Sunday, August 27, 2006

'எங்கடை திருவிழா!'

சென்ற வாரம் ஒரு ஒளிப்பேழை வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பக்தர்களின் கூட்டத்தினால் அந்தப் பெரிய மண்டபமே நிறைந்திருந்தது. மேடையில் பூஜை. அதன் பிறகு புகழ் பூத்த நாதஸ்வரக்காரரின் வாசிப்பு; அரை மணி நேரத்தில் எத்தனை அற்புதமாக வாசித்தார்! ஆனால் அதே வேளை, நாதஸ்வரக் குழுவினருக்குப் பின்னால் மேடையிலிருந்த இடைவெளியில் ஓர் அசிங்கமான நாடகமும் அரங்கேறிக் கொண்டிருந்தது. கணத்துக்குக் கணம், இப்புறமும் அப்புறமுமாக 8, 10 பேர் மாறி மாறிப் போவதும் வருவதுமாக... என்ன அவசரமோ பார்வையாளர்களை உறுத்தாமல் அவசரமாகப் போய் வருவதற்காகத்தானே அந்த அரங்கில் மறைவாக திரைச்சேலைக்கும் சுவருக்கும் இடையில் நடந்து போக வழி வைத்திருக்கிறார்கள்? அப்படியிருக்க இந்தப் பெருஞ்சபையில் இப்படி நடந்து கொண்டது கோமாளித்தனமல்லவோ? அல்லது தாமேதான் ஏற்பாட்டாளர்கள் என்பதை வந்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலோ?

எனது சிறுவயதில் எனது கிராமத்துக் கோயில்களில் இரவுத் திருவிழாக்கள் பெரிய மேள, சின்ன மேளக் கச்சேரிகளுடன் விடியும் வரை நடைபெறுவதுண்டு. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு பகுதியார் உபயம்; முதல்நாள் திருவிழாவை அடுத்த நாள் திருவிழா தூக்கிவிடும்! இந்தப் போட்டியிலும் பார்க்க இன்னொரு விஷயம்தான் முக்கியம் - யாருடைய உபயம் என்பதை "பளிச்" என அறிந்து கொள்ளக் கூடியதாக மாறுகரை வேட்டி, இடுப்பில் வரிந்து கட்டிய சால்வை; கழுத்தில் (பெரும்பாலும்) இரவல் சங்கிலி, எண்ணெய் பூசி வாரிய தலை, அன்று "ஷேவ்" செய்த முகம் - காரணம் எதுவும் இல்லாமல் கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருப்பார்கள் உபயகாரப் பகுதியினர். "எங்கடை திருவிழா" என்று காட்டத்தான்! சென்ற வாரம் அந்த மேடையைப் பார்த்த போது இந்த நினைவுதான் வந்தது! என்னதான் பக்தி என்று சொல்லிக் கொண்டாலும் "பப்ளிசிட்டி" ஆசை யாரைத்தான் விட்டது!

[ஈழத்தின் எழுத்தாளர் அமரர் திரு. சோமகாந்தன் அவர்கள் எழுதிய நிகழ்வுகளும் நினைவுகளும் நூலிலிருந்து.]

8 comments:

said...

ஒரு டியூப் லைட்டை நன்கொடை
செய்துவிட்டு அதன் மேல் தங்கள்
பெயரை போட்டு அதன் வெளிச்சத்தை
மறைப்பவர்கள் தானே நம்மவர்கள்

said...

அதையே நன்கொடை கொடாத டீயூப் லைட்டுதானே நீர்.

said...

வெற்றி!
இந்த உதாரணங்கள் மூலம்; கல்வியில் குறைந்தவர்களைக் கேலி செய்யும்;போக்குத் தூக்கலாக இருப்பது;பல சந்தர்ப்பத்தில் நான் கவனித்துள்ளேன். ஆனால் கற்றவர்கள் அடிக்கும் கூத்து அவர்கள்;திருமண அழைப்பிலும்;அவர்கள் பெற்றோரோ உற்றோரோ காலமாகும் போது, வீரகேசரியில் 1/2 பக்க விளம்பரம்; பெற்ற பட்டங்கள் தடித்த எழுத்தில் போடுவது எனப் பார்க்கவே! அவர்கள் விளம்பர மோகப் பிரதாபங்கள்.சகிக்க முடியாது.
எனினும் இந்தக் கரைவேட்டி கட்டிச் சங்கிலி போட்டுக் காட்டும்;அன்பர்கள் நடத்திய பல கோவில் திருவிழாக்களைப் பார்த்தவன்;அனுபவித்தவன் என்ற வகையில்; அவங்களும் குறைந்தவர்கள் இல்லை.எல்லோராலும் அதைச் சாதிக்க முடியாது.
அத்துடன் மேடைகளுக்குக் குறுக்கே;நிகழ்ச்சிகள் நடக்கும் போது;யாராயினும் அவசியமின்றிச் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டுமென்பதில்;மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் புலம் பெயர் நாடுகளில் ;இதை மெத்தப் படித்தவர்கள் எனத் தம்மைப் பீத்துபவர்கள்;செய்வது மிக வேதனை.இனியாவது திருந்துவார்கள் என நம்புவோம்.
நம்ம நாட்டுக் கோவில் திருவிழா பற்றி தமிழக நண்பர்களும்;நம் இளைய தலைமுறையும் அறிய ,முடிந்தால் என் பக்கதில் இட முயல்கிறேன்.
யோகன் பாரிஸ்

said...

//அல்லது தாமேதான் ஏற்பாட்டாளர்கள் என்பதை வந்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலோ?
//

பல முறை கண்டதுண்டு. :-)

said...

anony #1,
வணக்கம்.

//ஒரு டியூப் லைட்டை நன்கொடை
செய்துவிட்டு அதன் மேல் தங்கள்
பெயரை போட்டு அதன் வெளிச்சத்தை
மறைப்பவர்கள் தானே நம்மவர்கள் //

உண்மைதான். நம்மில் பெரும்பாலானோர் நீங்கள் சொன்ன ரகத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆனால் அதே நேரம், பெரிய பெரிய செயல்களைச் செய்துவிட்டு விளம்பரம் தேடாமல் அமைதியாக இருக்கும் சில மகான்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

said...

anony #2,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே?

said...

யோகன் அண்ணா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//நம்ம நாட்டுக் கோவில் திருவிழா பற்றி தமிழக நண்பர்களும்;நம் இளைய தலைமுறையும் அறிய ,முடிந்தால் என் பக்கதில் இட முயல்கிறேன்.//

கட்டாயம் எழுதுங்கள். படிப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன்.

said...

குமரன்,
வணக்கம்.

//பல முறை கண்டதுண்டு. :-) //

இப் பழக்கம் தமிழர்களின் பண்புகளில் ஒன்று போல ஆகிவிட்டது. :)