Wednesday, August 09, 2006

கனேடியப் பிரதமர் ஆலோசகராக பாகிஸ்தானியர்

கனேடியப் பிரதமர் திரு. ஸ் ரீபன் காப்பர் [Stephen Harper] அவர்கள் வழமைக்கு மாறாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரைத் தனது ஆலோசகராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.தற்போது கனடாவில் ஆட்சியிலிருக்கும் அரசு சிறுபான்மை அரசு என்பதை பலர் அறிந்திருப்பீர்கள். கடந்த தேர்தலில் ஸ் ரீபன் காப்பர் தலைமையிலான கொன்சவேட்டிவ் கட்சி [பழைமைவாதக் கட்சி] ஆட்சியிலிருந்த போல் மாட்டின் [Paul Martin] தலைமையிலான லிபரல் கட்சியைத் தோற்கடித்து ஆட்சிபீடமேறியது. ஆனால் கொன்சவேட்டிவ் கட்சி பெரும்பான்மை ஆட்சியமைக்கப் போதுமான ஆசனங்களை வெல்லவில்லை.

இந் நிலையில் , கடந்த தேர்தல் முடிந்த கையுடனேயே எதிர்க்கட்சியான லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசம் இழுக்க முயற்சி செய்து வருகிறது. தேர்தல் முடிந்த ஓரிரு தினங்களிலேயே ஒரு லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் கொன்சவேட்டிவ் கட்சிக்குத் தாவி அமைச்சரானார்.

கடந்த தேர்தலில் ஒன்ராரியோ [Ontario] மாநிலத்தில் உள்ள மிசிசாகா - ஸ்றீற்ஸ்விலே [Mississauga - Streetsville]எனும் நாடாளுமன்றத் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திரு. வஜீட் கான்[Wajid Khan]. இவர் பாகிஸ்தானிக் கனேடியர். இவர் பிறந்து வளர்ந்தது பாகிஸ்தான். பாகிஸ்தானின் விமானப்படையில் விமானியாகப் பணியாற்றியவர். ஆப்கானிஸ்தானில் கடமையில் ஈடுபட்டிருக்கும் கனேடிய இராணுவ வீரர்கள் அங்கு தங்கியிருப்பதற்கான காலத்தை நீடிக்கும் பிரேரணையை கொன்சவேட்டிவ் அரசு நாடளுமன்றத்தில் சமர்பித்த போது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். ஆனால் பிரதமர் காப்பர் அவர்கள் திரு. வஜீட் கான் அவர்களை தென் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் தனது ஆலோசகராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

"கடந்த சில மாதங்களாக லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் [கொன்சவேட்டிவ் கட்சி] இழுப்பதற்காக மிகவும் முனைப்புடன் அவர்கள் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம் " என்கிறார் லிபரல் கட்சித் தலைவரின் பேச்சாளார் திரு. பற் பிறெற்றன் [Pat Breton].

கல்கேரி நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமரின் நாடாளுமன்ற செயலாளருமான [PM's parlimentary secretary] திரு .ஜேசன் கெனி [Jason Kenny] அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "முன்னாள் பாகிஸ்தான் விமானப்படையின் விமானியான திரு. வஜீட் கான் அவர்கள், கடந்த யூன் மாதத்தில் எம்மைத் தொடர்பு கொண்டு, ஆப்கானிஸ்தானில் கடமையில் ஈடுபட்டிருக்கும் கனேடியப் படையினருக்கு அங்கு என்ன செய்ய வேண்டும் என நாம் தயாரிக்க இருந்த திட்டத்திற்கு தாம் உதவ விரும்புவதாகச் சொன்னார். அதன் பின் அவருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, இறுதியாக கடந்த வாரம் பிரதமர் பணிமனையில் அவருக்கு இப் பதவி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது" என்கிறார்.

இது லிபரல் கட்சி உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்கும் நோக்கமல்ல எனவும் நாட்டின் நன்மைக்காக கட்சி பேதமற்று மாற்றுக் கட்சிகளுடனும் இணைந்து செயற்படும் முயற்சி எனவும் திரு.ஜேசன் கெனி தெரிவித்தார்.

தான் லிபரல் கட்சியை விட்டு கொன்சவேட்டிவ் கட்சிக்கு தாவப்போவதில்லை என்கிறார் திரு. வஜீட் கான் அவர்கள். ஆப்கானிஸ்தானுக்கு கனேடியப் படைகளை அனுப்புவதை எதிர்த்திருந்த வஜீட் கான் அவர்கள், தான் இப்போது கனேடியப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருப்பதை ஆதரிப்பதாகக் கூறுகிறார். தனது புதிய பொறுப்புப் [பதவி] பற்றி திரு.வஜீட் கான் அவர்கள் கூறுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களை துவங்குவதற்கு கனடா நடுநிலையாளாராகச் செயற்படலாம் என தான் நம்புவதாகவும் விரைவில் இஸ் ரேல் , லெபனான், எகிப்து, சிரியா, ஈரான், பாகிஸ்தான், இந்தியா , ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு செல்லலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கனடாவில் யூதர்கள் முஸ்லிம்களை விட அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். முஸ்லிம் ஒருவர் மத்திய கிழக்கு விவகாரத்திற்கு பிரதமருக்கு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு யூதர்களின் நிலை இனித்தான் தெரியும்.

1 comments:

said...

வெற்றி

கனடா அரசியலை பற்றி நல்லா விளக்கமாக எழுதியுள்ளீர்கள்...

பதிவுக்கு நன்றி.