1918, க.வேலுப்பிள்ளை, பக். 153)

ஞானப்பிரகாசரின் "பெயரால் சிதம்பரத்தில் 'ஞானப்பிரகாசர் குளம்', 'ஞானப்பிரகாசர் மடம்' என்பன இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது" (கலாநிதி இ. பாலசுந்தரம், பக்.322).

அடுத்த பதிவில் அச்சுவேலி பற்றிப் பார்ப்போம். பணிவன்புடன்,
வெற்றி.

14 comments:

said...

நண்பரே
நல்ல பிரயோசனமான கட்டுரை. பழைய வரலாற்று நூல்களைத் துணைக்கழைத்து ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசர்தான் சிதம்பர குளத்தை வெட்டுவித்தவர் என்பது ஆச்சரியம் கலந்த புதிய செய்தி. தொடருங்கள்.

said...

ஈழவேந்தன்,
வணக்கம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசர்தான் சிதம்பர குளத்தை வெட்டுவித்தவர் என்பது ஆச்சரியம் கலந்த புதிய செய்தி//

ஈழத்தமிழர்கள் தமிழகதிற்குச் செய்த சேவைகள் , பணிகள் ஏராளம். அப்படி தமிழகத்திற்குப் பெரும் தொண்டாற்றிய பல ஈழத்தமிழ் மகான்களைப் பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.

said...

திருநெல்வேலி என்ற ஒரு பெயரை எடுத்துக் கொண்டாலே எவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் வருகின்றன. ஒவ்வொரு ஊருக்கும் இப்படித் தேடிப் போனால்? அப்பப்பா! எழுதாமற் போனார்களே இவைகளை!

said...

நல்ல ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறீர்கள்.
தொடருங்கள்.

said...

இராகவன்,

//திருநெல்வேலி என்ற ஒரு பெயரை எடுத்துக் கொண்டாலே எவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் வருகின்றன. ஒவ்வொரு ஊருக்கும் இப்படித் தேடிப் போனால்? அப்பப்பா!//

உண்மைதான் இராகவன், ஒவ்வொரு ஊரின் பெயரோடும் பல சுவையான வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன. பல எழுதப்படாமல் செவிவழியாகவே நிலவி வருகின்றது. செவிவழியாக வரும் கதைகள் எம் அடுத்த சந்ததியைச் சென்றடைய முன் அழிந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் இப்பதிவுகள். உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

said...

ஜெயபால்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

said...

வெற்றி!
திருநெல்வேலி;என்பது பற்றியும்;சிதம்பரத்துடன் நம்மவர் தொடர்புகள்;பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். பதிவில் பேராசியர்களினதும்;ஆய்வாளர்களினதும் ஆதாரச் செய்தியைச் சேர்த்துள்ளீர்கள் இவைதான் தேவையானவை! வெளிக்கொணர்ந்ததுக்கு நன்றி!; திருநெல்வேலியில் தென்னகத் தமிழர்கள் குடியேறிய போது;ஈழத்தவர்களும் இருந்திருப்பார்கள் தானே! அல்லது அப்பிரதேசம் வெறும் வயல் வெளியாக இருந்திருக்குமா???
யோகன் பாரிஸ்

said...

நல்ல வரலாற்றுப் பதிவு. கன விசயங்களைத் தெரிஞ்சுகொண்டேன். தொடருங்கள்.

said...

யோகனண்ணை,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//திருநெல்வேலியில் தென்னகத் தமிழர்கள் குடியேறிய போது;ஈழத்தவர்களும் இருந்திருப்பார்கள் தானே! அல்லது அப்பிரதேசம் வெறும் வயல் வெளியாக இருந்திருக்குமா???//

நல்ல சுவாரசியமான அதேநேரம் ஆய்வு செய்யப்பட வேண்டிய கேள்வி.
ஈழத்தவர்கள் என்பவர்கள் எல்லோருமே தமிழகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதே என் கருத்து. அத்துடன் ஈழ நிலப்பரப்பு பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழக நிலப்பரப்புடன் இணைந்திருந்ததென்றும் பின்னர் ஏற்பட்ட இயற்கை மாற்றங்களினால் பிரிந்தது எனவும் ஓர் கதை உண்டு. ஆக எல்லோருக்கும் தாய்மண் தமிழகம் என்பதே என் எண்ணம். மாதகல் மயிவாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலையின் படி, தற்போதைய யாழ்ப்பாண நகரமே வெறும் நிலப்பரப்பாக இருந்ததென்றும் , பின்னர் சோழ, பாண்டிய, சேர மற்றும் தொண்டை மண்டலங்களிலிருந்து வந்த தமிழர்களே குடியிருப்புக்களாக மாறினார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

said...

அனானி,

//நல்ல வரலாற்றுப் பதிவு. கன விசயங்களைத் தெரிஞ்சுகொண்டேன். தொடருங்கள்.//

பல சங்கதிகளை அறிந்துகொண்டீர்கள் என்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. ஏதோ இப்போது பல வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதால் பல அறியாத தகவல்களை நானும் அறிந்து கொள்கிறேன். அதை இங்கே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே.

said...

வெற்றி

நல்ல பதிவுங்க..

said...

அன்பின் சிவபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

said...

நல்ல பதிவு

said...

சந்திரவதனா அக்கா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.