Sunday, July 09, 2006

திருத்தம்பலேஸ்வரம் எது?

சிவபெருமான் உறையும் பதி கைலாசம் என்பர். இலங்கையில் உள்ள திருக்கோணேஸ்வரத்துக்கு தெட்சனை கைலாசம் என்ற பெயர் புராதன காலத்திலிருந்தே நிலவி வருகின்றது.போர்த்துக்கீசரால் அன்றைய பெருங் கோயில் இடிக்கப்படுவதற்கு முன் கிழக்காசியாவில் இந்துக்களின் ரோமபுரியாக இக்கோவில் விளங்கியதாக குவைரோஸ் என்ற கத்தோலிக்கத் துறவி தனது பயண நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.திருமந்திரம் அருளிய திருமூலநாயனார் இலங்கையை சிவபூமி என்று கூறுவார். புராண காலத்தை அடுத்த இதிகாச காலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படும் இராமாயணத்தின் வில்லனாக சித்தரிக்கப்பட்டுள்ள லங்காபுரி அரசன் இராவணன் சிறந்த சிவபக்தனாக விளங்கியவராம்.எனவே புராண இதிகாச வரலாறுகளின்படி, பெளத்தத்துக்கு முன்பே இலங்கை முழுவதிலும் சைவ சமயம் நிலவியிருக்கிறது.

இலங்கையில் புகழ்பூத்த புராதனமான ஜந்து சிவஸ்தலங்கள் இருந்ததாகப் பல நூல்களில் குறிப்பிடப்படுகின்றது. வடக்கில் நகுலேஸ்வரம்.அங்கு நகுல முனிவர் தவமிருந்து புனித நீரில் நீராடி இறைவனை வழிபட்டதால், சாபங்களிலிருந்து விடுபட்டாராம். சில தசாப்தங்களுக்கு முன்னர் அந்த ஆலயம் புனருத்தாபனஞ் செய்யப்பெற்று சிறப்பாக இயங்கி வந்தது. கீரிமலை செல்லும் பக்தர்கள் அதன் அழகையும் அருளையும் அனுபவித்தனர். சில வருடங்களாக குருக்களே அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டார். அப்பிரதேசமே மக்களில்லாத சூனியப் பிரதேசமானது! நகுலேஸ்வரத்தில் நித்திய நைமித்திகப் பூஜைகள் நடைபெறுவது எக்காலமோ?

சீரும் சிறப்பும் கொண்டு விளங்கி, நாயன்மார்களினால் தேவாரம் பாடப்பெற்ற திருக்கேதீஸ்வரம், அந்நியராட்சியில் இருந்த சுவடே தெரியாமல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை, காடாகிப் போனது. பல ஆய்வுகளை மேற்கொண்ட நல்லூர் ஆறுமுகநாவலர், இந்த இடத்தைக் கண்டுபிடித்து "சைவத்தின் தேன்பொந்து" அதுவே என ஸ்தாபித்ததுடன், வள்ளல் பசுபதிச் செட்டியாரைக் கொண்டு அரசிடமிருந்து அக்காணியை கொள்வனவு செய்து, சிறு கோவில் அமைத்த பின்னரே அங்கு விளக்கு மீண்டும் எரியத் துவங்கியது. திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபையின் ஓய்வொழிச்சல் இல்லா முயற்சியினால், பெருங் கோயிலாக பின்னர் அது மிளிர்ந்தது. அப்பிரதேசத்தை மீண்டும் தொடர்ந்து இருள் கவ்விக் கொண்டதால் ஒரு தசாப்த காலமாக எவராலுமே அந்தப் பக்கத்தை எட்டிப் பார்க்க முடியாமற் போனது. நாதம் எழுப்பிய கண்டா மணி அறுந்து வீழ்ந்து ஓய்ந்து போய்க் கிடக்கிறது.

பாடல் பெற்ற மற்றொரு சிவத்தலமாகிய திருக்கோணேஸ்வரத்தில் நித்திய நைமித்திக பூசைகள் நடைபெற்று வருகின்ற போதிலும், அங்கு செல்கின்ற பக்தர்கள் தொகையை விரல்விட்டு எண்ணிவிடலாம். மக்கள் இத்திருத்தலத்தில் அச்சமின்றிக் கூடி பெருமானைத் தரிசிக்கும் நிலை தோன்ற வேண்டும். மற்றொரு புராதன சிவத்தலமாகிய முன்னேஸ்வரம் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருவது இன்றைய தலைமுறையினரின் தவமேயாகும்.

புராதன காலத்திலிருந்தே திருத்தம்பேஸ்வரம் என்னும் பெயரில் புகழ்பூத்த சிவாலயம் இலங்கையின் தெற்கில் இருந்ததாம். அது எது? இருந்த இடம் எங்கே? பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை படித்தேன். தென்னிலங்கையில் கடற்கரையையொட்டினாற் போல உள்ள தேவிநுவர என இப்போது அழைக்கப்படும் ஊரில் கருங்கல்லினாலான சிவனுக்குரிய பெருங் கோவில் முன்னர் இருந்ததாம். தெய்வம் உவந்து உறைந்திருந்தமையால் தெய்வாந்துறையாகி, இது பின்னாளில் தேவி நுகர எனச் சிங்களத்தில் ஆகியதோ? இப்பொழுது அது விஷ்ணு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. பக்கத்தில் பெரிய புத்தர் சிலையும் உயர்ந்து நிற்கிறது. சிவத்தலம் (இதுவே திருத்தம்பலேஸ்வரமெனில்) பின்னாளில் விஷ்ணுத்தலமாக எப்படி மாறியது? ஆய்வறிஞர் அந்தனிசில் மறைந்து போன பல உண்மைகளை அண்மைக்காலத்தில் ஆணித்தரமாக நிறுவி வருகின்றார். திருத்தம்பலேஸ்வரம் எது என்பதையிட்டு அவர் அக்கறையெடுத்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

சோழ அரசர்களும் இலங்கையை ஆண்டார்கள் என்பது வரலாறு. அதனை வெளிப்படுத்தும் வகையில், பொலன்னறுவையில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இரு சிவத் தலங்களைக் காணலாம். 1958 வரை இவ்வாலயங்களில் நித்திய பூஜைகள் நிகழ்ந்து வந்துள்ளன. ஒரு கற் கோவில் ஓரளவு அழிந்து விட்ட போதிலும், அருகிலுள்ள மற்றக் கோவில் அழகிய ஸ்தூபியுடன் விளங்கியது. பொலனறுவையில் தமிழர்கள் சுதந்திரமாகப் பயமின்றி வாழ்ந்த 1950 களில், பங்குனி உத்தர நன்னாளன்று ஆண்டுதோறும் ஊர் வியக்கும் வண்ணம் பெரிய உற்சவம் நடைபெறுவது வழக்கமாயிருந்தது. ஆனால், இன்று... பொய்யாய், கனவாய், பழங்கதையாய்... சோழர்களும் இங்கு ஆட்சி நடத்தினார்கள் என்ற உண்மையை வரலாற்றிலிருந்து துடைத்தெறிவதற்காகவா அவர்கள் அமைத்த இக் கோவில் பராமுகமாக புனரைமைப்புச் செய்யப்படாமல், பாழடைந்து அழியும்படி கைவிடப்பட்டிருக்கிறது?

[ஈழத்தின் பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு.சோமகாந்தன் அவர்கள் எழுதிய 'நிகழ்வுகளும் நினைவுகளும்' எனும் புத்தகத்திலிருந்து]

32 comments:

said...

வெற்றி!

திருத்தம்பலேஸ்வரம் பற்றிய நியாயபூர்வமான உங்கள் கேள்விகள் பல என்னுள்ளும் உண்டு. இளவயதுக்காலத்தில் இந்தக்கேள்விகளோடு அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்தவன் நான். இது குறித்த மேலதிக விடயங்களை விரைவில் பதிவு செய்கின்றேன்.

said...

மலைநாடான் அய்யா,
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. மேலுள்ள பதிவை நான் எழுதவில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நேற்று வாசிகசாலைக்குச் சென்ற போது அங்கே ஈழத்தின் பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு.சோமகாந்தன் அவர்கள் எழுதிய 'நிகழ்வுகளும் நினைவுகளும்' எனும் புத்தகம் கண்ணில்பட்டது. அவர் தினகரன் நாளேட்டில் எழுதிய கட்டுரைகள் இப் புத்தகத்தில் வெளிவந்துள்ளன. மேலுள்ள கட்டுரையில் கட்டுரையாளரின் கருத்துக்களோடு நான் உடன்படுவதால் அக் கட்டுரையை இங்கே பதித்தேன்.

//இளவயதுக்காலத்தில் இந்தக்கேள்விகளோடு அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்தவன் நான். இது குறித்த மேலதிக விடயங்களை விரைவில் பதிவு செய்கின்றேன். //

நீங்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் அனுபவங்கள் , நீங்கள் கேட்டறிந்த , படித்தறிந்த செய்திகளை எழுதுவது காலத்தின் தேவை.

said...

வணக்கம் வெற்றி

விடைதேடவேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரையை அழகாகத் தந்தமைக்கு என் நன்றிகள்.

said...

நல்ல பதிவு வெற்றி, திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் இரண்டு மட்டுமே நான் கேள்விப் பட்டிருக்கிறேன்..

ஒவ்வொரு தலத்தைப் பற்றியுமே இன்னும் விரிவாக, அந்தந்த இடங்களைப் பார்த்தவர்கள், இருந்தவர்கள் பதிவு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்..

ஏதேனும் வரைபடம் இட்டிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்குமே...

said...

வெற்றி. நீங்கள் நூலகத்தில் (வாசிகசாலையும் மிக நல்ல சொல். எங்கள் ஊரில் வாசகசாலை என்போம்) படித்ததை இங்கே பதிவில் இட்டதற்கு மிக்க நன்றி. தமிழகத்தில் இருக்கும் திருத்தலங்களைப் பற்றியே அதிகம் அறியாத என் போன்றவர்களுக்கு இலங்கையில் இருக்கும், இருந்தத் திருத்தலங்களைப் பற்றிய அறிமுகம் மிக்கத் தேவையான ஒன்று. நீங்கள் சொன்னது போல் மறைந்து போன திருத்தலங்கள் எங்கே இருக்கின்றன என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதுவே நம் பண்பாட்டுக் கோலங்களை மீட்டுத் தரும்.

said...

கானா பிரபா,
மிக்க நன்றி.

said...

முதன் முறையாக உங்க பக்கம்'திற்கு வருகிறென், நல்ல பதிவு

said...

பொன்ஸ்,

/* நல்ல பதிவு வெற்றி */

மிக்க நன்றி.

/* ஏதேனும் வரைபடம் இட்டிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்குமே... */

பொன்ஸ், உங்கள் கருத்துக்கு நன்றி. எதிர்காலத்தில் இப்படியான பதிவுகளைப் போடும் போது வரைபடங்களையும் போடுகிறேன்.

said...

Dear Vetti,
Sorry to write in english.I love to write in Tamil but I do not know how to do that.Anyhow your article is a very important information to many.We should bring all Eswarams to open and establish our dominion.I am waiting for the birth of Eelam.The EELAM will dominate.

said...

நல்ல கட்டுரை
வாழ்த்துக்கள்

said...

வெற்றி, மறைந்த ஈழத்துச் சோமு அவர்களின் அந்தக் கட்டுரையை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

எமது கோயில்கள், குறிப்பாக தென்னிலங்கைக் கோயில்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். சோமு அவர்கள் குறிப்பிட்டது போல் ம. க. அ. அந்தனிசில் போன்றவர்கள் இவை குறித்து ஆராய வேண்டும்.

said...

குமரன்,
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//வாசிகசாலையும் மிக நல்ல சொல். எங்கள் ஊரில் வாசகசாலை என்போம்//

எமது ஊரிலும் பலர் வாசகசாலை எனச் சொல்வர். இன்னும் சிலர் வாசயசாலை எனவும் , வாசயாலை எனவும் சொல்வர்.

/* தமிழகத்தில் இருக்கும் திருத்தலங்களைப் பற்றியே அதிகம் அறியாத என் போன்றவர்களுக்கு இலங்கையில் இருக்கும், இருந்தத் திருத்தலங்களைப் பற்றிய அறிமுகம் மிக்கத் தேவையான ஒன்று. */

நீங்கள் தமிழகத் திருத்தலங்கள் பற்றி அறியாதவரா? நம்ப முடியவில்லை. உண்மைதான் குமரன், தமிழும் சைவமும் பிரிக்க முடியாதவை. எனவே இச் சைவத் திருத்தலங்கள் சைவ சமய அடையாளம் மட்டுமல்ல, எமது முன்னோர்களின் வரலாற்றுக்குச் சான்றாகவும் விளங்குபவை. கட்டாயம் இது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஈழத்தில் இன்றிருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமாகாது என்பதே என் எண்ணம். காரணம் அரசாட்சியில் சிங்களவரே உள்ளனர். இலங்கைத்தீவு ஒரு புத்த நாடு என பிரகடனப்படுத்தி அதை நியயப்படுத்த பல இல்லாத பொல்லாத கதை சொல்லும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களின் பண்டைய வரலாற்றை ஆராய்வார் என்பது நினைத்தும் பார்க்க முடியாத காரியம்.

said...

வெற்றி!
நல்லதொரு ஆய்வுக்குரிய விடயத்தைத் பதிவிட்டுள்ளீர்கள்! நன்றி
திருத்தம்பலேஸ்வரம் என்று கேள்விப்படவில்லை. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமத்தில் சோழர் கால அழகான கருங்கற் கோபுரத்துடன் ஓர் சிவனாலயம் உண்டு. அதை ஆதி கோணேஸ்வரர் கோவில் எனக் கூறினார்கள்.இந்தத் "தம்பல " என்பவற்றின் தொடர்பைத் தெரிந்தவர்கள் தான் கூறவேண்டும். மலைநாடனுக்குத் தெரிய வாய்ப்புண்டு.
மேலும் சிலாபத்தில் ஓர் சிவாலயம் "முனீஸ்வரமெனும்" பெயருடன் உண்டு. இதுவும் சோழருடன் தொடர்புடைய ஆயலமே!
இவ்வேளை; தமிழ்நாட்டில் பாண்டிய;சோழர் ஆட்சியில் சம்பந்தர்; அப்பர் காலங்களில் பௌத்தம்,சமணம் கோலோச்சியது. இதன் தாக்கம் ;இவர்கள் ஆளுமைக்குட்பட்ட ஈழத்தில்,இல்லாதிருந்திருக்குமா??,என்பதே!! என் சந்தேகம். ஆய்வாளர்கள் தான் கூறவேண்டும்.
பிறப்பால் புத்தர் ஓர் இந்து; இந்து சமயம் புத்தருக்கு முற்பட்டதென்பதைப் பௌத்தர்கள் ,மறைக்க முற்படுவது. அர்த்தமற்றது.
பொலநறுவைச் சிவனாலயம்;சைவமும் பௌத்தமும் ஒற்றுமையாக இருந்த காலத்தில் கட்டப்பட்ட கோவில்.
யோகன் பாரிஸ்

said...

//கட்டாயம் இது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஈழத்தில் இன்றிருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமாகாது என்பதே என் எண்ணம். //

உண்மை தான் வெற்றி.

அதனால் தான் நீங்கள், மலை நாடன், யோகன் ஐயா போன்றவர்கள் இத்தலங்களைப் பற்றி, பார்த்த, கேள்விப்பட்ட செய்திகளைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்..

said...

/இச் சைவத் திருத்தலங்கள் சைவ சமய அடையாளம் மட்டுமல்ல, எமது முன்னோர்களின் வரலாற்றுக்குச் சான்றாகவும் விளங்குபவை. கட்டாயம் இது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஈழத்தில் இன்றிருக்கும் சூழ்நிலையில் இது சாத்தியமாகாது /

வெற்றி!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
'சைவ சமய அடையாளம் மட்டுமல்ல, எமது முன்னோர்களின் வரலாற்றுக்குச் சான்றாகவும் விளங்குபவை. ' இது நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.
இதுகுறித்து எனக்குத் தெரிந்த சில விடயங்களைத் தற்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன். வெகுவிரைவில் பதிவாக இடுகின்றேன்.

யோகன்!
என்மீதான உங்கள் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றிகள்.

said...

இளா,
வணக்கம்.
/* முதன் முறையாக உங்க பக்கம்'திற்கு வருகிறென் */

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

said...

ஈஸ்வரன்,
வணக்கம்.

/* We should bring all Eswarams to open and establish our dominion.I am waiting for the birth of Eelam.The EELAM will dominate. */

நானும் ஓர் ஈழத்தவன் என்ற முறையில் உங்களின் வலி, ஏக்கம், ஆதங்கம், மனக்குமுறல் எல்லாம் எனக்கும் புரிகிறது. எமது கலாச்சாரச் சின்னங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அன்றும் அந்நியர் ஆட்சியில் அழிக்கப்பட்டபோதும் மீண்டும் தழைத்தோங்கியது. இனியும் இந்த சிங்களப் பயங்கரவாதத்தை முறியடித்து மீண்டும் எம் நாடு வழமுடன் வெற்றிப் பாதையில் வீறு நடை போடும். நீதியும் தர்மமும் எமது பக்கம் இருக்கும் போது , நாம் வெல்லாமால் யார் வெல்வது?

பி.கு:- ஈகலப்பையின் உதவியுடன் நீங்கள் தமிழில் எழுதலாம். உங்கள் பதிவைப் பார்க்கும் போதே உங்களிடம் பல சங்கதிகள் இருப்பது போல் தெரிகிறது. கட்டாயம் எழுதுங்கள். ஈகலப்பை பற்றி ஏதாவது உதவி தேவைப்படின் தயக்கமில்லாமல் கேளுங்கள்.

said...

நிலா,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

said...

தமிழும் சைவமும் இரண்டாகப் பிரிக்க முடியாதவை. அப்படியிருக்க தமிழர் வாழ்நிலங்களில் சைவக் கோயில்கள் இருப்பதில் இருந்திருப்பதில் வியப்பென்ன. இதுபோன்ற காலத்தால் மாறிய கோயில்கள் பலவுண்டு. அவைகளைப் பற்றியும் அவைகளின் அமைப்பையும் அறியத் தந்தால் நன்றாக இருக்கும்.

ஆனாலும் இலங்கையில் எந்தக் கோயிலுக்கும் தமிழன் என்ற வகையில் அச்சமின்றி உயிர்ப்பயமின்றி வழிபாட்டுக்குச் செல்ல நாள் என்று வருமோ? ஏற்கனவே கதிர்காமம் கை விட்டுப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா? இன்னும் எத்தனை இருக்கிறதோ?

said...

கனக்ஸ்,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. திரு.சோமகாந்தன் அவர்களின் மற்றைய சில கட்டுரைகளையும் தேவையேற்படின் பதிகிறேன்.

/* எமது கோயில்கள், குறிப்பாக தென்னிலங்கைக் கோயில்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். சோமு அவர்கள் குறிப்பிட்டது போல் ம. க. அ. அந்தனிசில் போன்றவர்கள் இவை குறித்து ஆராய வேண்டும். */

இதுதான் எனது ஆதங்கமும்.

said...

யோகன் அண்ணை,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//மலைநாடனுக்குத் தெரிய வாய்ப்புண்டு. //

இப்போது இது பற்றி மலைநாடான் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நானும் உங்களைப் போல் அவரின் பதிவைப் படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

said...

வெற்றி,

// இன்று... பொய்யாய், கனவாய், பழங்கதையாய்... //

சோகமான உண்மை...ம்ம்ம்ம்ம்ம்...



இங்கே பகிர்ந்துகொன்டமைக்கு நன்றி.

said...

இராகவன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

/* தமிழும் சைவமும் இரண்டாகப் பிரிக்க முடியாதவை. அப்படியிருக்க தமிழர் வாழ்நிலங்களில் சைவக் கோயில்கள் இருப்பதில் இருந்திருப்பதில் வியப்பென்ன. */

உண்மைதான்.

/* ஆனாலும் இலங்கையில் எந்தக் கோயிலுக்கும் தமிழன் என்ற வகையில் அச்சமின்றி உயிர்ப்பயமின்றி வழிபாட்டுக்குச் செல்ல நாள் என்று வருமோ? */

இதுதான் எனது ஏக்கமும்.

/* ஏற்கனவே கதிர்காமம் கை விட்டுப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா? இன்னும் எத்தனை இருக்கிறதோ? */

நல்ல கேள்வி. ஆனால் இதற்கான விடை எனக்குத் தெரியாது. யாராவது தெரிந்த ஈழத்தவர்கள் சொல்லுவார்கள் என நம்புகிறேன். எனக்கு கொஞ்ச நேர அவகாசம் தாருங்கள். இதுபற்றி அறிந்து சொல்கிறேன்.

said...

சிவபாலன்,
வணக்கம்.

//சோகமான உண்மை...ம்ம்ம்ம்ம்ம்...//

உண்மைதான் சிவபாலன். ஈழத்தில் இருள் நீங்கி தமிழர்கள் வாழ்வில் விடிவு வரவேண்டும்.

said...

மலைநாடான்,

/* இதுகுறித்து எனக்குத் தெரிந்த சில விடயங்களைத் தற்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன். வெகுவிரைவில் பதிவாக இடுகின்றேன். */

ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் எழுதுங்கள்.

said...

வெற்றி!
வார இறுதியில் பதிவிடுகிறேன். வேலைப்பளுகாரணமாக நேரம் போதாதுள்ளது. தாமததுக்கு மன்னிக்கவும்.
நன்றி

said...

இது உங்கள் பதிவு பற்றிய பின்னூட்டமல்ல

வெற்றி நீங்கள் கேட்டபடி 'ஆறு' பதிவு போட்டுள்ளேன் வேலையினால் பெரும் தாமதம் மன்னிக்க

http://priyan4u.blogspot.com/2006/07/6.html

said...

நேசகுமார்,
வணக்கம்.

//நல்ல பதிவு. நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

said...

வெற்றி,
நல்ல தகவல்.
நீங்கள் குறிப்பிடும் "தேவி நுவர" என்பது, "தேவேந்திர முனை" என்று கருதுகிறேன். இலங்கையின்
தெற்கே இருக்கும் அதி தென் நில எல்லை இது. பள்ளி நாட்களில் இலங்கையின் நீளம் பருத்தித் துறையில் இருக்கும் ஒரு முனை (பெயர் மறந்து விட்டது :-( ) யிலிருந்து தெற்கே தேவேந்திர முனை வரை 270 மைல்கள் என்று படித்த ஞாபகம்.

அந்த தேவேந்திர முனை இப்பொழுது dondra head என்று ஆங்கிலத்தில் அழைக்கிரறார்கள். (try google)

said...

//நீங்கள் குறிப்பிடும் "தேவி நுவர" என்பது, "தேவேந்திர முனை" என்று கருதுகிறேன். இலங்கையின்
தெற்கே இருக்கும் அதி தென் நில எல்லை இது.//
ஈழத்தில் ஐந்து சிவாலயங்கள் இருந்ததாகப் படித்த ஞாபகம். இவற்றில் ஒன்று தொண்டேஸ்வரம் (தொண்டீஸ்வரம்??), இது தென்னிலங்கையில் இருந்ததாகவும் பின்னர் இது விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய சிறு விபரம் விக்கிபீடியாவில் உள்ளது. தொண்டேஸ்வரம் பற்றி மேலதிக தகவல் தெரிந்தோர் அவற்றை விக்கிபீடியாவில் தாங்களாகவே சேர்த்துக் கொள்ளும் வசதி உண்டு.

said...

சிலாபத்திலுள்ள...முன்னீஸ்வரமும்.... புராதன காலத்து கோயிலென்று நினைக்கிறன்

said...

செயபால்,
புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

கனக்ஸ்,
மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி.

சின்னக்குட்டியண்ணை,
முனீஸ்வரம் பண்டைய காலத்துக் கோயில் என்பதுதான் என் ஊகமும். ஆராவது தெரிஞ்சவைதான் சொல்ல வேணும்.