Wednesday, July 25, 2007

1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. இலங்கைத் தமிழர் => கறுப்பு யூலை '83

"ஹிட்லர் யூத மக்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் யூத இனத்தவர் இல்லை
ஹிட்லர் கத்தோலிக்கர்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் கத்தோலிக்கர் இல்லை
ஹிட்லர் தொழிற்சங்கவாதிகளைத் தாக்கிய போது நான் அதை எதிர்த்துக் குரலெழுப்பவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி இல்லை
ஹிட்லர் என்னையும் என் மதத்தையும்[Protestant] தாக்கியபோது யாரும் எனக்காகக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் எனக்காகக் குரல் கொடுக்க அங்கு யாரும் உயிருடன் இல்லை."

--- Martin Niemöller

ஜெர்மனியின் மனிதவுரிமைவாதியும் கிறிஸ்தவ பாதிரியுமான Martin Niemöller சொன்னவை [மேலே] யாருக்குப் பொருந்துதோ இல்லையோ இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்தும். இலங்கைத் தமிழர்களின் அனுபவமும் கிட்டத்தட்ட இதுதான்.

இலங்கையில் 1950 கள் வரை சிங்களப் பேரினவாதிகள், புத்த அடிப்படைவாதிகள் மற்றும் சிங்கள தொழிற்சங்கவாதிகள் இலங்கைத் தமிழர்கள் மீது வன்முறைத்தாக்குதல்களிலோ அல்லது அவர்களின் உரிமைகளுக்கு எதிராகவோ செயற்படவில்லை. 1880 களில் இருந்து 1950 வரை சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைத்தாக்குதல்கள் , பிரச்சாரங்கள் இலங்கையின் மற்றைய சிறுபான்மைக் குழுக்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்[ வட இந்தியர்கள், பாகிஸ்தானியர்], மலையாளிகள், இந்தியத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிரானதாகவே இருந்தது. இச் சிறுபான்மையினருக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் செயற்பட்டபோது இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் அதற்கெதிராக ஒற்றுமையுடன் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்காமல் சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக சில இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டார்கள் என்பது மிகவும் சோகமான வரலாறு.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கை மண்ணின் பூர்விக இரு இனங்கள். எனவே சிங்களவர்கள் ஒருபோதும் தமக்கெதிராகச் செயற்படமாட்டார்கள், செயற்படவும் முடியாது என்பதும் தாம் சிறுபான்மை இனம் இல்லை என்பதும் இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது.

"...the Tamils looked on themselves as one of the two 'founding races' of the island and not as a minority"
[Dr.Alfred Jeyaratnam Wilson, SRI LANKAN TAMIL NATIONALISM : Its Origins and Developments in the 19th and 20th Centuries, p.48]

'நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுத்துதாம்' என்பது போல் இந்த எண்ணமும் மற்றைய சிறுபான்மைக் குழுக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டபோது குரெலெழுப்பாமல் இருந்ததற்கு ஒரு காரணம். தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சந்தர்பங்கள் கிடைத்த போதும் அச் சந்தர்பங்களை நழுவவிட்டதற்கும் இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.

இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் எதிரான தாக்குதல்களை ஆராய்ந்து பார்த்தால் அதன் அடிப்படைப் பிரச்சனை இனமோ, மதமோ, மொழியோ அல்ல. அப் பிரச்சனைகளின் முக்கிய ஆணிவேர் பொருளாதாரம்[சிங்களவர்கள் மத்தியிலிருந்த வேலையில்லாத் திண்டாட்டம்]. ஆனால் சிங்கள பேரினவாதிகள் இப் பொருளதாரப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றைய சிறுபான்மைக் குழுக்களால்தான் சிங்களவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியும், வேலையில்லாமலும் இருப்பதற்குக் காரணம் என சிங்கள மக்களை மூளைச் சலவை செய்தனர். எந்த ஒரு சிறுபான்மை இனத்தைத் தாக்க முன்னும் அவர்களுக்கு எதிராக இப்படிப் பிரச்சாரம் செய்து சிங்கள மக்களை ஒன்று திரட்டிய பின்னர் அச் சிறுபான்மை இனத்தவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது. இதுதான் இலங்கையின் எல்லாச் சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட உத்தி.

ஒவ்வொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சிங்களப் பேரினவாதிகள் ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும், குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிராக எப்படிச் செயற்பட்டார்கள் என்பதைச் சுருக்கமாக எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

1. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதம்.

1983 ம் ஆண்டு நவீன இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இன அழிப்பு கொழும்பின் வீதிகளில் நடந்தேறியது. இக் கலவரம் நடந்த காலத்திலிருந்து சரியாக[exactly] 100 ஆண்டுகளுக்கு முன் 1883ல் கொழும்பு வீதிகளில் சிங்களப் பேரினவாதிகளும் கிறிஸ்தவர்களும் மோதிக் கொண்டார்கள். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான முதற்கட்டத் தாக்குதல்கள் புத்த பிக்கு மிகெத்துவத்த குணானந்தா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 1870 ம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும் , பேசியும் பிரச்சாரங்களை முன்னெடுத்தார் குணானந்தா. 1883 ம் ஆண்டு சித்திரை மாதம் உயிர்த்த ஞாயிறு வாரத்தில் [Easter Week] கொழும்பில் உள்ள கொட்டாஞ்சேனையில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த போது, அத் தேவாலத்திற்கு மிகவும் அருகில் பிக்கு மிகெத்துவத்த குணானந்தா புத்த பூசையை நடாத்தினார். இது தமது பிரார்த்தனையைக் குழப்புவதற்காக வேணும் என்றே பிக்கு மிகெத்துவத்த குணானந்தா செய்கிறர் என கிறிஸ்தவர்கள் சினம் கொண்டனர். இரு தரப்புக்குமிடையில் கலவரம் மூண்டது. ஒருவர் கொல்லப்பட்டார். 12 பொலிஸ்காரர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான இரண்டாம் கட்டத் தாக்குதல்கள், பிரச்சாரங்கள் புத்த மறுமலர்ச்சித் தலைவர்களான அங்கரிக தர்மபால,வாலிசிங்க ஹரிச்சந்திரா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும், ஊர் ஊராக நாடகங்கள் நடாத்தியும், கூட்டங்கள் வைத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1902ல் தர்மபால இப்படி எழுதியிருந்தார்:

"...அழகான, ஒளிமயமான இத் தீவு மோசமான நாசகார வெள்ளையர்கள்... போன்றோரால் சிதைக்கப்படுவதற்கு முன் ஆரிய சிங்கள இனத்தால் சொர்க்காபுரியாக கட்டியெழுப்பப்பட்டிருந்தது...இன்று நாட்டில் நடக்கும் கொள்ளைகள், விபச்சாரம், மிருகக் கொலைகள், பொய்சொல்லுதல், மதுபோதை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு கிறிஸ்தவர்களே காரணம்...தேயிலைத் தோட்டம் உருவாக்குவதற்காக காட்டு வளங்களை அழிக்கிறார்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்க்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்..."

"...This bright, beautiful island was made into a Paradise by the Aryan Sinhalese before its destruction was brought about by the barbaric vandals...Christianity and polytheism are responsible for the vulgar practices of killing animials, stealing, prostitution, licentiousness, lying and drunkenness...The bureaucratic administrators...have cut down primeval forests to plant tea; have introduced opium, ganja, whisky, arrack and other alcoholic poisons; have opened saloons and drinking taverns in every village; have killed all industries and made the people indolent."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.121]

1883ம் ஆண்டிற்குப் பின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 1903ம் ஆண்டில் இலங்கையின் பல சிங்களப் பகுதிகளிலும் அரங்கேறியது. சிங்களப் பகுதிகளில், குறிப்பாக புத்த ஆலயங்கள் உள்ள கிராமங்கள், நகரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்படுவதற்கு எதிராக இவ் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான இத் தாக்குதல்களைத் தூண்டிவிட்டார் என புத்த மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வாலிசிங்கா ஹரிச்சந்திரா கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் 1950, 1960 களிலும் இன்றும் ஆங்காங்கே சிங்களப் பேரினவாதிகளல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது மற்றைய சிறுபான்மைக் குழுக்களுடனான மோதல்களினால் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்தும், மற்றவர்களால் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், இன்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி சிங்கள புத்தர்களின் மனங்களில் உண்டு என்கிறார் குமரி ஜெயவர்த்தனே.

"While in recent years the people have been distracted by attacks on other minorities, it is nevertheless true that the anti-Christian prejudices, though dormant, still remain strong in the consciousness of Sinhala Buddhists."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.122]

சரி, கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களினால் கணிசமான வெற்றியைப் பெற்ற பின் சிங்களப் பேரினவாதிகளின் கவனம் இலங்கையின் அடுத்த சிறுபான்மைக் குழுக்களான முஸ்லிம்கள், மற்றும் வட இந்திய , பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள்[immigrant] மீது திரும்பியது. முஸ்லிம்கள் மற்றும் வட இந்திய, பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீது என்ன காரணத்திற்காகச் சிங்கள பேரினவாதிகள் கவனம் திரும்பியது எனபதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

29 comments:

said...

நல்லதொரு தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன். தொடரின் முடிவில் நீங்கள் இந்தத் தொடருக்குப் பயன்படுத்திய புத்தகங்களின் பட்டியலையுன் தாருங்கள்.

வைசா

said...

நல்லதொரு தொடர் தொடருங்கள் காத்திருக்கிறோம்.

said...

வைசா,

/* நல்லதொரு தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன். தொடரின் முடிவில் நீங்கள் இந்தத் தொடருக்குப் பயன்படுத்திய புத்தகங்களின் பட்டியலையுன் தாருங்கள். */

மிக்க நன்றி.
இக் கட்டுரை வேறு சில தேவை கருதி நானும் எனது இரு சிங்கள நண்பர்களும் சில வருடங்களுக்கு முன் எழுதிய ஆங்கிலக் கட்டுரை.

அவற்றில் சிலவற்றை விட்டும் எடுத்தும் தமிழாக்கம் செய்து இங்கே பதிவிடுகிறேன். அடுத்த பதிவுக்கான பகுதியை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வார இறுதியில்:
முஸ்லிம்கள் vs சிங்களவர்கள்
மலையாளிகள் vs சிங்களவர்கள்
இந்தியத்தமிழர் vs சிங்களவர்கள்

ஆகிய பகுதிகளைப் பதிவேற்றுகிறேன்.

இக் கட்டுரைக்காக நாங்கள் கிட்டத்தட்ட 20 புத்தகங்களுக்கு மேல் பயன்படுத்தியிருக்கிறோம். சில புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்ட போது அப் புத்தகங்களின் பெயர்களை அந்த மேற்கோள்களுக்குக் கீழே பதிவில் இணைத்திருக்கிறேன். மற்றைய புத்தகங்களின் விபரத்தையும் இறுதிப் பதிவின் கீழ் இணைக்கிறேன்.

said...

வெற்றி,

நல்ல கட்டுரை! பகிர்வுக்கு நன்றி!

said...

இந்த தொடரின் அடுத்த பதிவுக்காக காத்து கொண்டு இருகிறேன்.

said...

நல்ல முயற்சி வெற்றி,
எனினும் நீங்கள் 1960களில் (1962இல் என நினைக்கிறேன்)நடந்த இராணுவ சதிப் புரட்சி பற்றி குறிப்பிடவில்லை. இது வேண்டுமென்றே விடப்பட்டதாக நான் கருதவில்லை. இந்தப்புரட்சியில் பங்குகொண்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். சிங்கள மக்கள் (பெளத்த) இந்நிகழ்வை பெளத்தத்துக்கு எதிரான கிறிஸ்த்தவரின் சதிகளின் தொடராகவே இன்றுவரை பார்க்கின்றனர்.
நீங்கள் எழுத விழைந்த கருத்தாக்கத்துக்கு இது முரணாக இருப்பினும் ப்தியப்பட வேண்டியது என நான் கருதுகிறேன். வரலாற்றாசிரியர்களுக்கும் பல பொதுமக்களுக்கும் இது தெரிந்தது எனினும் பெளத்த சிங்களவர்களினால் தற்போது பேசப்படுவதில்லை. காரணம் எல்லோரும் அறிந்த ஒன்றே! தேவை எனின் மேலதிக விபரங்கள் தருகிறேன்.

said...

வந்தியத்தேவன்,

/* நல்லதொரு தொடர் தொடருங்கள் காத்திருக்கிறோம் */

நன்றி. அடுத்த பகுதியை இந்த வார இறுதியில் பதிவிடுகிறேன்.

பி.கு:- வந்தியத்தேவன் என்பது வரலாற்றுப் பெயரா? பெயர் நல்லாயிருக்கு. இப் பெயரின் பொருள் என்ன?

said...

சிவபாலன்,
மிக்க நன்றி.

said...

இவன்,
மிக்க நன்றி. அடுத்த பகுதி நாளை [ஞாயிற்றுக் கிழமை] பதிவிடுகிறேன்.

said...

அனானி,

/* எனினும் நீங்கள் 1960களில் (1962இல் என நினைக்கிறேன்)நடந்த இராணுவ சதிப் புரட்சி பற்றி குறிப்பிடவில்லை. இது வேண்டுமென்றே விடப்பட்டதாக நான் கருதவில்லை. இந்தப்புரட்சியில் பங்குகொண்ட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர்.*/

மிக்க நன்றி. மிகவும் அருமையான கருத்தைச் சொல்லியுள்ளீர்கள். இது கட்டாயம் வரலாற்றில் பதியப்பட வேண்டியது தான். எனது பதிவிலும் இதைச் சுட்டிக்காட்டிருக்க வேணும். கவலையீனத்தால் விட்டுவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

1960 களில் இரண்டு தடவைகள் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு [coup] முயற்சி நடந்தது. இரண்டும் தோல்வியில் முடிந்தது.

நீங்கள் சொல்லும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு [coup] முயற்சி 1962 ல் நடந்தது. 1960 களில் இலங்கை இராணுவத்தின் ஆட்பலம் கிட்டத்தட்ட 6000 வீரர்கள் மட்டுமே. 50 % வீதத்திற்கும் கூடுதலாக இராணுவ உயர் பதவியில் இருந்தவர்கள் புத்த சிங்களவர்கள் அல்லாத சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழர்களும். சிறீமா பண்டாரநாயக்காவே இத் தருணத்தில் பிரதமராக இருந்தார். இவரின் இந்த ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான உறவு விரிசலடையத் தொடங்கியது. அத்துடன் கிறிஸ்தவ அமைப்புக்களல் நடாத்தப்பட்ட பல பாடசாலைகளை இவர் அரசுடமை ஆக்கினார். பல கிறிஸ்தவ விரோத சட்டங்களும் அரசால் பிறப்பிக்கப்பட்டது.

ஆக 1962ல், தமிழ்-சிங்கள மக்களின் உறவுகளைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கும், இவ் அரசின் கீழ் பொருளதாரம் சீரழிந்ததால் அதைச் சரி செய்வதற்கும், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் சிறிமாவின் ஆட்சியைக் கவிப்பது என சில இராணுவ, மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இந்த உயரதிகாரிகளில் ஒருவர் தனது மனைவியின் தந்தையாரிடம் இந்தத் திட்டத்தைச் சொல்லிவிட்டார் என்றும், இந்த அதிகாரியின் மாமன், சிறிமா அரசில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் இத் திட்டத்தை அரசுக்குச் சொல்லிவிட்டார். அதனால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு வெற்றியளிக்கவில்லை என இலங்கையின் வரலாற்று ஆசிரியர் K.M. de Silva அவர்கள் Sri Lanka : Political-Military Relations ல் எழுதியிருக்கிறார்.

இந்த இராணுவ கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததால் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முழு இலங்கைக்குமே பாதகமாகிவிட்டது. இந்த இராணுவ உயரதிகாரிகளின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இன்று இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லாது இருந்திருக்கும்.

நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல், இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைத்து[கிட்டத்தட்ட] இராணுவ , பொலிஸ் அதிகாரிகளும் கிறிஸ்தவர்களே.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின் இராணுவ உயர் பதவிகள் அனைத்திலும் புத்த சிங்களவர்களே நியமிக்கப்பட்டார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

"In 1962, a policy of recruiting only from the Sinhalese Buddhist community was instituted. This was the beginning of an ethnically pure army and caused Tamils and other ethnic groups to beleive they were viewed as 'second-class citizens' who could not even be trusted to protect the country"
[Brian Blodgett, Sri Lanka's Military: The Search For A Mission, p.62]

/* தேவை எனின் மேலதிக விபரங்கள் தருகிறேன் */

இதுபற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின் தயவு செய்து மேலதிக விபரங்களைத் தந்துதவ முடியுமா?

said...

//..இதுபற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின் தயவு செய்து மேலதிக விபரங்களைத் தந்துதவ முடியுமா? ...//

நீங்கள் கூறிய விபரங்களையே நான் குறிப்பிட்டேன். இதைவிடவும் விரிவான விபரங்கள் என்னிடம் தற்போதில்லைமன்னிக்கவும்."SRI LANKA:THE ARROGANCE OF POWER: Myths, Decadence & Murder" இல் விபரமாக வாசித்த ஞாபகம். புத்தக அடுக்குகளில் தேடிக்கொண்டிருக்கிறேன், கண்ணுக்கு தெரிவதாக இல்லை. தேடிக்கொண்டிருக்கிறேன்.

//..இந்த இராணுவ உயரதிகாரிகளின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இன்று இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லாது இருந்திருக்கும்...//

இது உங்களின் விருப்பத்தின் வெளிப்பாடா அல்லது ஊகமா? இல்லையேல் இக்கருத்துக்கு ஆதாரம் ஏதும் உண்டா?
ஜே.வீ.பி யினரின் முதலாவது புரட்சியில் தமிழர்கள் பங்கு என்பது மிகமிக அரிதானது. தோல்விக்குப்பின்னரான ரகசிய கருத்தரங்கொன்றில் தமிழர்களின் பங்களிப்பை ஜே.வீ.பி கோராமல் விட்டது எவ்வளவு பிழை என்பதை தெரிவித்த 'தோழர்கள்' தாம் தமிழர்களை இந்திய மேலாண்மை/விரிவு இன் நீட்சியாகவே நோக்கினர் என்பதை ஒத்துக்கொண்டனர். எனினும் திருத்திக் கொண்டார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும்! ஆனாலும் இன்றும் தமிழர் புரட்சியில் ஒத்துழைத்திருந்தால் இன்று இனப்பிரச்சினனயே இருந்திருக்காது என்று குழலூதுகின்றனர்.
ஒருவேளை 1962 இராணுவ சதிப்புரட்சி வெற்றிபெற்று 50 வருடங்களின் பின் புதிய 'பெளத்த மறுமலர்ச்சி' வாதிகள் வந்து தமிழர்களை ஒடுக்கியிருந்தால் உங்கள் ஆய்வின் துரோகப்பட்டியலில் தமிழர்கள் சிங்கள பெளத்தருக்கெதிராக இருந்தனர் என குறிப்பிட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
மேலும் 1962 இல் தமிழர்கள் ராணுவத்துக்கு பொருத்தமானவர்களில்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் இன அழிப்பு (திட்டமிட்ட) என்பது அதற்குமுன்னரான 10 வருடங்களாக வருவதே. 1962 இல் ராணுவத்தில் தமிழர்கள் நீக்கப்படாமல் 1972இல் அது நடந்திருக்கும் என்பது தான் வரலாறு தரும் பாடம்!

//..அத்துடன் கிறிஸ்தவ அமைப்புக்களல் நடாத்தப்பட்ட பல பாடசாலைகளை இவர் அரசுடமை ஆக்கினார். பல கிறிஸ்தவ விரோத சட்டங்களும் அரசால் பிறப்பிக்கப்பட்டது...//

இந்தக்காலத்தில் தமிழர்கள் கிறிஸ்தவகளுடனேயே நின்றார்கள் எனவே கேள்விப்பட்டேன். கிறிஸ்தவ கல்லூரிகள் தேசியமயமாக்கப்பட்ட போது இந்து சபை (Hindu Board) பாடசலைகளும் பாதிப்புக்குள்ளாயின. எனவே தமிழர்கள் சிலர் வெளிப்படையாகவும் பலர் மறைமுகமாகவும் கிறிஸ்தவ மிசனரி களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதை நோக்கும்போது உங்களின் கருத்தாக்கத்தில் முரண் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது.

//..தமிழ்-சிங்கள மக்களின் உறவுகளைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கும், இவ் அரசின் கீழ் பொருளதாரம் சீரழிந்ததால் அதைச் சரி செய்வதற்கும், நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் சிறிமாவின் ஆட்சியைக் கவிப்பது என சில இராணுவ, மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் முடிவெடுத்தனர். ..//

இன்றும் இதையே 'பயங்கரவாதத்துக்கு எதிரான' போரில் ஸ்ரீலங்காவும் உலகமும் சொல்கின்றன என்பது தான் வேடிக்கை! இது வெறும் அரசியல் கூச்சலே அன்றி வேறெதுவுமில்லை.

//..இந்த உயரதிகாரிகளில் ஒருவர் தனது மனைவியின் தந்தையாரிடம் இந்தத் திட்டத்தைச் சொல்லிவிட்டார் என்றும், இந்த அதிகாரியின் மாமன், சிறிமா அரசில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் இத் திட்டத்தை அரசுக்குச் சொல்லிவிட்டார். ..//

மிகவசதியான "தப்பியோடல்". எந்த உயரதிகாரி ஆவது சதிப்புரட்சி பற்றி ஆட்சியில் இருக்கும் மாமனுக்கு அவிழ்த்து விடுவவரா?
இதையே எனது நண்பனின் தந்தையார் வேறுவிதமாக சொல்வார். அதாவது கிறிஸ்தவர்கள் சதிப்புரட்சி செய்தார்கள் என்று பெளத்தர்கள் அறிந்தால் ஸ்ரீலங்காவில் தமது கதி அதோகதிதான் என்றுணர்ந்த 'திருச்சபை'யின் முதுகில் குத்திய சம்பவம்தான் இது என்று. எனவே ஊகங்கள் அற்ற ஆய்வே சிறந்தது.
உங்கள் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.

said...

அனானி,
உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. உங்களின் பின்னூட்டத்திலிருந்து பல விடயங்களை அறிந்து கொண்டேன்.

/* இது உங்களின் விருப்பத்தின் வெளிப்பாடா அல்லது ஊகமா? இல்லையேல் இக்கருத்துக்கு ஆதாரம் ஏதும் உண்டா? */

முதலில், இது இப்படி நடந்திருந்தால் சிலவேளைகளில் இப்படி நடந்திருக்கும் என்ற ஊகத்தின் வெளிப்பாடே அது. அந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது. எனவே நடக்காத ஒரு நிகழ்ச்சிக்கு ஆதாரம் காட்ட முடியாது என நினைக்கிறேன்.
இந்தியா பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற போது இலங்கை எதிர் நோக்காத பல சிக்கல்களை எதிர்கொண்டது. ஆனால் நேரு அவர்களின் தொலைநோக்குப் பார்வையுள்ள பல நடவடிக்கைகளால் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.

ஆகவே இந்த 1962 ஆட்சிக் கவிழ்ப்பு இராணுவ புரட்சியாளர்களும் தமது முயற்சியில் வெற்றி பெற்று தொலைநோக்குப் பார்வையுடன்
செயற்பட்டிருந்தால்.... நேரு போல் செயற்பட்டிருந்தால்... எனும் ஊகங்களின் அடிப்படையில் வந்த கருத்தே அது .

ஒரு விடயம் பற்றி எழுதும்போது இப்படி நடந்திருந்தால் இப்படி நடந்திருக்கவும் கூடும் என ஊகம் தெரிவிப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். பல வரலாற்று ஆசிரியர்கள் இப்படித் தமது ஊகங்களை தெரிவித்துருப்பதைப் படித்திருக்கிறேன். சிலவேளை அதன் பாதிப்பால்தான் நானும் அப்படி எழுதினேன் என நம்புகிறேன். :-)

இந்த இராணுவப் புரட்சி வெற்றி பெற்றிருந்தால் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகள் போல அடிக்கடி இராணுவ ஆட்சியாளரால் ஆளப்படும் நாடாக இருந்திருக்கும் என பேராசிரியர் K.M.de Silva அவர்கள் ஊகம் தெரிவித்திருந்தார்கள். அது அவரின் ஊகம்.

/* மேலும் 1962 இல் தமிழர்கள் ராணுவத்துக்கு பொருத்தமானவர்களில்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் இன அழிப்பு (திட்டமிட்ட) என்பது அதற்குமுன்னரான 10 வருடங்களாக வருவதே. */

உண்மை. மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. தமிழ்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் என்பது சுதந்திர இலங்கையின் முதல் அரசான D.S.செனநாயகாவின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது.

/* இந்தக்காலத்தில் தமிழர்கள் கிறிஸ்தவகளுடனேயே நின்றார்கள் எனவே கேள்விப்பட்டேன். */

நானும் அப்படித்தான் அறிந்தேன். வெளிப்படையாகவே அரசின் இந்தத் திட்டத்திற்குத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் கிறிஸ்தவ அமைப்புகளால் நடாத்தப்பட்ட அதிகமான பாடசாலைகள் தமிழ்பகுதிகளிலேயே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டது அதிகம் தமிழர்களே.

கிறிஸ்தவ அமைப்புகளால் பாடசாலைகள் நடாத்தப்பட்டாலும் கிறிஸ்தவர்கள் அல்லாத பல தமிழர்களும் இப் பாடசாலைகளால் பயனடைந்தனர்.

அரச பாடசாலைகளை விட பல கிறிஸ்தவ பாடசாலைகள் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டன. தென்னிலங்கையில் இருந்து கூட சில சிங்கள மாணவர்கள் யாழ் வந்து இந்த கிறிஸ்தவ பாடசாலைகளில் படித்தனர்.

தமிழ்ப்பகுதிகளில் இப்படியான சிறந்த பாடசாலைகள் இயங்குவதால் சிங்களவர்களை விட தமிழர்கள் படித்து முன்னுக்கு வருகிறார்கள் எனும் முக்கிய காரணத்தால்தான் இந்த கிறிஸ்தவ பாடசாலைகள் அரசமயமாக்கப்பட்டதெனவும் அறிந்தேன்.

ஆக இந்த கிறிஸ்தவ பாடசாலைகள் அரச மயமாக்கப்பட்டதால் அதிகளவில் பாதிக்கப்பட்டது தமிழர்களே. அதனால்தான் தமிழர்கள் இச் சட்டத்தை எதிர்த்தார்கள்.

/*
இன்றும் இதையே 'பயங்கரவாதத்துக்கு எதிரான' போரில் ஸ்ரீலங்காவும் உலகமும் சொல்கின்றன என்பது தான் வேடிக்கை! இது வெறும் அரசியல் கூச்சலே அன்றி வேறெதுவுமில்லை.*/

சிலவேளைகளில் நீங்கள் சொல்வது போல் கூட இருக்கலாம். சிலவேலைகளில் 1962 ல் புரட்சி செய்த இராணுவத் தளபதிகள் தொலைநோக்குப் பார்வையுள்ளவர்களாக இருந்து , இனப்பிரச்சனையைத் தீர்த்துமிருக்கலாம், இல்லையா?

மேலே உள்ள உங்களின் கருத்தும் ஒரு ஊகம் என்றே நம்புகிறேன்.
நடக்காத சம்பவத்தை இப்படி பல விதமாகவும் ஊகிக்கலாம். நீங்கள் சொன்னது போல், இந்த இராணுவ புரட்சியாளர்களின் கருத்துக்கள் வெற்றுக் கூச்சலாகக் கூட இருந்திருக்கலாம். :-))

/* மிகவசதியான "தப்பியோடல்". எந்த உயரதிகாரி ஆவது சதிப்புரட்சி பற்றி ஆட்சியில் இருக்கும் மாமனுக்கு அவிழ்த்து விடுவவரா?
இதையே எனது நண்பனின் தந்தையார் வேறுவிதமாக சொல்வார். அதாவது கிறிஸ்தவர்கள் சதிப்புரட்சி செய்தார்கள் என்று பெளத்தர்கள் அறிந்தால் ஸ்ரீலங்காவில் தமது கதி அதோகதிதான் என்றுணர்ந்த 'திருச்சபை'யின் முதுகில் குத்திய சம்பவம்தான் இது என்று. எனவே ஊகங்கள் அற்ற ஆய்வே சிறந்தது.
உங்கள் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன். */

இந்த இராணுவ உயரதிகாரி இராணுவப் புரட்சித் திட்டத்தை தனது மாமனாருக்குச் சொன்னது என்பது என் ஊகம் அல்ல. அது பேராசிரியர் K.M. de Silva அவர்கள் Sri Lanka : Political-Military Relations எனும் கட்டுரையில் சொன்ன கருத்துக்கள்.
அவர் அக் கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்:
"...one of the plotters got cold feet and leaked the information to his father-in-law, a MP in the ranks of the ruling party"

மேலே உள்ளவை அவரின் சொற்கள். பேராசிரியர் சில்வா அவர்கள் இலங்கையின் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் ஒருவர். சர்வதேச அளவில் மதிக்கப்படுபவர். பல வரலாற்று [இலங்கை பற்றி] நூல்களைத் தந்தவர். குறிப்பாக இலங்கையின் பல்கலைக்கழக தரப்படுத்தலைப் பற்றி விரிவாக எழுதியிருந்தவர். ஆகவே மேலே நான் சொன்ன கருத்துக்கள் எனது ஊகம் அல்ல. அது பேராசிரியர் சில்வாவின் கட்டுரையில் இருந்து எடுத்த அவரின் கருத்துக்கள்.

1962ல் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி பற்றி நான் அறிந்ததெல்லாம் பேராசிரியர் சில்வாவின் எழுத்துக்கள் மூலமே. இதுபற்றி வேறு நூல்களில் நான் படிக்கவில்லை.Brian Blodgett, இவர் ஒரு அமெரிக்கர். இவர் எழுதிய Sri Lanka's Military: The Search For A Mission, எனும் புத்தகத்தில் 1962லும் 1966லும் இராணுவ சதி முயற்சி நடந்தது என மட்டுமே எழுதியிருந்தார். மேலதிகமாக அவர் எழுதவில்லை. உண்மையில் இவர் பேராசிரியர் சில்வாவின் நூலையே தனது புத்தகத்திற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருந்தார்.

அதனால்தான் நான் உங்களிடம் இதுபற்றி மேலதிக விபரங்கள் தந்துதவுமாறு கேட்டிருந்தேன். ஏனெனில் இவ் விடயத்தில் [இராணுவ புரட்சி] பேராசிரியர் சில்வாவின் கருத்துக்களைத் தவிர வேறுகருத்துக்கள் எனக்குத் தெரியாது.

/* எனவே ஊகங்கள் அற்ற ஆய்வே சிறந்தது.உங்கள் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்.*/

உங்களின் ஆக்கபூர்வமன கருத்திற்கு மிக்க நன்றி. இங்கே நான் எழுதுவது நடந்த சம்பவங்களை. அச் சம்பவங்களை என் சொந்த விருப்பு வெறுப்பின்றி எழுத வேணும் என்பதே என் நோக்கமும்.

said...

வெற்றி!
கட்டுரையும், பின்னூட்டங்களும் நிறையக் கேள்வியை எழுப்புகின்றன.
அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்.
d.s.senanayaka, swrd bandaranayaka,jr jeyavardana...பௌத்தர்,கிருஸ்தவர்களாகிப் பின் பௌத்தர்களானவர்கள்..இதன் பின்னணி...பற்றிய தகவல்கள் தரவும்.

said...

//..இனப்பிரச்சனையைத் தீர்த்துமிருக்கலாம், இல்லையா?

மேலே உள்ள உங்களின் கருத்தும் ஒரு ஊகம் என்றே நம்புகிறேன்...//

வெறும் ஊகமல்ல, ஸ்ரீலங்காவின் தமிழருக்கெதிரான துரோகங்கள் பாதைமுழுவதும் நிறைந்தே இருக்கிறன. இடதுசாரிகளே துரோகமிழைத்த வரலாறு ஈழத்தமிழர்களினதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்! ஊகமல்ல!!

//..அது பேராசிரியர் K.M. de Silva அவர்கள் Sri Lanka : Political-Military Relations எனும் கட்டுரையில் சொன்ன கருத்துக்கள்...//
இது ஏலவே அறியப்பட்டது தான். எனினும் பல இலங்கையர் (சிங்கள, தமிழ்) இப்புரட்சி பிழைத்தது பற்றி மாற்றுக்கருத்து கொண்டிருந்தனர் என்றும் கேள்விப்படேன். இதில் கத்தோலிக்க திருச்சபையின் 'கை' ஒன்றுள்ளது என்பது அதில் ஒன்று. அதாவது புரட்சி வெற்றிகரமாகினால் பிற்காலத்தில் பெளத்தர்களின் வெறுப்பினால் கிறிஸ்தவதிருச்சபையினது செயற்பாடுகளுக்கு குந்தகமாக இருக்கும் என்ற 'தொலைநோக்கு' சிந்தனையே இந்த 'மாமனாரூடான தலையணை மந்திர' கசிவு என்பர். இது ஒரு ஊகம்தான் எனினும் உலக அரசியலில் கிறிஸ்தவ திருச்சபையின் நடத்தைகளை (பண்டையகாலங்களில் சதிப்பிரட்சிகள், இன்றைய ஏழைநாடுகளில் சதிப்புரட்சிகள், சர்வாதிகார அரசுகளுக்கான மறைமுக ஆதரவு, பாலஸ்தீனருக்கு எதிராக இஸ்ரேலிய ஆதரவு, etc..etc)நோக்குவோமாயின் இதை வெறும் ஊகம் என ஊதித்தள்ளுவது கடினமே!

இதை எழுதுவதால் என்னை கிறிஸ்தவஎதிர்ப்பாளன் என எண்ண வேண்டாம்.
எனக்கு எம்மதமும் சம்மதமில்லை!!!!

said...

யோகன் அண்ணை,

/* வெற்றி!
கட்டுரையும், பின்னூட்டங்களும் நிறையக் கேள்வியை எழுப்புகின்றன.*/

உண்மைதான்.வரலாறுகளைத் தோண்டத் தோண்ட இன்னும் பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கிறது. நீங்கள் சொன்னது போல் எனக்கும் பல கேள்விகள் தோன்றியதால்தான் பல அறிஞர்கள் எழுதிய பல நூல்களைப் படிக்க ஆர்வம் ஏற்பட்டது.

இப்படித்தான் எம்மில் பலர் நாவலரை ஒரு சாதிவெறியன் எனும் மாயயை உருவாக்கியிருந்தார்கள்.தமிழினத்தை உய்விக்க தொலை நோக்குப் பார்வையுடன் எத்தனையோ நல்ல செயற்திட்டங்களைச் செய்த மனிதர் எப்படிச் சாதி வெறியராக இருக்க முடியும் என எனக்குள் கேள்வி எழுந்தது.

அவரைப் பற்றி பல கல்விமான்கள் எழுதிய நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். அக் கல்விமான்கள் அவர் ஒரு சீர்திருத்தவாதி, பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்ததால் யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சாதியாக இருந்த சில வெள்ளாரே நாவலரை எதிர்த்தனர் என்றும் தெரிவித்திருந்தனர்.

அதேபோல்தான் இப் பதிவிலும் அனானியாக வந்து கருத்துச் சொன்ன அன்பர் 1962ல் நடந்த இராணுவச் சதி பற்றிச் சொன்ன கருத்துக்கள், அச் சம்பவத்தைப் பற்றி மேலும் அறிய ஆவலைத் தூண்டியது. பல கேள்விகளை என்னுள் எழுப்பியது. அச் சம்பவத்தைப் பற்றி விரிவாகக் கூறும் புத்தகம் ஒன்று , குறிப்பாக அச் சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள் போன்றவை கிடைக்கப் பெற்றேன். இனி வாசிக்க வேணும்.

ஆக, நீங்கள் சொன்னது போல் இவற்றைப் படிக்கும் போது பல கேள்விகள் எழுகிறது என்பது முற்றிலும் உண்மை.

/* அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன். */

மிக்க நன்றி அண்ணா. போன வார இறுதியில் பதிவேற்றுவதாக இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. இந்த வாரத்திற்குள் அடுத்த பகுதியை பதிவேற்ற முயற்சிக்கிறேன்.

/* d.s.senanayaka, swrd bandaranayaka,jr jeyavardana...பௌத்தர்,கிருஸ்தவர்களாகிப் பின் பௌத்தர்களானவர்கள்..இதன் பின்னணி...பற்றிய தகவல்கள் தரவும். */

யோகன்ண்னை, நான் J.R.ஜெயவர்த்தனே அவர்களின் சுயசரிதையை மட்டும்தான் மேலோட்டமாக வாசித்திருக்கிறேன். இரு பகுதிகளாக [இரு புத்தகங்களாக]
வெளிந்திருந்தது. நீங்கள் குறிப்பிட்ட மற்றையவர்களின் சுயசரிதைகளை வாசிக்கவில்லை. எனினும் அவர்கள் பற்றி மேலோட்டமாக சில நூல்களிலும் இணையத்தளங்களிலும் இருந்து அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் உங்களின் கேள்விக்குப் பதிலளிக்கிறேன்.

J.R.ஜெயவர்த்தனாவின் பூர்வீகத்தைப் பற்றி அவரின் அரசியால் எதிரிகள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

J.R.ஜெயவர்த்தனாவின் உத்தியோகபூர்வமான சுயசரிதையின் படி அவரின் முன்னோர்கள் தென்னிந்திய செட்டி சாதியைச் சேர்ந்தவர்கள். இவரின் மூதாதைகள் இந்தியாவிலிருந்து 17ம் நூற்றாண்டிலேயே இலங்கைக்கு வந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் இவர்கள் சிங்கள இனத்துடன் திருமணம் செய்து கொண்டதால் ஜெயவர்த்தனா எனும் பெயர் இவரின் பரம்பரையில் இணைந்து கொண்டது.


J.R.ஜெயவர்த்தனாவின் பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள்.J.R.ஜெயவர்த்தனா அவர்கள் பெளத்த சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்ததன் பின்னரேயே பெளத்தராக மதம் மாறினார் என்கிறது அவரது சுயசரிதம். இவரின் மூதாதைகள் தென்னிந்தியாவில் இருந்து வந்ததால் சைவர்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு என நான் நம்புகிறேன். ஆனால் இது பற்றி அவரின் சுயசரிதையில் ஒன்றும் சொல்லவில்லை.

பண்டாரநாயக்காவின் முன்னோரும் தென்னிந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களே. இவர்கள் 16ம் நூற்றாண்டில் இலங்கையில் வந்து குடியேறினார்கள் என பேராசிடியர் K.M. de Silva அவர்கள் J.R.ஜெயவர்த்தனாவின் சுயசரிதையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டாரநாயகாவும் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்தான். பண்டாரநாயக்கா அரசியலில் நுழைந்த பின்னர்தான் பெளத்த மதத்திற்கு மாறினார்.

D.S. செனநாயக்கா அவர்கள் பெளத்த குடும்பத்தில் பிறந்தவர். அவரின் தந்தையின் ஆணைப்படி கிறிஸ்தவ பள்ளியில் சேர்ந்தார். அத்துடன் கிறிஸ்தவராக மதமும் மாறிக் கொண்டார். D.S. செனநாயக்கா பற்றிய இத் தகவல்களை இலங்கைப் பிரதமரின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் முன்னாள் பிரதமர்கள் பற்றிய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாசா அவர்கள் சிங்கள இனத்தில் மிகவும் கீழ் நிலையில் உள்ள உடுப்புக்கள் கழுவும் சாதியான கினா [வண்ணார்/கட்டாடி] சாதியைச் சேர்ந்தவர். இப்படியான மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து வந்து இலங்கையின் ஜனாதிபதியான முதல் நபர். சிங்கள உயர்சாதியான கோவிகமவினரின் பல எதிர்ப்புக்கள்/குழிபறித்தல்கள் போன்றவற்றை முறியடித்து இலங்கையின் ஜனாதிபதியானவர்.

said...

வெற்றி,
உங்களின் பின்னூட்டங்களில் இருந்து தெரியவருவன...

1) நீங்கள் இன்னும் ஆய்வு செய்து கொண்டிடுக்கிறீர்கள். இவ்வாறு ஆய்வு செய்துகொண்டே தலைப்பை முடிவு செய்துகொண்டிருக்கக்கூடாது.
2) கவர்ச்சிகரமான தலைப்பை கண்டு அதை ஈழத்தமிழர் சரித்திரத்தில் 'பொருத்த' முயல்கிறீர்கள் என்ற ஐயம்.(சோசலிசப்புத்தகங்களை வாசித்த இயக்கங்கல் அதை ஈழப்போரில் 'பொருத்த' முயன்று தோற்றார்கள்)
3) உங்கள் சிங்கள நண்பர் உங்களை அறியாமல் உங்கள் கருத்தை மாற்றி முழுப் 'பழி'யையும் தமிழர் தலையில் போட முயல்கிறார். இவ்வாறே இன்று ஆனந்த சங்கரி செய்து வருகிறார் (அவரின் கடைசிக்கடிதத்தில் 8ம் வகுப்பு சமூகக்கல்வியில் படித்ததுபோன்ற தொழிற்சாலைகளின் பட்டியல்)

இது எனக்குப்பட்டது. எனக்கென்றால் உங்களின் தொடர் முடிவடையும் போது தலைப்பும் உள்ளடக்கமும் நேரெதிரானவையாக இருக்குமோ என ஐயப்பாடு தோன்றுகிறது.

எனினும் தொடர்ந்து எழுதுங்கள். பின்னூட்டத்தில் புதிய கருத்துக்கள் அறிய முடிகிறது.

said...

அனானி,
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

/* வெறும் ஊகமல்ல, ஸ்ரீலங்காவின் தமிழருக்கெதிரான துரோகங்கள் பாதைமுழுவதும் நிறைந்தே இருக்கிறன. இடதுசாரிகளே துரோகமிழைத்த வரலாறு ஈழத்தமிழர்களினதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்! ஊகமல்ல!! */

உண்மை. உங்களின் கருத்துடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இது எமக்கு[ஈழத் தமிழர்களுக்கு] அனுபவம் கற்றுத் தந்த பாடம். சிங்கள பேரினவாதிகள் தமிழர்களின் உரிமையை அங்கீகரக்கப் போவதில்லை என்பதை எமது தமிழ்த் தலைவர்கள் சிங்களவர்களுடன் சமாதானமாக வாழ சகல முயற்சிகளையும் மேற்கொண்டு தோல்வி கண்ட பின் நாம் தெரிந்து கொண்ட உண்மை.

அண்மையில் கூட கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் உயன்கொட அவர்கள், "சிங்கள அரசியல் தலைவர்களும் , புத்த அடிப்படைவாதிகளும் தமிழ்மக்களை சம உரிமையுடன் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை" எனச் சொல்லியிருந்தார்கள்.

இதை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மிகவும் தெளிவாக 1975ம் ஆண்டிலேயே சொல்லிவிட்டார்கள்.

"I personally have lost all hope of being able to establish our rights in one Sri Lanka. We won't reject any short-term solutions that may come up. The only long-term solution is the division of our country. If they offer us federation we won't reject it. But there is no prospect of that. We have not yet declared our policy of separation but at the next convention it will happen."

[Walter Schwars, The Tamils of Sri Lanka, p.15]

தமிழர்களுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதும், பின் அதை நடைமுறைப்படுத்தாமல் விடுவதும் சிங்களத் தலைமைகள் தொடர்ந்து செய்து வரும் செயல்தான்.

Sir பொன். அருனாசலம் - ஜேம்ஸ் பீரிஸ் ஒப்பந்தம் [1915]
W.துரைசாமி - C.E.கூரே ஒப்பந்தம் [1925]
பண்டா-செல்வா ஒப்பந்தம்[1958]
டட்லி-செல்வா ஒப்பந்தம்[1965]
பிரபா-ரணில் ஒப்பந்தம்[2002]

ஆக, சிங்களத் தலைவர்கள் பதவிக்கு வருவதற்காக சிங்கள தேசியத்தைக் கையிலெடுத்து ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் இந்தப் பேரினவாதிகளினதும், அடிப்படைக் கொள்கைகளுக்கும் சிறைப்பட்டு விடுகிறார்கள். அச் சிறைக்குள் இருந்து அவர்களே விரும்பினாலும் வெளியில் வரமுடியாது.

"I would venture to say that in every case, with Mr.S.W.R.D. Bandaranaike, Mrs. Sirimavo Bandaranaike, President JRJ, the heads of the state became prisoners of the very forces they unleashed and mobilized to start with."
[Dr.Alfred Jeyaratnam Wilson, FIFTY YEARS OF NATIONAL DISASTER, 1998]


/* இடதுசாரிகளே துரோகமிழைத்த வரலாறு ஈழத்தமிழர்களினதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்!*/

தனிப்பட்ட முறையில் நான் இடதுசாரிகளுக்கு எதிரானவன். இதனால் நான் "அமெரிக்க அருவருடி" என நண்பர்களால் செல்லமாக(?!) அழைக்கப்படுவதுண்டு. :-)

நிற்க, இலங்கையில் மிக மோசமான தமிழர் விரோதச் சட்டங்கள் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது என்பது வரலாறு.

என்னைப் பொறுத்த வரையில் இடதுசாரிக் கொள்கைகள் "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது" என்பது போன்றது. அதுபோல ,இலங்கையில் இடதுசாரிக் கொள்கைகள் பேசிய பலரும்,'சிந்தையில் கள் விரும்பிச் சிவ சிவ' என்பது போல் இடதுசாரிக் கொள்கைகளில் பிடிப்பில்லாது சும்மா உளறித் திரிந்தவர்களே [ஒரு சிலரைத் தவிர].ஏன் இன்றுகூட இராஜபக்ச அரசுக்கு தம்மை இடதுசாரிகள் என கூறிக் கொள்ளும் கட்சிகள் குடை பிடிப்பனதான்.

நிற்க. 1962ல் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் சிங்களப் பேரினவாதிகளோ அல்லது புத்த அடிப்படைவாதிகளோ அல்ல. கிறிஸ்தவ சிங்களவர், பேகர் போன்றவர்கள்தான் இம் முயற்சியில் ஈடுபட்டது.ஒரே ஒரு புத்த சிங்களவர் மட்டும் இக் குழுவில் இருந்தார். ஆக இதனால்தான் இவர்கள் தமது முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் நாம் இன்று எதிர்நோக்கும் சிக்கல்கள் இல்லாதிருந்திருக்கக்கூடும் எனச் சொல்லியிருந்தேன்.

/* உலக அரசியலில் கிறிஸ்தவ திருச்சபையின் நடத்தைகளை */

நீங்கள் சொல்வது போல் வத்திக்கான் அரசியல் பற்றி பல விடயங்கள் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

/* இதை எழுதுவதால் என்னை கிறிஸ்தவஎதிர்ப்பாளன் என எண்ண வேண்டாம்.எனக்கு எம்மதமும் சம்மதமில்லை!!!! */

நீங்கள் தயங்காமல் உங்களின் கருத்துக்களைச் சொல்லுங்கள். அப்படியெல்லாம் நான் ஒருவரையும் முத்திரை குத்துவது இல்லை. யாராவது ஏதாவது சொன்னால், அதிலுள்ள மெய்ப்பொருளைக் காணவேணும் எனச் சொன்ன எமது பாட்டன் வள்ளுவன் வழியில் நடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனவே எந்தத் தயக்கமும் இன்றி உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.

said...

// இதனால் நான் "அமெரிக்க அருவருடி" என நண்பர்களால் செல்லமாக(?!) அழைக்கப்படுவதுண்டு. :-)..//

இடதுசாரிகளுக்கு (போலி ரகம்) இதுதவிர எதுவும் தெரியாது. பட்டம் சூட்டுவது அவர்களுக்கு கைவந்தகலை!

//..இலங்கையில் இடதுசாரிக் கொள்கைகள் பேசிய பலரும்,'சிந்தையில் கள் விரும்பிச் சிவ சிவ' என்பது போல் ..//

ஆஹா ...சரியான மேற்கோள் சொன்னீர்கள். நன்றி. இவ்வளவு காலமும் நறுக்குதெறித்தாற்போல் ஒன்று தேடித்திரிந்தேன் உங்கள் உபயம் அகப்பட்டுவிட்டது.

said...

//..அண்மையில் கூட கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் உயன்கொட அவர்கள், "சிங்கள அரசியல் தலைவர்களும் , புத்த அடிப்படைவாதிகளும் தமிழ்மக்களை சம உரிமையுடன் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை" எனச் சொல்லியிருந்தார்கள்...//

ஆனால் நம்ம ஆனந்த சங்கரியோ 'பேக்கரிமாமா' ,'ஒரு கல்லைக்கூட விட்டெறியாத ஜே.வீ.பி' , 'சங்கரி எதைக்கேட்டாலும் கொடுக்கச்சொன்ன மகாசங்கம்' என்று விட்டுக்கொண்டு திரிகிறார். கேட்டால் யுனெஸ்கோ விருது, சட்ட அறிஞர் அது இது என்கிறார்.

//..இதை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மிகவும் தெளிவாக 1975ம் ஆண்டிலேயே சொல்லிவிட்டார்கள்...//

அதுவல்ல இங்கு பிரச்சினை. அப்படிச்சொல்லிவிட்டு எனன 'திருக்கூத்து' ஆடினார் என்பது தான் கேள்வி. நீங்கள் அவருக்கு அளவுக்கதிகமான 'கிறடிற்' கொடுக்கிறீர்கள்.

said...

வெற்றி!

ஆழமான கட்டுரை. நிறைய பின்னணித் தகவல்கள். புதிய தகவல்களும் கூட. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

said...

அருமையான தொடர், உங்களுக்கும், அனானிக்குமான உரையாடல் செறிவான கருத்துகளை தாங்கி வருகிறது...
தொடருங்கள்.... வாழ்த்துகள்

said...

அனானி,
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

/* உங்களின் பின்னூட்டங்களில் இருந்து தெரியவருவன... */

/* 1) நீங்கள் இன்னும் ஆய்வு செய்து கொண்டிடுக்கிறீர்கள். இவ்வாறு ஆய்வு செய்துகொண்டே தலைப்பை முடிவு செய்துகொண்டிருக்கக்கூடாது. */
வைசா அவர்களுக்கு நான் மேலே சொன்ன பதிலை நீங்கள் படித்தீர்களோ தெரியாது. மேலே நண்பர் வைசா அவர்களுக்கு நான் இப்படிச் சொல்லியிருந்தேன்.

"இக் கட்டுரை வேறு சில தேவை கருதி நானும் எனது இரு சிங்கள நண்பர்களும் சில வருடங்களுக்கு முன் எழுதிய ஆங்கிலக் கட்டுரை.

அவற்றில் சிலவற்றை விட்டும் எடுத்தும் தமிழாக்கம் செய்து இங்கே பதிவிடுகிறேன். "

நான் முழு நேர தமிழ்மண வலைப்பதிவர் அல்ல. நேரம் கிடைக்கும் போது பல பதிவர்களின் பதிவுகளைப் படித்துப் பயனடையவும் நான் அறிந்த சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுவதுமே என் நோக்கம். எனவே நேரமின்மை, சோம்பல், நட்பு வட்டம், இன்ன பிற சோலிகளால் அடுத்த பதிவைத் திட்டமிட்டபடி பதிவேற்றவில்லை. வரும் வெள்ளிக் கிழமைக்குள் அடுத்த பகுதியைப் பதிவிட முயற்சிக்கிறேன்.

/* 2) கவர்ச்சிகரமான தலைப்பை கண்டு அதை ஈழத்தமிழர் சரித்திரத்தில் 'பொருத்த' முயல்கிறீர்கள் என்ற ஐயம்.(சோசலிசப்புத்தகங்களை வாசித்த இயக்கங்கல் அதை ஈழப்போரில் 'பொருத்த' முயன்று தோற்றார்கள்) */

நான் இங்கே எழுதுவது நடந்த சம்பவங்களை. இனி இப்படி நடக்கும், நடக்காது என ஆருடம் கூறும் பதிவு அல்ல இது.

நான் இலங்கை வரலாற்றைப் படித்துக் கொண்டது பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன், பேராசிரியர் K.M. de Silva, பேராசிரியர் ஸ்ரான்லி தம்பையா போன்ற கல்விமான்களின் நூல்களில் இருந்து. இக் கல்விமான்கள் சர்வதேச அளவில் மதிக்கப்படுபவர்கள். அவர்களின் கருத்துக்கள்தான் என் பதிவுகளில் பிரதிபலிக்கும். நடந்த சம்பவங்களை அவர்களின் ஆதாரங்களோடு எழுதிய கட்டுரைதான் இது. இங்கே என் தனிப்பட்ட சொந்த விருப்பு வெறுப்புக்களைப் புகுத்துவது அல்ல என் நோக்கம். எனவே நீங்கள் ஐயப்படத் தேவையில்லை என நினைக்கிறேன். அப்படி நான் ஏதாவது விடயங்களைப் பொருத்துவதாக நீங்கள் கருதினால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள். அப் பொருள் பற்றி மேலும் விவாதிக்கலாம்.

/* 3) உங்கள் சிங்கள நண்பர் உங்களை அறியாமல் உங்கள் கருத்தை மாற்றி முழுப் 'பழி'யையும் தமிழர் தலையில் போட முயல்கிறார். இவ்வாறே இன்று ஆனந்த சங்கரி செய்து வருகிறார் (அவரின் கடைசிக்கடிதத்தில் 8ம் வகுப்பு சமூகக்கல்வியில் படித்ததுபோன்ற தொழிற்சாலைகளின் பட்டியல்) */

ஹிஹி... ஒருவர் மற்றவர்களின் சொற் கேட்டு ஏதாவது முட்டாள்தனமாகச் செய்தால் எமது ஊரில் 'அவன்ரை/அவளின்ரை சுயபுத்தி எங்க போச்சுது' என்று கேட்பார்கள். அது போலத்தான் என் நட்புவட்டம் பல இனத்தவர்களைக் கொண்டது. பலருடனும் பல விடயங்களை விவாதிக்கிறோம். படித்துக் கொள்கிறோம். ஆனால் எமது சுயபுத்தியையும் பயன்படுத்திக் கொள்கிறோம். எனவே சிங்கள நண்பர் எனது கருத்தை மாற்றினார் என்பது எனக்குச் சிரிப்பை வரவழைக்கிறது.:-)

யாரையும் பழி சொல்லுவதற்காக நான் இப் பதிவை எழுதவில்லை. எமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறேன். அவ்வளவே.

/* இது எனக்குப்பட்டது. */

உங்களுக்குப்பட்டதை நேர்மையுடன் சொன்னதற்கு நன்றி.

/* எனக்கென்றால் உங்களின் தொடர் முடிவடையும் போது தலைப்பும் உள்ளடக்கமும் நேரெதிரானவையாக இருக்குமோ என ஐயப்பாடு தோன்றுகிறது. */

நீங்கள் இத் தொடரில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இக் கட்டுரை எது பற்றியது என நான் என் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.

"ஒவ்வொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சிங்களப் பேரினவாதிகள் ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும், குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிராக எப்படிச் செயற்பட்டார்கள் என்பதைச் சுருக்கமாக எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்."

இப்படி மேலே சொல்லியிருந்தேன். அதுதான் இக் கட்டுரை. அதாவது சிங்கள இனவாதிகள், புத்த அடிப்படைவாதிகள், மற்றும் சிங்கள தொழிற்சங்கவாதிகள் ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும், ஏன், எப்போது, எந்தக் காரணங்களுக்கா வன்முறையிலும் மற்றும் அடக்குமுறைகளிலும் ஈடுபட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

/* ஆஹா ...சரியான மேற்கோள் சொன்னீர்கள். நன்றி. இவ்வளவு காலமும் நறுக்குதெறித்தாற்போல் ஒன்று தேடித்திரிந்தேன் உங்கள் உபயம் அகப்பட்டுவிட்டது. */

ஏன் இடதுசாரிகள் மேல் இந்தக் கொலைவெறி? :-))

/*ஆனால் நம்ம ஆனந்த சங்கரியோ*/

அதிகமான ஈழத் தமிழ்மக்கள் அரசியல் விழிப்புணர்வுள்ளவர்கள். யார் யார் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பதில் அவர்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர். தமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள்.

இனவாதத்தை வெளிப்படையாகவே கக்கும் JVP கூட அண்மையில் கொழும்பில் இருந்து தமிழ்மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்திருந்தது. ஆனால் மகிந்தரின் அரசில் மந்திரியாக இருக்கும் தமிழ் அமைச்சரான ஜெயராஜ்
பெனாண்டபுள்(ளை)ளே அச் செயலை நியாயப்படுத்துகிறார்... ஆக இவர்களையெல்லாம் தமிழ்மக்கள் நன்றகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

/* அதுவல்ல இங்கு பிரச்சினை. அப்படிச்சொல்லிவிட்டு எனன 'திருக்கூத்து' ஆடினார் என்பது தான் கேள்வி. நீங்கள் அவருக்கு அளவுக்கதிகமான 'கிறடிற்' கொடுக்கிறீர்கள். */

G.G.பொன்னம்பலமாக இருந்தாலும் சரி, தந்தை செல்வாவாக இருப்பினும் சரி, அமிர்தலிங்கமாக இருப்பினும் சரி, அவர்கள் தமது காலத்தில் தம்மால் இயன்றளவு தமிழினம் சம உரிமையுடன் வாழ அரும்பாடுபட்டவர்கள். ஒவ்வொருவரின் அணுகுமுறையும் வேறுபட்டது. காலத்திற்கு ஏற்றவாறு, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, தமது சத்திக்கு ஏற்றவாறு எமது இனத்திற்காக தம்மால் இயன்றதைச் செய்ய அரும்பாடுபட்டவர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழினத்திற்கான அமிர்தலிங்கத்தின் அர்ப்பணிப்பும், விசுவாசமும் யாரைவிடவும் குறைஞ்சது அல்ல.

என்னைப் பொறுத்தவரையில் அமிர்தலிங்கத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.இதுபற்றி இப்போது விவாதம் செய்வது உகந்ததல்ல
என நினைக்கிறேன்.

said...

//..நீங்கள் இத் தொடரில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இக் கட்டுரை எது பற்றியது என நான் என் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்....//

நீங்கள் சொல்லியிருப்பது (தலைப்பு, சுருக்கம்)

தலைப்பு...

1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. இலங்கைத் தமிழர் => கறுப்பு யூலை '83


சுருக்கம்.....

Martin Niemöller மேற்கோள்

"ஹிட்லர் யூத மக்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் யூத இனத்தவர் இல்லை
ஹிட்லர் கத்தோலிக்கர்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
.....யாருக்குப் பொருந்துதோ இல்லையோ இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்தும். இலங்கைத் தமிழர்களின் அனுபவமும் கிட்டத்தட்ட இதுதான்....


...இலங்கையில் 1950 கள் வரை சிங்களப் பேரினவாதிகள், புத்த அடிப்படைவாதிகள் மற்றும் சிங்கள தொழிற்சங்கவாதிகள் இலங்கைத் தமிழர்கள் மீது வன்முறைத்தாக்குதல்களிலோ அல்லது அவர்களின் உரிமைகளுக்கு எதிராகவோ செயற்படவில்லை. 1880 களில் இருந்து 1950 வரை சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைத்தாக்குதல்கள் , பிரச்சாரங்கள் இலங்கையின் மற்றைய சிறுபான்மைக் குழுக்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்[ வட இந்தியர்கள், பாகிஸ்தானியர்], மலையாளிகள், இந்தியத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிரானதாகவே இருந்தது. இச் சிறுபான்மையினருக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் செயற்பட்டபோது இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் அதற்கெதிராக ஒற்றுமையுடன் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவில்லை.

அதாவது தமிழர்களே இங்கு குற்றவாளிகள். Martin Niemöller தன்னைப்பற்றிச் சொன்னது தமிழர்களுக்கு மிகப்பொருத்தமானது என்று தானே சொன்னீர்கள்?

தவறிருந்தால் மன்னிக்கவும். நான் விளங்கிக்கொண்டது அவ்வாறு தான்.

said...

ரவிசங்கர்,

உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

பாரி.அரசு,

உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

said...

அனானி,
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

இக் கட்டுரை சிங்களப் பேரினவாதிகள் இலங்கையின் ஒவ்வொரு சிறுபான்மைக் குழுக்களுக்கெதிராகவும் ஏன், எப்படி, எதற்காக அடக்குமுறை மற்றும் வன்முறைகளைப் பிரயோகித்தார்கள் என்பதை தொகுத்து வழங்குவதுதான் இக் கட்டுரையின் முக்கிய நோக்கம்.

அதேநேரம், இலங்கையின் பூர்வீக இனங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழினம், இலங்கையின் தற்போதைய சிக்கலில் இரு பாத்திரங்களில் முக்கியமான பாத்திரமாகத் திகழும் தமிழினம் , சிங்கள பேரினவாதிகள் மற்றைய சிறுபான்மைக் குழுக்கள் தாக்கப்பட்ட போது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அறிவது அவசியமாகிறது. ஏனெனில் இலங்கைத் தமிழர்களும் பின்னாளில் சிங்களப் பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள்.

நான் ஏற்கனவே சொன்னது போல் இப்பதிவு யார் மீதும் பழி சொல்வதற்காக அல்ல.

தான் விட்ட பிழையை உணர்ந்து பின்னர் Sir.பொன்.இராமநாதன் அவர்களே வருந்தியிருக்கிறார்கள்.

Walter Schwars க்கு அளித்த பேட்டியில் தமிழினம் செய்யத் தவறிய விடயங்களைத் தந்தை செல்வநாயகம் அவர்கள் மனவேதனையுடன் கூறியிருக்கிறர்கள்.

பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் சில தமிழ்த் தலைவர்கள் செய்த தவறுகளைத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

ஆக, ஒரு தனி மனிதனோ இனமோ தன்னைச் சுயவிமரிசனம் செய்து, தனது வரலாறுகளில் இருந்து பல பாடங்களைப் படித்துக் கொள்ள வேணும்.

எமது தவறுகளை மூடி மறைத்து, எதற்கும் மற்றவர்கள் மேல் பழி போடுவது என்பது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பானது.
அது எமது அழிவுக்கு வழிகோலும்.

வரலாறுகளைத் திரும்பிப் பார்க்கும் போது சிலவேளைகளில் உண்மைகள் கசக்கத்தான் செய்யும். அதற்காக, வரலாற்றை மறைத்தோ திரித்தோ சொல்லுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எம்மைச் சுயவிமர்சனம் செய்து எமது தவறுகளை ஒத்துக் கொண்டு அதிலிருந்து பாடங்கள் படித்துக் கொள்ள வேணும். எமது தவறுகளை ஒத்துக் கொள்வதற்கு எமக்கு அனுபவ, அறிவு முதிர்ச்சி[mature] வேணும்.

அம் முதிர்ச்சி எமது இனத்தில் உள்ள அதிகமான மக்களுக்கு உண்டு என்பதில் எனக்கு கடுகளவும் ஐயமில்லை.

வேலுப்பிள்ளை பிரபகரன் அவர்களே சொல்வது வரலாறுதான் தனது ஆசிரியன் என்று. அந்த வரலாறுகளில் இருந்து பாடம் படித்திருக்காவிட்டால் புலிகள் அமைப்பு எப்பவோ அழிந்திருக்கும்.

ஆக, வரலாறு இனிக்குதோ கசக்குதோ, அதிலிருந்து நாம் படிப்பினை பெற வேணும்.

ஆகவே சில தமிழ்த் தலைவர்கள் எப்படிச் செயற்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது.

said...

வெற்றி,

உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் உங்கள் தலைப்புத்தான் உதைக்கிறது.
தாராளமாக தமிழ்தலைவர்களை விமர்சியுங்கள். ஆனால் தமிழர்களை பாதகம் நடைபெற்ற போது வாளாவிருந்த ஜேர்மனிய 'நாஸி' ஆதரவாளர்களுக்கு ஒப்பிடவேண்டாம்.
அதுமட்டுமல்ல இவ்வாறு நீங்கள் செய்வதனால் எம்முடையே உள்ள போலி ஜனநாயகவாதிகளுக்கு தடியெடுத்துக்கொடுக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். அமிர்தலிங்கம் பற்றி உங்கள் நம்பிக்கை விவாததத்துக்குரியது. எனினும் இது சரியான களமல்ல என்பதில் உடன்படுகிறேன்.

said...

அனானி,
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

said...

//பி.கு:- வந்தியத்தேவன் என்பது வரலாற்றுப் பெயரா? பெயர் நல்லாயிருக்கு. இப் பெயரின் பொருள் என்ன?//

இது கல்கியின் அழியாப்புகழ் பெற்ற சரித்திர நாவலான பொன்னியின் செல்வனில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். பொருள் தெரியாது ஆனால் இந்தப்பாத்திரம் மிகவும் சிறந்த வீரன் சாணக்கிய தந்திரங்களை அறிந்தவன் அத்துடன் குதிரைகளுடன் பேசும் ஆற்றல் படைத்தவன். இடையிடையே காதலும் செய்யக்கூடியவன்.

said...

//பி.கு:- வந்தியத்தேவன் என்பது வரலாற்றுப் பெயரா? பெயர் நல்லாயிருக்கு. இப் பெயரின் பொருள் என்ன?//

இது கல்கியின் அழியாப்புகழ் பெற்ற சரித்திர நாவலான பொன்னியின் செல்வனில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். பொருள் தெரியாது ஆனால் இந்தப்பாத்திரம் மிகவும் சிறந்த வீரன் சாணக்கிய தந்திரங்களை அறிந்தவன் அத்துடன் குதிரைகளுடன் பேசும் ஆற்றல் படைத்தவன். இடையிடையே காதலும் செய்யக்கூடியவன்.