Sunday, August 13, 2006

தெய்வம் [ இக் கவிதையை யாரெழுதியது?]

ஐயம் இல்லை, தெய்வம் உண்டெனப்
பையப் பைய என்னைப் பழக்கி
அன்னை என்னுடைச் சின்ன வயதில்
சொன்னது மட்டும் இன்னும் மறந்திலேன்.
உண்டு என்பதைக் கண்டிலேன் தெளிய.
பண்டை நம் முன்னோர் பகர்ந்ததை யெல்லாம்
படித்துப் பார்த்தேன். பாடமும் கேட்டேன்.
ஒடித்துப் பிரித்து ஊன்றி எண்ணினேன்.
'நீறு பூசினால் நேர்ந்திடும்' என்றார்,
நீறு பூசி என் நேரமும் கழித்தேன்.
'கண்டிகை தரித்தால் காணலாம்' என்றார்,
கண்டிகை கனத்தும் கண்டிலேன் பொருளை.
'நாமம் தரித்தால் நாடலாம்' என்றார்,
நாமம் புனைவதில் நாள்பல கழித்தேன்.
'துளசியும் மாலையும் துணை செயும்' என்றார்,
துளசியும் தொடுத்தேன், மணிகளும் சுமந்தேன்.
'பஜனை செய்தால் பலித்திடும்' என்றார்,
பஜனைக் கோஷ்டியில் பாடினேன் பல நாள்.
'ஊனும் உயிரும் அவனே' என்றார்,
ஊனிலும் காணேன், உயிரிலும் காணேன்.
'கோயிலும் குளமும் குடியிருப்' பென்றார்,
கோயிலில் தேடினேன், குளத்திலும் மூழ்கினேன்.
'வேத நூல்களில் விளங்கிடும்' என்றார்,
வேதமும் கேட்டேன், விளங்கவே இல்லை.
'மந்திரம் கற்றால் வந்திடும்' என்றார்,
மந்திரம் ஜெபித்தேன், தந்திரம் பலித்திலேன்.
'பட்டினி யிருந்தால் பார்க்கலாம்' என்றார்,
பட்டினி விரதம் பழகியும் பார்த்தேன்.
'மூச்சை அடக்கினால் முன்வரும்' என்றார்,
மூச்சைப் பிடித்து முயன்றும் பார்த்தேன்.
கண்டிலேன் அந்தக் கடவுளை; அதனால்,
'பண்டைய வழிகளில் பயனிலை போலும்.
எந்தையர் சொன்ன ஹிந்து மதத்திலே
இந்த ரகசியம் இல்லையோ!' என்று
மதங்கள் என்று மற்றவர் சொன்ன
விதங்களை யெல்லாம் விரித்திடும் நூல்கள்
புத்தகம் பற்பல புரியப் படித்தேன்.
வித்தகர் சொன்ன விளக்கமும் கேட்டேன்.
புதுப்புது வழிகளில் புகுந்து புகுந்து
மதிப்புள எல்லா மார்க்கமும் போனேன்.
செல்லா வழியென எண்ணிநான் சென்ற
எல்லா வழிகளும் என்னைக் கொண்டுபோய்
முன்னே இருந்த மூலையே சேர்த்தன.
என்னே! தெய்வம் எங்கோ! எதுவோ!
இருந்த இடத்தில் இல்லையென் றெண்ணித்
திரிந்த இடத்திலும் தெரிந்திட வில்லையே!
இல்லை யென்றுரைக்கத் தைரியம் இல்லை.
தொல்லையென் றதனைத் துறக்கவும் துணிவிலை.
இல்லையே ஆனால் தொல்லையே இல்லை.
நல்லதே நம்மைக் கேட்பா ரில்லை.
இருப்பது உண்மைதான் எனினு மென்ன?
பொறுப்பு அவர்க்கே, காத்தருள் புரியும்.


உண்ணானச் சத்தியமாய்ச் சொல்லிப் போட்டேன். மேலே உள்ள கவிதையை நான் எழுதவில்லை. இக் கவிதையைப் புனைந்த கவிஞர் தெய்வம் பற்றிச் சொல்லியுள்ள கருத்தே என் கருத்தும் என்பதால் இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.சரி, இக் கவிதையை எழுதியவர் கீழுள்ள கவிஞர்களில் ஒருவர். யாரென சொல்லுங்கள்[ஊகியுங்கள்] பார்ப்போம்.


  1. மகாகவி சுப்பிரமணிய பாரதி
  2. பாவேந்தர் பாரதிதாசன்
  3. உவமைக் கவிஞர் சுரதா
  4. பேரறிஞர் அண்ணாத்துரை
  5. கவியரசர் கண்ணதாசன்
  6. உடுமலை நாராயண கவி
  7. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  8. நாமக்கல் இராமலிங்கம்
  9. கலைஞர் மு. கருணாநிதி
  10. கவிஞர் வாலி
  11. கவிஞர் வைரமுத்து

22 comments:

said...

I think kannadhasan must have written this poem.

said...

பாவேந்தர் பாரதிதாசன்?

said...

பாரதி தாசனாக இருக்குமென அபிப்பிராயம்.
யோகன் பாரிஸ்

said...

அருண்,
வணக்கம்.
கவியரசர் கண்ணதாசன் இக் கவிதையை எழுதவில்லை.

said...

Capital & யோகன் அண்ணா,
வணக்கங்கள் பல.

இக் கவிதையைப் பாவேந்தர் எழுதவில்லை.

said...

வெற்றி,
யாரென்று சொல்லுங்களேன்..

உடுமலை நாராயண கவி? அல்லது சுரதா?

ஆன போதும் கவிதையின் கருத்தில் எனக்கு ஒப்புமை இல்லை..

இருந்த இடத்தில் இல்லையென் றெண்ணித்
திரிந்த இடத்திலும் தெரிந்திட வில்லையே!


எங்கோ பிறந்தவர் துன்பம் காண்கையில்
பங்காய்த் தானும் பரிவு கொள்ளும்
அன்புடை மனங்களில் தெய்வம் கண்டேன்
என்னுள் கண்டபின் எதிரியிலும் கண்டேன்
தங்கும் இடமென தனியொன்று அற்றான்
எங்கும் இருக்கிறான், இங்கும் இருக்கிறான்

said...

வெற்றி

அருமையான கவிதையை எடுத்து தந்துள்ளீர்கள்..

மிக்க நன்றி.

இந்த கவிதை எழுதியது யாரென எனக்கு தெரியவில்லை..

சும்மா ஒரு Guess அவ்வளவுதான்..

நாமக்கல் இராமலிங்கம் ??????

said...

"பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்"

என ஏற்கெனவே எழுதி விட்டதால், இது கவியரசு எழுதியதில்லை.
வாலியோ, வைரமுத்துவோ தான் எழுதியிருக்க வேண்டும்!

என் ஓட்டு வைரமுத்துவுக்கே!

said...

பொன்ஸ்,

//உடுமலை நாராயண கவி? அல்லது சுரதா?//

நீங்கள் குறிப்பிட்ட இருவரும் இல்லை.

//யாரென்று சொல்லுங்களேன்.. //
நிச்சயமாக நாளை சொல்கிறேன்.

//
எங்கோ பிறந்தவர் துன்பம் காண்கையில்
பங்காய்த் தானும் பரிவு கொள்ளும்
அன்புடை மனங்களில் தெய்வம் கண்டேன்
என்னுள் கண்டபின் எதிரியிலும் கண்டேன்
தங்கும் இடமென தனியொன்று அற்றான்
எங்கும் இருக்கிறான், இங்கும் இருக்கிறான் //

ஆகா! பொன்ஸ், இது நீங்கள் வடித்த கவியா? மிகவும் அருமை. தமிழின் சுவையை இக் கவிதைகளைப் படிக்கும் போதுதான் உணர முடிகிறது.

பி.கு:- தாயகப் பிரயாணம் எல்லாம் செளக்கியமாக இருந்ததா?

said...

பாரதியார் ??

said...

அன்பின் சிவபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சரியான விடையை நாளை சொல்கிறேன்.

said...

வாலி

said...

கவிதைக்கும் நமக்கும் காத தூரம். ஒரு தோராயமாக சொல்கிறேன். :-)
பேரறிஞர் அண்ணாத்துரை அல்லது கலைஞர் மு. கருணாநிதி.

said...

SK அய்யா,
வருகைக்கு நன்றி.
இக் கவிதை கவிஞர் வைரமுத்துவால் எழுதப்பட்டதல்ல.

said...

ஜெயஸ்ரீ,
வணக்கம்.

//பாரதியார் ?? //

இல்லையே! பாரதியார் தீவிர இறை நம்பிக்கை உள்ளவராயிற்றே!

said...

அனானி,
வணக்கம்.

//வாலி //

இல்லையே! வாலி இக் கவிதையை எழுதவில்லை.

said...

கலைஞர் மு. கருணாநிதி.

said...

குறும்பன்,

//பேரறிஞர் அண்ணாத்துரை அல்லது கலைஞர் மு. கருணாநிதி. //

அண்ணாவோ , கலைஞரோ இக் கவிதையை எழுதவில்லை.
கவிதையில் வரும் இவ் வரிகளைப் பாருங்கள்:
இல்லை யென்றுரைக்கத் தைரியம் இல்லை.
தொல்லையென் றதனைத் துறக்கவும் துணிவிலை.
இல்லையே ஆனால் தொல்லையே இல்லை.
நல்லதே நம்மைக் கேட்பா ரில்லை.
இருப்பது உண்மைதான் எனினு மென்ன?
பொறுப்பு அவர்க்கே, காத்தருள் புரியும்.


அண்ணாவோ அல்லது கலைஞரோ இவ் வரிகளை எழுதியிருப்பார்களா?

said...

மின்னுது மின்னல்,
வணக்கம்.

//கலைஞர் மு. கருணாநிதி.//

இல்லையே! கலைஞர் மு.க இக் கவிதையை எழுதவில்லை.

said...

பதிவிலிட்ட கவிதையைப் படித்து பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
விடையளித்தவர்களில் நண்பர் சிவபாலன் அவர்கள் சரியான விடையைச் சொல்லியிருந்தார்.
ஆம்,அன்பர்களே, இக் கவிதையை எழுதியது கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் அவர்கள்.சில மாதங்களுக்கு முன்னர் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் அவர்கள் கவிதை நடையில் எழுதிய அவளும் அவனும் எனும் பத்தகத்தைப் படித்தேன். அவர் அந் நூலில் கடவுள் வாழ்த்தாக இக் கவிதையை எழுதியிருந்தார்கள். அழகாக , எளிமையாக எழுதப்பட்டிருந்த அக்கவிதை தெய்வம் பற்றிய என் உணர்வுகளையும் பிரதிபலித்ததால் மிகவும் பிடித்து விட்டது. நான் படித்துச் சுவைத்த அக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே இணைத்திருந்தேன்.

said...

வெற்றி,

யூக அடிப்படையிலே அந்த பதிலை சொன்னேன்.. எப்படியோ சரியாக வந்துவிட்டது..

மகிழ்ச்சியாக உள்ளது.

கவிதையை இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

இது போன்று சுவாரசியமான பதிவுகளை தொடர்ந்து தரவும்

said...

சிவபாலன்,

//இது போன்று சுவாரசியமான பதிவுகளை தொடர்ந்து தரவும் //

கருத்துக்கு நன்றி. நிச்சயமாகத் தர முயற்சிக்கிறேன்.