Friday, September 29, 2006

துப்பாக்கி எப்போது பூப்பூப்பது -- [கவிதை]

அன்பனே
உன்
தோழியைவிட
துப்பாக்கியை நேசிக்கும்
தோழனே

என்னோடு
மெழுகுவத்திகளும்
அழுதுகொண்டிருக்கும்
இந்த
மெல்லிய இரவில்
கடிதத்தில் விழும் என்
கண்ணீர்ச் சொட்டு

கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?

நாங்கள்
நட்சத்திரங்களைப் பார்த்து
நாளாயிற்று
எங்கள் வானத்தைப்
புகைமண்டலம்
போர்த்திருக்கிறது

மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்

அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை.

காதலா
நீயும் நானும்
ரகசியமாய் நடந்து போகும்
ராத்திரிச் சாலை
இப்போது -
வெடிகுண்டுகளின்
விதைப் பண்ணையாகிவிட்டது

மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.

இனியவனே
என்
வாலிபத்தை
வாசித்தவனே

உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது
?

இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?

ஆனால்
என் தலையணையருகே
சில
உலகக் காவியங்களும்
உன் நினைவுகளும் தவிர
ஒன்றுமில்லை.

இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை

ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.

பிற்குறிப்பு:
[1]இக் கவிதையைப் புனைந்தவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். "ஒரு ஈழப் போராளிக்குக் காதலியின் கடிதம்" எனும் பொருளில் எழுதப்பட்டது.
[2]மேலே இணைக்கப்பட்ட படம் போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டு சிங்கள அரசின் எதுவித உதவியுமில்லாமல் அகதிமுகாம்களில் வாழும் தமிழ்பிஞ்சுகள். இப் படம் இணையத்தில் இருந்து சுடப்பட்ட படம். நான் எடுத்த படமல்ல.

Wednesday, September 27, 2006

படமும் கதையும் - 2

(படத்தைப் பெரிது படுத்திப் பார்க்க படத்தில் கிளிக் செய்யுங்கள்)

மேலே உள்ள படத்தை பறவைக் காவடி அல்லது தூக்குக்காவடி என்று ஈழத்தில் சொல்வார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தாவடி-சுதுமலை வீதியில் இப் படம் எடுக்கப்பட்டது. சுதுமலை அம்மன் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சுதுமலை அம்மனுக்கு தனது நேர்த்திக்கடனைத் தீர்ப்பதற்காக இந்த தூக்குக்காவடியை எடுக்கிறார் இப் பக்தர். இத் தூக்குக்காவடி பனைமரத்தில் இருந்து உருவாக்கிய வளைகளால் செய்யப்பட்டது.

பி.கு:- நான் இப்படத்தை எடுக்கவில்லை. இணையத்தில் இருந்து எடுத்த படம் இது.

Sunday, September 24, 2006

படமும் கதையும் - 1

இது ஈழத்தில் எனது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகன் ஆலயம். கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது நான் எடுத்த படம். ஈழத்தில் உள்ள தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஈழத்திலேயே கடம்பமரத்துடன் கூடிய கந்தன் ஆலயம் இதுதான் எனச் சொல்கிறார்கள். இக் கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஈழத்திற்கு வரும் போதெல்லாம் இந்த ஆலயத்திற்கு வந்து இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம். ஈழத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் முருகனை ஒவ்வொரு பெயரால் அழைப்பார்கள். நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் என்பர். செல்வச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் முருகனை அன்னதானக் கந்தன் என்பார்கள். எமது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகனை காவடிக் கந்தன் என்பார்கள். திருவிழாக் காலங்களில் தமது நேர்த்திக்கடனை காவடிகள் எடுத்துச் செலுத்துவார்கள். ஈழத்தில் உள்ள ஆலயங்களில் அதிகளவு காவடி இக் கோவிலில் தான் எடுக்கப்படும். அதனால் காவடிக் கந்தன் என்றழைப்பர்.

Saturday, September 16, 2006

தீபாவளி : வாரியார் விளக்கம்.

தீபாவளி

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.

பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு
ஆவளி = வரிசை

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி எனவுணர்க. தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:

  1. சோமவார விரதம்
  2. உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
  3. திருவாதிரை விரதம் (மார்கழியில்)
  4. சிவராத்திரி விரதம் (மாசியில்)
  5. கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
  6. பாசுபத விரதம் (தைப்பூசம்)
  7. அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
  8. கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)

தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே

இந்த விரதம் நோற்கும் முறை

புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.

ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.

மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.

பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.

கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.

இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.

இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.

தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூய நெறி நின்று நலம் பெறுவார்களாக.

[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]

Sunday, September 10, 2006

மனதைப் பாதித்த பதிவு

நேற்று இப்பதிவைப் படித்ததிலிருந்து மனதில் ஏதோ ஒருவித சோகம் சூழ்ந்து கொண்டது. தமிழகத்தில்தான் இக் கொடுமை நடக்கிறது என்பதை அறிந்ததும் சோகம் இன்னும் இரட்டிப்பானது. அதுவும் தாம் பெரியாரின் வாரிசுகள் ,அண்ணாவின் வாரிசுகள் என்று மார்புதட்டிக் கொள்பவர்களினால்தான் தமிழகம் கடந்த 40 ஆண்டுகளாக ஆளப்பட்டு வருகிறது. இருந்தும் இப் பாதகச் செயல்கள் இன்றும் அதாவது 21ம் நூற்றாண்டிலும் நடந்து கொண்டிருப்பது மனவேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது. உலகில் வாழும் தமிழர்கள் அனைவரையும் நாணித்தலைகுனிய வைக்கும் செயல்.

சக வலைப்பதிவ நண்பர் கோ.சுகுமாரன் அவர்கள் தனது தளத்தில் மேலளவு வாக்குமூலங்கள் உணர்த்தும் உண்மைகள் எனும் தலைப்பில் தமிழகத்தில் நடந்தேறும் இவ் அநாகரீகச் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று செய்தியாகப் பதிந்துள்ளார்.

மனிதநேயம் உள்ள அன்பர்கள் அனைவரும் இப் பதிவைக் கட்டாயம் படிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். படித்துவிட்டு , இக் கொடுமைகளைத் தடுக்க தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் கோ.சுகுமாரன் அவர்கள் பற்றி ஒரு சில வரிகள்( இவை அவரின் Profileல் அவரே சொல்லியுள்ளவை):
தமிழகம், புதுவையில் மனித உரிமை தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார். ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது வீரப்பனை காட்டில் சென்று சந்தித்து, ராஜ்குமாரை மீட்ட மூவர் குழுவில் இடம் பெற்றவர்.

Monday, September 04, 2006

யாழ்ப்பாண ஊர்கள் வரலாறு -- திருநெல்வேலி - பகுதி-2

சென்ற பதிவில் [யாழ்ப்பாண ஊர்கள் சில - பகுதி-1] யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலி எனும் சொல்லில் முடியும் இடங்களை வரிசைப்படுத்தியிருந்தேன். அவையாவன:

  1. திருநெல்வேலி
  2. அச்சுவேலி
  3. கட்டைவேலி
  4. சங்குவேலி
  5. நீர்வேலி

இப் பதிவில் திருநெல்வேலி எனும் பெயர் அவ்விடத்துக்கு வந்த காரணத்தை நோக்குவோம். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நல்லூர் உதவி அரச அதிபர் பிரிவில் திருநெல்வேலி அமைந்துள்ளது. இதன் எல்லைப் பகுதிகளாக கொக்குவில், கோண்டாவில், நல்லூர் எனும் இடங்கள் அமைந்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி = திரு + நெல் + வேலி எனக் கூறுகிறார்.

திருநெல்வேலி பற்றிய மரபுக் கதையைப் பார்க்க முன் , இந்த வேலி எனும் சொல் இடப்பெயர்களின் ஈற்றுப் பெயராக எப்படி வந்திருக்கக்கூடும் என்பதை கலாநிதி இ. பாலசுந்தரம் இப்படி விளக்குகிறார்:

"வேலி என்பது = முள், கழி முதலியவற்றாலான அரண், மதில், காவல், நிலம், வயல், ஒரு நில அளவு (6.74 ஏக்கர்), பசுக் கொட்டில், காற்று எனப்பொருள்படும். வேலி பழந்தமிழ்ச் சொல் என்பதும், நிலங்களுக்கு எல்லையாக வேலி அமைக்கும் மரபு பண்டைநாள் முதலாக இருந்துள்ளது என்பதும் ("வேரல வேலி வேர்க்கோட்பலவு" - குறுந்தொகை : 8) தமிழர் பண்பாட்டில் அறியப்படும் செய்திகளாகும். முன்னர் எல்லையைச் சுட்டிய வேலி என்ற சொல், சோழர் காலத்தில் நில அளவைப் பொருளாக வளர்ச்சி பெற்றுள்ளது. வேலி என்பது சோழர் காலத்து நில அளவுப் பெயர்களில் ஒன்று என்பதைப் பின்வரும் கல்வெட்டுச் சான்றுபடுத்துகின்றது.

"உடையார் சிறீ ராஜராஜீச்சுரம்
உடையார்க்கு நிவந்தக் காரராக
நிவந்தமாய் பங்குசெய்தபடி பங்குவழி
ஒன்றினால் நிலன்வேலியினால்."
[நாகசாமி(பதிப்பு) தஞ்சைப்பெருவுடையார் கோயில் கல்வெட்டு:1:52-55)

ஊராட்சி முறையில் ஊர்களுக்கு எல்லை வகுக்கும் போது இயற்கை, செயற்கை நிலைகளில் "வேலி" எனப் பெயர் வைக்கப்பட்டது. அத்துடன் "நிவந்தம்" அல்லது "இறையிலி" நிலம் அரசனால் வழங்கப்பட்ட போது, 'வேலி' என்ற அடிப்படையிலும் நிலம் அளந்து கொடுக்கப்பட்டமையும் நோக்கற்பாலது." (கலாநிதி இ.பாலசுந்தரம், பக்.318)

நான் ஏற்கனவே எனது சென்ற பதிவில் கூறியிருந்தது போல், அக்காலத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஈழ மண்டலத்தின் பல பகுதிகளிலும் குடியேறினர், அல்லது குடியேற்றப்பட்டனர். யாழ்ப்பாடி எல்லாள மன்னனிடமிருந்து யாழ்ப்பணத்தைப் பரிசாகப் பெற்று அங்கு 70 ஆண்டுகள் அரசாட்சி செய்து இறந்த பின்னர் சோழ மண்டல அரசனின் மைந்தன் திருவாரூரில் இருந்து வந்து யாழ்ப்பாண அரசனாகப் பொறுப்பேற்று பல துறையைச் சார்ந்தவர்களையும் தமிழகத்திலிருந்து வரவழைத்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடியமர்த்தினான் என 1915ம் ஆண்டில் வெளிவந்த யாழ்ப்பாணச் சரித்திரம் எனும் நூலில் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்கள்

"...வேங்கடகிரியைத் தனக்குச் சன்மஸ்தானமாகவுடைய பாண்டிமழவனை(மழவராயனை)யும் அவன் தம்பியையும் அவன் மைத்துனன் செம்பழகவனையும் திருநெல்வேலியிலிருத்தினான்." (யாழ்ப்பாணச் சரித்திரம், 1915, ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, பக்.18)

"தமிழகத்திலுள்ள திருநெல்வேலி என்ற இடத்திலிருந்து வந்த மக்கள் இங்கு குடியேறியபோது இப்பெயரை இட்டு வழங்கினர் என்பது மரபு. திருநெல்வேலியின் கிழக்கே குளமும் வயலும் காணப்படுகின்றன. தமிழகத்துத் திருநெல்வேலிச் சூழல் போன்றே இங்கும் புவி அமைப்பும் வளம் செறிந்த காணிகளும் காணப்படுதலால் ஒப்புமை நோக்கியும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் ... இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இவ்விரு கோயில்களும் முறையே "வயல்வெளிச் சிவன் கோயில்" , "வயல்வெளி அம்மன் கோயில்" என்று அழைக்கப்படுதல் திருநெல்வேலியிற் பண்டைநாளில் இங்கு வயல்வெளிகள் செறிந்து காணப்பட்டமையை விளக்குகின்றது". (கலாநிதி இ. பாலசுந்தரம், பக்.322).

ஈழமண்டலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் சைவ சமயத்தைத் தழுபுவர்களாக வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு, பின்னர் ஒல்லாந்தர் ஆட்சிக்கு வந்ததும், ஒல்லாந்தர்கள் தாம் உண்பதற்காக மாட்டிறைச்சிச்சாலை ஒன்றை நிறுவ முற்பட்ட போது தமிழ் மந்திரிகளும் , ஈழ மண்டல குடிகளும் அத் திட்டத்தை எதிர்த்தனர். பசு வதை, மற்றும் மாடுகளைக் கொல்வதை சைவ சமயத்தவர்களான ஈழ மண்டல மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில வருடங்களின் பின் ஈழ மண்டலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் வருடத்திற்கு ஒரு மாடு அல்லது பசு ஒல்லாந்தர் உண்பதற்குக் கொடுக்க வேண்டுமென ஒல்லாந்தர் ஆணைபிறப்பித்தனர். அவ்வாணையின் படி ஈழத்தின் திருநெல்வேலியில் வசித்து வந்த ஞானப்பிரகாசதேசிகர் முதன்முறைக்குரியவரானார். யாழ்பாடியின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரிய மகாராசனால் திருநெல்வேலியில் குடியிருத்தப்பட்டவர்களின் வழித்தோன்றல் இந்த ஞானப்பிரகாசர். தீவிர சைவ பக்தனான இவர் ஒல்லாந்தருக்கு மாட்டையோ பசுவயோ கொடுப்பது கொடுஞ்செயல் எனக் கருதினார். ஒல்லாந்தர்களுக்கு இறைச்சிக்கு மாடு கொடுத்து இவ்வூரில் வாழ்வதை விட இவ்வூரை விட்டகல்வதே சாலச் சிறந்தது என எண்ணி சிதம்பரத்திற்குச் சென்று குடியேறினார். சிதம்பரம் சென்ற ஞானப்பிரகாசர், "சமஸ்கிருதத்திற் சித்தாந்த சிகாமணி, பிராமண தீபிகையாதியாம், பற்பல கிரந்த நூல்கள் செய்தனரன்றிச் சமஸ்கிருதத்திலுள்ள பெளஷ்கராகமம் சிவஞானசித்தி முதலியவற்றிற்கு உரையுஞ் செய்தனர்'' (யாழ்ப்பாண வைபவ கெளமுதி, 1918, க.வேலுப்பிள்ளை, பக். 152)

"சிதம்பரத்திலேயுள்ள ஞானப்பிரகாசமெனும் தீர்த்தக்குளத்தை வெட்டினாரும் இம்மகானே. யாழ்ப்பாணத்தவராற் சிதம்பரத்தின்கண்ணே கட்டுவிக்கப்பெற்ற மடங்களெல்லாம், இத்திருக்குளத்தின் வடகரை கீழ்க்கரைகளிலேயுள்ளன. தெப்போற்சவ முதலிய சில உற்சவங்களுக்கு சிதம்பராலயத்துச் சுவாமிகள் எழுந்தருளுவது இத் திருக்குளத்துக்கே. இக் குளத்துப் படிக்கட்டுகள் கிலமடைந்துவிட்டமையால் அவற்றைப் புதுப்பிக்க இப்போது யாழ்ப்பாணிகளே பண உதவி செய்து வருகின்றனர்.[இந்துசாதனம்]" (யாழ்ப்பாண வைபவ கெளமுதி, 1918, க.வேலுப்பிள்ளை, பக். 153)

ஞானப்பிரகாசரின் "பெயரால் சிதம்பரத்தில் 'ஞானப்பிரகாசர் குளம்', 'ஞானப்பிரகாசர் மடம்' என்பன இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது" (கலாநிதி இ. பாலசுந்தரம், பக்.322).

அடுத்த பதிவில் அச்சுவேலி பற்றிப் பார்ப்போம். பணிவன்புடன்,
வெற்றி.

Sunday, September 03, 2006

யாழ்ப்பாணத்து ஊர்கள் சில - பகுதி-1

யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான ஊர்கள், பட்டினங்கள் , நகரங்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே உள்ளன. பண்டைய காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதி போலவே ஈழமும் இருந்திருக்கிறது. சேர , சோழ , பாண்டி நாட்டிலிருந்து தமிழர்கள் நினைத்த போதெல்லாம் ஈழத்திற்குப் போவதும், ஈழத்தில் இருந்தவர்கள் சேர, சோழ , பாண்டி நாடுகளுக்குச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. சேர, சோழ , பாண்டி நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காடாக இருந்த பல இடங்களை மேம்படுத்தி ஊர்கள், பட்டினங்கள் என அமைத்தனர். அப்படி அமைக்கப்பட்ட ஊர்களுக்கும் பட்டினங்களுக்கும் காரணப் பெயரைச் சூட்டியுள்ளனர்.[ஐரோப்பியர்கள் தமிழகத்தில் இருந்த தமிழர் இராச்சியங்களையும், ஈழத்திலிருந்த தமிழர் இராச்சியத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது தமிழக , ஈழ எல்லைகளை மாற்றியமைத்துத் தமிழர்களைப் பிரித்த பின்னரும் ஈழத்தவர்கள் தமிழகம் சென்று திருமணம் செய்வதும், அங்கு குடியேறுவதும், தமிழகத்தில் உள்ளோர் ஈழத்திற்கு வந்து குடியேறுவதும் நடைபெற்று வந்திருக்கிறது.] யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இடத்தின் பெயரை ஆய்வு செய்தாலும் அதற்குப் பின்னால் பல சுவையான செவிவழி வரலாற்றுக் கதைகள் உண்டு. அப்படியாக அமைக்கப்பட்ட ஊர்கள், நகரங்களின் பெயர்களையும் அதற்குப் பின்னால் உள்ள செவிவழிக் கதைகளைத் தருவதுமே இப்பதிவின் நோக்கம்.

சரி, இந்த வகையில் முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள இடங்களில் வேலி எனும் சொல்லில் முடியும் இடங்களைப் பார்ப்போம்.

  1. திருநெல்வேலி
  2. அச்சுவேலி
  3. கட்டைவேலி
  4. சங்குவேலி
  5. நீர்வேலி

இவ் இடங்கள் பற்றிய செவிவழி வரலாற்றுக் கதைகளை அடுத்த பதிவில் பார்ப்போம்