Thursday, July 26, 2007

பிரபாகரன் - ராஜபக்ச சந்திப்பு [கேலிப்]படங்கள்



படத்தில் சிங்களத்தில் எழுதியிருப்பது :- "அதி சிறந்த பெளத்தவாதியின் மிகப்பெரிய துரோகம்"

இடமிருந்து வலம்: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, அருகில் [நீல மேலாடையுடன்] மங்கள சமரவீர. இவர் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு அரும்பாடுபட்டவர். பின்னர் ராஜபக்சவுடன் பிரச்சனைப் பட்டு புதிய கட்சி துவங்கி ராஜபக்சவை எதிர்த்து ரணிலுடன் கூட்டு வைத்துள்ளார்.


அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள அரசியல்கட்சிகள் இனப்பிரச்சனையை வைத்துத்தான் பிழைப்பு நடாத்துகின்றனர். தாம் தான் உண்மையான சிங்கள இனக் காவலன் என்றும் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றனர் என ஒருவருக்கு எதிராக ஒருவர் குற்றம் சாட்டுவர்.

மேலே உள்ள கேலிப்படங்கள், இன்று கொழும்பில் நடந்த ரணில்-மங்கள சமரவீர கட்சிகளின் ராஜபக்ச அரசுக்கு எதிரான கண்டனப் பேரணியில் எடுத்த படங்கள். ராஜபக்ச புலிகளுக்கும் தமிழர்களுக்கும் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார் என்பதும் இன்றைய பேரணியின் ஒரு சாரம்.தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் "பயங்கரவாத்தை" சரியாக 9 மாதங்களுக்குள் அடக்கிவிடுவோம் என்கின்றனர் ரணிலும் மங்கள சமரவீரவும்.

படங்கள் Tamilnet.com ல் இருந்து எடுத்தவை.

Wednesday, July 25, 2007

1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. இலங்கைத் தமிழர் => கறுப்பு யூலை '83

"ஹிட்லர் யூத மக்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் யூத இனத்தவர் இல்லை
ஹிட்லர் கத்தோலிக்கர்களைத் தாக்கியபோது நான் அதை எதிர்த்துக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் நான் கத்தோலிக்கர் இல்லை
ஹிட்லர் தொழிற்சங்கவாதிகளைத் தாக்கிய போது நான் அதை எதிர்த்துக் குரலெழுப்பவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி இல்லை
ஹிட்லர் என்னையும் என் மதத்தையும்[Protestant] தாக்கியபோது யாரும் எனக்காகக் குரலொழுப்பவில்லை
ஏனெனில் எனக்காகக் குரல் கொடுக்க அங்கு யாரும் உயிருடன் இல்லை."

--- Martin Niemöller

ஜெர்மனியின் மனிதவுரிமைவாதியும் கிறிஸ்தவ பாதிரியுமான Martin Niemöller சொன்னவை [மேலே] யாருக்குப் பொருந்துதோ இல்லையோ இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் சரியாகப் பொருந்தும். இலங்கைத் தமிழர்களின் அனுபவமும் கிட்டத்தட்ட இதுதான்.

இலங்கையில் 1950 கள் வரை சிங்களப் பேரினவாதிகள், புத்த அடிப்படைவாதிகள் மற்றும் சிங்கள தொழிற்சங்கவாதிகள் இலங்கைத் தமிழர்கள் மீது வன்முறைத்தாக்குதல்களிலோ அல்லது அவர்களின் உரிமைகளுக்கு எதிராகவோ செயற்படவில்லை. 1880 களில் இருந்து 1950 வரை சிங்களப் பேரினவாதிகளின் வன்முறைத்தாக்குதல்கள் , பிரச்சாரங்கள் இலங்கையின் மற்றைய சிறுபான்மைக் குழுக்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்[ வட இந்தியர்கள், பாகிஸ்தானியர்], மலையாளிகள், இந்தியத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிரானதாகவே இருந்தது. இச் சிறுபான்மையினருக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் செயற்பட்டபோது இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் அதற்கெதிராக ஒற்றுமையுடன் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்காமல் சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக சில இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டார்கள் என்பது மிகவும் சோகமான வரலாறு.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கை மண்ணின் பூர்விக இரு இனங்கள். எனவே சிங்களவர்கள் ஒருபோதும் தமக்கெதிராகச் செயற்படமாட்டார்கள், செயற்படவும் முடியாது என்பதும் தாம் சிறுபான்மை இனம் இல்லை என்பதும் இலங்கைத் தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது.

"...the Tamils looked on themselves as one of the two 'founding races' of the island and not as a minority"
[Dr.Alfred Jeyaratnam Wilson, SRI LANKAN TAMIL NATIONALISM : Its Origins and Developments in the 19th and 20th Centuries, p.48]

'நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுத்துதாம்' என்பது போல் இந்த எண்ணமும் மற்றைய சிறுபான்மைக் குழுக்கள் சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டபோது குரெலெழுப்பாமல் இருந்ததற்கு ஒரு காரணம். தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சந்தர்பங்கள் கிடைத்த போதும் அச் சந்தர்பங்களை நழுவவிட்டதற்கும் இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.

இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் எதிரான தாக்குதல்களை ஆராய்ந்து பார்த்தால் அதன் அடிப்படைப் பிரச்சனை இனமோ, மதமோ, மொழியோ அல்ல. அப் பிரச்சனைகளின் முக்கிய ஆணிவேர் பொருளாதாரம்[சிங்களவர்கள் மத்தியிலிருந்த வேலையில்லாத் திண்டாட்டம்]. ஆனால் சிங்கள பேரினவாதிகள் இப் பொருளதாரப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றைய சிறுபான்மைக் குழுக்களால்தான் சிங்களவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியும், வேலையில்லாமலும் இருப்பதற்குக் காரணம் என சிங்கள மக்களை மூளைச் சலவை செய்தனர். எந்த ஒரு சிறுபான்மை இனத்தைத் தாக்க முன்னும் அவர்களுக்கு எதிராக இப்படிப் பிரச்சாரம் செய்து சிங்கள மக்களை ஒன்று திரட்டிய பின்னர் அச் சிறுபான்மை இனத்தவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது. இதுதான் இலங்கையின் எல்லாச் சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும் சிங்கள பேரினவாதிகள் கையாண்ட உத்தி.

ஒவ்வொரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சிங்களப் பேரினவாதிகள் ஒவ்வொரு சிறுபான்மை இனத்திற்கு எதிராகவும், குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோருக்கு எதிராக எப்படிச் செயற்பட்டார்கள் என்பதைச் சுருக்கமாக எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

1. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாதம்.

1983 ம் ஆண்டு நவீன இலங்கையின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இன அழிப்பு கொழும்பின் வீதிகளில் நடந்தேறியது. இக் கலவரம் நடந்த காலத்திலிருந்து சரியாக[exactly] 100 ஆண்டுகளுக்கு முன் 1883ல் கொழும்பு வீதிகளில் சிங்களப் பேரினவாதிகளும் கிறிஸ்தவர்களும் மோதிக் கொண்டார்கள். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான முதற்கட்டத் தாக்குதல்கள் புத்த பிக்கு மிகெத்துவத்த குணானந்தா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 1870 ம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும் , பேசியும் பிரச்சாரங்களை முன்னெடுத்தார் குணானந்தா. 1883 ம் ஆண்டு சித்திரை மாதம் உயிர்த்த ஞாயிறு வாரத்தில் [Easter Week] கொழும்பில் உள்ள கொட்டாஞ்சேனையில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த போது, அத் தேவாலத்திற்கு மிகவும் அருகில் பிக்கு மிகெத்துவத்த குணானந்தா புத்த பூசையை நடாத்தினார். இது தமது பிரார்த்தனையைக் குழப்புவதற்காக வேணும் என்றே பிக்கு மிகெத்துவத்த குணானந்தா செய்கிறர் என கிறிஸ்தவர்கள் சினம் கொண்டனர். இரு தரப்புக்குமிடையில் கலவரம் மூண்டது. ஒருவர் கொல்லப்பட்டார். 12 பொலிஸ்காரர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். இதுதான் நவீன இலங்கையின் முதற் கலவரம்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான இரண்டாம் கட்டத் தாக்குதல்கள், பிரச்சாரங்கள் புத்த மறுமலர்ச்சித் தலைவர்களான அங்கரிக தர்மபால,வாலிசிங்க ஹரிச்சந்திரா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுதியும், ஊர் ஊராக நாடகங்கள் நடாத்தியும், கூட்டங்கள் வைத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1902ல் தர்மபால இப்படி எழுதியிருந்தார்:

"...அழகான, ஒளிமயமான இத் தீவு மோசமான நாசகார வெள்ளையர்கள்... போன்றோரால் சிதைக்கப்படுவதற்கு முன் ஆரிய சிங்கள இனத்தால் சொர்க்காபுரியாக கட்டியெழுப்பப்பட்டிருந்தது...இன்று நாட்டில் நடக்கும் கொள்ளைகள், விபச்சாரம், மிருகக் கொலைகள், பொய்சொல்லுதல், மதுபோதை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு கிறிஸ்தவர்களே காரணம்...தேயிலைத் தோட்டம் உருவாக்குவதற்காக காட்டு வளங்களை அழிக்கிறார்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்க்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்..."

"...This bright, beautiful island was made into a Paradise by the Aryan Sinhalese before its destruction was brought about by the barbaric vandals...Christianity and polytheism are responsible for the vulgar practices of killing animials, stealing, prostitution, licentiousness, lying and drunkenness...The bureaucratic administrators...have cut down primeval forests to plant tea; have introduced opium, ganja, whisky, arrack and other alcoholic poisons; have opened saloons and drinking taverns in every village; have killed all industries and made the people indolent."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.121]

1883ம் ஆண்டிற்குப் பின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 1903ம் ஆண்டில் இலங்கையின் பல சிங்களப் பகுதிகளிலும் அரங்கேறியது. சிங்களப் பகுதிகளில், குறிப்பாக புத்த ஆலயங்கள் உள்ள கிராமங்கள், நகரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்படுவதற்கு எதிராக இவ் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான இத் தாக்குதல்களைத் தூண்டிவிட்டார் என புத்த மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வாலிசிங்கா ஹரிச்சந்திரா கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் 1950, 1960 களிலும் இன்றும் ஆங்காங்கே சிங்களப் பேரினவாதிகளல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது மற்றைய சிறுபான்மைக் குழுக்களுடனான மோதல்களினால் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் குறைந்தும், மற்றவர்களால் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், இன்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி சிங்கள புத்தர்களின் மனங்களில் உண்டு என்கிறார் குமரி ஜெயவர்த்தனே.

"While in recent years the people have been distracted by attacks on other minorities, it is nevertheless true that the anti-Christian prejudices, though dormant, still remain strong in the consciousness of Sinhala Buddhists."
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.122]

சரி, கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களினால் கணிசமான வெற்றியைப் பெற்ற பின் சிங்களப் பேரினவாதிகளின் கவனம் இலங்கையின் அடுத்த சிறுபான்மைக் குழுக்களான முஸ்லிம்கள், மற்றும் வட இந்திய , பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள்[immigrant] மீது திரும்பியது. முஸ்லிம்கள் மற்றும் வட இந்திய, பாகிஸ்தானிய குடியேற்றவாசிகள் மீது என்ன காரணத்திற்காகச் சிங்கள பேரினவாதிகள் கவனம் திரும்பியது எனபதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Thursday, July 19, 2007

புகைப்படப்பிடிப்புப் போட்டிக்காக...

"பாடறியேன். படிப்பறியேன். பள்ளிக்கூடம்தான் அறியேன்." என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு திரைப்பாடலில் சொல்லியிருந்தது போல், புகைப்படக் கருவிகள் [Camera] பற்றியோ அல்லது எப்படிப் புகைப்படம் எடுப்பது என்பது பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாதவன் நான். இருப்பினும் என் மனதில் எழும் எண்ணங்களை, பிடித்த காட்சிகளைப் படம்பிடிக்கிறேன் என்று சும்மா கண்டபாட்டுக்கு கமராவில் கிளிக் செய்வது என் பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி எடுத்த படங்களில் இரண்டு படங்கள்தான் நீங்கள் கீழே பார்ப்பவை.

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
"மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ!
...
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று
வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி"
--- கவியரசர் கண்ணதாசன்
இடம் : BON ECHO PROVINCIAL PARK, ONTARIO, CANADA.
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா.
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா! ஆனந்தம்! "
--- கவியரசர் கண்ணதாசன்
இடம் : BON ECHO PROVINCIAL PARK, ONTARIO, CANADA.
இந்தப் பாலத்திலிருந்துதான் முதலாவதாக இருக்கும் படத்தை எடுத்தேன்.